● கந்தசாமி, கோச்சடை.
மூத்த பையனுக்கும் மூத்த பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா? பரிகாரம் உண்டா?
தலைச்சனுக்கும் தலைச்சனுக்கும் ஆகாது என்பார்கள். ஒருசிலர் தலையும் வாலும் ஆகாது என்பார்கள். மூத்த பையனும், மூத்த பெண்ணும் ஆனி மாதம் பிறந்திருந்தால் (யாராவது ஒருவர் ஆனியில் பிறந்திருந்தாலும்) திருமணம் செய்யக்கூடாது. ஆனி மாதம் ஜேஷ்டமாதம் எனப்படும். ஜேஷ்டபுத் திரன்- ஜேஷ்ட புத்திரி- ஜேஷ்ட மாதம்- திரிஜேஷ்டை- (மூன்று ஜேஷ்டை) ஆகாது என்பது சாஸ்திரம். அதாவது வாழ்க்கையில் சுபிட்சம் இருக்காது. அதேபோல தலைக் கல்யாணம் தையில் செய் யக்கூடாது என்றும் சொல்வார்கள். சாஸ்திரம் என்று ஒன்றுண்டு. சம்பிரதாயம் என்று ஒன்றுண்டு. சாஸ்திரமும் சம்பிரதாயமும் வெவ்வேறு. நடைமுறைப் பழக்கம் என்பதுதான் சம்பிரதாயம்.
● இளவழகன், காரைக்குடி.
ஜோதிடம், ஆன்மிகம் (தெய்வபக்தி) நம்பிக்கை இல்லாதோர் நன்றாக இல்லையா? இது அவசியமா?
ஜோதிடம், தெய்வ பக்தி இல்லாதோரில் கஷ்டப் படுகிறவர்கள் இல்லையா? எல்லாரும் நன்றாக இருக்கிறார்களா? அவரவர் செய்த நல்வினை- தீவினைக் கேற்பத்தான் நல்லதும் கெட்டதும் நடக்கிறது. அதை ஒரே வரியில் சொன்னால் "மனம்போல் வாழ்வு'. ஜாதகம் எழுதும்போது முதலில் "ஜெனனீ ஜென்ம ஸெனக்யானாம் வர்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வபுண்யானாம்' என்று எழுதுவார்கள். ஒரு பிறவி எடுப்பதென்றால் (ஒரு ஜீவாத்மா) தந்தையின் கர்ப்பத்தில் இரண்டு மாதமும், தாயின் கர்ப்பத்தில் பத்து மாதமும் வாசம் செய்யும். அதன்பிறகுதான் அந்த உயிர் பூலோகத்தில் பிறக்கும்; உருவெடுக்கும்! அப்படி அமையும்போது இந்த தகப்பனின் கர்ப்பத்திலும், இந்த தாயின் கர்ப்பத்திலும் அந்த உயிர் (குழந்தை) உருவாகவேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி! முன்ஜென்மாவில் அந்த உயிர் (குழந்தை) செய்துள்ள பாவம்- புண்ணியத்துக்குத் தக்கவாறு தான் அடுத்த ஜென்மா அமைகிறது. எல்லாக் குழந்தைகளும் பிறக்கும் போது நல்ல குழந்தைகள்தான். அது நல்லவனாவதும் வல்லவனாவதும் அல்லது கெட்டவனாவதும் அதன் தலைவிதி அமைப்பு! அதைத்தான் "பிரம்மலிபி' என்பார்கள். காரணம், காரியம், கர்த்தா என்று மூன்றுண்டு. காரணமில்லாமல் காரியமில்லை. காரியமில்லாமல் காரணமில்லை. இதை இயக்குவது அல்லது சம்பந்த முடையது கர்த்தா! ஆக, எண்ணம், செயல் இரண்டின் விளைவு தான் எல்லாம்! நல்லதே நினை, நல்லதே செய், நல்லதே நடக்கும் என்பதுதான் இதன் ரகசியம்!
● சோலையப்பன், பட்டுக்கோட்டை.
கடவுள் என்பது உண்மையா? என்றால் எங்கிருக்கிறார்? எப்படி இருக்கிறார்?
ஏபி. நாகராஜன் இயக்கிய ஒரு திரைப்படத்தில் இதற்கு விளக்கம் சொல்வார். தெய்வம் மனித ரூபம்! கேள்வி கேட்கும் சோலையப்பனும் கடவுள்தான்- பதில் சொல்லும் "ஜோதிடபானு'வும் கடவுள்தான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். அடுத்து பெண்ணுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்! தாய்- தகப்பனைக் காட்டு கிறாள்; தகப்பன்- குருவைக் காட்டுகிறார்; குரு- கடவுளைக் காட்டுகிறார். அறுசுவை இருக்கிறது. (இனிப்பு, காரம், உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு). இதை சுவைப்பவர் ருசிக்கலாம். அடுத் தவருக்கு உணர்த்த முடியுமா? "சப்புக்கொட்டி ஆஹா என்ன ருசி' என்று அனுபவிக்கிறவரின் உணர்வு அடுத்தவரை உணரவைக்குமா? அந்தச் சுவையை உணர்த்தியவர் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர்- உணர்ந்தவர் சீடர் விவேகானந்தர். ஆக, குருவும் சீடனும் உணரலாம்.
● ஆர். பத்மா, சென்னை-92.
என்னுடைய பேத்தி வைஷ்ணவியின் ஜாதகத்தை ஆராய்ந்து, இந்த வருடம் +2 முடித்தபின் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடரலாமா? திருமணம் எப்போது நடத்தலாம் என்பதைக் கூறவும்.
பேத்தி வைஷ்ணவிக்கு 17 வயது முடிந்து 18 ஆரம்பம். விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம், கன்னியா லக்னம். 2021 மார்ச்வரை ஏழரைச்சனி. அது முடிந்ததும் ஜூன்முதல் கல்லூரியில் (இடம் மாறி) படிக்கலாம். 10-ல் சூரியன், செவ்வாய், குரு இருப்பதால் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது காமர்ஸ் அல்லது பி.பி.ஏ., படிக்கலாம். ஜென்ம ராசியில் கேது; அதற்கு 7-ல் சனி, ராகு, புதன் இருப்பதால், 25 வயது முடிந்தபிறகு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். அந்த நேரம் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து வைஷ்ணவிக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். காரைக்குடி சுந்தரம் குருக்களை அப்போது தொடர்புகொள்ளவும். செல்: 99942 74067.
● சி. மாரியப்பன், கோவில்பட்டி.
எனது மகள் இராஜலட்சுமி பி.ஈ., ஈ.சி.ஈ., முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரி கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திருமணத்துக்கு வரன் பார்க்கிறோம். அமைய வில்லை. தங்களது மேலான பதிலையும் பரிகாரத்தையும் எதிர்பார்க்கிறேன்.
இராஜலட்சுமிக்கு 2019 செப்டம்பரில் 25 வயது முடிந்து 26 ஆரம்பம். மிதுன லக்னம், மிதுன ராசி. 23-5-2020 வரை குரு தசை, சூரிய புக்தி. இதன்பிறகு சந்திர புக்தி 23-9-2021 வரை. அதில் திருமணம் கைகூடும். சந்திர புக்தி வந்ததும், தொடர்ந்து திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலபிஷேகம் செய்யவேண்டும். (27 வயதில் நடக்கும்).
● ரா. சண்முகநாதன், திருச்சி-5.
இசைத்துறையில் முதுகலைப் பட்டம் படித்துள்ளேன். நிரந்தர வேலை இல்லை. தற்சமயம் தேவஸ்தான கோவிலில் ஓதுவார் வேலைக்கும், கல்லூரி விரிவுரையாளர் வேலைக்கும் முயற்சி செய்கிறேன். எந்தத்துறையில் வேலை அமையும்? எப்போது அமையும்? 9, 12-க்குரிய குருதசையும், 6-க்குடைய புதன் புக்தியும், ஏழரைச்சனியும் நடப்பதால் இவ்வளவு சிரமமா?
மேஷ லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். 10-க்குடையவரும் ராசி நாதனுமான சனி 8-ல் மறைவதால்தான் இந்தக் குழப்பம். 10-ல் சந்திரன் இருப்பதாலும், சுயசாரம் பெறுவதாலும் கல்லூரி விரிவுரை யாளர் உத்தியோகம் அமையும். பெரும்பாலும் இசைக் கல்லூரியிலேயேகூட வேலை கிடைக்கலாம். 9-க்குடைய குரு 12-ல் மறைந்து ராகுவோடு சேர்ந்ததால், கோவில் வேலைக்கு இடமில்லை. தீபாவளிக்குப்பிறகு- குருப்பெயர்ச்சிக்குப்பிறகு வேலை அமையும். திருவாரூர் மடப்புரம் என்ற பகுதியில் குரு தட்சிணாமூர்த்தி மடம் சென்று (ஜீவசமாதி) வழிபடவும். (வியாழக்கிழமை). ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால், சனிக்கிழமைதோறும் 45 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் ஏழரைச்சனி முடியும்வரை (2026 வரை) நெய்யில் தீபமேற்றி வழிபடவும். சனி பகவானின் குருநாதர் பைரவர். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றக்கூடாது. நல்லெண்ணெய் திரிவிளக்குதான் ஏற்றவேண்டும்.
● கே. சரவணன், சேலவாயல்.
நான் செய்துவரும் ரியல் எஸ்ட்டேட் தொழில் சரியில்லை. வருமானம் இல்லை. சுமார் 20 லட்சத்துக்குமேல் கடன். சொந்த வீட்டைவிட்டு பத்து வருடமாக வாடகை வீட்டில் இருக்கிறேன். வீட்டை விற்றுவிட்டு கடனை அடைக்கலாம் என்றால், வீடும் விலைபோகவில்லை. எப்போது விமோசனம் ஏற்படும்?
விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். 47 வயது நடக்கிறது. 42 வயதுமுதல் சந்திர தசை. சந்திரன் அட்டமாதிபதி புதன் சாரம் என்பதால், விமோசனம் இல்லை. பாதி முடிந்தால் விமோசனம் பிறக்கும். 2020 செப்டம்பர்முதல் நல்லது நடக்கும். செலவோடு செலவாக- கடனோடு கடனாகப் பணம் தயார் செய்துகொண்டு, பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று ராஜப்பா குருக்களிடம் ஒரு திங்கட்கிழமை ருத்ரஹோமம் செய்து சங்காபிஷேக பூஜை செய்யுங்கள். விமோசனம் பிறந்துவிடும்.