ப் எஸ். விஸ்வநாதன், கோவை.
எங்கள் ஒரே மகன் எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். அடுத்து மேல்படிப்பு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது அரசு மருத்துவப் பணியில் சேர்வாரா?
தங்கள் கருத்துப்படியே அரசு மருத்துவ மனையில் சேர்ந்து பணியாற்றி- மேற்படிப்பு படிக்க வாய்ப்பு வரும். நாகதோஷம், சனி தோஷம் இருப்பதால் திருமணம் தாமத மாகும். 27 வயதுக்குமேல் 30 வயதுகூட ஆகலாம். அன்னிய சம்பந்தம். வரும் மனைவியும் டாக்டர் படிப்பு படித்தவர். கடக லக்னத்துக்கு 9-ஆம் அதிபதி குரு 12-ல் மறைந்தாலும், 10-க்குடைய செவ்வாய் 9-ல் குரு வீட்டில் நின்று 9-க் குடைய குருவைப் பார்ப்பதால், குருவின் மறைவு தோஷம் விலகும். தகப்பனாருக்கு பாதிப்பு ஏற்படாது.
ப் வி. வடிவேல், திருநெல்வே.
எனது மகனுக்கும் செல்வி ஸ்ரீலேகா வுக்கும் திருமணம் செய்ய பொருத்தம் உண்டா?
ஏற்கெனவே பலமுறை திருமணப் பொருத்தத்துக்கு ஜாதகம் அனுப்ப வேண்டாம் என்று எழுதியுள்ளேன். "கேள்வி- பதில்' பகுதியில் வெளியிட மாதக் கணக்காகும். இதை உள்ளூர் ஜோதிடரிடம் பார்த்துக் கொள்வது நல்லது. அல்லது செலவைக் கருதாமல் முன்பதிவு செய்துவிட்டு நேரில் வரவேண்டும். நீங்கள் அனுப்பிய ஜாதகங்களுக்குப் பொருத்தமில்லை. மேலும் பெண்ணுக்கு 8-ல் சனி இருப்பதால் 27 வயதுக்குமேல்தான் திருமண யோகம். இப்போது 25 வயது ஆரம்பம். அதேபோல உங்கள் மகனுக்கு துலா லக்னத்தில் சனி நிற்பதால் 30 வயது முடிந்தபிறகுதான் திருமண யோகம் வரும். திருமண முயற்சிகளை ஒருவருடம் தள்ளிப்போடவும்.
ப் கே. ராதா, மதுரை.
இரண்டு வருடமாக என் மகள் எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறாள். எங்களுடன் சேர்ந்திருப்பதற்கு வாய்ப்பு வருமா? எனக்கு தற்போது உடல்நலமில்லை. ஏன்? என் மகளின் திருமணம் சொந்தத்திலா? அந்நியத்திலா?
மகளுக்கு அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னம். 21 வயது முடிந்து 22 வயது ஆரம்பம். 24 வயதுவரை புதன் தசை. அதுவரை பெற்றோரைவிட்டுப் பிரிந்திருப் பார். அவராகவே மணவாழ்க்கையைத் தேடிக் கொள்வார்.
ப் மகேந்திரன், வேலூர்.
எனக்கு 60 வயது. அடிக்கடி மலச் சிக்கல் ஏற்படுகிறது. எதனால்? "கேஸ்' பிராப்ளம் ஏற்படுகிறது. இதனால் முதுகுவலியும் ஏற்படு கிறது. வேறு ஏதாவது நோய்வர சாத்தியமுண்டா? பரிகாரம் என்ன?
அய்யா, வைத்தியரிடம் கேட்க வேண்டிய விஷயத்தை ஜோதிடரிடம் கேட்டால் என்ன சொல்லுவது? நல்ல டாக்டரிடம் பரிசோதனை செய்வதுதான் பரிகாரம்!
ப் எம். அழகப்பன், சென்னை-18.
எனது எதிர்காலம் எப்படியிருக்கும்?
ஏழரைச்சனியும் நடக்கிறது. சந்திர தசையும் நடக்கிறது. பொருட்சேதம், கண்டம், வைத்தியச் செலவு போன்ற பாதிப்புகள் ஏற்படும் காலம். கடன் உடன் வாங்கியாவது ருத்ர ஜெப பாராயணம் செய்து, ருத்ர ஹோமம் வளர்த்து சிவனுக்கும் அம்பாளுக் கும் ருத்ராபிஷேகம் செய்யுங்கள்.
ப் ஜி. முருகேசன், திண்டுக்கல்.
சிவப்புத்துணியில் 51 மிளகு கட்டி தொடர்ந்து பைரவருக்கு தீபமேற்றி வருகிறேன். தொடர்ந்து செய்யவேண்டுமா? எங்களுக்கு வரவேண்டிய சொத்து கடைசி நேரம் தட்டிச்சென்றுவிட்டது. என் மூத்த மகன் வெளிநாடு போய் சம்பாதிக்கும் யோகமுண்டா?
உங்களுக்கு ஏழரைச்சனி இருப்பதால், ஏழரைச்சனி முடியும்வரை மிளகுதீபம் ஏற்றுவது நல்லதுதான்- கெடுதல் இல்லை. ஆயுள் கண்டம் ஏற்படாது. வைத்தியச் செலவு விலகும். மகனுக்கும் ஏழரைச்சனியில் விரயச்சனி. இரண்டு பேருக்கும் ஏழரைச்சனி இருப்பதால்தான் வரவேண்டிய சொத்து ஏமாற்றமானது. பையன் வெளிநாடு போக லாம்; சம்பாதிக்கலாம். சொத்து கிடைக்க- பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமிக்கு அபிஷேகம், பூஜை செய்யவும். சொத்து கிடைத்தபிறகு சங்காபிஷேகம்- ருத்ரஹோமம் செய்யவும்.
ப் எல். அம்பிகா, திருப்பத்தூர்.
என் மகளுக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன. இதுவரை குழந்தை இல்லை. எப்போது கிடைக்கும்?
மருமகனுக்கு பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னம். ராகு தசை. மருமகளுக்கு உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னம். இருவருக்கும் ராசிப் பொருத்தமே இல்லை. சஷ்டாஷ்டக ராசி. மேலும் இருவருக்கும் சம ராகு தசை. எப்படி இந்த ஜாதகங்களுக்குப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தீர்கள்? உங்கள் மகளுக்கும் மருமகனுக்கும் சூலினி துர்க்கா ஹோமமும், சந்தான பரமேஸ்வர ஹோமமும், சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும், வாஞ்சா கல்ப கணபதி புத்திர ப்ராப்தி ஹோமமும் செய்து, தம்பதிகள் இருவருக்கும் அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பிறகு வாரிசு யோகம் எதிர்பார்க்கலாம்.