திருமண வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அமையும். அது சொந்தத்தில் இருக்குமா, அன்னியத்தில் இருக்குமா அல்லது காதல், கலப்புத் திருமணமாக அமையுமா என்பதுதான் எதிர்பார்ப்பு.
சிலருக்கு அத்தைமகன், மாமன்மகள், அக்காள்மகள் என உறவுக்குள்ளேயே அமைந்துவிடும். சொந்தங்களும் ஒன்றுக்குள் ஒன்றாகவே இருக்கும். மாறிவரும் காலத்தில், சொந்தத்தில் திருமணம் செய்வதால் சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவரீதியாகக் கருத்து உள்ளதால் சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்த்து, இனம், மதம் மாறாமல் அந்நியத்தில் பார்த்து மணம் முடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சொந்தத்திற்குள் மணம் முடித்துக்கொள்வது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. சில திருமணங்கள் காதலித்து பெற்றோரின் சம்மதத்துடனோ அல்லது யாருக்கும் தெரியாமலோ நடைபெறுகின்றன. இப்படிப்பட்ட திருமணங்களை காதல் திருமணத்துடன் சம்பந்தப்படுத்தலாம். காதலில் நிறைய கலப்புத் திருமணங்கள்தான் நடைபெறுகின்றன.
ஜென்ம லக்னத்திற்கு களத்திர ஸ்தானமான 7-ஆம் வீடும், களத்திரகாரகன் சுக்கிரனும் சுபகிரகச் சேர்க்கை, பார்வை மற்றும் சுப நட்சத்திரங்களில் அமையப் பெற்றிருந்தால் மனைவியானவள் கௌரவமான இடத்திலிருந்து அமைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீடும், சுக்கிரனும் சொந்தபந்தங்களைக் குறிக்கும் கிரகங்களின் சேர்க்கைப் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால், உறவில் திருமணம் நடைபெறக்கூடிய உன்னதமான அமைப்பு உண்டாகும்.
நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரியன் தந்தை காரகனாவார். ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் இடம் தந்தை ஸ்தானமாகும். 9-க்கு 9-ஆம் இடமான 5-ஆம் வீடு தந்தைவழி மூதாதையர் பற்றியும், பூர்வ புண்ணியத்தைப் பற்றியும் குறிப்பிடும் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 5, 9-ல் சுபகிரகங்கள் அமையப் பெற்று, 7-ஆம் அதிபதியும், சுக்கிரனும் சூரியன் சேர்க்கை அல்லது சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவற்றில் அமையப்பெற்றோ, 5, 9-க்கு அதிபதிகளுடன் 7-ஆம் அதிபதியும் சுக்கிரனும் அமையப் பெற்றோ இருந்தால் தந்தைவழி உறவில் திருமணம் அமையும்.
நவகிரகங்களில் தாய்க்காரகன் சந்திரன். தாய்மாமனைக் குறிக்கும் கிரகம் புதன் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் வளர்பிறைச் சந்திரனும் புதனும் சுபர் பார்வை பெற்றாலும், 7-ஆம் அதிபதி சுபராக இருந்து வளர்பிறைச் சந்திரன், புதன் சேர்க்கைப் பெற்றாலும், சுக்கிரன், சந்திரன் அல்லது புதன் சேர்க்கைப் பெற்றாலும், 7-ஆம் அதிபதி- சந்திரன், புதன் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம், ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்றவற்றில் அமையப் பெற்றாலும் தாய்வழி உறவில் அல்லது மாமன்மகளை மணம் முடிக்கக்கூடிய அமைப்பு, பெண் என்றால் மாமன்மகனை மணம் முடிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் இடமானது இளைய உடன்பிறப்பையும், 11-ஆம் இடமானது மூத்த உடன்பிறப்பையும் குறிப்பிடக்கூடிய ஸ்தானமாகும். நவகிரகங்களில் செவ்வாய் சகோதர காரகனாகும். ஒருவரது ஜாதகத்தில் 7-ஆம் அதிபதியும் சுக்கிரனும் 3, 11-ஆம் அதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்று, சுபர்சாரம் மற்றும் சுபர் சேர்க்கைப்பெற்று, செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் போன்றவற்றில் அமையப்பெற்றால் உடன்பிறந்தவர்களின் உறவினர்கள்வழியில் மணவாழ்க்கை அமையும்.
ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீடும், சுக்கிரனும், பந்தங்களைக் குறிக்கும் கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு தொடர்புடன் அமைந்தால் நெருங்கிய உறவில் திருமணம் நடைபெறும் என்றாலும், 7-ஆம் அதிபதியோ சுக்கிரனோ- சனி, ராகு, கேது சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவில் அமையாமல், தூரத்து உறவில் திருமணம் கைகூடும். சுபகிரகங்களின் ஆதிக்கம் 7-ஆம் வீட்டிற்கும், 7-ஆம் அதிபதிக்கும் இருக்குமேயானால் ஜாதி மத வேறுபாடின்றி பிறந்த குலத்திலேயே திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
ஒருவரது ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் சனி அமையப் பெற்றாலோ, 7-ஆம் அதிபதி சனி சேர்க்கைப் பெற்றாலோ அந்நியத்தில் திருமணம் நடக்கும். சனி சுபகிரக சம்பந்தத்துடன் இருந்தால் அந்நியத்தில் ஓரளவுக்கு நல்ல இடத்தில் வாழ்க்கை அமையும்.
ஒருவரது ஜாதகத்தில் 7-ல் சனி அமைந்து ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றாலும், 5-ல் சனி- ராகு அல்லது கேதுவுடன் இணைந்தாலும், சனி, ராகு இணைந்து 7-ஆம் அதிபதியின் சேர்க்கை அல்லது சுக்கிரனின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், உறவுகளைக் குறிக்கும் கிரகங்களான சூரியன், சந்திரன், பாரம்பரியத்தைக் குறிக்கும் கிரகமான குரு ஆகியவை சனி, ராகுவால் பாதிக்கப்பட்டாலும், குரு வக்ரம் பெற்றாலும் உறவினர் வகையில் தீராப்பகையுடன் காதல் திருமணம், கலப்புத் திருமணம், மதம்மாறித் திருமணம் செய்யும் சூழ்நிலை உண்டாகும்.
ஆக, ஜென்ம லக்னத்திற்கு 5, 7, 9 ஆகிய இடங்களில் அமையக்கூடிய கிரகங்களின் நிலையைக்கொண்டு வரக்கூடிய வாழ்க்கை துணையைப் பற்றி அறியலாம். மேற்கூறிய இடங்களில் சுபகிரகம் மற்றும் உறவுகளைக் குறிக்கும் கோள்கள் இருந்தால் உறவிலும், சனி, ராகு- கேது போன்ற பாவகிரகங்களின் ஆதிக்கம் இருந்தால் மதம், மொழி, இனம் போன்றவற்றில் மாறுபட்டவர்களைத் திருமணம் செய்யும் அமைப்பும் உண்டாகும் என அறியமுடிகிறது.
செல்: 72001 63001