● கே. வசந்தா, சென்னை-45.
உள்ளதை உள்ளபடியே கூறும் ஜோதிடப் பிதாமகருக்கு வணக்கம். பலரின் கஷ்டங்களைப் போக்க வழிசொல்லும் நீங்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன். இத்துடன் என் மகள்- கணவர்- எனது ஜாதகங்களை அனுப்பியுள்ளேன். மகள் திருமணமே வேண்டாம் என்கிறாள். நடக்குமா? நடக்காதா? வேலையில் உயர்வு எப்படியிருக்கும்? வேறு வேலை மாறலாமா? என் கணவர் எங்களைவிட்டுப் பிரிந்துசென்று நான்கு வருடமாகிறது. திரும்பி வருவாரா? எப்போது? எனது ஆயுள், ஆரோக்கியம், எதிர்காலம் எப்படி உள்ளது?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/guru-1.jpg)
கணவர் சாம்பசிவத்துக்கு ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னம். 2018 ஆகஸ்டில் 65 வயது முடிந்து 66 ஆரம்பம். ஜென்ம ராசியில் கேதுவும், ராசிக்கு ஏழில் ராகுவும் நிற்க, லக்னத்துக்கு 12-ல் சனி, கன்னியில் நின்று 2-ஆம் இடம் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பது ஒருவகையில் தோஷம். 2-ஆம் இடத்தை ரிஷபச் செவ்வாய் பார்ப்பதும் ஒரு தோஷம். 7-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்து அவருடன் குரு, புதன், சூரியனும் மறைகிறார்கள். அதனால் சாம்பசிவம் (கணவருக்கு) சரியெனப்பட்டதைப் பேசுவார். அது மற்றவர்களுக்குத் தவறாகப்படும். கணவருக்கு ஆயில்ய நட்சத்திரம், மனைவி வசந்தா அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னம். இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தமே இல்லை. ஆயில்யம், கேட்டை, ரேவதி அஸ்வினி, மகம், மூலம் ஒரே ரஜ்ஜு பாத ரஜ்ஜு. அதனால் ஆண் வாரிசு (கர்மபுத்திரனும்) இல்லை. அன்யோன்யமும் இருக்காது. அதுமட்டுமல்ல; கணவன்- மனைவிக்குள் எப்போதும் விதண்டாவாதம், தர்க்கம், ஏட்டிக்குப் போட்டியான பேச்சுவார்த்தை உருவாகும். வசந்தாவுக்கு 2014-ல் அட்டமச்சனி ஆரம்பம். அட்டமச்சனி வரும் முன்பே வெளியேறியிருப்பார். வசந்தாவுக்கு 2018 ஜூன் மாதம் 54 வயது முடிந்து 55 ஆரம்பம். 48 வயதிலிருந்து- 2012-ல் இருந்து ராகு தசை ஆரம்பம். இலை மறைவு காய் மறைவு என்று சொல்லுவது மாதிரி ராகு தசை ஆரம்பத்திலிருந்தே வசந்தாவுக்கும் சாம்பசிவத்துக்கும் பனிப்போர் தொடங்கியிருக்கும். வசந்தாவுக்கு நடக்கும் ராகு தசை பாம்பு கொத்துவதுமாதிரி பேசும் நிலை. அதை மாற்றிக்கொள்வது அவசியம். பொறுமை தேவை. மகள் சங்கரி திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னம். 2018 மார்ச் மாதம் 25 வயது முடிந்து 26 ஆரம்பம். 28 வயது வரை (2021 ஜுன் வரை) குரு மகாதசை. இதன்பிறகு சனி மகாதசையில்தான் திருமணயோகம் வருகிறது. பெற்றோரின் செயல் நடவடிக்கைகளைப் பார்த்தே சங்கரி திருமண வாழ்க்கையில் ஆர்வம், அக்கறை இல்லாமல் போகலாம். சங்கரி ரிஷப லக்னம். 2-ல் செவ்வாய். 9-ல் சனி. (மகரத்தில் உள்ள) சனியை செவ்வாய் பார்க்க, லக்னத்தில் கேது, 7-ல் ராகு நிற்பது மாங்கல்ய தோஷம். கலப்புத்திருமணம், காதல் திருமணத்துக்கு வாய்ப்பு ஏற்படலாம் அல்லது தாமதத் திருமணம் ஏற்படலாம். சங்கரிக்கு காமோகர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், செய்து கலச அபிஷேகம் செய்தால் திருமணத்தடை விலகலாம். படிப்பு, உத்தியோகம், சம்பாத்தியத்துக்குக் குறைவில்லை. சங்கரிக்கு செய்யவேண்டிய ஹோமம் பற்றிய விவரத்தை சுந்தரம் குருக்கள் (காரைக்குடி) செல்: 99942 74067-ல் தொடர்கொண்டு தெரிந்துகொள்ளவும்.
● என். சுரேந்திரன், சென்னை-12.
3-6-1977-ல் திருமணம் நடந்து சிறிது காலத்தில்மாமியார்- மருமகள் பிரச்சினையால் ஐந்து வருடத்துக்குப் பிறகு தனிக்குடித்தனமாக வாழ்கிறோம். எனக்கு ஒரு பெண் குழந்தை. அவளுக்கும் எந்தக் குறையும் இல்லை. எனக்கும் வசதி வாய்ப்பில் குறையில்லை. மனைவியால் நிம்மதி இல்லை என்பதே குறை. பகல் முழுவதும் தூங்கி இரவு முழுவதும் என்னையும் தூங்கவிடாமல் சண்டை போடுவாள். 35 வருடமாக மனவேதனை. எப்போது இதற்குத் தீர்வு ஏற்படும்? எப்போது யாருக்கு முக்தி?
சுரேந்திரன் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னம். மனைவி கோமதி உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி. அநேகமாக கோமதிக்கு உத்திர நட்சத்திரம், கன்னி ராசியாக வாக்கியப்படி இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அனுப்பிய ஜாதகம் திருக்கணிதப்படி சிம்ம ராசி. கன்னி ராசி என்றால் தனுசு லக்னம். லக்னத்தில் செவ்வாய். கன்னியில் சனியும் கேதுவும் சனியும் செவ்வாயும் 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தாம்பத்திய வாழ்க்கையில் அனுசரிப்பு இருக்காது. கோமதிக்கு 2025 வரை சனி தசை. சுரேந்திரனுக்கு 69 வயது நடப்பு. 2010 முதல் 2029 வரை சனி தசை. இருவருக்கும் சம தசை. முதலில் இந்த இருவர் ஜாதகத்தையும் மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப் பஞ்சாங்கப்படி கணித்து அனுப்புங்கள். அதன்பிறகுதான் தெளிவான பரிகாரம் சொல்லமுடியும். தொடர்புக்கு: கே.எம். சுந்தரம், செல்: 92453 28178.
● எம். மணிகண்டன், கோவை.
நான் நடன ஆசிரியராகப் பணிபுரிகிறேன். சினிமாவிலும் முயற்சிசெய்து வருகிறேன். எதுவும் செட்டாகவில்லை. இரண்டுப் பெண்களின் குறுக்கீடு என் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டது. இதிலிருந்து மீளமுடியுமா?
ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, ரிஷப லக்னம். 37 வயது நடக்கிறது. 2019 ஜனவரிவரை குரு தசை சுக்கிர புக்தி. சுக்கிர புக்தி முடியும்வரை மாயையில் கட்டுண்டு தடுமாறுவீர்கள். மதிப்பு, மரியாதை, கௌரவம், பணம் எல்லாம் இழப்பாகும். சபலத்துக்கு அடிமையாகாமல் வைராக்கியமாக இருந்தால் இதிலிருந்து விடுபடலாம். அருணகிரிநாதர் பெண் பித்தராக இருந்தார். கடைசியில் திருந்தவில்லையா? காமமும் கோபமும் மனிதனை கீழே தள்ளி கேவலப்படுத்திவிடும். வயலூர் முருகனை இஷ்ட தெய்வமாக மதித்து செயல்படுங்கள். முன்னேற்றம் தெரியும். உங்கள் பெயரை-
M. M A N I G A N D A N
4 4 1 5 1 3 1 5 4 1 5 என்று 34-ல் பெயரை மாற்றி 108 முறை, 108 நாள் தொடர்ந்து எழுதுங்கள். நல்ல மாற்றம் தெரியும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/guru.jpg)