"திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது சொர்க்கத்தில்' என்பது முதுமொழி. ஆனால் இப்பொழுதெல்லாம் ரொக்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம், "நீங்கள் என்ன போடுவீர்கள்' என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், "பெண்ணுக்கு வேண்டிய நகைகள் அனைத்தும் போடுவோம். மாப்பிள்ளைக்கு நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அந்த நகைகளையும் போடுவோம். சீர்வரிசைகளையும் சிறப்பாகச் செய்வோம்' என்பார்கள்.
"நீங்கள் பெண்ணுக்கு என்ன போடுவீர்கள்' என்று பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்பார்கள். அதற்கு அவர்கள் அதிகாரமாக, "பொண்ணு போட்டிருக்கும் நகைகளை எடை போடுவோம்' என்பார்கள். இவ்வாறு பேசுபவர்களில் பலர் திருமணத்தின்போது பொருத்தம் பார்க்கத் தவறிவிடுவார்கள். இப்படியிருந்தால் வாழ்க்கையை நல்லவிதமாக நடத்த முடியாது. இல்லறம்- நல்லறமாக வேண்டுமென்றால் பொருத்தம் பார்க்கவேண்டும். ஒருகாலத்தில் சம தகுதியுடைய இடத்தில் திருமணம் பேசி முடித்துக்கொண்டதால் மணமுறிவு ஏற்படவில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் சம்பாத்தியத்தைப் பொருத்தும், மற்ற குணநலன்களைப் பொருத்தும் ஆராய்ந்து வரன்களைத் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலை உள்ளது.
இன்னாருக்கு இன்னார்தான் என்று எழுதப்பட்ட விதியை யாராலும் மாற்றமுடியாது. அதேசமயம் பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்தால் எந்த வருத்தமும் ஏற்படாது. 11 வகைப் பொருத்தங்களையும் பார்த்து முத்தான வாழ்வினைத் தேர்ந்தெடுத்தால் ஒற்றுமை பலப்படும். உன்னதமான வாழ்க்கை அமையும்.
தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீதீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜு நாடி, வேதை ஆகிய 11 வகைப் பொருத்தங்களில் முக்கியமானதைப் பொருத்த வேண்டும்.
முக்கிய பொருத்தம்
தினம், கணம், ஸ்திரீதீர்க்கம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகியவை முக்கியமானவை. வசியப் பொருத்தமும் மிகமிக அவசியம். ஒவ்வொருவரும் தம் வாழ்க்கைத்துணை எப்படி அமைய வேண்டுமென்ற கற்பனையை இளமைப் பருவத்திலேயே வளர்த்துக்கொள்கிறார்கள். முன்பெல்லாம் பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த வரனையே மணமகனோ, மணமகளோ பூரண சம்மதம் தெரிவித்து ஏற்றுக்கொண்டார்கள். எனவேதான் திருமண அழைப்பிதழ் அச்சிடுவதில்கூட "பெரியோர்களால் நிச்சயிக்கப்பெற்று' என்ற வார்த்தையை இடம்பெறச் செய்தார்கள். தற்போது அப்படி அச்சிட்டாலும்கூட, பல மணமகனும்- மணமகளும் பேசிப்பார்த்து, இணையதளம் மூலமாகவும், நேரில் தொடர்புகொண்டும் தனக்கேற்ற வாழ்க்கைத்துணைதானா என்று அவர்களே முடிவெடுத்து பெற்றோர்களிடம் சொல்கிறார்கள். அதன்பிறகு பெற்றோர்கள் அது திருப்தியாக இருக்கும்பட்சத்தில் மற்ற பேச்சுவார்த்தை நடத்தி உத்தியோக வாய்ப்பு, சம்பாத்தியம், வீடு, வாசல் இருக்கும் அமைப்பை அறிந்துகொண்டு முடிவெடுக்கிறார்கள்.
ஒருவருடைய ஜாதகத்தில் களஸ்திர ஸ்தானம் நன்றாக இருந்தால் களஸ்திரம் (வாழ்க்கைத்துணை) நன்றாக அமையும். களஸ்திர ஸ்தானம் பலமிழந்து பாவகிரகம் சம்பந்தப்பட்டிருந்தாலோ, பாவ கிரகங்களின் பார்வை பட்டாலோ இல்லறம் இனிமையாக அமையாது. இடையூறுகள் ஏராளமாய் வந்துசேரும். வரன்களின் ஜாதகத்தைப் பரிசீலனை செய்யும்போது 2-ஆம் இடம், 4-ஆம் இடத்தையும் கண்டிப்பாகப் பரிசீலனை செய்யவேண்டும். இருவருக்கும் ஒரே தசாபுக்தி (தசாசந்தி) நடக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். அப்படி நடந்தால் அவற்றை விலக்க வேண்டும். அதன்பிறகு ராசிக்கட்டத்திற்குள் செவ்வாய் தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், முரண்பாடான கிரகச்சேர்க்கை தோஷம் இருக்கிறதா? அதற்குப் பரிகாரம் அல்லது வழிபாடு செய்தால் பலன் கிடைக்குமா என்பதை அறியவேண்டும்.
மேலும் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் ஆராய்ச்சி செய்து, செவ்வாய் தோஷம் இருந்தால் மட்டும் சொல்லவேண்டும்.
குடும்ப ஸ்தானம் மற்றும் களஸ்திர ஸ்தானத்தில் ஒருவருக்கு செவ்வாய் இருந்தால் அதே அமைப்பு கொண்ட ஜாதகத்தைத் தேர்வு செய்யவேண்டும். இதேபோல ராகு- கேதுக்களின் ஆதிக்கத்தையும் பார்க்கவேண்டும். இது தவிர குறைந்த அளவில் பொருத்தமான யோனி, ரஜ்ஜு மட்டும் இருந்தால் கீழ்க்கண்ட எளிய பரிகாரம் செய்து திருமணம் செய்யலாம்.
பரிகாரம்-1
உங்கள் பகுதியிலுள்ள ஆலயத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் இருக்கும் சந்நிதானத்தில் திருமணம் செய்தால் எந்தவொரு இழப்பும் ஏற்படாது.
பரிகாரம்-2
வசதியுள்ளவர்கள் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் திருமணம் செய்தால் வருத்தமில்லா வாழ்வு அமையும். வாழ்க்கைத்துணையால் வளமான எதிர்காலம் அமையும்.
செல்: 94871 68174