= எம். மாறன், திண்டிவனம்.

என்னைத் திருத்திய "பாலஜோதிட'த் தின் ஆசிரியர் ஐயா அவர்களுக்கு வாழ்நாள் வணக்கங்கள். 2017-ல் (27 வயதில்) திருமணம் எப்போது என்று கேட்டேன். 30 வயது முடியட்டும் என்று பதில் கூறினீர்கள். இப்போது 30 வயது முடிந்துவிட்டது. அதே கேள்விதான். எப்போது திருமணம் நடக்கும்? எதிர் காலம் எப்படியிருக்கும்? தங்கள் அறிவுரைப்படி கந்தர்வராஜ ஹோமம் செய்துவிட்டேன்.

Advertisment

மிதுன ராசி, தனுசு லக்னம். 2022- மார்ச் முதல் திருமண யோகம். வைகாசி முதல் ஆவணிக்குள் திருமணம் நடக்கும். மணவாழ்க்கைக்குப்பிறகு சொந்தத் தொழில் அமையும். ஏஜென்ஸி அல்லது ஃபைனான்ஸ் அல்லது ரியல் எஸ்டேட் ஆகிய மூன்றில் எதுவும் செய்யலாம்.

jothidamanswer

=ஏ. சேனாபதி, ஸ்ரீரங்கம்.

எங்கள் குடும்ப நண்பர் சேஷாத்ரிக்கு எப்போது திருமணம் நடக்கும்?

சேஷாத்ரி மீன லக்னம், துலா ராசி. 1987- ஜனவரியில் பிறந்தவர். 2021- ஜனவரியில் 34 வயது முடியும். அதன்பிறகு திருமணம் கூடும்.

=கே.பி. கண்ணன், புதுச்சேரி.

என் மகனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? என் மகன் மூத்தவன். அதே போல மூத்த பெண்ணைத் திருமணம் முடிக்கலாமா? தலைச்சனுக்கு தலைச்சன் ஆகாது என்கிறார்களே?

உங்கள் மகன் ஐப்பசியில் பிறந்தவர். ஆனி மாதம் பிறந்த தலைமகனுக்கும், அதே மாதத்தில் பிறந்த தலைமகளுக்கும்தான் திருமணம் செய்யக்கூடாது. ஆனி மாதத்திற்கு சேஷ்டா மாதம் என்று பெயர். சேஷ்ட மாதம், சேஷ்ட புத்திரி, சேஷ்ட புத்திரன் என மூன்று சேஷ்டா சேர்க்கக்கூடாது. உங்கள் மகனுக்கு நாக தோஷம் இருப்பதால் 30 வயது முடிந்தபிறகு திருமணம் செய்யலாம். நாகதோஷமுள்ள பெண்ணாகத்தான் பார்க்கவேண்டும்.

=ஜி.ஆர். பிரகாஷ், பட்டுக்கோட்டை.

எந்தத் தொழில் செய்தாலும் லாபகர மாக நடத்த முடியவில்லை. பொருளாதார நெருக்கடியும் கடன் பிரச்சினைகளும் சங்கடப்படுத்துகின்றன. அம்மா பெயரிலுள்ள வீட்டில் கடன் இருக்கிறது. கடன் எப்போது அடையும்?

பிரகாஷுக்கு இந்த சனிப்பெயர்ச்சியோடு மூன்று வருடம் நடந்துவந்த அட்டமத்துச் சனி முடிந்துவிடும். 24 வயது முதல் சனி தசை ஆரம்பம் 43 வயது வரை நடக்கும். தற்போது 34 வயது நடக்கிறது. இனிமேல் சனி தசை பிற்பகுதி படிப்படியான தொழில் முன்னேற்றமும், சம்பாத்தியமும் உண்டாகும்.

= எஸ். நாகராஜன், சிதம்பரம்.

என் மகள் சூர்யா பி.ஈ. முடித்து தனியார் கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறாள். நல்ல சம்பளத்தில் வேறு வேலை கிடைக்குமா? இந்த ஆண்டு திருமணம் செய்யலாமா?

சூர்யாவிற்கு கடக லக்னம். 6-ல் சனி நின்று 8-ல் நிற்கும் செவ்வாய், ராகுவைப் பார்க்கிறார். ராசிக்கு 7-ல் சனி வருகிறது. எனவே 30 வயது அல்லது அதன்பிறகு திருமணம் முடித்தால்தான் திருமண வாழ்க்கை இனிய வாழ்க்கையாக அமையும். 2022-க்குமேல் வேலை மாற்றம், நல்ல சம்பளம் எதிர்பார்க்கலாம்.

= வி. கௌரிசங்கர், வடசேரி.

என் கணவருக்குக் கடந்த இரண்டு வருடமாக கடன்சுமை அதிகமாகி, எனது தாய்வீட்டில் நகை, பணம் என்று வாங்கி கடன் அடைக்கும் சூழ்நிலை அமைந்துவிட்டது. எதனால் இப்படி ஏற்படுகிறது? இதற்குப் பரிகாரம் என்ன?

பாபுவுக்கு மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம், சிம்ம லக்னம். கௌரிக்கு ஹஸ்த நட்சத்திரம், கன்னியா ராசி. மகள் கௌசிகாவிற்கு உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னம். மகன் குரு குமரனுக்கு சதய நட்சத்திரம், கும்ப ராசி. எல்லாருக்கும் சனியின் பாதிப்பு இருக்கிறது. மேலும் எல்லாருக்கும் கோட்சாரம், தசாபுக்திகள் பாதிக்கப்படுவதால் கணவருடைய முயற்சிகள் தோல்வியாகவும் ஏமாற்றமாகவும் அமைந்து கடனாளியாக்கிவிட்டது. அத்துடன் கணவரின் மேஷ ராசியும் கௌரியின் கன்னி ராசியும் 6, 8 சஷ்டாஷ்டக ராசி. எனவே, உங்கள் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஒருவரை மற்றவர் குறைகூறுவதாகவும் இருக்கும். வாரிசு தோஷத்திற்கு பதிலாக பொருளாதார தோஷத்தை ஏற்படுத்துகிறது. கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று கடன் நிவர்த்திப் பூஜையில் கலந்துகொள்ளவும்.

=ஆர். கோபிநாத், சென்னை- 35.

எனது மகனின் திருமணம் எப்படி அமையும்? பெற்றோர் பார்க்கும் பெண்ணா? காதல் திருமணமா?

மகனுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னத்துக்கு 8-ல் செவ்வாய், ராகு; 6-ல் சனி. செவ்வாய் சனியைப் பார்ப்பதால் சந்தேகமில்லாமல் கலப்புத் திருமணம்- காதல் திருமணம் என்பதுதான் அவர் ஜாதக விதி. பெற்றோர் அதற்கு ஆதரவு தரவேண்டியது கடமை! ஏற்றுக்கொள்வது சிறப்பு.

=இந்திரா செல்வராஜ், வண்ணாரப்பேட்டை.

என் பேரனுக்கு 16 வயது முடிந்து 17 ஆரம்பம். எல்லா வகையிலும் நல்ல குணமுள்ளவனாக இருந்தாலும் கல்வியில் கவனக்குறைவு, ஞாபக மறதியாக இருக்கிறான். என்ன பரிகாரம் செய்தால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்?

அஸ்வத்தாமாவுக்கு அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னம். இரண்டு வயதுமுதல் சுக்கிர தசை. இது குட்டிச் சுக்கிரன் எனப்படும். 4-ல் சுக்கிரன் நீசமானாலும் புதன் ஆட்சி, உச்சம். படிப்பு தடைப்படாது. ஹயக்ரீவர் ஹோமம் செய்யுமிடத்தில் கலந்துகொள்ளவும்.

=பெருமாள், நல்லம்நாயக்கன்பட்டி.

என் திருமணம் எப்போது? உறவு முறையிலா- அன்னியமா?

30 வயது முடிந்தபிறகு திருமண யோகம். கடக லக்னத்தில் செவ்வாய் நீசம். துலாத்தில் 4-ல் சனி உச்சம். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால் அன்னிய சம்பந்தம்.

=குமார், அறந்தாங்கி.

தொழில், அரசியல், எதிர்காலம் எப்படியிருக்கும்?

இனி படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். 50 வயதுக்குமேல் யோகம். ஒருமுறை கும்பகோணம் அருகே எய்யலூர் சென்று சொர்ணபுரீஸ்வரரைத் தரிசனம் செய்துவரவும். முடிந்தால் அபிஷேகம் செய்யலாம்.

=கே.எம். விசுவநாதன், சேலம்.

என் மகன் லண்டனில் எம்.ஸி. படித்து முடித்து அங்கேயே வேலை தேடிக் கொண்டிருக்கிறான். எப்போது வேலை கிடைக்கும்?

மேஷ லக்னம், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம். 2021 நவம்பருக்கு மேல் நல்ல வேலை கிடைக்கும். அதற்கு முன்னதாக வேலை அமைந்தாலும் தற்காலிக வேலை யாகத்தான் இருக்கும்.