● கே. மணிகண்டன். கோவில்பட்டி.
ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம். "பாலஜோதிட'த்தில் நீங்கள் சொல்லும் பதில்களும் ராசி பலனும் அற்புதம்! அதிலும் சிம்ம ராசிக்கு நீங்கள் எழுதுவது அப்படியே நடக்கிறது. 2014 ஆகஸ்ட் முதல் வேலையின்மை. சம்பாத்தியம் இல்லை. சம்பந்தமே இல்லாத பிரச்சினைகளால் வேதனை. ஆறு மாதம் நன்றாக இருக்கும்; அடுத்த ஆறு மாதம் மோசமாக இருக்கும். பக்கத்தில் குடியிருப்பவரால் காவல் நிலையம் வரை போகவேண்டிய நிலை. நாங்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஒத்திக்கு இருக்கிறோம். வீட்டை காலிசெய்துவிட்டு வேறிடம் மாறிப்போகலாமென்று மூன்று வருடமாக முயற்சிக்கிறோம். முடியவில்லை. வீட்டின் உரிமையாளர் ஒத்திப் பணத்தைத் தரமறுக்கிறார்.அந்தப் பணத்தை நம்பித்தான் இருக்கிறோம். பணம் கிடைக்கப் பரிகாரம் என்ன?
உங்களுக்குப் பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னம். நடப்பு 32 வயது ஆரம்பம். 22 வயதுமுதல் கேது தசை ஏழு வருடம். அடுத்து சுக்கிர தசை தனது புக்தி மூன்று வருடம், நான்கு மாதம். ஆக 2020 மே வரை கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. சுயபுக்திக்குப் பிறகு சுக்கிர தசை உங்களுக்கு யோகமாக இருக்கும். அதுவரை பொறுமையாக எதிர்நீச்சல் போட வேண்டியதுதான். சுயபுக்தி பெரிய பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க வெள்ளிக்கிழமைதோறும் தொடர்ந்து வடக்குப் பார்த்த அம்மனுக்கு இரண்டு நெய்விளக்கு ஏற்றி வழிபடவும். அத்துடன் ஒருமுறை பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபட்டால் வீடு மாற்றம் ஏற்படும். மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்குத் தென்புற வீதியில் குபேர பத்ரகாளியம்மன் கோவில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை பகல் 12 மணிவரை; பிறகு மாலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரை கோவில் திறந்திருக்கும். அங்கு சென்று வழிபடவும். வரவேண்டிய பணமும் வந்துசேரும். வேறு வீடும் மாறலாம். திருப்பதி- திருச்செந்தூர்- பழனி போவதுபோல மாதாமாதம் குபேர பத்ரகாளியம்மனை வெள்ளிக்கிழமையன்று வழிபட்டு நெய்விளக்கு ஏற்றினால் சுக்கிர தசை உங்களுக்கு யோக தசையாக அமையும்.
● ஆர். ஆறுமுகம், திருப்பூர்.
எனது மகள் பவதாரிணி +2 படிக்கிறாள். கடன் வாங்கி கஷ்டப்பட்டு எப்படியோ படிக்க வைக்கிறேன். அடுத்து ஆசிரியர் வேலை அல்லது பேங்க் வேலைக்குப் படிக்கச் சொன்னால் அவள் அறிவியல் (I.S.R.O.) படிக்கப்போகிறேன் என்கிறாள். அவளைப் படிக்க வைக்கமுடியுமா? படித்தாலும் அதற்குரிய வேலை கிடைக்குமா?
படிக்க ஆர்வமுள்ள பிள்ளைகளை கடன் வாங்கியாவது படிக்க வைக்க வேண்டியது பெற்றோர் கடமை. நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கு (வங்கியில்) கல்விக்கடன் தருவார்கள். வெறும் ஆர்வம் மட்டும் போதாது. அக்கறையும் விடாமுயற்சியும் தேவையென்று பவதாரிணியிடம் நான் கூறியதாகச் சொல்லவும்.
● திரவியநாடார், சிமோகா.
குமரேசனுக்கு (மூத்த மகன்) 48 வயது. இளைய மகன் நாகேந்திரனுக்கு 45 வயது. இருவருக்கும் திருமணமாகவில்லை. மூத்தவன் பெங்களூருவில் வேலை பார்த்துவிட்டு இப்போது சிமோகாவில் பாக்கு வியாபாரத்தில் என்னுடன் இருக்கிறான். இருவரின் திருமணம், எதிர்காலம், தொழில்துறை யோகம் எப்படி இருக்கும்? பரிகாரம், இடம் பற்றிய தகவல் தரவும்.
இருவரின் ஜாதகத்திலும் குடும்ப தோஷம் கடுமையாக உள்ளது. குமரேசன் அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னம். 36 வயதுமுதல் சனி தசை. இது 4-ஆவது தசை; ஆகாது. நாகேந்திரன் மூல நட்சத்திரம், தனுசு ராசி. 38 வயதுமுதல் 45 வயதுவரை செவ்வாய் தசை. இது 5-ஆவது தசை; ஆகாது. இருவர் ஜாதகத்திலும் களஸ்திர தோஷம், புத்திர தோஷம் கடுமையாக இருக்கிறது. இளைய மகனுக்கு இப்போது ஜென்மச்சனி வேறு நடக்கிறது. இது பெற்றவர்களுக்கு ஆகாது. எல்லாவற்றுக்கும் சேர்த்து காரைக்குடி அருகில் பல ஹோமம் செய்து அனைவருக்கும் கலச அபிஷேகம் செய்யவேண்டும். அதற்கு நீங்கள் தமிழகம் வரவேண்டும். ஆயுள், ஆரோக்கியம், திருமணம், வாரிசு, தொழில், சம்பாத்தியம் எல்லாவற்றுக்கும் சேர்த்து 15 வகையான ஹோமம் செய்யவேண்டும். வயது முதிர்வு காரணமாக நீங்களும் உங்கள் மனைவியும் இங்கு வர வாய்ப்பு இல்லையென்றால், பிள்ளைகள் இருவர் மட்டும் வரலாம். நீங்களும் வந்தால் உங்களுக்கும் கலச அபிஷேகம் செய்வது நல்லது. இரு பிள்ளைகளின் திருமணம், பேரன் பேத்தியைப் பார்க்கும் பாக்கியம் உண்டாகும். மதுரை விலாசத்துக்கும் மதுரை அலைபேசிக்கும் என்னுடன் தொடர்புகொள்ளவும்.
● பி.பி. ராஜமோகன், திருச்சி-8.
என் பேரன் நவீன்ராஜ் 2015-ல் பி.டெக் பாஸ் செய்துவிட்டு, சென்னையிலும் பெங்களூருவிலும் நேர்காணல் போய்வந்தும் தகுதியான வேலை அமையவில்லை. தற்போது ஒரு சுமாரான கம்பெனியில் ரூ. 6,000/- சம்பளத்துக்கு வேலை பார்ப்பதால் மிகவும் நொந்துபோய் உள்ளான். அவன் ஜாதகப்படி தகுதியான வேலை எப்போது கிடைக்கும்? அரசு வேலை அமையுமா? திருமணம் எப்போது நடக்கும்?
நவீன்ராஜ் தனுசு லக்னம், கன்னி ராசி. சந்திர தசையில் ஜெனனம். நடப்பு 25 வயதுதான். 29 வயதுவரை- 2023 பிப்ரவரிவரை ராகு தசை நடப்பு. இதன்பிறகு குரு தசையில் நல்ல வேலை, நல்ல சம்பளம் அமையும். அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் நிறுவனத்தில் அமையும். 30 வயதில் திருமணம் நடக்கும். வாய்ப்புக் கிடைக்கும்போது சமயபுரம் அடுத்து உஜ்ஜயினி காளியம்மன் கோவிலுக்கு (மாதம் அல்லது வாரம்) தொடர்ந்து போய் வழிபட்டு வரவும்.
● கே.ஆர். கோபாலகிருஷ்ணன், சென்னை.
தங்கள் ஜோதிட கணிப்புகளில் ஈர்ப்புள்ளவன். உங்களால்தான் எனக்கு இந்த தெய்வீகக் கலையில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 2019 ஜூன் வரை சந்திர தசை சுக்கிர புக்தி. அடுத்துவரும் புக்திகள் எப்படி இருக்கும்?
மேஷ லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். 81 வயது முடிந்து 82 ஆரம்பம். சந்திர தசை 2019 நவம்பரில் முடியும். அடுத்து வரும் செவ்வாய் தசை லக்னாதிபதி தசை. பயமில்லை. 90 வயதில் வரும் ராகு தசையே அந்திம தசை. செவ்வாய் தசை தொடங்கும்போது ஆயுஷ் ஹோமும், தன்வந்திரி ஹோமமும், நவகிரக ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் நல்லது.
● கே. தனராஜ், சேலம்-14.
என் மகன் ஹரி விக்னேஸ் பி.எஸ்.ஸி., கப்பல்துறையில் படிக்க ஆசைப்படுகிறான். அவன் ஜாதகப்படி அது உகந்த துறையா?
ஹரி விக்னேஷ் விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி, துலா லக்னம். லக்னத்துக்கு 10-ல் செவ்வாய், 2-ல் சந்திரன். இருவரும் பரிவர்த்தனை. கப்பல்துறையில் படிக்கலாம். எலக்ட்ரிக்கல் துறையிலும் படிக்கலாம்.
● ஆர். பாஸ்கரன், பெங்களூரு.
என் மகன் ஜெயராமகிருஷ்ணன் உபநயனம் செய்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இறைவழிபாடு- பூஜை புனஸ்காரம் போன்ற ஆன்மிகக் காரியங்கள் எதிலும் ஈடுபாடு இல்லை. நம்பிக்கையும் இல்லை. மனதுக்கு கஷ்டமாக உள்ளது. ஏதேனும் பரிகாரம் உண்டா?
16-5-2019 வரை ராகு தசை நடக்கிறது. அதன்பிறகு குரு தசையிலிருந்து ஜெயராம கிருஷ்ணனுக்கு ஆன்மிகத்தில் நாட்டமும் ஈடுபாடும் உண்டாகும். அதுவரை ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவன் கோவிலில் நந்தி சந்நிதியில் காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் நெய்விளக்கேற்றி வேண்டிக்கொள்ளவும். அத்துடன் ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் வடக்குப் பார்த்த அம்மன் சந்நிதியில் ராகு தசை முடியும்வரை நெய்விளக்கு ஏற்றவும்.
● எம். ஜெயமணி, சீர்காழி.
"பாலஜோதிட' அதிதீவிர ரசிகர்களுள் நானும் ஒருவன். பலருக்கு பலன்களைக்கூறி நல்வழிகாட்டி அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் இறைவன் எவ்விதக் குறையுமின்றி வாழ வைப்பான். எனக்கு 65 வயது. ஒரு மகன்- ஒரு மகள். மகளுக்குத் திருமணமாகி நன்றாக இருக்கிறாள். மகன் ரமேஷுக்கு 36 வயது. இன்னும் திருமணமாகவில்லை. வேலையும் இல்லை. அவனது கவலையே எனக்கு! ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறுகிறான். ஆனால் எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. அவன் ஜாதகப்படி எப்படிப்பட்ட பெண் முடியும்? அரசு வேலை கிடைக்குமா? அரசு வேலைக்கு ஒருவரிடம் பணம்கொடுத்து ஏமாந்துவிட்டோம். அப்பணம் திரும்பக் கிடைக்குமா?
ரமேஷ் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னம். லக்னத்தில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பது நாகதோஷம். ராசிக்கு 7-க்குடைய சுக்கிரன் நீசம். அத்துடன் சனி சம்பந்தம். ராசிக்கு 8-ல் உள்ள செவ்வாயை சனி மூன்றாம் பார்வை பார்ப்பதால் கலப்புத் திருமணம், காதல் திருமணம் என்பதை உறுதிப்படுத்துகிறது. உங்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ- ரமேஷ் விரும்பும் பெண்ணுக்கு விருப்பம் இருந்தா அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைக்கலாம். ஜாதகருக்கு 2020 மே வரை ராகு தசை நடப்பதால் அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் பணி அல்லது சுயதொழில் யோகம் உண்டு. அடுத்துவரும் குரு தசை முதல் தொழில் மேன்மை, சம்பாத்தியம் பெருகும். ரமேஷ் விரும்பும் பெண் கும்ப ராசி, தனுசு லக்னம். ஜாதகப் பொருத்தம் உள்ளது.
த. கோவிந்தசாமி, திருவண்ணாமலை.
● எனது மகன் திருமாவளவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான். இது தொடருமா? வேறு வேலை அமையுமா?
திருமாவளவனுக்கு மகர ராசி, அவிட்ட நட்சத்திரம், கடக லக்னம். நடப்பு வயது தெரியவில்லை. ஏனென்றால் ராசிக்கட்டம், நவாம்சக்கட்டம், தசை இருப்பு எல்லாம் எழுதிய நீங்கள் பிறந்த தேதி எழுத மறந்துவிட்டீர்கள். இருப்பினும் சனியின் சஞ்சாரத்தை வைத்து 30 வயது ஆகும் என்று கணிக்கலாம். ராகு- கேது தோஷம், களஸ்திர தோஷம் இருப்பதால், ராகு- கேது பெயர்ச்சிப்பிறகு திருமண முயற்சிகள் எடுக்கலாம்.