= எஸ். பிரசன்னா, ஊரப்பாக்கம்.
ஏன் அக்காள் மகனுக்கு (ஸ்ரீனிவாஸ்) இன்னும் திருமணமாகாவில்லை. எப்போது நடக்கும்? 34 வயது நடக்கிறது.
ஸ்ரீனிவாஸ் பூச நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னம். செவ்வாய், சனி சேர்ந்தாலும் பார்த்துக்கொண்டாலும் திருமணத்தடையும், தாமத திருமண யோகமும் அமையும். ராசிக்கு 4-ல், லக்னத்துக்கு 5-ல் கேது- ராகு பார்வை. இது நாகதோஷம் எனப்படும். பொதுவாக நாகதோஷம், களஸ்திர தோஷமுடைய ஜாதகங்களுக்கு, பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும், ஆண்களுக்கு 35 வயதுக்குமேலும்தான் திருமணயோகம் கூடும். இந்த ஜாதகருக்கு குரு லக்னத்தைப் பார்ப்பதால்- தாமதமானாலும் நல்ல மனைவி அமைவார். நல்ல வாரிசும் அமையும். காளஹஸ்தி சென்று நாகதோஷப் பரிகாரப் பூஜை செய்தால் உடனே திருமணம் நடக்கவாய்ப்புண்டு. பெரும்பாலும் தை முதல் வைகாசிக்குள் திருமணயோகம் உண்டாகும்.
= பாலசுப்பிரமணியன், செங்கோட்டை.
சுமார் 20 வருடங்களாக நரம்புத் தளர்ச்சியால் உடல்நலம் பாதிக்கிறது. சரிவரத் தூக்கமில்லை. என்னை நம்பியுள்ள ஒரே ஜீவன் என் மனைவி மட்டும்தான். அவருக்கு என்னைத் தவிர வேறு சொந்தபந்தம் இல்லை. என் காலத்திற்குள் அவருக்கு ஏதாவது செய்தாகவேண்டும். உங்கள் அறிவரை தேவை.
வயது 77முடிந்து 78 ஆரம்பம்! மனைவி பேரில் ஆயுள் இன்சூரன்ஸ் செய்து பணம் செலுத்துங்கள். உங்களுக்கு வயதாகி விட்டதால் செய்யமுடியாது. உங்களுக்குப் பிறகு யார் பிரீமியம் கட்டுவது? இன்சூரன்ஸில் ஆயுள் காப்பீட்டு டெபாசிட் செய்யமுடியுமா என்று விசாரியுங்கள். சேரும் பணத்தில் மனைவி பேரில் பேங்க் டெபாசிட் செய்யுங்கள்.
= ஆ. சண்முகசுந்தரம், பண்பொழில்.
எனக்குத் திருமணமாகி விவகாரத்தும் ஆகிவிட்டது. (பத்து வருடங்கள் முடிந்தது). மறுமணம் அமையுமா? நிலையான தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை.
வயது 40 முடிந்து 41 நடக்கிறது. இந்த வயதில் உங்களைத் திருமணம் செய்துகொள்ள யார் முன்வந்தாலும் மறுமணம் செய்துகொள்ளலாம். அதற்குமுன்னதாக மனைவியையும், பிறக் கும் வாரிசுகளையும் காப்பாற்ற வழிவகை, வருமானம் தேடிக்கொள்ளவும். இதுதான் மிகமிக முக்கியம்.
= எம். ஸ்ரீனிவாசன், கள்ளக்குறிச்சி.
என் மகன் எத்திராஜின் திருமணம் எப்போது நடக்கும்?
எத்திராஜுக்கு 36 வயது முடிந்து 37 வயது நடக்கிறது. கார்த்திகை நட்சத்திரம்; ரிஷப ராசி, கடக லக்னம். 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சியாகி விட்டது. இனி பெண் அமையும். ஆறு மாதத்தில் திருமணம் நடக்கும்.
= கே. சங்கர் சிவகாசி.
என்னுடன் பணியாற்றும் சீனிவாசனுக்கு 35 வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்?
சீனிவாசன் அஸ்வினி நடசத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னம். 7-க்குடைய சனி களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் சேர்க்கை. மேஷ ராசியில் ராகு, 7-ல் செவ்வாய், கேது. நாகதோஷம் உண்டு. நாகதோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்தால் திருமணம் கூடும்.
= பெயர் தெளிவாக எழுதாத தகப்பனார், சென்னை-42.
எனது மகளுக்கு இரண்டாவது திருமணம் முறிந்துவிட்டது. மூன்றாவது திருமணம் நடக்குமா?
தகப்பனாருக்கு பெயர் வைக்கவில்லையா? பெயரே தெரியவில்லையே. விவரமாக அடுக்கடுக்காக கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஆனால் பெயரை மட்டும் புரியாதவகையில் எழுதியிருக்கிறீர்கள். பெயர் தெரிந்தால் கேவலமாக எண்ணுவார்களோ என்ற பய உணர்வா? உங்கள் மகள் வி. காயத்திரி ஜாதகத்தில் மகர லக்னத்தில் சனி, ராகு, கேது தோஷம், மாங்கல்யதோஷம் இருப்பதால், நல்ல மாப்பிள்ளை அமையவும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையவும் காரைக்குடி சுந்தரம் குருக்கள் வசம் (செல்: 99942 74067) காமோகர்ஷண ஹோமமும், புனர்விவாக ஸ்வயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகமும் செய்யவேண்டும். அதன்பின் மணவாழ்வு அமையும்.
= டி.ஆர். பத்மநாபன், விளாத்திகுளம்.
எனக்கு வேண்டியவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையில் அடிபட்டு, சிகிச்சைக்குப்பிறகு அடிக்கடி வலிப்பு (பிட்ஸ்) வந்து சுயநினைவு இழந்து தவிக்கிறார். (35 வயது). தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். எப்போது பூரண குணமாகும்?
முத்துக்குமார் விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். ஏழரைச்சனி கழிவு நேரம். நடப்பு வயது 35. கேது தசை 40 வயதுவரை நடக்கும். சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு 19 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, நெய்யில் நனைத்து தீபமேற்றவும். மீண்டும் ஒருமுறை ஆபரேஷன் செய்யும்படி வரலாம். நல்ல மருத்துவரிடம் காண்பிக்கவும். அத்துடன் தன்வந்திரி பகவானுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்யவும். வைத்தீஸ்வரன் கோவில் சென்று வைத்தியநாருக்கும் தையல் நாயகி அம்பாளுக்கும் அபிஷேக பூஜை (ஒருறை) செய்யவும்.
= காயத்திரி, ஈரோடு.
26-1-2020-ல் மகளுக்கு பொருத்தம் பார்த்து இரண்டாவது திருமணம் நடந்தது. (நீங்கள்தான் சேர்க்கலாம் என்றீர் கள்? முடிவாகிவிட்டது. மூன்றாவது திருமணம் நடக்குமா? எப்போது?
நான்தான் பொருத்தம் பார்த்தேன் என்பதை ஒப்புக்கொண்டாலும், 26-ஆம் தேதி திருமணத் தேதியாகக் குறித்துத் தந்திருக்க மாட்டேன். 4, 7, 8 ஆகிய தேதிகளில் இதுவரை யாருக்கும் திருமணத்தேதி குறித்துக்கொடுத்தது இல்லை. என்மேல் குறைசொல்லி தப்பிக்க நினைக்காதீர்கள். உங்கள் வசதிக்காக 26-ஆம் தேதி திருமணம் செய்ததால் நிலைக்கவில்லை. 1, 3, 6 தேதிதான் உத்தமம்! மூன்றாவது திருமணம் நல்ல தேதியில் அமைய, முன்னதாக காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) புனர்விவாக ஹோமமும் காமோகர்ஷண ஹோமமும் செய்து, மகளுக்கு கலச அபிஷேகம் செய்யவும். அந்த வாழ்க்கையாவது நல்லதாக அமையட்டும்.
= ராஜேஸ், மதுரை.
சனிப்பெயர்ச்சித் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்துக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கத்துக்கும் வித்தியாசப்படுகிறதே. எதைக் கடைப்படிப்பது?
வாக்கியப் பஞ்சாங்கம் என்பது ரிஷிகளால் வரையறுக்கப்பட்டது. அதைத் திருத்திக் கணிக்கப்பட்டது திருக்கணிதம். "அம்மா, அப்பா' என்பது அழகான தமிழ் வார்த்தை. விலங்குகள் "மா' என்றுதான் கத்தும். "டாடி, டாட், மம்மி, மாம்' என்பது ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் சொல்வது. வாக்கியப் பஞ்சாங்கம் "அம்மா அப்பா' என்று அழைப்பதற்குச் சமம். மற்றவை ஆங்கிலத்தில் அழைப்பதற்குச் சமம். மொழி வேறாக இருந்தாலும் அம்மா அம்மாதான். அத்தை அத்தைதான். அத்தையை அம்மா என்று அழைக்க முடியாது. குழப்ப மில்லாமல் வாக்கியப் பஞ்சாங்கத்தையே கடைப்பிடிக்கலாம். அதன்படிதான் கோவில்களில் (திருநள்ளாறு, காளஹஸ்தி) சனிப்பெயர்ச்சி, ராகு- கேதுப்பெயர்ச்சிகள் நடத்துகிறார்கள்.