சென்ற இதழ் தொடர்ச்சி...

ஒன்பதாம் பாவகம்

பொதுவாக மாந்தி, பிரேத சாபத்தை உணர்த்துபவர். ஒருவர் இறக்கக் காரணமாக இருப்பது அல்லது ஆன்மா பிரியும்போது ஏற்பட்ட அவஸ் தைக்கும், வலிக்கும் காரணமான நபருக்கு ஏற்படுவது பிரேத சாபம். மேலும், இறந்த வரின் உடலைக் குறிப்பிட்ட காலத்தில் அடக்கம் செய்யா மலிருப்பது அல்லது இறந்த உடலின் அருகில் உட்கார்ந்து, இறந்தவரின் குற்றத்தைப் பழித்துப் பேசுவது அல்லது இறந்த முன்னோர்களை பழித்துப் பேசுவது பிரேத சாபத்தை ஏற்படுத்தும். ஒருசில குடும்பத்தில் வீட்டில் மறைந்தவர்களின் இறப்பிற்குக் காரணம் தெரியாமல் இருக்கும். இவையெல்லா வற்றுக்கும் காரணம் ஒன்பதாமிட மாந்தியே ஆகும்.

ஜனனகால ஜாதகத்தில் ஒன்பதாமிட மாந்தி என்பது பிரேத சாபத்தை வெளிப்படுத்தும் கிரக அமைப்பாகும். அதேநேரத்தில் எல்லாவிதமான மாந்தியும் பாதிப்பைத் தராது. சாத்வீகமான பழிவாங்கும் குணமற்ற பிரேத வகையும் உண்டு. மேலும், சனி, செவ்வாயுடன் சேர்ந்த மாந்தி பாதிப்பைத் தரும். மாந்தி நின்ற நட்சத்திரமே சாபம், தோஷத்தின் வலிமையைத் தீர்மானிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்து தோஷத்தை ஏற்படுத்தினால் தோஷம், சாபம், கோபம் வலிமை மிகுதியாக இருக்கும். மாந்தியுடன் சம்பந்தம் பெற்றகாரக உறவின் சாபமும் இருக்கும்.

Advertisment

குரு + சுக்கிரனுடன் ராகு அல்லது மாந்தி சேர்க்கை மற்றும் சுக்கிரன் + சந்திரன் இவற்றுடன் ராகு அல்லது மாந்தி சேர்க்கை உள்ளவர்களின் ஜாதகத்தில் கர்ப்பிணி சாபம் உண்டு.

ஒன்பதாமிடமான பிதுர் ஸ்தானத்தில் மாந்தி அமர, தந்தைக்கு கடும் பிரச்சினை தரும். தந்தைக்கு மன சஞ்சலத்தை அதிகமாக்கி, அவர் எந்த சுயமுடிவும் எடுக்கமுடியாமல் தவிப்பார். இதனால் பல இடத்தில் அவமானம் ஏற்படும். தந்தை நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கமாட்டார். எவரும் உதவிசெய்ய முன்வரமாட்டார்கள். தந்தை பெரும் தவிப்புடன் வாழ்க்கை நடத்துவார். நிரந்தரமாக நிம்மதியை இழப்பார். தர்மம் செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. பொதுநலச் சேவையில் நல்ல பெயர் கிடைக்காமல் கெட்டபெயரை ஏற்படுத்தும். பொதுநலன் வேண்டிச் செய்யும் காரியங்கள் தோல்வியடையும். ஆலயம் அமைக்கும் யோகம் மிகக்குறைவு. செல்வத்தை சுகமாக அனுபவிக்கமுடியாத நிலை தோன்றும். குரு உபதேசம் பயன் தராது. தீர்த்தயாத்திரை பூரணமடையாத நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி தராது. அதிர்ஷ்டம் என்பது மருந்துக்குக்கூட இருக்காது. வழிநடத்திச்செல்ல தகுந்த நபர் அமையும் பாக்கியக் குறைவு மிகும்.

தந்தையால் அனுகூலங்கள் குறைவு. தந்தை- மகனைப் பிரித்தவர்கள், ஒருவரை ஆதரவிழக்கச் செய்தவர்கள், ஒருவரின் உயர்கல்விக்குத் தடை செய்தவர்கள், குரு துரோகம், குரு தட்சணையில் குறைவைப்பது போன்ற குற்றம் செய்தவர்களுக்கும் இந்த கிரக அமைப்பு ஏற்படும்.

Advertisment

இதனால் இந்த ஜென்மத்தில் கற்ற வித்தை பலிதமில்லாமல் போவது, தந்தையின் ஆதர வின்மை ஆகியவை ஏற்படும். அத்துடன் தீராத வயிற்றுவலி, அதிக பசி, இறந்த முன்னோர்கள் கனவில் வந்துபோவது, மரண பயமும் இருக்கும்.

பரிகாரம்

பிரேத சாபம் கடுமையாக இருந்தால் திலஹோமம் நல்ல பலன் தரும்.

நடத்தமுடியாமல் செயல்படும் கல்விக்கூடங்கள் அல்லது வழிபாடு நடத்த முடியாமல் இருக்கும் கோவில்களுக்கு உதவி செய்தால், தோஷம் நீங்கி புண்ணியம் பெறலாம்.

ff

பத்தாம் பாவகம்

பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் மாந்தி அமர, சுபப் பலன்கள் தருவார்.

தெய்வ வழிபாடு, பூஜை புனஸ்காரங்களில் மிகுந்த ஈடுபாடிருக்கும். மிகுந்த ஞானம் இருக்கும். அரசுப் பதவி கிடைக்கலாம். வியாபாரம் மற்றும் தொழில் நிரந்தரமாகவும், பொருள் தேடிவருவதாகவும் இருக்கும். முன்னோர் களின் பிதுர்க்கடன் வகைகளை மன நிறைவாகச் செய்துமுடிக்கும் தன்மை ஏற்படும். பலரை தனக்காகக் காத்திருக்க வைக்கும் யோகம் கிடைக்கும். செயற்கரிய செயல்களால் புகழ் கிடைக்கும். அறுசுவை உணவு உண்ண பிரியம் மற்றும் வசதி ஏற்படும். விதவித மான ஆடைகள், ஆபரணங்கள்மேல் விருப்பம் ஏற்படும் .பூமி, வீடு, வாகன யோகம் உண்டு. பிரபலமாகும் வாய்ப்பிருக்கும். பொதுச் சேவையில் புகழும் கிடைக்கும். ஜாதகத்தில் சூரியன் பலம்பெற்றிருந்தால் நாடாளும் பதவியும், புதன் பலம்பெற்றிருந்தால் நாடறிந்த வித்யாகாரனாகும் நிலையும் ஏற்படும். தொழில்ஞானமும், செயல் ஆர்வமும் மிகுதியாக இருக்கும். பெற் றோர் பெருமையடைவர்.

தர்மகர்மாதிபதி யோகம் பெற்றவர்களுக்கே இந்த அமைப்பிருக்கும். இதன்பயனாக தொழில் நல்லவிதமாக அமையும். வாழ்வில் நல்ல, உயர் பதவிக்கு வரமுடியும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.

பரிகாரம்

மேலும் நல்ல பலன்பெற வறுமைக் கோட்டிற்குக் கீழிருக்கும்- இறந்தவர் களின் சவ அடக்கத்திற்கு உதவ வேண்டும்.

உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தானதர்மம் செய்வதால் சுபப் பலன் மிகும்.

பதினொன்றாம் பாவகம்

பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் மாந்தி நிற்க, நிறைந்த லாபம் தருவார். சிலர் மிகச்சாதாரண வாழ்க்கை நடத்தி, மாந்தி நின்ற ராசி அதிபதியின் தசாகாலத்தில் அல்லது புக்திக் காலத்தில் திடீரென்று பாதைமாறி, புதிய பாதை அமைத்து உயர்ந்த நிலைக்குச் செல்வர். கல்வி சுமாராக இருந்தாலும், அதை வைத்து யோகம் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் நன்மை அடைவார்கள். பிற பெண்களின் தொடர்பும் இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் தேடிவரும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேர்க்கை இருக்கும். சிலருக்கு புதையல் போன்ற திடீர் லாப வாய்ப்பு தேடிவரும் .வீடு, நிலம், வாகன வசதி உண்டு. ஒருசிலருக்கு மனைவிமூலமும் உயர்ந்த நிலை ஏற்படும்.

ஜனனகால ஜாதகத்தில் ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தான வலிமை பெற்றவர்களுக்கு இந்த கிரக அமைவிருக்கும்.

பரிகாரம்

வருடம் ஒருமுறை மகாசுதர்சன, நவகிரக ஹோமம் செய்துவர பலன் இரட்டிப்பாகும்.

பன்னிரண்டாம் பாவகம்

பன்னிரண்டாமிடமான விரய ஸ்தானத்தில் மாந்தி நிற்க, மிகுந்த தனவிர யங்கள் ஏற்படும். அலைச்சல் மிகும். நிம்மதியான உறக்கமின்றித் தவிக்கும் நிலை ஏற்படும்.

கண் நோய், பார்வைக் குறைபாடிருக்கும். உயிருக்கு ஆபத்தான நோய்க்காக அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறநேரும்.

திருமண வாழ்க்கை மன உளைச்சல் தரும். வெளிநாட்டு வணிகத்தால் பெரும் பொருள் இழப்பிருக்கும். உடல் உபாதைகள் மிகுதியாகும். தீயகனவுகள் வரும். அனைத் தையும் இழந்து சந்நியாச வாழ்க்கையை மனம் நாடும். ஐந்தாம் பாவம் பலம்பெற்றால் பாதிப்பு குறையும்.

அடுத்தவர்களின் நிம்மதியைக் கெடுத்தல், ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்து அடிமைப்படுத்தியவர்களுக்கு, தவறான தீர்ப்பு வழங்கியவர்களுக்கு, ஏமாற்றிப் பணம் பறித்தவர்களுக்கு பன்னிரண்டாமிட மாந்தி பாதிப்பைத் தரும்.

இதன்பலனாகக் கண்மூடித்தனமான செலவுகள் ஏற்படும். நோய்க்கான காரணம் தெரியாமல் வைத்தியம் பார்க்கநேரும். தீராத மன உளைச்சல், நிம்மதியின்மை, குடும்பத்தைப் பிரிந்துவாழும் நிலை இருக்கும்.

பரிகாரம்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்களுக்கு உணவு, மருந்து தானம் தரவேண்டும்.

குழந்தைகளுக்கான மருத்துவ உதவி செய்தல், கருணை இல்லம் ஆகியவற்றைப் பராமரிக்க உதவி, தானம் செய்தல், கைவிடப்பட்டவர்களைப் பராமரிப்பதும் நல்ல பலன் தரும். இயன்றவரை பழவகைகள், பிஸ்கட் வகைகள் தானம் கொடுத்துவந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து படிப் படியாக விடுபடமுடியும்.

செல்: 98652 20406