மனித வாழ்வில் நம் கண்ணுக்குப் புலப்படாதது- உணரக்கூடியது பிரபஞ்ச சக்தியே என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நமக்குத் துன்பம் நேரும்போது முதலில் நாம் துணைக்கு அழைப்பது நமது குல, இஷ்ட, உபாசனை தெய்வத்தையே. தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிட முடியாதது. எமன்கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாகப் பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
எனவேதான் அந்த தெய்வங்கள் "குலதெய்வங்கள்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பெயருக்குமேல் தெரியாமல் அல்லவா உள்ளது? நம் முன்னோர்கள்... அதாவது தந்தைவழிப் பாட்டன், பாட்டிகள் வணங்கி வந்த தெய்வம்தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தைவழிப் பாட்டன் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சந்நிதியில் சென்று நாம் நிற்கும்போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டைமூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம்... இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று, அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியைத் தொழும்போது,நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்துநம்மை ஆசிர்வதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!
விஞ்ஞான முறையில் யோசித்தால்... ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.
ஒவ்வொரு குழந்தைக்கும் 23 + 23 குரோமோசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.
இது தாய்மூலம் 23; தந்தைமூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோசோமே முடிவு செய்கிறது.
தாயிடம் ஷ்ஷ் குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, ஷ்ஹ் என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன. ஆணின் ஹ்-யுடன் பெண்ணின் ஷ் சேர்ந்தால் ஆண் குழந்தையும்; இருவரின் ஷ் + ஷ் சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கிறது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறியுள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் ஹ் குரோமோசோம் ஆணிடம் மட்டும்தான் உள்ளது. பெண்ணிற்கு ஹ் குரோமோசோம்கள் தந்தைவழி வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து ஹ் குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன்மூலம் வம்சம் மீண்டும் வழிவழியாக வளர்கிறது.
வழிவழியாக என்பதிலிருந்தே புரிந்திருக்க வேண்டும்- முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து... இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு, தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள். பெண் குழந்தைகளை குலவிளக்காகக் காத்தனர்.
பொதுவாக 13 தலைமுறைக்குமேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில், ஆணின் ஹ் குரோமோசோம்கள் மிக பலவீனமானவை. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த ஹ் குரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண்மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் மேலும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறதாம். எனவே 13 தலைமுறைக்குமேல் அது வலுவிழந்து பயனற்றுப் போய்விடும்.
அதனால் ஏற்கெனவே பலவீனமான ஹ் குரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடையக்கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக்கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.
பொதுவாக பெண்கள் மட்டுமே இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்... புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்குமுன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டிலுள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகிவிட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. நிறைய பெண்கள் திருமணம் முடிந்தபிறகு தான் கஷ்டப்படுவதாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இதற்குக் காரணம் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை மறந்ததே.
அப்படியில்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்கிவந்தால், அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை பெண்கள் யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், அந்த குலதெய்வத்திற்கு திருவிழாக்காலங்களில் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அறுகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால் மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்கிரகம் இல்லையென்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்குச் சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே அவரவர் குலதெய்வக் கோவிலுக்கு வருடம் ஒருமுறையாவது செல்லவேண்டும்.
குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நிரந்தர வேலை இல்லாமை, குடும்பத்தில் பிரச்சினை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே வருடத்திற்கு ஒருமுறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வக் கோவிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
கிராமக் கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களிலும் குலதெய்வ சிறப்புப் பூஜைகளை ஒன்றாக இணைத்துச் செய்வதுண்டு. குடும்பத்தில் நடைபெறும் பிறந்தநாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேஷ நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.
வழிபாட்டுப் பலன்கள்
குலதெய்வ வழிபாட்டின்மூலம் மணமாகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்குப் பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகின்றன.
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது. அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறைநிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான பலன்களை அளிக்கிறது.
பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம்பெயர்ந்துவிட்ட காரணத்தாலும் பலர் தங்களது குலதெய்வம் எதுவென்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்குப் பரிகாரங்கள் கூறியிருந்தாலும், நாம் வணங்குவது உண்மையிலேயே நம் குலதெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்துகொண்டே இருக்கும்.
இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாகக் கவலைப்பட வேண்டியதில்லை.
நிகழ்வில் குடும்பத்திலுள்ள ஆண் வாரிசுகளின் ஜாதகத்தில் 4-ஆம் வீட்டு அதிபதி நின்ற திசை, 4-ஆம் வீட்டோடு சம்பந்தம் பெறும் கிரகத்தை வைத்தும், 5, 9-ஆம் பாவத்தை வைத்தும் அந்த தலைமுறையின் குலதெய்வம் பராமரிப்பில் உள்ளதா? பராமரிப்பில் இல்லை என்றால் தன் குலக்குழந்தைகள் வழிபாட்டை ஏற்கத் தயார் நிலையில் உள்ளதா போன்ற பல்வேறு விஷயங்களை சரிபார்த்து குலதெய்வத்தைக் கண்டறியலாம். ஜாதகம் இல்லாத நிலையில் சோழிப்பிரசன்னத்தைப் பயன்படுத்தியும் குலதெய்வம் பற்றிய தகவல்களை நிச்சயமாக தெளிவாகப் பெறமுடியும்.
மேலும் 4-ஆம் வீட்டு அதிபதி சூரியனுடன் சம்பந்தம் பெற்றால் சிவகணத்தின் பரம்பரை தெய்வமான முனியப்பன், வீரபத்திரராகவும்;
சந்திரன் சம்பந்தப்பட்டால் பெண் தெய்வங்களான அங்களாம்மன், பெரியாண்டிச்சி போன்றவையாகவும்;
செவ்வாய் சம்பந்தம் பெற்றால் சூலம், ஈட்டி தாங்கிய தெய்வமாகவும்; புதன் சம்பந்தம் பெற்றால் அய்யனார், நாமம் போட்ட தெய்வமாகவும்; குரு சம்பந்தம் பெற்றால் நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த இறைநிலையை உணர்த்திய பெரியோர்களான தெய்வமாகவும்;
சுக்கிரன் எனில் அலங்காரமான பெண் தெய்வமாகவும்; சனி எனில் காவல் தெய்வம், அய்யனாராகவும்; ராகு எனில் புற்றுள்ள பெண் தெய்வம், உருவமில்லாமல் ஆயுதங்கள் மட்டும் வைத்துக் கும்பிடும் தெய்வமாகவும், மதுபானம் படையல் செய்யும் தெய்வமாகவும்; கேது எனில் ஆண்கள் மட்டும் கும்பிடும் தெய்வமாகவும், பலி கேட்கும் தெய்வமாகவும் இருக்கும்.
4-ஆம் வீடு நெருப்பு ராசி எனில் உக்கிர தெய்வமாகவும், நில ராசி எனில் மணல்மேடு நிறைந்த பகுதியிலுள்ள தெய்வமாகவும், காற்று ராசி எனில் குதிரை சவாரி செய்யும் தெய்வமாகவும், நீர் ராசி எனில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள தெய்வமாகவும் இருக்கும்.
செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு இறைநெறியில் செல்வதும் எல்லாராலும் முடியாது.
உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்திலுள்ள தேவதைகள்தான் குலதெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறைநிலை அடையும் வாய்ப்பும் உள்ளது.
பல்வேறு சாபங்களும், பாவங்களும், புண்ணியங்களும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. இந்த வகையில் மிகமிக முக்கியமானது குலதெய்வ சாபம், தோஷக் குற்றமாகும்.
குலதெய்வப் பண்டிகை நாட்களில் பங்காளிகள் கோவிலின் முதல் மரியாதைக்கு தங்களுக்குள் சண்டையிட்டு கோவிலையே இழுத்துமூடி பூஜையை நிறுத்திவிடுகிறார்கள். அதன்மூலம் குலதெய்வ சாபம் ஏற்படுகிறது. குலதெய்வ சாபம் வம்சத்தை அழிக்கும்.
4-ஆம் அதிபதியோ அல்லது 4-ஆம் பாவகமோ மாந்தியுடன் சம்பந்தம் பெறுவது-
பல தலைமுறைக்கு முன்னர் பங்காளிகள் பிரச்சினையால் குலதெய்வ வழிபாடு நின்றுபோன குடும்பம் என்பதை உணர்த்தும். குலதெய்வ சொத்தை அபகரித்து, குலதெய்வத்தைக் குழிதோண்டிப் புதைத்தவர்களும் உண்டு.
எந்த குடும்பத்தில் வறுமை, ஏழ்மை, காரியத்தடை, நிம்மதிக்குறைவு உள்ளதோ அவர்களின் குலதெய்வம் மற்றும் பித்ருக்கள் பட்டினியுடன் இருப்பதாகப் பொருள்.
ஜாதகம் பார்க்க வருபவர்களில் குலதெய்வம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் ஏராளம். பலர் திருச்செந்தூர் முருகனையும், திருப்பதி ஏழு மலையானையும் குலதெய்வம் என்று கூறுவது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
குலதெய்வ வழிபாட்டை பங்காளிகள் அனைவரும் இணைந்து, அந்த தெய்வத்திற்குரிய பூஜை மற்றும் படையல் முறையோடு வழிபாடு செய்ய வேண்டும்.
மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும், குலதெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.
ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதைச் செய்வதே முறையான குலதெய்வ வழிபாடாகும்.
குலதெய்வப் படத்தை வாங்கிவந்து வீட்டுப் பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டின் முக்கிய விசேஷங்களுக்கு குலதெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.
"குலத்தில் தோன்றியதே குலதெய்வம்'
குலதெய்வம் என்பது நம் குலத்தில் தோன்றிய முன்னோர்களாகக்கூட இருக்கக்கூடும்.
அல்லது நமது குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பாற்றியவராய்க்கூட இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு- ஏன் கூப்பிடாமலேகூட வந்து துக்கங்களைப் போக்குவது குலதெய்வமே.
ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்திருந்தால் மீண்டும் தொடங்குங்கள். வேறெதுவும் அதற்கு இணையில்லை.
செல்: 98652 20406