● பி.ஆர். தங்கவேலு, பரமக்குடி.

உங்களை வணங்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். எனது மகள் தவமலர்- மருமகன் திருமாறன், மனை வாங்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ஜாதகப்படி அது எப்போது சாத்தியமாகும்?

Advertisment

தவமலர் பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். புதன் தசை நடப்பு. திருமாறன் மூல நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னம். 2017 செப்டம்பர் முதல் சந்திர தசை ஆரம்பம். ஏழரைச்சனியில் சந்திர தசை சந்திப்பு ஆகாத காலம். அதனால் சிவலிங்கத்துக்கு திங்கட்கிழமை தோறும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்து செவலூர் பூமிநாதசுவாமி கோவிலில் ஒருமுறை ருத்ரஹோமம் செய்து ருத்ராபிஷேகப் பூஜை செய்ய வேண்டும். 2020-ல் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு மனை பாக்கியம் கைகூடும். முன்னதாக இடம் அமைந்தாலும் அதன் பிறகுதான் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.

● ஆர். ஜெயராமன், குரோம்பேட்டை.

"பாலஜோதிடம்' ஆசிரியராக 2005-ல் பொறுப்பு ஏற்றதுமுதல் கேள்வி- பதில் பகுதியும், வார ராசிபலனும் தொடர்ந்து படித்து, ரசிக்கிறேன். எனது உறவுக்காரர் மகன் எம்.பி.ஏ. முடித்து தனியார்துறையில் பணிபுரிகிறார். அவருக்குத் திருமணம் எப்போது நடைபெறும்? வாழ்க்கையில் முன்னேற எப்போது வாய்ப்பு ஏற்படும்?

சுரேஷ் ரேவதி நட்சத்திரம், மிதுன லக்னம். 2019 பிப்ரவரியில் 29 வயது முடியும். லக்னத்துக்கு 7-ல் சனி, செவ்வாய், புதன்; 2-ல் கேது, 8-ல் ராகு. களஸ்திர தோஷம், நாக தோஷம் உண்டு. இப்படியிருந்தால் ஜாதகருக்கு திருமணம் நடப்பதே சந்தேகம். அல்லது காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பது விதி! அதனால் காரைக்குடி அருகில் வேலங்குடியில் காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் செய்து சுரேஷுக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். அத்துடன் தொழில் விருத்தி, வாழ்க்கை முன்னேற்றம், நல்ல மனைவி, நல்ல வாரிசு, பெற்றோருக்கு ஆயுள் விருத்தி, சகோதரிக்கு நல்ல வாழ்க்கை முதலிய யோகத்துக்கு 20 வகையான ஹோமங்கள் செய்யப்படும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்பு கொண்டு பேசவும். இதைச் செய்தால் 30 வயதில் அல்லது அதையடுத்து முறையான திருமணத்தை எதிர்பார்க்கலாம்.

Advertisment

shiva-vishnu

● உஷா ராமமூர்த்தி, சென்னை-96.

என் பேரன் ரிஷப் ஜாதகத்தில் 2-ல் கேது, 8-ல் ராகு இருக்கிறது. அதற்குச் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் என்ன? அவன் என்ன படிக்கலாம்? எங்கள் குலதெய்வம் எது? நாத்தனார் வயதானவர். முருகன்தான் குலதெய்வம் என்கிறார். தெரிந்த ஜோதிடரிடம் கேட்டபோது "பழனி முருகன்' என்கிறார். மருமகள் கேரளாவில் பகவதி அம்மன் என்றும், ஒரு பெண் தெய்வமும் உண்டு என்று குழப்புகிறாள். எது சரி?

பேரன் ரிஷப் மீன லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். 2019 ஜனவரியில் ஆறு வயது முடியும். எட்டு வயது வரை சுக்கிர தசை. இது குட்டிச் சுக்கிரன் எனப்படும். 27-3-2021 வரை சுக்கிர தசை. அதற்கடுத்தது சூரிய தசை ஆறு வருடம். 6-க்குடைய சூரியன் 11-ல் இருப்பது யோகம். அதிலும் அவருடன் 8-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. 6-க்கும் 8-க்கும் உடையவர்கள் 11-ல் இருப்பது பிரபலமான யோகம், அதிர்ஷ்ட யோகம். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.ராமமுர்த்தி, உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். 5-க்குடையவர் சனி, அனுஷம் சாரம். சுயசாரம். அம்சத்தில் கன்னியில் 9-க்குடையவர் புதன். அஸ்வினி சாரம் அம்சத்தில் மிதுனத்தில். எனவே உங்கள் குலதெய்வம் பெருமாள் என்று தெரிகிறது. குடும்ப தெய்வம் ஒரு பெண் தெய்வம். எனவே திருப்பதி ஏழுமலையானையும் அலமேலுமங்கைத் தாயாரையும் வழிபடலாம். இஷ்டதெய்வமாக முருகனை வழிபடலாம். பேரனுக்கு ஹயக்ரீவர் மந்திரத்தை தினசரி ஜெபிக்கும்படி சொல்க் கொடுக்கவும். "ஞானானந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே' என்பது ஹயக்ரீவர் மூலமந்திரம். இதைத் தொடர்ந்து காலை, மாலை இருநேரமும் 108 முறை ஜெபிக்கவும். நேரமில்லாதபோது 16 முறை கூறலாம். கல்வி மேன்மை, ஞாபக சக்தி உண்டாகும்.

● பி. கார்த்திகேயன், ஆழ்வார் திருநகர்.

ஒருவருக்கு விளக்கம் அளிப்பதும், உதாரணம் கூறுவதும் அசத்தலாகவும், எல்லாருக்கும் புரியும்படி அமைவதும் உங்களின் தனித்தன்மை. உங்கள் இடத்தில் வேறு எந்த ஜோதிடரையும் வைத்துப் பார்க்க முடியாது. பாராட்டுகள்! எனக்கு எல்லா பரிசோதனையும் செய்து முடித்து எந்த நோயும் இல்லை என்று ரிசல்ட் வந்தது. ஆனால் எனக்கு ஆரோக்கியம் இல்லாமல் வாழ்க்கை ஓடுகிறது. எப்போது சரியாகும்?

24-8-2018 "பாலஜோதிட'த்தில் (பக்கம் 7) மிதுன ராசிக்கு எழுதிய பலனில் உள்ள பரிகாரம்- திருவக்கரை சென்று வக்ரகாளியம்மன், சந்திரமௌலீஸ்வரர், குண்டலினி முனிவர் ஜீவசமாதியை வழிபடவும். அத்துடன் அருகில் தன்வந்திரி கோவில் இருந்தால் அங்கும் வாராவாரம் சென்று வழிபடவும்.

"ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே

அமிருத கலச ஹஸ்தாய ஸர்வ ஆமயவிநாசநாய

த்ரைலோக்யநாதாய ஆரோக்ய லட்சுமி ஸமேத

தன்வந்த்ரயே நமோ நமஹ'

என்ற தன்வந்திரி மந்திரத்தை தினசரி காலை, மாலை 108 முறை உருப்போடவும். வாலாஜாபேட்டை அருகில் (வேலூர் பாதை) தன்வந்திரிக்கு தனிக்கோவில் இருக்கிறது. அங்கும் போகலாம்.

● பி. வனிதா, சேலம்.

எனக்குத் திருமணமாகி நான்கு வருடமாகிறது. குழந்தை பாக்கியம் இல்லை. எனது ஜாதகத்தில் தோஷம் உள்ளதா?

உங்கள் திருமணம் 4, 5, 7, 8 தேதிகளில் நடந்திருந்தால் வாரிசு யோகம் தடைப்படும். (தேதி எண்- கூட்டி வரும் எண், இதில் மேற்கண்ட நான்கு எண்களும் வரக்கூடாது). அப்படியிருந்தால் 1, 3, 6 வரும் நாளில் மறுமாங்கல்யம் அணிவிக்க வேண்டும். எளிய பரிகாரமாக நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரையும், குருநாதர் ஜீவசமாதியையும் அபிஷேக ஆராதனை செய்யவும். 5-ல் ராகு நிற்பது தோஷம். முடிந்தால் காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், சந்தான கணபதி ஹோமம் செய்து கணவரும் மனைவியும் அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். அவரிடமே அந்த மந்திர உபதேசமும் வாங்கி தினமும் ஜெபிக்கலாம்.