ப் எஸ். பெரியசாமி, திருவள்ளூர்.
என் மகனுக்கு எத்தனையோ பெண் பார்த்தும் அமையவில்லை. மைதிலி என்ற பெண் பிடித்திருக்கிறது. ஆனால் ஜாதகம் பொருத்தமில்லை என்கிறார்கள்?
மகனுக்கு பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னியா லக்னம். பெண் மைதிலிக்கு பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். பரணி- யானை; பூரட்டாதி- சிங்கம். யோனிப் பொருத்தம் இல்லை என்பது உண்மைதான். யானைக் கும் சிங்கத்துக்கும் பகை என்பது விதி. அதேசமயம் எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு என்றும் ஒன்று உண்டு. இருவருக்கும் ஒரே ராசி- ஒரே லக்னம்; ஒரே ராசிநாதன்- ஒரே லக்னாதிபதி. ராசியாதிபதியும் லக்னாதிபதியும் ஒருவர் என்று வந்தால் ரஜ்ஜு- வேதை- யோனி- தினம்- கணம் ஆகியவற்றைப் பார்க்கத் தேவையில்லை என்பது விசேஷ விதி. ஸ்ரீரங்கம் கோவில் வாக்கியப் பஞ்சாங்கத்திலேயே இந்த விவரம் எழுதப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மனப் பொருத்தம் என்பது மிக அவசியம். மனப் பெருத்தம் இருந்தால் மற்ற எந்தப் பொருத்தமும் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம். அவர்கள் நலமாக இருப்பார்கள் என்பது சாஸ்திரம். பையனுக்கு மேஷ ராசி. இதன் அதிபதி செவ்வாய். பெண்ணுக்கு விருச்சிக லக்னம். இதன் அதிபதியும் செவ்வாய். எனவே ஒருவருடைய ராசியாதிபதி மற்றவருக்கு லக்னாதிபதியாக வருவதால் எந்தப் பொருத்தமும் பார்க்க வேண்டாம். தைரியமாக திருமணம் பேசி முடிக்கலாம். யோனிப் பொருத்தம் இல்லாததால் அவர்களுக்கு வாரிசு தாமதமாகும். அதே சமயம் இருவர் ஜாதகத்திலும் லக்னத் துக்கு குரு பார்வை இருக்கிறது. எந்த சங்கடமும் எற்படாது. பெண்ணுக்கு 7-ல் குரு; பையனுக்கு 9-ல் குரு. திருமணம் முடிந்தபிறகு, வாஞ்சாகல்ப கணபதி புத்திரப்ராப்தி ஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும், சந்தான பரமேஸ்வர ஹோமமும் செய்து தம்பதிகளுக்கு கலச அபிஷேகம் செய்தால் வாரிசு தோஷமும் விலகி விடும்; புத்திர பாக்கியமும் உண்டாகும். இருவருக்கும் சமதசைக் குற்றமும் இல்லை. திருமணத் தேதி மட்டும் 4, 7, 5, 8 வராமல் 1, 3, 6 வருமாறு அமைத்துக்கொள்ளவும். தீர்க்காயு ளோடு ஒற்றுமையாக- ஆரோக்கிய மாக இருப்பார்கள்.
ப் கே. லட்சுமி, திண்டுக்கல்.
என் மகனுக்கு மூல நட்சத்திரம், தனுசு ராசி. நிறைய பெண்களைப் பார்த்துவிட்டோம்; அமைய வில்லை. தாயார் அல்லது தகப்ப னார் இல்லாத பெண்ணைப் பார்த்தும் முடியவில்லை. மூலம்- தோஷமா?
யார் சொன்னது? "ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்' என்பதுதான் பழமொழி. பெண் மூல நட்சத்திரமாக இருந்தால், போகிற இடத்தில் மாப்பிள்ளைக்கு அப்பா அல்லது அம்மா யாராவது ஒருவர் இருக்கக் கூடாது என்பார்கள். இது ஆண் நட்சத்திரத்துக்கு கண்டிப்பாகப் பொருந்தாது. அதிலும் ஆயில்யம் மாமியாருக்கும், மூலம் மாமனா ருக்கும், கேட்டை மைத்துனனுக்கும், விசாகம் கொழுந்தனுக்கும் ஆகாது என்பார்கள். மேலும் ஆயில்யம், கேட்டை, மூலம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் முதல் பாதமும், விசாகம் 4-ஆம் பாதமும்தான் தோஷம். இந்த நான்கு நட்சத்திரங்களும் பெண்களுக்குத்தான் தோஷமே தவிர ஆண்களுக்கு இல்லவே இல்லை. இது சம்பந்தமான பல கட்டுரைகளும் விளக்கங்களும் ஏற்கெனவே "பாலஜோதிட'த்தில் வந்துள்ளன. ஆனால் பஞ்சத்துக்கு ஆண்டியா? பரம்பரை ஆண்டியா என்று சொல்லுவதைப்போல, பஞ்சம் பிழைக்க வந்த ஜோதிடர்களும் அரைகுறை ஜோதிடர்களும் ஆண் ஜாதகம் மூலம் என்றால் வேண்டாம் என்கிறார்கள்; பயந்து ஓடுகிறார்கள். என் இளைய மகன் மூல நட்சத்திரம். நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல நிறம், சொந்த வீடு. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஒழுக்கம். நான் பொருத்தம் பார்த்து சரியாக இருக்கிறது என்று சொன்ன ஜாதகங்களையெல்லாம் பெண் வீட்டார் பார்த்துவிட்டு அவர்களும் (அப்பா, அம்மா இல்லாதவர்களும்) பயப்பட்டனர். (பின்னர் நல்லமுறையில் திருமணம் முடிந்து சிறப்பாக வாழ்கிறார்கள்.) என் கருத்து- இன்னும் உங்கள் மகனுக்கு குரு பலம்- திருமண யோகம் வரவில்லை என்பதுதான். அந்த வியாழ நோக்கம் வந்துவிட்டால் உங்கள் மகனுக்கு நல்ல பெண் அமைந்துவிடும். அப்பா- அம்மா உள்ள இடத்திலேயே பெண் அமையும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நடக்கும்.
ப் வி. விஜயகுமாரி, செங்கல்பட்டு.
என் மகளின் வேலை, திருமணம், எதிர்காலம் எப்படி இருக்கும்?
மகளுக்கு கும்ப ராசி, சதய நட்சத்திரம், தனுசு லக்னம். 23 வயது நடக்கிறது. லக்னத்தில் சனி இருப்பதால், 27 வயதுக்குமேல் திருமண யோகம். ரிஷபச் செவ்வாய் தனுசு சனியைப் பார்ப்பதால் திருமணத்தில் பிரச்சினை உருவாகும். அந்தச் சமயம் காமோகர்ஷண ஹோமமும், சுயம்வரகலா பார்வதி ஹோமமும் செய்யவும். ராகு தசை இருப்பு எழுதாததால் நடப்பு தசாபுக்தி தெரியவில்லை. குருப்பெயர்ச்சிக்குப் பிறகு தற்காலிக வேலை அமையும். கும்ப ராசி என்பதால் போராடிப் போராடிதான் முன்னேற வேண்டும். ஒருமுறை கடலூர்- காட்டுமன்னார் குடி வழி எய்யலூர் சென்று சொர்ணபுரீஸ் வரரை வணங்கவும்.
ப் எம். சித்ரா, கூடுவாஞ்சேரி.
படிப்பில் நாட்டமில்லாமல் பி.காம், இரண்டாவது வருடத்தில் நிறுத்தி விட்டேன். என் எதிர்காலம் குறித்து கவலையாக இருக்கிறது. மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகாமல் ஜாதகப்படி முன்னேற எந்தத் தொழில் செய்யலாம்? அரசு வேலை கிடைக்குமா? குலத் தொழில் செய்யலாமா? முன்னேற் றம் கிடைக்குமா?
மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டுமா னால் விட்ட படிப்பைத் தொடர்ந்து படித்து பட்டம் பெறவேண்டும். பட்டம் பெற்று அரசு வேலைக்கு முயற்சிக்கலாம். குலத்தொழிலில் முன்னேற்றம் இருக்காது. சோற்றுப் பஞ்சம் தீரும். சனி தசை சுயபுக்தி முடிந்தால் நல்ல வழியைக் காட்டும்.
ப் கெ. தாஸ், ஆரணி.
என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?
மகளுக்கு 23 வயது நடக்கிறது. மகர லக்னம். 7-ல் சந்திரன், செவ்வாய். கடக ராசிக்கு 8-ஆம் இடத்தை செவ்வாயும், தனுசுச் சனியும் பார்ப்பதால், 27 வயது அல்லது அதன்பிறகு திருமணம் செய்வது உத்தமம்.
ப் ஆர். கண்ணன், விழுப்புரம்.
என் மகன் திருமணம் எப்போது நடக்கும்?
மகன் பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மீன லக்னம். ராகு தசை, ராகு புக்தி நடக்கிறது. இது முடிந்தால் நிலையான வேலை, நிரந்தர வருமானம் அமையும். 7-ல் குரு, சனி இருப்பதால், தாமத திருமணம். ஆனாலும் நல்ல மனைவி அமைவார். 33 வயதுக்குமேல் முயற்சி எடுக்கலாம். ராகு புக்தி முடிந்து குரு புக்தியில் அமையும். எதற்கும் ஒருமுறை கந்தர்வராஜ ஹோமம் செய்தால் 7-ல் சனி நின்ற தோஷம் விலகும்.