"தாயோடு அறுசுவை போம்.
தந்தையோடு கல்வி போம்.
சேயோடு தான்பெற்ற செல்வம் போம்.
மாயவாழ்வு உற்றாருடம் போம்.
உடன்பிறப்பால் தோள்வலி போம்.
பொற்தாலியோடு எவையும் போம்'
என்பது ஔவையார் பாடல். அதாவது தாய் போனபின்னே அறுசுவை உணவு கிடைக்காமல் போய்விடும். தந்தை போனபின்னே கல்வி போய்விடும். சொந்தமாக காசு செலவுசெய்தாலும், எதையும் படிக்கும் மனநிலை இருக்காது.
குழந்தையோடு செல்வம் போய்விடும். சம்பாதிக்கிற சொத்தெல்லாம் குழந்தைகளுக்குத்தான். சொந்தக்காரர் களோடு மாயவாழ்வு போய்விடும். சகோதரனால் குடும்ப பாரத்தை சுமக்கும் தோள்வலி போகும். ஆனால், பொன் தாலி வாங்கிக்கொண்ட மனைவி போனால் சகலமும் போய்விடும்.
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு உறவின் பிரிவும், எதையாவது ஒன்றை இழக்கத்தான் செய்யும். ஆனால், தாலி கட்டிய மனைவி ஒருத்தியின் பிரிவு மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுபோய்விடும் என ஔவையார் கூறியிருக்கிறார்.
வாழ்க்கைத்துணை இல்லையென்றால் வாழ்க் கையே இல்லை என்பது ஔவைப்பாட்டியின் கருத்து மட்டுமல்ல; இல்வாழ்க்கை யின் சுவையை உணர்ந்த அனைவரது கருத்தும் அதுதான்.
பெற்றோரால் நல்ல நண்ப னாக இருக்கமுடியும். ஆனால் வாழ்க்கைத்துணையாக முடியாது. நண்பனால் பெற்றோரின் அன்பைக் கொடுக்கமுடியும். ஆனால் வாழ்க்கைத்துணையின் அன்பைக் கொடுக்கமுடியாது. கணவன்- மனைவி உறவு மட்டுமே தாயாக, தந்தையாக, கணவனாக, மனைவியாக, குழந்தையாக, நல்ல நண்பனாக எல்லாருடைய அன்பையும் சேர்த்தே கொடுக்கமுடியும். எல்லாவற்றையும் தன்னகத்தே ஒருசேர அடக்கியுள்ள கணவன்- மனைவி உறவே மிகச்சிறந்த உறவு.
ஒருவர் பிறப்பிலேயே தாய்- தந்தை இழந்தவராக, அநாதையாக, உற்றார்- உறவினர் இல்லாமல்கூட பிறக்கலாம். ஆனால், அவரால் இவையனைத்தையும் தேடிக் கொள்ள முடியும். உறவான மனைவியில்லை என்றால் வாழவே முடியாது.
"உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன்னைக் கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி
காலச் சுமைதாங்கி போலே
மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் இன்னல் தணியுமடி
ஆலம் விழுதுகள்போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.'
இது கவிஞர் கண்ணதாசனின் அழகான அனுபவக் கருத்து. 1970-ல் சிவாஜிகணேசன், பத்மினி நடிப்பில் வெளிவந்து, கணவன்-மனைவி உறவின் ஆழத்தை புரியவைத்த "வியட்நாம் வீடு' படத்தில் இடம்பெற்ற பாடல். இந்த பாடல் வரிகளைக் கேட்டாலே கண்ணீர் வழியும். ஆழ்மனதைத் தொடும் ஆழமான, அழுத்தமான வரிகள்.
ஆக, கணவன்- மனைவின் அன்பிற்கு இணையாக உலகில் வேறெந்த உறவும் வரமுடியாது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. "வீட்டுக்கு அடங்காது, உருப்படாது' என்று தண்ணீர் தெளித்துவிட்டு ஊர்சுற்றித்திரிந்த எத்தனையோ ஆண்கள், திருமணத்திற்குப்பிறகு மனைவியின் அன்பிற்குக் கட்டுப்பட்டு சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்திருக் கிறார்கள்.
திருமண வாழ்க்கை எல்லாருக்கும் சிறப்பைத் தருவதில்லை என்றாலும், ஒருசில தம்பதியர் மட்டும் மிகவும் அன்யோன்யமாக, ஒருவரையொருவர் பிரியாமல், மிகவும் நெருக்கமாக, விட்டுக்கொடுத்து வாழ்வதைக் காணலாம். அப்படியிருக்கும் தம்பதியர்களின் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிக்கும் கிரகம் குருவாகும். மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். கணவன்- மனைவி இருவரும் அன்யோன்யமாக இருக்கவேண்டுமானால் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் ஒரே ராசியில் இருக்கும் அல்லது அடுத் தடுத்த ராசியில் இருக்கும் அல்லது குருவுக்கும் சுக்கிரனுக்கு திரிகோண சம்பந்தம் இருக்கும். இந்த அமைப்பு ராசிக்கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதேபோல், ஒருவரின் செவ்வாய், சுக்கிரன் உள்ள ராசியில் அல்லது ஏழாம் அதிபதியுள்ள ராசியில் அவரது வாழ்க்கைத்துணையின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், குரு இருந் தால் இருவரும் சேர்ந்து பிரியமாக இருப்பர். மற்றும் சந்திரன் உள்ள ராசியில் அல்லது சந்திரனுக்கு 1, 5, 9-ல் வாழ்க்கைத்துணையின் ஜாதகத்தில் குரு இருந்தாலும், குரு பார்த் தாலும், ஒருவருக்கொருவர் ஆதர்சன தம்பதியராக இருப்பார்கள்.
பெண்ணுடைய ஜாதகத்தில் ஜாதகியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். கணவரைக் குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். கணவனும் மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டுமானால், பெண்களுடைய ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் ஒரே ராசியில் இருக்க வேண்டும் அல்லது அடுத்தடுத்த ராசியில் இருக்க வேண்டும் அல்லது திரிகோண சம்பந்தம் பெறவேண்டும். இந்த அமைப்பு ராசிக்கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
அத்துடன் ஒருவரின் செவ்வாய், சுக்கிரன் உள்ள ராசியில் அல்லது ஏழாம் அதிபதியுள்ள ராசியில் அவரது வாழ்க்கைத்துணையின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், குரு இருந்தால் இருவரும் சேர்ந்து பிரியமாக இருப்பர்.
பத்து வருடங்களுக்கு முன்புவரை கணவன், மனைவியை விவாகரத்து செய்த நிகழ்வுகள் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தன. பெண்கள் கணவருடன் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்தால், பெற்றோர்கள் ஆலோசனைகூறி புகுந்த வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். இப்பொழுது பெற்றோர்கள், "பிடிக்கவில்லை என்றால் வந்துவிடு' என்று உற்சாகப்படுத்துகிறார்கள். அதனால் சமீப காலமாக மனைவி, கணவனை வெறுத்து ஒதுக்கும் கலாச்சாரம் அதிகமாகப் பெருகிக் கொண்டிருக்கிறது.
கணவன்- மனைவி பிரிவினைக்கு ஜோதிட ரீதியான காரணங்கள்:
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன்- கேது சம்பந்தம் இருக்கும் அல்லது பெண் ஜாதகத்தில் செவ்வாய்- கேது சம்பந்தம் இருக்கும்.
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு பெண் ஜாதகக் கேது சம்பந்தம் அல்லது பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசியில் ஆண் ஜாதகக் கேது சம்பந்தம் இருக்கும்.
ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் 6, 7, 8-ஆம் பாவகம் சம்பந்தம் பெறும்போது விதிப்பயனால் கணவன்- மனைவியிடையே பிரிவினை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுக்கும் தன்மையும், சகிப்பும் தன்மையும் இன்மையே.
பெண்கள் ஆண்களைக் குறை கூறுகிறார்கள்.
ஆண்கள் பெண்களைக் குறை கூறுகிறார்கள்.
சமீபகாலமாக ஜாதகம் பார்க்கவரும் புதிதாகத் திருமணமான இளம்பெண்கள் பலர், ஆண்களின் இல்லற இன்பக் குறைபாட்டையும், வருமானக் குறைபாட்டையும் காரணமாகக் கூறுகிறார்கள். இரண்டும் சகிக்கமுடியாத காரணமாகத்தான் இருக்கிறது. இதுபோல் பிரச்சினை இருந்தால், ஆண்கள் திருமணத் திற்கு முன்பே மருத்துவ உதவியை நாடி குணமடைந்தபின் திருமணம் செய்தால் கருத்து வேறுபாடு, மணமுறிவைத் தடுக்கமுடியும். மருத்துவம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் முறையான மருத்துவம் மனநிறைவான மணவாழ்வைத் தரும் என்பதை ஆண்கள் உணரவேண்டும். "இதை வெளியே சொன்னால், உன் பெயரை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன்' என்று மிரட்டுவது இருவருக்குமே சிரமத்தைத் தரும் என்பதை உணர்ந்து, மருத்துவரை அணுக முன்வர வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்த இந்த கருத்தைக் கூறவில்லை. பிரபஞ்ச சக்தியை முழுமையாகப் பயன்படுத்தினால் தீர்க்கமுடியாத பிரச்சினையே இல்லை என்பதை எல்லாரும் உணர்ந்து, சிறப்பான வாழ்க்கை வாழவேண்டும் என்ற நல்ல எண்ணமே.
கணவரிடமிருந்து போதிய வருமானம் இல்லாத பெண்கள் குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என குடும்பச் சுமையைத் தாங்கமுடியாமல் தவறான முடிவெடுக் கிறார்கள். அண்மையில் ஒரு 35 வயது பெண், இரண்டு ஜாதகங்களைக் கொண்டுவந்தார். ஒன்று கணவரின் ஜாதகம் என்றும், மற் றொன்று கணவரின் ஸ்தானத்தில் நின்று குடும்பத்தைப் பராமரிப்பவர் ஜாதகம் என்றும் கூறினார். "இவர்கள் இருவரில், யார் எதிர் காலத்தில் பணம் அதிகம் சம்பாதிப்பாரோ அவருடன் என் வாழ்வைத் தொடர விரும்பு கிறேன்' என்றார்.
ஆண்கள் தவறானவழியில் செல்லாமல், எதிர்பாராத இடர்ப்பாடு காரணமாக தொழில் முடக்கம், வேலையிழப்பு ஏற்பட்டால் குழந்தை வளர்ப்பிற்கு அரசின் நலத்திட்டங்களைப் பயன்படுத்தலாம். அதுவரை வேலைக்குச் செல்லாத பெண்ணாக இருந்தால், கல்வித் தகுதிக்குத் தகுந்த வேலையைச் செய்து வருமானம் ஈட்டலாம். இன்று பணம்தான் மனித வாழ்வை இயக்கும் பிரதான சக்தி. வருமானம் இருக்கும்போது நல்லவராக இருந்த கணவர், வருமானம் இல்லாதபோதும் நல்லவர்தான். வருமானம் இல்லாத கணவரை குழந்தையாக பாவித்து, குடும்பப் பொறுப் பேற்று நடத்தும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கர்மாவை அனுபவிக்கும் மனவலிமை இல்லாமல், வேறு வாழ்வை நாடினால் பிரச்சினை தீரும் என்று நம்பி, புதிய கர்மவினையை உருவாக்கும் ஆண்கள், பெண்களே அதிகம். பல குடும்பங்களில் இன்று ஆண்- மனைவியாகவும், பெண்- கணவராகவும் இருந்து குடும்பத்தை வழிநடத்துகிறார்கள்.
இதை ஜோதிடரீதியாகக் கூறுவதென்றால், செவ்வாய், சுக்கிரன் உள்ள ராசியில் அல்லது ஏழாம் அதிபதியுள்ள ராசியில் வாழ்க்கைத் துணையின் ஜாதகத்தில் ராகு- கேது, அஸ்த மனமான கிரகங்கள் நின்றால் இருவரும் சேர்ந்து, பிரியமனமின்றி கட்டாய வாழ்க்கை வாழ்வர்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 98652 29406