● பாலமுருகன், பழைய ஏழாயிரம்பண்ணை.
நான் ஒரு ஆலய அர்ச்சகர். இரண்டு வருடமாக "பாலஜோதிடம்' படித்து வருகிறேன். நீங்கள் எழுதும் கேள்வி பதில்களும் கட்டுரைகளும் ஜோதிடம் கற்க மிகவும் எளிதாக உள்ளது. எனக்கும் ஜோதிடம் கற்க ஆசை! ஜாதகப்படி ஜோதிடம் வருமா?
மணி- மந்திரம்- ஔஷதம் என்று சொல்லப்படும்! மணி என்பது ஜோதிடத்தைக் குறிப்பது. மந்திரம் என்பது ஆலயப்பணி. ஔஷதம் என்பது மருத்துவம். மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்த கலை- உடன்பிறப்புக்கள். நீங்கள் ரிஷப லக்னம்- கன்னியா ராசி. லக்னத்துக்கு 2-ல் கேது. ராசிக்கு 2-ஆம் இடத்தை சனியும் செவ்வாயும் பார்க்க- குரு பூரம் 2-ல் சுக்கிரன் சாரம் பெறுவார். (நீங்கள் அனுப்பிய குறிப்பில் பாதசாரம் பூராடம் 2-ல் வியாழன் என்று எழுதியிருப்பது தவறு. பூராடம் என்றால் தனுசு ராசியில்தான் குரு இருக்க வேண்டும். குரு சிம்மத்திலும்- நவாம்சத்தில் கன்னியிலும் இருப்பதால் பூரம் என்றுதான் இருக்கவேண்டும்). எனவே ஜோதிடம் எளிதாக வரும். சென்னையில் பி.எஸ்.பி. விஜயபாலாவை செல்: 98410 40251-ல் தொடர்புகொண்டு அவர் தகப்பனார் எழுதிய ஜோதிடப் பயிற்சிப் புத்தகத்தை வரவழைத்துப் படியுங்கள். நீங்களும் பெரிய ஜோதிடராகலாம். விஜய்பாலா தகப்பனார் பி.எஸ். பரமசிவம் (பி.எஸ்.பி.) சிறந்த ஜோதிட ஆய்வாளர். மணிக்கணக்கில் பேசி கின்னஸ் சாதனை படைத்தவர். எனக்கு நல்ல நண்பர். உறவினரும்கூட! அவர் எழுதிய ஜோதிடப் பாடநூல் கற்பதற்கு எளியதாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளது.
● பெயர் இல்லாதவர், ஊர் தெரியாதவர்.
"நல்ல நேரம்' நாகராஜ் என்பவர் மேஷம், துலா ராசி அல்லது லக்னம் உடையவர்கள் திருப்பதி செல்லக்கூடாது என்கிறார். அது உண்மையா? ஒருவருக்கு குலதெய்வமாக பாலாஜி இருந்து அவர் மேஷம், துலா ராசிக்காரர் ஆக இருந்தால் போகாமல் இருக்க முடியுமா?
"எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்' என்ற நிலைதான். எந்த ராசிக்காரர்களானாலும் சரி; லக்னத்தவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு எந்தத் தெய்வமும் ஆகாத தெய்வம் என்றோ- கெடுக்கும் தெய்வம் என்றோ எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. அதேசமயம் ஒருசிலரின்- தனிப்பட்டவர்களின் அனுபவத்தில் சில கோவில்களுக்குப் போனால் நல்லது நடக்கிறது. சில கோவில்களுக்குப் போனால் கெட்டது நடக்கிறது. முருகனையே விரும்பி வழிபடுகிறவர்களில்கூட ஒருவருக்கு பழனி யோகமாக அமைகிறது. வேறொருவருக்கு திருச்செந்தூர் நன்மை தரும் தலமாக அமைகிறது. பழனி தண்டாயுதபாணியும் திருச்செந்தூர் முருகனும் ஒருவருக்கொருவர் பகைவர்களா? எல்லாம் மனதின் தன்மையைப் பொருத்ததே! மற்ற பாகுபாடுகள் எல்லாம் மூடநம்பிக்கைதான்! கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன்- இப்படிப் பாகுபாடு பார்க்கிறவனைவிட நல்லவன் எனலாம்.
● பி.பி. ராஜமோகன், திருச்சி.
எனது நண்பரின் மகன் கணேசனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்?
துலா லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். ராசிக்கு 8-ல், லக்னத்துக்கு 12-ல் செவ்வாய்- சனி சேர்க்கை. களஸ்திர தோஷம் உடைய ஜாதகம். பொருத்தம் பார்க்கும் பெண் வீட்டார் இவர் ஜாதகம் தோஷ ஜாதகம் என்று சொல்லி தட்டிக்கழிப்பார்கள். 40 வயதானாலும் திருமணம் ஆவது சந்தேகம்தான். இப்பொழுது 36 வயது. இவர் தம்பிக்கும் 34 வயதாகிறது. காரைக்குடி அருகில் வேலங்குடி வயல் நாச்சியம்மன் கோவிலில் அண்ணன்- தம்பி இருவருக்கும் சேர்த்து காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் சூலினி துர்க்கா ஹோமமும் செய்து இருவருக்கும் கலச அபிஷேகம் செய்தால் விரைவில் பெண் அமையும். செலவைப் பற்றி சிந்திக்காமல் ஏற்பாடு செய்யுங்கள். விவரங்களுக்கு சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு விசாரிக்கவும்.
● ஆர். பாஸ்கரன், பெங்களூரு-60.
எனக்குச் சொந்தமான ஒரு பிளாட் கோவையில் உள்ளது. அதை விலை பேச முடிவு செய்துள்ளேன். எப்போது முயற்சிக்கலாம்?
உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னம். 2019 பிறந்த பிறகு விலை பேசலாம். சனிப்பெயர்ச்சிக்குள் விலைபோகும். பொன்னமராவதி அருகில் செவலூர் பூமிநாத சுவாமி கோவிலுக்கு வேண்டுதல் செய்து ஒரு கவரில் நூறு ரூபாய் எடுத்து வைக்கவும். கிரயம் முடிந்த பிறகு அங்கு சென்று சங்காபிஷேக ருத்ரஹோம பூஜை செய்யவும். அது வாஸ்துக் கோவில். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863-ல் தொடர்புகொள்ளலாம்.
● திருமதி தனவிஜயா, அம்பத்தூர்.
"பாலஜோதிட'த்தில் கேள்வி- பதில் பகுதியில் தங்களின் பதிலும் விளக்கமும் மிக அருமை. தெளிவாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது. எனக்கு இரு மகன்கள். முதல் மகன் கீர்த்திவாசன் எம்.எஸ்., படிக்க அமெரிக்கா சென்று அங்குப் பணிக்கும் முயற்சிக்கிறார். படிப்பை முடித்து அங்கேயே வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்? இரண்டாவது மகன் ஜெகன் திருவோண நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னம். தற்போது குறைவான சம்பளத்தில் வேலைபுரிகிறார். நல்ல கம்பெனியில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?
கீர்த்திவாசனுக்கு கும்ப ராசி. ராசிக்கு 12-ல் சனி, 2020-ல் வரும்போது படிப்பும் முடியும், வெளிநாட்டிலேயே வேலையும் அமையும். 30 வயது முடிந்த பிறகு திருமணத்துக்கு முயற்சிக்கலாம். 2-ல் சனி, 7-ல் செவ்வாய். அவர் காட்டுகிற பெண்ணை முடிக்கலாம். ஜெகன் ஜாதகப்படி விரயச்சனி நடக்கிறது. லக்னத்தில் சனி (கோட்சாரப்படி), சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு (2020) நல்ல சம்பளம், நல்ல வேலை அமையும். முடிந்தால் அவரையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கலாம். சென்னையில் பல்லாவரம் அருகில் பொழிச்சலூரில் (சனிக்குரிய தலம்) சுவாமி, அம்பாளுக்கு ஒரு அபிஷேக அர்ச்சனை, பூஜை செய்யவும். (சனிக்கிழமை). இரு மகன்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். அண்ணனுக்குத் திருமணம் முடிந்த பிறகுதானே தம்பிக்குத் திருமணம் செய்ய வேண்டும்.
● பத்மா, சென்னை-125.
எனக்கு இரு மகன்கள், ஒரே பெண். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மகளுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. எப்போது நடக்கும்?
மகளுக்கு திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னம். சந்திரனும் சனியும் ஒன்றுகூடியிருப்பது தோஷம். 2018 டிசம்பரில் 34 வயது முடியும். செலவைக் கருதாமல் காரைக்குடி அருகில் வேலங்குடி வயல் நாச்சியம்மன் கோவிலில் காமோகர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து மகளுக்கு அபிஷேகம் செய்தால் இந்த 34 வயதுக்குள் நல்ல வரன் அமையும். எதிர்காலம் இனிமையாக அமையும். முதல் தாரமாகவே முடிக்கலாம். இல்லாவிட்டால் 40 வயதுவரை தள்ளும். இரண்டாம் தார அமைப்பு உண்டாகும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு தகவல் அறியவும்.