நாம் குடியிருக்கும் வீடு, இருப்பிடம், சுற்றுச்சூழல் எவ்வாறு அமையும்? அண்டை வீட்டார் உதவுவாரா? தொல்லையில்லாத வீடு அமையுமா என்பதை சுருக்கமாக ஆய்வு செய்வோம்.
● லக்னாதிபதி நல்ல இடத்தில் இருந்து, சுப கிரகத்தின் பார்வை பெற்றால் கண்ணியமான, தொல்லை தராத அக்கம் பக்கத்தினர் குடியிருக்கும் வீடு அமையும்.
● லக்னாதிபதி நல்லவை அல்லாத இடங்களில் இருந்து, பலம் குன்றிய பாவகிரகங்களால் பார்க்கப்பட்டால், மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும் வீடு அமையும்.
● சனி சாதாரண நிலையில் இருந்து, ராகு லக்னத்தோடு அல்லது லக்னாதிபதியோடு சம்பந்தம் கொண்டிருந்தால் தரம் குறைந்தவர்களோடு சாதாரண வீட்டில் வாழநேரிடும்.
● சுபகிரகங்கள் லக்னம் அல்லது லக்னாதிபதியோடு சம்பந்தம் கொண்டிருந்தால் கண்ணியமானவர்களோடு, பஞ்சபூத அமைப்பு மிகச்சீராக அமையப்பெற்ற இடத்தில் வீடு அமையும். தவணைமுறை வீடுகளும் தரமாக வந்துவிடும். வீட்டுக்கதவு எண், பிளாட் எண் ஆகியவற்றின் கூட்டு எண் ஏழாக இருந்தால் (7, 16, 25, 106, 205) அந்த வீடே மற்றுமொரு வீட்டை வாங்கித் தரும்.
● லக்னத்துடனோ, லக்னாதிபதியுடனோ சுப கிரகங்கள் சம்பந்தம் ஏற்பட்டு, அது நல்ல ஆதிபத்தியமும் பெற்றிருந்தால்- நல்லவர்களோடு பண்பாளர்களோடு, அருகில் குடியிருக்கும்விதமாக வீடு அமைந்துவிடும்.
● பாவகிரகங்கள் லக்னத்துடனோ, லக்னாதிபதியுடனோ தொடர்புகொண்டு, நல்லவை அல்லாத இடங்களுக்குச் சொந்தக்காரராகி, லக்னாதிபதியைவிட அதிக வலிமை பெற்றால்- அண்டை வீட்டார், குடியிருப்புவாசிகள் நரிக்குணம் உள்ளவர்களாக அமைவர். எந்த நேரமும் வம்புக்கு இழுக்கும் விதண்டா வாதம் புரிபவராக இருப்பர்.
● லக்னம் அல்லது லக்னாதிபதியோடு சூரியன் தொடர்புகொண்டால், அருகில் குடியிருப்பவர்- அதாவது தினமும் நீங்கள் சந்திக்க வேண்டிய சூழலில் உங்கள் பார்வையில் பட்டுக்கொண்டிருப்பவர் சாத்வீக குணம் நிரம்பியவராக இருப்பார். சிவப்பு நிறமாக இருப்பார். நல்ல தோற்றமுடையவராகவும் இருப்பார் என்கிறது சாஸ்திரம். லக்னம் சூரியனின் நட்பு வீடாகி, லக்னாதிபதி நட்பு கிரகமாகவும் இருந்தால் அண்டை வீட்டார் உங்கள் உடன்பிறந்த சகோதரர்போல் செயல்படுவார்கள்.
● பூச நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு கிழக்கு நோக்கிய வாசல் பொருத்தமானது. அருகில் குடியிருப்பவர் விருச்சிகம், மீனம் போன்ற ராசியைச் சார்ந்தவர்கள் எனில் அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
● சனி பகவான் லக்னத்திற்கு 5-ல்- அதுவும் மேஷம், கடகம், சிம்மமாக இருக்கப்பெற்றால் 48 வயதுக்குமேல் சொந்த வீடு கட்டுவது நன்று. முன்பே கட்டியவர்கள், கருப்புநிறப் பசு தானம் செய்வது நன்று. ஐந்து கிலோ உளுந்து அல்லது சிறிது கருப்பு எள்ளை வீட்டின் மேற்புறத் தரையில் தூவுதல் நன்று. மண்ணைப் பள்ளம் செய்து போட்டும் வைக்கலாம்.
● ஜென்ம லக்னம் ஸ்திர ராசியாகி, 4-ஆம் வீட்டு அதிபதி 4-ஆம் வீட்டைப் பார்க்க, இரண்டாம் வீட்டுக்குரிய கிரகம் (குரு) நல்ல ஆதிபத்தியம் பெற்று பலமாக இருக்க, சுக்கிரனும் பலமாக இருந்தால் கலைப்பொலிவுடன், லட்சுமி கடாட்சம் நிறைந்த வீடு அமையும்.
● 4-ஆம் வீட்டில் உச்ச கிரகம் குடியிருந்து, அந்த உச்ச கிரகத்திற்கும் லக்னாதிபதிக்கும் நல்ல சம்பந்தம் இருந்தால் மிகப்பெரிய வீடு அமையும்.
● 4-ஆம் வீட்டுக்குரிய கிரகம் சொந்த- உச்ச வீடுகளிலோ, கேந்திரங்களிலோ இருந்து, இரு சுபகிரகங்களால் பார்க்கப்பட்டால் விலைமதிப்புமிக்க அழகிய வீடு அமையும்.
செல்: 93801 73464