திருமலைச்சாமி எ. ரவி, வீரப்பன் சத்திரம்.

எனக்கு 22-8-2010-ல் திருமணமாகி 20-5-2011-ல் முதல் குழந்தையும், 5-7-2013-ல் இரண்டாவது குழந்தை யும் பிறந்தது. இரும்புக்கடையில் மாதச் சம்பளம் ஒன்பது ஆயிரத்துக்கு வேலை செய்கிறேன். பற்றாக் குறை சம்பளம் என்பதால், பகுதிநேர வேலையாக இயற்கை வேளாண்மை நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறேன். சரிவருமா?

விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம். 2020 டிசம்பர் வரை ஏழரைச்சனி. இது முடிந்ததும் உப வருமானம் பார்க்க உபதொழில் செய்யலாம். உங்கள் திருமணத்தேதி 24-8-2010. தேதி எண் 6, கூட்டு எண் 8 என்பதால், அன்று கட்டிய மாங்கல்யத்தை ஆசாரியிடம் கொடுத்து அழித்து- மேலும் கொஞ்சம் பவுன் சேர்த்து புதுமாங்கல்யம் செய்து, 1, 3, 6 வரும் தேதிகளில் உங்களுக்குப் பிடித்தமான கோவிலில் மறுமாங்கல்யம் அணிவிக்கவேண்டும். பழைய மாங்கல்யத்தைக் கழற்றும்போது, ஒரு மஞ்சளை- மஞ்சள் கயிற்றில் முடிந்து மனைவி கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும். (தாலி இல்லாமல் வெறும் கழுத்தாக இருக்கக்கூடாது). அதன்பிறகு வாழ்க்கையில் முன்னேற்றமான திருப்பம் உண்டாகும். இதை தை மாதம் செய்யலாம். (சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு).

sivan

Advertisment

= மகேஷ், கோவை- 29.

என் மகள் பாமினி, மருமகன் சனூப் இருவரும் லண்டனில் ஐ.டி. கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்கள். மார்ச் மாதத்தில் விசா முடிகிறது. மேலும் அங்கேயே இருக்க விரும்புகிறார்கள். விசா கிடைக்குமா? எத்தனை வருடங்கள் கிடைக்கும்?

பாமினிக்கு பூராட நட்சத்திரம், தனுசு ராசி. 2023 வரை ஏழரைச்சனி முடியும்வரை வெளிநாட்டில் தங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. சனூப் சுவாதி நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னம். 2029 வரை சனி தசை எனவே 2023 வரை உறுதியாக வெளிநாட்டில் தங்கலாம். அதுவரை விசாவும் கிடைத்துவிடும். அதன்பிறகு வெளிநாட்டில் தங்குவதும் தாயகம் திரும்பு வதும் அவர்கள் விருப்பத்தைப் பொருத்தது.

= பெயர் குறிப்பிட விரும்பாதவர், சண்முகபுரம் அஞ்சல்.

என் மகன் குருமூர்த்திக்கு 41 வயது. இன்னும் திருமணமாகவில்லை. உத்திர நட்சத்திரம், கன்னி ராசி. திருமணம் எப்போது நடக்கும்?

ஜாதகக் குறிப்பு அனுப்பாமல், கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லுவது? கல்யாண யோகம் எப்போது வருகிறதோ அப்போது நடக்கும்.

= பிரபு, அம்மாபேட்டை.

என் மனைவி படித்தவள்; நான் படிக்காதவன். பழகும் ஆண்களிடம் தப்பாகவே பழகுகிறாள். எத்தனைமுறை கண்டித்தாலும் திருந்தாத ஜென்மமாக இருக்கிறாள். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

மனைவி பூரட்டாதி நட்சத்தி ரம், கும்ப ராசி, தனுசு லக்னம். 31 வயது முதல் புதன் தசை. (நடப்பு வயது 34). புதன் 8-ல் மறைவு. குரு 3-ல் மறைவு. மனைவியை விவாகரத்து செய்துவிட்டு குழந்தைகளை நீங்களே வளர்க்க லாம். அல்லது ஹோமில் சேர்த் துப் படிக்க வைக்கலாம்.

= தங்கம்மாள் (எ) பப்பி.

2015-ல் திருமணம் நடந்தது. ஒரு மகன் இருக்கிறான். கணவரோடு கருத்து வேறு பாடு ஏற்பட்டு தாய்வீட்டில் (பிரிந்து) வாழ்கிறேன். தனியார் வேலை. வேறு நல்ல வேலை கிடைக்குமா? கணவர் விசாக நட்சத்திரம். என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மகர லக்னம். (36 வயது நடப்பு). 7-ல் செவ்வாய் நீசம். கும்பச் சனியைப் பார்க்கிறார். செவ்வாய், சனி சேர்ந் தாலோ பார்த்தாலோ இருமண வாழ்க்கை என்பது விதி! முதல் திருமணம் முறிந்துவிடும். மறுமணம் இஷ்டப்பட்டவரோடு நடக்கும். அப்படி மறுமணம் நடக்கும்போது திருமணத்தேதி 1, 3, 6 என்று வரவேண்டும். 4, 7, 8 கூடாது.

= திலகராஜ், வி. சுந்தரலிங்கபுரம் (பரவாலி அஞ்சல்).

மூத்த சகோதரருக்கு (பழனிகுமார்) திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. மறுமணம் எப்போது நடக்கும்?

பழனிகுமார் சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மகர லக்னம். லக்னத்துக்கு 7-ல் சனி. களஸ்திர தோஷம் உண்டு. முன்பதிவு செய்துவிட்டு நேரில் வந்தால் திருமணமாகப் பரிகாரம் கூறலாம்.

= எஸ். சந்திரசேகர், வானகரம். (சென்னை- 95).

முப்பது வருடங்களாக உங்கள் ரசிகன். உங்கள் கணிப்பு நூற்றுக்கு நூறு நடை முறைக்கு ஒத்துவருகிறது. இத்தனை வருடம்வரை மிகவும் சிரமத்தோடுதான் வாழ்கிறேன். ஏன் இந்த நிலை?

மேஷ லக்னம், பூராட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி. பாக்யாதிபதி குரு 8-ல் மறைவு. 9-ல் உள்ள சனியை ரிஷபச் செவ்வாய் பார்க்கிறார். ஆகவே நித்திய கண்டம்- பூரண ஆயுசு. வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட நல்ல குருநாதரை நாடி தீட்சை பெறவேண்டும்.

= ஜி. கணேசன், பள்ளியூர்.

குக்கிராமத்தில் இருந்தாலும் "பாலஜோதி டம்' படிக்கத் தவறுவதில்லை. உங்கள் ஜோதிடப் புலமைக்கு நன்றி. கொஞ்ச நாட் களாக உடல்நிலை சரியில்லை. எப்போது சரி யாகும்? ஆயுள், எதிர்காலம்பற்றிக் கூறவும்.

அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். பிறக்கும்போது செவ்வாய் தசை. 37 வயது முதல் 57 வயதுவரை சனி தசை. இது நான்காவது தசை. ஐந்தாவது செவ்வாய் தசையும், நான்காவது சனி தசையும், ஆறாவது குரு தசையும் நடந்தால் மாரகம் அல்லது மாரகத்துக்கு சமமான கண்டங்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆனாலும் சனி உங்கள் ராசிநாதன் என்பதால் விதிவிலக்கு உண்டு. இருந்தாலும் நவகிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம் செய்து ஒருமுறை கலச அபிஷேகம் செய்துகொள்ளவும்.

= வெ. நாகராஜன், விழுப்புரம்.

எனது மகன் மோகன் ஸ்ரீபதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அரசு வேலை கிடைக்குமா? எப்போது அமையும்? திருமணம் எப்போது நடக்கும்?

உங்கள் மகனுக்கு கேட்டை நட்சத் திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னம். 28 வயது நடப்பு. விருச்சிக ராசியில் ராகுவும், ராசிக்கு 7-ல் கேதுவும் இருப்பது நாகதோஷம். அத்துடன் மகரச்சனி 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். 30 வயதுக்கு மேல் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. செவ்வாய், சனி பார்வை இருப்பதால் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் நடக்கலாம். சூரியன் உச்ச மென்பதால், அரசு வேலைக்கு வாய்ப் புண்டு. ஏழரைச்சனி முடியவேண்டும்.

= சீனி. கோபாலகிருஷ்ணன், சோழன் மாளிகை.

எனது நண்பர் உமா மகேஷ் வரனுக்கு நிரந்தரத்தொழில் எப்போது அமையும்? அவர் வீட்டில் அடிக்கடி நாகம் தென்படுகிறது. எதனால்? ஆபத்து உண்டா?

கடக லக்னம், லக்னத்தில் சுக்கிரனும் ராகுவும். 7-ல் கேது. ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. (தனுசு ராசி). நாகத்தை அடித்த தோஷம் இருக்கிறது. அதனால் சர்ப்பசாந்தி ஹோமமும், சர்ப்ப பிரதிஷ்டையும் செய்யவும். புதுக்கோட்டை அருகில் பேரையூரில் நாகநாத சுவாமி கோவிலில் செய்யலாம். சனிபெயர்ச்சிக்குப் பிறகு (2020 டிசம்பர்) தொழில் அமையும்.

= மூர்த்தி, மதுரை.

திருமணப் பொருத்தத்தில் பத்துப் பொருத்தம் அவசியமா? முக்கியமான பொருத்தம் எது?

மொத்தம் திருமணப் பொருத்தங்கள் 23. நாளடைவில் அது சுருங்கி பத்துப் பொருத்தமாகிவிட்டது. இதில் மிக முக்கியமானவை தினப்பொருத்தம் (நட்சத்திரப் பொருத்தம்), ராசிப் பொருத்தம், யோனிபொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம் ஆகிய ஐந்து. தினப் பொருத்தத்தில் ஏழாவது நட்சத்திரம் வதை தாரை கூடாது. ராசிப் பொருத்தத்தில் 6, 8- சஷ்டாஷ்டக ராசி கூடாது. யோனிப் பொருத்தத்தில் பகை யோனி கூடாது. ரஜ்ஜுப் பொருத்தத்தில் ஒரே ரஜ்ஜு ஆகாது. வேதைப் பொருத்தத்தில் குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கு மற்ற நட்சத்திரம் ஆகாது. இதில் விதிவிலக்கும் உண்டு. உதாரணமாக, பூராட நட்சத்திரம் தனுசு ராசிக்கு, உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசி. ஏழாவது நட்சத்திரம் வதை தாரை. என்றாலும் தனுசு ராசியும் மீன ராசியும் குருவின் ராசி என்பதால் விதிவிலக்கு உண்டு. சேர்க்கலாம். ராசிப் பொருத்தத்தில் ரிஷப ராசியும், துலா ராசியும் 6, 8-ஆக இருந்தாலும், இருவருக்கும் ஏக ராசிநாதன் என்பதால் விதிவிலக்கு உண்டு. (சுக்கிரன்). சேர்க்கலாம்.