ப் ஏ. சேகர்பாபு, வேலூர்.

தங்களின் பதில்கள் ஆன்மிகம் கலந்த ஜோதிட பதில்களாக உள்ளன. நன்றி! என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

மகன் மகர லக்னம். அதில் ராகுவும், ஏழில் கேதுவும் இருப்பது நாகதோஷம். அதனால் 30 வயது முடிந்ததும் திருமணம் கூடும். 2021 நவம்பரில் 30 வயது முடியும். அதன்பிறகு பெண் தேடலாம். கிழக்கு, தெற்குத் திக்கில் பெண் அமையும். அந்நிய சம்பந்தம். பட்டதாரி! வேலைக்குப் போகும் தகுதியுண்டு.

ப் கே. லட்சுமியம்மாள், பொள்ளாச்சி.

Advertisment

என் அம்மாவின் உடல்நிலை காரணமாகவும், கணவரின் உடல்நிலை காரணமாகவும் பத்து லட்ச ரூபாய் கடனாகிவிட்டது. கடன் எப்போது முழுவதும் அடைபடும்?

உங்களுக்கு மேஷ ராசி, கார்த்திகை நட்சத்திரம். அட்டமச்சனியில்தான் கடன் அதிகமாகியிருக்கும். ஒரு லட்சம், அரை லட்சம் என்றால் எப்படியோ சமாளிக்கலாம். கடன் அடைபட வழிதேடலாம். பத்து லட்சம் என்றால் அதற்கு வட்டி கட்டவே வாழ்நாள் முடிந்துவிடுமே! ஏதாவது சொத்து, நகை வைத்திருக்கிறீர்களா? இருந்தால் அதைவிற்றுக் கடனை அடைக்கலாம். பரிகாரத்தால் இதற்கு என்ன செய்ய முடியும்? அந்தக் காலத்தில் லாட்டரி இருந்தது. அதிர்ஷ்டம் இருந்தால் லாட்டரி யோகத்தால் பணம் எதிர்பார்க்கலாம். அதற்கும் இப்போது இடமில்லை. எனக் குத் தெரிந்தவர் ஒருவர் இப்படித்தான் ஆரம்பத்தில் பத்தாயிரம் ரூபாய் இரண்டு வட்டிக்கு கடன் வாங்கினார். அதை அடைக்க இருபதாயிரம் ரூபாய் மூன்று வட்டிக்கு வாங்கினார். அதை அடைக்க ஐந்து வட்டிக்கு வாங்கி, இப்போது மீட்டர் வட்டி, ரன் வட்டி என்று பெருகி உங்களை மாதிரியே வட்டியே குட்டிபோட்டு பத்து லட்சம் கடனாளியாகிவிட்டார். அதை அடைக்கமுடியாமல் ஊரைவிட்டே ஓடிவிட்டார். கடன் வாங்கிக் கடன் கொடுப்பதும், மரமேறிக் கைவிடுவதும் ஒன்றுதான். இறைவனின் பாதங்களைப் பற்றுங்கள். ஏதாவது ஒரு சித்தர் சமாதியை சரணடையுங்கள். ஏதாவது வழிபிறக்கும்.

ப் ஆர். வேல்முருகன், காரைக்குடி.

Advertisment

மணமகன் திருவோண நட்சத்திரம், மகர ராசி. மணமகள் மக நட்சத்திரம், சிம்ம ராசி. இருவருக்கும் திருமணப் பொருத்தம் உண்டா?

இருவருக்கும் சஷ்டாஷ்டக ராசி. (ஆறு ஷ் எட்டு). சேராது. அடிக்கடி சண்டையும், சச்சரவும், கருத்து வேறுபாடாகவும் இருக்கும். மேலும் வாரிசு யோகமும் இருக்காது. அதனால் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

ப் எம். கே, மூர்த்தி, பண்ருட்டி.

எனது மனைவிக்கு கர்ப்பப்பையில் இரண்டு கட்டிகள் இருந்து, ஆபரேஷன் செய்து கர்ப்பப்பையை எடுத்துவிட்டார் கள். அதற்கு முன்னதாக 18 விதமான ஹோமங்கள் செய்யும்படி "பால ஜோதிட'த்தில் பதில் கூறியிருந்தீர்கள். அந்த ஹோமமும் செய்ய முடியவில்லை. எங்களின் தலைவிதிதான் என்ன?

உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால்தான் ஹோமம் செய்யத் தடையாகிவிட்டது. கர்ப்பப்யையும் எடுக்கும்படி நேர்ந்துவிட்டது. அதற்காக வருந்தவேண்டாம். ஆஸ்பத்திரியில் அல்லது டாக்டரிடம் சொல்லி பிறந்த குழந்தையை (மூன்று மாதமான குழந்தையை) தத்தெடுத்து வளர்த்து வரலாம். உறவினர்களிடம் எடுத்தால் பிற்காலத்தில் அவர்கள் உரிமை கொண்டாடி வரும்போது பிரச்சினை ஏற்படும். ஆண் குழந்தையைவிட பெண் குழந்தையிடம் பாசம் எதிர்பார்க்கலாம். கொள்ளி வைக்கவேண்டும் என்று நினைத்தால் ஆண் குழந்தையை எடுத்துக்கொள்ளலாம். ஒரு வயதில் அந்தக் குழந்தைக்கு ஆயுஷ்ஹோமம் செய்து, நீங்கள் மூவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். பெற்றால்தான் பிள்ளையா?

ப் ஆர். பெருமாள், சோளிங்கர்.

ஆணின் நட்சத்திரம் உத்திரட்டாதி, மீன ராசி. பெண்ணின் நட்சத்திரம் உத்திராடம், மகர ராசி. பெண்ணுக்கு ராகு தசை. ஆணுக்கு கேது தசை, ராகு புக்தி. இருவருக்கும் திருமணம் செய்யலாமா?

நட்சத்திரப் பொருத்தமும், ராசிப் பொருத்தமும் இருக்கிறது. ஆனால் சமதசைக் குற்றம் உள்ளதால் சேர்க்கக்கூடாது. அதாவது ராகுவும் கேதுவும் ஒரே கிரகம் என்பதால், இணைத்தால் வாரிசு இருக்காது. கர்ப்பச்சிதைவு ஏற்படும்.

ப் எஸ். கமலம், ஸ்ரீவைகுண்டம்.

என் மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும்? என் அப்பா ஜோதிடர்தான். இறந்துவிட்டார். உங்களை அப்பா ஸ்தானத்தில் வைத்துக் கேட்கிறேன்.

மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், கடக லக்னம். அதற்கு 8-ல் சனி இருப்பதால் தாமதத் திருமணம். அதாவது 27 வயதுமுதல் திருமண யோகம் வரும். தற்போது 25 வயதுதான் நடக்கிறது. 2021 ஆகஸ்டுக்குமேல் முயற்சிகளை மேற்கொள்ளவும்.

ப் கே. விஜயகுமாரி, கரூர்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்புவரை நிம்மதி இல்லாமல் தவித்தேன். தங்களின் வழிகாட்டுதலின்படி நிம்மதி வந்திருக்கிறது. காரணம் எனக்குப் பேரன் பிறந்துள்ளான். என் மகள் தன்னுடன் படித்த பையனைத் திருமணம் செய்துகொண்டதும், உங்களிடம் கேட்டதற்கு சில அறிவுரை கள் கூறினீர்கள். அவர்கள் திருமணம் தகராறுடன் நடக்கும் என்றீர்கள். சண்டை சச்சரவு எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. பேரன் பிறந்ததும் சரியாகிவிட்டது.

பேரன் சிம்ம ராசி, பூர நட்சத்திரம், துலா லக்னம். குட்டிச்சுக்கிர தசை என்றா லும், லக்னாதிபதி தசை என்பதால் குற்றம் செய்யாது. மிகவும் கெட்டிக்காரனாக வளர்வான். ஐந்து வயதுமுதல் சூரிய தசை ஆட்சி என்பதால், எல்லா நன்மைகளும் யோகங்களும் எதிர்பார்க்கலாம். காவேரிக்கரையில் (சிந்தாமணி) வாராஹி கோவில் உள்ளது. மாதந்தோறும் பூர நட்சத்திரத்தன்று இரண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டு வரவும். ஒரு திங்கட்கிழமையன்று துறையூர் பாதையில் சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். (திருவெள்ளறை ஊருக்கு முன்னால் உள்ளது. ஆர்ச்சுக்கு முன்பு.)

ப் எல். வசந்தி, மோகனூர்.

சனி தசையில், ராகு புக்தியில் நிரந்தர வேலை கிடைக்குமென்று கூறினீர்கள். அதேபோல கிடைத்தது. ஆனால் பத்து வருடமாக நான் வேலை பார்க்கும் கல்லூரியில் நிம்மதி இல்லை. துறைத்தலைவர், முதல்வர் இருவரும் ஜாதி வித்தியாசத்தால் டார்ச்சர் செய்கிறார்கள். முனைவர் பட்டம் முடித்திருக்கிறேன். என் கணவருக்கு வேலையில்லை. என்னை நம்பி மூன்று குடும்பங்கள் உள்ளன. இன்னும் ஒன்பது வருடம் சர்வீஸ் உள்ளது. எனக்கு எப்போது நிம்மதி உண்டாகும்?

சிம்ம லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். புதன் தசை, சுக்கிர புக்தி நடக்கிறது. புதன் ரிஷபத்தில், சுக்கிரன் மிதுனத் தில் பரிவர்த்தனை. எனவே வேலைக்கு பயமில்லை. திருவெள்ளறையில் சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை குருபூஜை நடக்கும். ஞாயிறு மாலை ராகுகால நேரத்தில் அங்கு சென்று தியானம் செய்யவும். அத்துடன் திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் (தெப்பக்குளம் கீழ்ப்புறம்) நாகநாதசுவாமி கோவில் சென்று வழிபடவும். எதிரிகள் காணாமல் போய்விடுவார்கள். வசதியிருந்தால் சூலினிதுர்க்கா ஹோமம் உள்பட 19 வகை ஹோமம்செய்து குடும்பத்துடன் கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். ஆரோக்கியம், பொருளாதார வளர்ச்சி, குடும்ப சந்தோஷம், பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

ப் என். சுப்பிரமணியன், மதுரை.

தாங்கள் 6-4-2018-ல் கூறிய பலன்கள் அப்படியே நடந்தன. கடனில் 60 சதவிகிதம் அடைத்தேன். உறவுகள் பகை. தினமும் விநாயகரை வழிபடுகிறேன். கேது தசையில் விடிவு ஏற்படுமா?

கேது தசை பாதிக்குமேல் ஆனதால் இனி பயமில்லை. தொடர்ந்து விநாயகர் கவசம் படிக்கவும். (வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க என்று தொடங்கும்.) கேது முடிந்ததும். தூறல் நின்றுவிடும். தேனி அருகில் கோடாங்கிப்பட்டியில் சித்திரகுப்தருக்கு தனிச்சந்நிதி உண்டு. கேதுவுக்கு அதிதேவதை விநாயகர். இங்கு ஆபத்திலிருந்து காக்கும் விநாயகர் சந்நிதி உண்டு. (தீர்த்தத்தொட்டி ஸ்டாப்.) வாராவாரம் போய் தரிசனம் செய்யவும். படிப்படியாகப் பொருளாதார முன்னேற் றம் தெரியும்.