எஸ்.குமார், வடபழனி.

குரு, சனி பார்வையிருந்தால் பிரம்மஹத்தி தோஷம் என்கிறார்களே, உண்மையா? அப்பா உயிரோடு இருக்கும்பொழுது மகன் பித்ரு தோஷப் பரிகாரம் செய்யலாமா?

குரு, சனி சேர்ந்தாலும் பார்த்துக் கொண்டாலும் சண்டாள யோகம் எனப் படும். பிரம்மஹத்தி தோஷத்துக்கு சம்பந்தமில்லை. பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்கு திருவிடைமருதூர் சென்று உச்சிக்கால பூஜை செய்யவேண்டும். தகப்பனார் உயிருடன் இருக்கும்போது மகன் பித்ருதோஷப் பரிகாரமோ பித்ரு தர்ப்பணமோ செய்யக்கூடாது.

வி. ஞானசேகர், திருப்பூர்.

Advertisment

குரு தசை எப்படியிருக்கும்? என்னு டைய லக்னம் மேஷமா? ரிஷபமா?

உங்கள் ஜாதகத்தை மதுரை கே.எம். சுந்தரத்திடம் கணித்து அனுப்புங்கள். சரியான லக்னம் தெரியும். செல்: 92453 28178.

jothidamanswer

Advertisment

பி. குமரகுரு, சேப்பாக்கம்.

50 வருடங்களாக தொழில் சரியில்லை. சொந்த வீடு இல்லை. ஜோதிடத் தொழில் வருமா?

தனுசு லக்னம். 8-ல் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன். 12-ல் சனி. எல்லா கிரகங்களும் மறைவென்பதால், வாழ்க்கை முழுவதும் போராட்டம்தான். அப்படியிருக்கும்போது சொந்த வீடு ஒரு கனவுதான். ராகு தசை நடப்பதால் ஜோதிடம் பயிலலாம். மனதுக்குப் பிடித்த அம்மனை உபாசிக்கலாம். சுயபுக்தி முடியவேண்டும்.

சி. ஹரிகிருஷ்ணன், கடலூர்.

என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

மகள் துலா ராசி, சுவாதி நட்சத்திரம், மிதுன லக்னம். 8-ல் சனி. லக்னத்தில் உள்ள செவ்வாய் சனியைப் பார்ப்பதால் 27 வயதுக்குமேல்தான் திருமண யோகம். நாகதோஷம் வேறு உள்ளது. இப்போது 19 வயதுதான் முடிந்துள்ளது. அதற்குள் ஏன் அவசரம்?

ஆர். ராஜசேகர், சென்னை.

மளிகைக்கடை வைக்கலாம் என்று கருதுகிறேன். செய்யலாமா?

உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, விருச்சிக லக்னம். உங்கள் மகன் மீன ராசி. தற்போதைய கோட்சார நிலைப்படி சொந்தமாக எந்தத் தொழில் செய்தாலும் அதில் நஷ்டம், தோல்வி, கடன்தான் ஏற்படும். குறைந்த சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை; வேலைக்குப் போவது நல்லது. அல்லது மீண்டும் இரண்டு வருடம் வெளிநாடு போகலாம்.

செந்தில்குமார், புதுச்சேரி.

என்னுடைய மைத்துனர் மகனுக்கு 33 வயது. திருமணம் செய்ய வேண்டும்- சம்பாதிக்க வேண்டும்- வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற எந்த லட்சியமும் இல்லாமல், சிறியவர்களோடு சேர்ந்து விளையாட்டுப் பிள்ளையாகவே உள்ளான். அவனுக்கு நல்ல எதிர்காலத் தைக் காட்டுங்கள்.

மேஷ லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். முக்கியமான ஆறு கிரகங்களும் 5-ல்- ராசிக்கு 7-ல் இருக்கிறார்கள். ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைவு. இது கிரக யுத்தம் எனப்படும். 37 வயது முடியவேண்டும். அது வரை அவனுக்கு எந்த பிடிப்பும் வராது. பேட்டா கொடுத்து வளர்க்க வேண்டும். ஒரு நல்ல மனோ தத்துவ டாக்டரிடம் காண்பித்து கவுன்சிலிங் கொடுங்கள். அத்துடன் கடலூர்- காட்டுமன்னார் குடி வழி- எய்யலூருக்கு அழைத்துச் சென்று சொர்ணபுரீஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடவும்.

வி. செல்வகலா, ராமநாதபுரம்.

என் மகள் சாஃப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். 23 வயது. எப்போது திருமணம் நடக்கும்? எப்படிப்பட்ட ஜாதகம் பார்க்கவேண்டும்?

மகர லக்னம். லக்னத் துக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. பூராட நட்சத்திரம், தனுசு ராசி. ராசியில் சனி சம்பந்தம். எனவே சனி தோஷம், நாக தோஷம் உள்ள ஜாதகமாகத்தான் பார்க்க வேண்டும். 27 வயதில்தான் திருமண யோகம். செவ்வாய் மேஷத்தில் ஆட்சி என்பதால் செவ்வாய் தோஷமில்லை. உங்கள் ஊருக்கு அருகில் தேவிபட்டினம் சென்று நாகதோஷ நிவர்த்திக்கும் சனி தோஷ நிவர்த்திக்கும் பரிகாரம் செய்து, பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்து மகளுக்கு அபிஷேகம் செய்தால் நல்ல மாப்பிள்ளை அமைவார்.

டி. சுப்பிரமணி, திருச்செந்தூர்.

இருபது வருடங்களுக்கு மேலாக சத்துணவு அமைப்பாளராக பணி புரிகிறேன். கணவருக்கு ஒரு விபத்தில் கால் ஊனமாகிவிட்டது. அதனால் இரண்டு வருடமாக வேலைக்குச் செல்லவில்லை. இரண்டு மகன்கள். ஒருவன் +2; இன்னொருவன் +1. குடும்பச் செலவு, படிப்புச் செலவு என கடன் சுமை இரண்டு லட்சம்வரை தலைக்குமேல் போய்விட்டது. இதிலிருந்து மீள்வேனா?

உங்களுக்கு சனி தசை நடப்பு. கணவருக்கு 52 வயது வரை குரு தசை- 12-ல் மறைவு. மகன் அருள்முத்துவுக்கு செவ்வாய் தசை. இரண்டவாது மகனுக்கு 26 வயது வரை குட்டிச் சுக்கிர தசை. எல்லார் ஜாதகத்திலும் ஆயுள் தீர்க்கம் உண்டு. பிள்ளைகள் இருவருக்கும் படிப்பு யோகம் நன்றாக உள்ளது. உயர்கல்வி யோகம் உண்டு. இன்னும் ஐந்து வருடம் உங்களுக்கு கஷ்டம், கடன் கவலை இருக்கும். பிறகு பிள்ளைகள் தலையெடுத்து உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வங்கி உதவிபெற்று வீட்டுக்காரர் ஏதாவது சிறு முதலீடு செய்து பெட்டிக்கடை வைக்கலாம். சிவ வழிபாடு செய்வது நல்லது.

எஸ். முருகேசன், அடியக்கமங்கலம்.

15 வருடமாக நாணயத்துடன் தரகுத் தொழில் செய்கிறேன். தற்போது தொழில் நலிவு. எதிர்காலம் எப்படியிருக்கும்?

56 வயது வரை குரு தசை; அதில் ராகு புக்தி. தற்போது ஏழரைச் சனி ஆரம்பம். சனி தசை சந்திப்பு. லக்னத்துக்கு ராஜயோகாதிபதி தசை. நல்லது நடக்கும். குரு தசை முடியும்வரை திருவாரூர் மடப்புரம் சென்று தட்சிணாமூர்த்தி ஜீவசமாதியை வழிபடுங்கள். வழிகிட்டும். அத்துடன் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று குரு தத்தாத்ரேயரை அடிக்கடி வழிபடுங்கள். உங்கள் நாணயத்துக்கும் நேர்மைக்கும் குருவருள் கிடைக்கும்.

எம். தேவிகா, காங்கேயநல்லூர்.

என் மகன் கார்த்திக் திருமணம் எப்போது நடக்கும்?

விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. விருச்சிகத்தில் சனி. 7-ல் சூரியன், புதன். எனவே 30 வயதில்தான் திருமணம். இப்போது 26 வயது. முன்னதாக திருமணமானால் இருதாரம் ஆகிவிடும். அவசரப்பட வேண்டாம்.