ப் எஸ். வெங்கட், அரியலூர்.
என் மகளுக்கு எப்பொழுது கல்யாணம் நடக்கும்? எந்த நட்சத்திரம் பொருத்தமாக இருக்கும்?
மகளுக்கு பூராட நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னம். 25 வயது ஆரம்பித்தபிறகு திருமண முயற்சிகளைச் செய்யலாம். 27-க்குள் திருமணம் நடக்கும். அன்னிய சம்பந்தம். தொழில் செய்கிறவர். ரிஷப ராசியும் கடக ராசியும் வேண்டாம். (6 ஷ் 8). அத்துடன் பூராடம் குரங்கு; இதற்கு ஆடு பகையோனி- சேராது. இவையெல்லாம் எல்லா பஞ்சாங்கங்களிலும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்துப் புரிந்துகொள்ளவும். அல்லது எந்த நட்சத்திரம் பொருந்தும் என்பதை உள்ளூர் ஜோதிடரிடம் கேட்டு எழுதி வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இதையெல்லாம் "பாலஜோதிட'த்தில் இலவசமாகக் கேட்டு பதில் வருவதற்குள் காலதாமதம் ஆகிவிடும். பிப்ரவரியில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜூலையில்தான் பதில் சொல்ல முடிந்தது.
ப் என். சேகர், சோளிங்கர்.
எங்கள் மகன் பி.ஈ. முடித்து நான்கு வருடங்கள் ஆகின்றன. நிலையான வேலையில்லை. சினிமாத் துறையில் போட்டோகிராபி - கேமரா சார்ந்த கல்வி யும் ஓராண்டு படித்துள்ளான். அவனுக்கு எந்தத் துறையில் வேலை கிடைக்கும்?
மகனுக்கு மிதுன ராசி, மிதுன லக்னம். 10-ல் புதன் நீசம். 10-க்குடைய குரு 9-ல். தர்மகர்மாதிபதி யோகம். 10-ஆம் இடத்தை தனுசு செவ்வாயும் பார்க்கிறார். திருவாதிரை நட்சத்திரம். ராகு தசையில் இருப்பு எழுத மறந்து விட்டீர்கள். இருப்பு தசை எழுதினால்தான் தற்போது என்ன புக்தி என்று சரியாகக் கணக்கிட முடியும். திருவாதிரை முதல் பாதம் என்பதால் உத்தேசமாக ராகு தசை 14 வருடம் இருக்கலாம். அதன்படி 30 வயதுவரை குரு தசை நடக்கும். இப்போது 25 வயது நடக்கிறது. அடுத்த சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு தான் நிலையான தொழில், நிரந்தர வருமானம் அமையும். இஞ்ஜினீயரிங் துறையில் நல்ல வாய்ப்புகள் எதிர்பார்க்கலாம். கலைத்துறையில் 30 வயதுக்குமேல்தான் பிரகாசிக்க முடியும். அதுவரை உதவியாளராக வேலை பார்க்கலாம்.
ப் கே. குமரேசன், சென்னை.
என் மாப்பிள்ளை- என் மகள் திருமணம் முடிந்து நான்கு வருடங் கள் முடிந்துவிட்டன. இரண்டு முறை கருச்சிதைவு. இவர்களுக்கு புத்திர பாக்கியம் எப்போது கிடைக்கும்? மாப்பிள்ளை ஜாதகத்தில் ஏழரைச் சனியும் சந்திர தசை சந்தியும் உள்ளதால் காளஹஸ்தி சென்று ருத்ராபிஷேகம் செய்தோம். ஆயுள் தோஷம் உண்டா? வேறு பரிகாரம் இருந்தாலும் சொல்லுங்கள்.
உங்கள் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒரே ராசி- சிம்ம ராசி. மகளுக்கு பூர நட்சத்திரம். மாப்பிள்ளைக்கு மக நட்சத்திரம். திருமணம் நடந்த தேதி குற்றமில்லை. தேதியின் கூட்டு எண் 8 அல்லது 5 வந்தால்தான் பிரச்சினை. 4 வருகிறது. எனவே இனிமேல் உருவாகும் கர்ப்பம் நிலைக்கும். பெண் குழந்தை கிடைக்கும். கார்த்திகை மாதப் பௌர்ணமியன்று கும்பகோணம் அருகில் (குடவாசல் வழி) சேங்கா-புரம் தத்தாத்ரேயர் கோவி-ல் பாலூட்டும் உற்சவம் நடக்கும். அதில் உங்கள் மகள் கலந்துகொள்ள வேண்டும்.
ப் வி. சதானந்தம், வேலூர்.
என் மகன் எம்.ஈ. முடித்து சாப்ட்வேர் கம்பெனியில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தபின் அது சரிவராததால், இப்போது இஞ்ஜினீயரிங் காலேஜில் லெக்சரராக வேலை பார்க்கிறார். பழையபடி சாப்ட்வேர் வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?
மகன் துலா ராசி, விசாக நட்சத்திரம். பழைய வேலை சரியில்லையென்று, அது பிடிக்காமல்தானே இஞ்ஜினீயரிங் காலேஜ் வேலையில் சேர்ந்திருக்கிறார். மறுபடியும் அதே வேலை கிடைக்குமா என்று அவர் ஆசைப்படுகிறாரா? நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? யார் ஆசைப்பட்டாலும் இப்போதைக்கு மாற்றம் இல்லை.
ப் எஸ். குமரேசன், சென்னை-57.
என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?
பாலாஜிக்கு விசாக நட்சத்திரம், துலா ராசி, மிதுன லக்னம். துலா ராசியில் செவ்வாய், சனி சேர்ந்திருப்பதால் 30 வயது அல்லது அதன்பிறகு தான் திருமணம். அன்னிய சம்பந்தம்.
ப் வி. ராணி, திருப்பூர்.
எனது மகளின் ஜாதகத்தில் 7-ல் சூரியன், 8-ல் சனி இருப்பதால் திருமணம் எப்போது நடைபெறும்?
ரிஷப ராசி, மேஷ லக்னம். 8-ல் சனியும் 7-ல் சூரியனும் இருப்பது தோஷம்தான். சூரியன் நீசம். ஆனால் அங்கு சுக்கிரன் ஆட்சியென்பதால் சூரியனுக்கு நீசபங்கம். அதேபோல சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை. இருந்தாலும் 27 வயதுக்குமேல் திருமணம் கூடும். அன்னிய சம்பந்தம். அநேகமாக காதல் திருமணமாக அமைய லாம்.
ப் என். பரமகுரு, சேலம்.
ஒருவருடைய ஜாதகத் தின்மூலம் ஆண்- பெண் புத்திர பாக்கியத்தை எப்படி அறிவது?
அமரர் பி.எஸ்.பி. எழுதிய, "ஜோதிடப் பலன்கள் சொல்லுவது எப்படி?' என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
ப் ஆர். மூர்த்தி, திருநின்றவூர்.
எனக்கு வீடு கட்டும் யோகம் உள்ளதா?
ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னம். 60 வயது நடக்கிறது. செவ்வாய் தசை ஆரம்பம்- 6-க்குடைய தசை. மற்றவர்கள் பேரில் வீடு கட்டலாம். கடன் வாங்கிக் கட்டலாம். உங்களுக்கு கைரொக்கம் இருந்தால்- கடன் வாங்காமல் கட்டுவதாக இருந்தால் உங்கள் பெயரில் கட்டலாம்.
ப் எஸ். ராம்குமார், விழுப்புரம்.
ஆட்டோ எலக்ட்ரீஷியன் தொழிலைச் செய்யலாமா? வேறு தொழில் செய்யலாமா?
பிறந்த தேதியும் நேரமும்தான் எழுதியிருக்கிறீர்கள். பிறந்த ஜாதகம் தசா புக்தி இருப்புடன் அனுப்பவேண்டும்.
ப் ஆர். வெங்கட், குடியாத்தம்.
எனக்குத் திருமணம் எப்போது நடைபெறும்? நிலையான வேலையும் வருமானமும் எப்போது கிடைக்கும்?
கும்ப லக்னம். 22 வயதுமுதல் ராகு தசை ஆரம்பம். 40 வயதுவரை நடக்கும். ராகு 8-ல் இருக்கிறார். இந்த தசை முடியவேண்டும். அதன்பிறகு சற்று முன்னேற்றம் தெரியும்.