= எம். நாகநாதன், புரசைவாக்கம்.
நான் மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளியில் படிக்கும்போது மேற்படிப்பு படிக்கமுடியாமல் சிரமப்பட்டு, என்ன செய்வதென்று வருந்தி தங்களுக்கு கடிதம் எழுதினேன். தாங்கள் இடம் மாறி வேலை செய்துகொண்டே படிக்கலாம் என்று எழுதியிருந்தீர்கள். அதன்படியே இப்போது நான் சென்னை வந்து ஒரு கடையில் பில் போட்டுக்கொண்டு, கரஸ் மூலம் பி.காம்., சி.ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். என் எதிர்காலம், வேலை, திருமணம் பற்றிக் கூறவும்.
ஏழரைச் சனி முடிந்துவிட்டது. சனி தசையும் முடிந்துவிட்டது. அடுத்து நடக்கும் புதன் தசை 1, 4-க்குடையவர் தசை. நினைத்தமாதிரி படிப்பு- பட்டம் முடிந்துவிடும். 10-ஆம் இடத்தை அட்டமாதிபதி சனி பார்ப்பதால், அரசு வேலை அமையாது. தனியார் பணி அல்லது வெளிநாட்டு வேலை அமையும். பட்டப்படிப்பு அரியர்ஸ் இல்லாமல் முடிக்க ஹயக்ரீவர் மந்திரத்தை தினசரி சொல்லவும். "ஓம் ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே'. ஒருமுறை கடலூர் அருகில் திருவந்திபுரம் சென்று ஹயக்ரீவரை வழிபடவும். ராசியில் செவ்வாய் நீசம். மகரத்தில் சனி ஆட்சி. இருவரும் பார்த்துக்கொள்வதால் 30 வயதை அனுசரித்துத் திருமணம் நடக்கும். பெரும்பாலும் காதல் திருமணமாக அமையும். முதலில் படிப்பு- பிறகு வேலை, சம்பாத்தியம். பிறகுதான் திருமணம். இப்போது 23 வயதுதான் ஆரம்பம்.
=வி. குமரேசன், ஈரோடு-5.
15 ஆண்டுகளுக்கு முன்பு முல்லை நகரில் நீங்கள் இருந்தபோது உங்களிடம் ஜாதகம் பார்த்து வந்தேன். நீங்கள் கொன்ன வார்த்தைக்கு 100 பலித்தது- பொய்யாகவில்லை. தற்போது "பாலஜோதிட'த்தில் எழுதி வருவதைப் படித்து ஆறுதல் அடைகிறேன். எனது ஜாதகம் தொலைந்து விட்டதால் மகன் ஜாதகத்தை அனுப்பி யுள்ளேன். எங்கள் எதிர்காலம் எப்படி யிருக்கும்? நான் வணங்கும் தெய்வமாகிய உங்கள் பாதங்களில் மலர், தூவி எனது கண்ணீரை உங்கள் பாதங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
உங்களுக்கு 55 வயது முடிந்து 56 வயது ஆரம்பம். நட்சத்திரம் தெரியவில்லை. மகன் விஜயகுமாருக்கு சந்திர தசை சனி புக்தி. ஏழரைச் சனி முடிந்துவிட்டதால், சந்திர தசையைப் பற்றி பயப்பட வேண்டாம். மகனுக்கு களஸ்திர தோஷம் இருப்பதால் திருமணம் தாமதமாகும். ஏழரைச் சனியில் படிப்பு தடைப்பட்டிருக்கலாம். அல்லது இடம் மாறியிருக்கலாம். கோட்டைஈஸ்வரன் கோவில் சென்று திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு அபிஷேகத்துக்குப் பால் வாங்கித் தரவும். எல்லா கஷ்டங்களும் விலகிப்போகும்.
=பி. ராமச்சந்திரன், சென்னை-127.
நான் எப்போது வீடுகட்டி முடிப்பேன்? எட்டு மாதமாக வீடு பாதியில் (பணமில்லாமல்) நிற்கிறது. சில சொத்து களை விற்றால்தான் வீடுகட்ட முடியும்!
செவலூர் பூமிநாத சுவாமி ஆலயம் சென்று பூஜை போடவும். விற்க வேண்டிய சொத்தும் விற்கும்; பாதியில் நிற்கும் வீட்டையும் கட்டி முடிக்கலாம்.
= என். ராஜ்குமார், திருச்சி-20.
எனது மகன் ரமேஷ் ஹரிஹரனுக்கு 28 வயது. எப்போது திருமணம் நடக்கும்? இதே வேலையில் நீடிப்பாரா? அல்லது மாற்றம் உண்டா?
மகனது ஜாதகத்தில் 7-ஆம் இடத்தை சனி பார்க்கிறார். களஸ்திர காரகன் சுக்கிரன் நீசம். கேது, ராகு சம்பந்தம். குரு 8-ல் மறைவு. எனவே 30 வயதில் திருமணம் செய்தால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். அக்காலம் கந்தர்வராஜ ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அல்லது 30 வயது முடிந்து 31-ல் நடக்கும்.
=எம். கோபாலன், மதுரை.
நான் இந்திய இராணுவத்தில் தேர்வாகி, பெல்காமில் மூன்று மாதம் பயிற்சி முடிந்து தற்போது டிரைவிங் பிரிவில் இருக்கிறேன். இதே துறையில் முன்னேறுவேனா?
12 வயது முதல் 22 வயது வரை சந்திர தசை. 10-ல் சந்திரன். செவ்வாய் பார்வை. அதனால் இராணுவ சேவை அமைந்தது. 2023-ல் ஏழரைச் சனி ஆரம்பிக்கும். அதற்குள் சந்திர தசை முடிந்து செவ்வாய் தசை ஆரம்பிக்கும். அதில் பதவி உயர்வு, முன்னேற்றம் எல்லாம் எதிர்பார்க்கலாம். தொடர்ந்து இராணுவத்தில் பணிபுரியலாம்.
=ஆர். முத்து, விழுப்புரம்.
மந்திரம் தெரியாத ஒருவர் சிவன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். ருத்திராட்ச மாலை அணிந்து சிவலிங்கத் தைத் தொட்டு அபிஷேகம், ஆராதனை செய்கிறார். அதே பூசாரி பணத்துக்காக சிலரது வீடுகளில் நள்ளிரவில் பூஜை செய்து இடுகாட்டில் கோழியை காவு கொடுக்கிறார். கோழியை அறுப்பதால் பாவம் சேருமா? சிவலிங்கத்தைத் தொட்டு அபிஷேகம் செய்வதால் புண்ணியம் சேருமா?
சிவலிங்கத்தைத் தொட்டு அபிஷேகம் செய்த புண்ணியம் கோழியை காவு கொடுப்பதால் போய்விடும்- பாவம்தான் சேரும்! சிவபூஜை என்பதே சைவ பூஜைதான். உயிர்ப்பலி- அசைவ பூஜை ஆகாது. அதன்பலன் அவருடைய வாரிசுகளைத் தாக்கும்.
=கே. கதரவன், கோவை.
வெளிநாடு போகும் யோகம் உண்டா? 34 வயதாகியும் இன்னும் திருமண மாகவில்லை. எம்.சி.ஏ. படிக்கிறேன். தடைகள் உண்டு. என்ன பரிகாரம்?
படிப்புத் தடை நீங்க ஹயக்ரீவர் மந்திரம் ஜெபிக்கவும். கடலூர் அருகில் திருவந்திபுரம் போய் வழிபடவும். ஏழரைச் சனி ஆரம்பிக்கும் காலம், தசா புக்தி ஒத்துழைத்தால் வெளிநாடு போகலாம். 7-ல் செவ்வாய், ராகு; 8-ல் சனி இருப்பது தோஷம். திருமணத்தடைக்கு இதுதான் காரணம். கந்தர்வராஜ ஹோமம் செய்யவேண்டும்.