2021-ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. ஒவ்வொரு புது வருடமும் தங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவதாக அமையவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Advertisment

இந்த 2021-ஆம் வருட கிரக கோட்சாரப்படி செவ்வாய் ஆட்சி; சனி ஆட்சி; குரு நீசபங்க ராஜயோகம்; சந்திரன் தனது சொந்த வீட்டில்- பூச நட்சத்திரத்தில். ஆங்கிலப் புது வருடப் பிறப்பென்பது இரவு 12.00 மணி என்று சொல்வதால் லக்னம் கன்னியில் அமைகிறது.

இந்த வருடப் பிறப்பின்போது ராகு- கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும் அமர்ந்துள்ளனர். நல்ல வேளையாக சந்திரனும் லக்னமும் சர்ப்பங்களுக்கு வெளியே நின்று காலசர்ப்ப தோஷம் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

lakshmi

Advertisment

எல்லாருக்குமான பொதுப்பலன் என்று கூறும்போது, நாம் காலபுருஷ தத்துவத்தை அடிப்படையாகக் கொள்வதே வழக்கம்.

வருடப் பிறப்பின்போது செவ்வாய் ஆட்சி என்பதால், இளைஞர்களுக்கு இவ்வருடம் ஏற்றமானதாக இருக்கும். காவல்துறை, இராணுவம், சீருடைப்பணிகள், மலைசார்ந்த பணிகள் ஆகியவை நிறைய ஜாதகர்களுக்கு நல்வாய்ப்பு தரும். செவ்வாய் செல்லும் சாரநாதர் கேது. எனவே மருத்துவம் சார்ந்த முன்னேற்றம் உண்டு. மருத்துவக்கல்வி- குறிப்பாக அறுவைசிகிச்சை, சித்தா, ஆயுர்வேத மருத்துவம்- இவை சார்ந்த கல்வி மிகச்சிறப்படையும். மேலும் செவ்வாய் பூமியைக் குறிப்பதாலும், அவர் கேது சாரத்தில் செல்வதாலும் நிலம், வீடுகளைப் பிரித்துவிற்கும் தொழில் செழிப்படையும். மிகப்பெரிய இயந்திரங்களை அகற்றிவிட்டு, அதனை சுருக்கிப் பயன்படுத்தும் நிலை ஏற்படும். விலங்கியல் மருத்துவம்- அது சார்ந்த கல்வி விருத்திபெறும். அதுபோல் விவசாயக் கல்விக்கு டிமாண்ட் உண்டு. சிறைச்சாலைகளில் நிறைய பிரிவுகள் ஏற்படும். சுரங்கத்தொழில், மண் அள்ளும் விஷயங்கள் ஒரு கட்டுதிட்டத்துக்குள் வரும்.

செவ்வாய் ஆட்சியாக இருந்தாலும் சாரநாதர் கேது 8-ல் உள்ளார். இதனாலும் ஒரு நல்ல பயனுண்டு. கெட்டவை மறைந்துபோகும். முக்கியமாக பூமிசார்ந்த அநியாய விஷயங்கள் ஒழிக்கப்படும். சுரங்கம், மண் தோண்டுவது என எல்லாமே ஒரு வரையறைக்குள் வந்துவிடும்.

Advertisment

காலபுருஷனின் இரண்டாமிடத்தில் ராகு அமர்ந் துள்ளார். அவரை குரு தனது ஐந்தாம் பார்வையால் கட்டுப் படுத்துகிறார். இதனால் கள்ளப்பண நடமாட்டம் ஒழுங்கு படுத்தப்படும். பணம் சம்பந்தமான ஒரு மாறுதலான அறிவிப்பு வரும். அதன்மூலம் நிறைய ஆட்கள் தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி கணக்கில் காட்ட முடியும். வெளிநாட்டுப் பணவரவுகள் சீர்படுத்தப்படும். இதில் இன்னொன்று- இந்த வருடம்தான் நிறைய கள்ளப் பணம், போலிப் பணத்தாள், வெளிநாட்டுப் பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு இதனை செவ்வனே செய்வார். ஆனால் அவரைப் பார்க்கும் குரு அரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்துவார்.

இரண்டாமிடம் என்னும் குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரனை எடுத்துக்கொண்டால், அவர் காலபுருஷனின் எட்டாமிடத்தில் மறைவது மட்டுமல்லாது கேதுவுடனும் அமர்ந்துள்ளார். இவர்கள் ராகு பார்வையையும் பெறுகிறார்கள். மேலும் காலபுருஷனின் ஏழாமிடத்தை சனி பார்வையிடுகிறார். ஆக, திருமணம் சம்பந்தமான விஷயங்கள் இந்த வருடம் "உன்னைப் பிடி என்னைப் பிடி' என்றிருக்கும். அதனால் திருமணம் ஓரளவுக்கு சரியாக அமைந்தால், காலத்தைத் தள்ளிப்போடாமல் உடனடியாக முடிப்பது நல்லது. மேலும் திருமணமான தம்பதியரும் நிறையவே விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். திருமண வாழ்வை சரியாக வழிநடத்த முழுமுயற்சி செய்யவும்.

இந்த வருடம் வேலை, தொழிலைப் பொருத்த அளவில் ஓரளவு நன்றாகவே உள்ளது. வருடப் பிறப்புக் காலத்தில் தொழில் ஸ்தானமெனும் பத்தாமிடத்தில் சனி, குரு, புதன் ஆகிய மூன்று கிரகங்கள் கூடிநிற்பது நல்ல விஷயம்தான். சிலருக்கு அரசுப்பணி கொஞ்சம் செலவில் அல்லது இடமாறுதலுடன் கிடைக்கக்கூடும்.

ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, ஐந்தாம் அதிபதி சூரியன் ஒன்பதாம் வீட்டில் இருப்பினும், அவரின் சாரநாதன் சுக்கிரன் எட்டில் கேதுவுடன் மறைகிறார். ஆறாம் அதிபதியும் சூரியன் சாரம் வாங்கியுள்ளார். இதன்மூலம் இப்போதுள்ள தொற்றுநோய் முழுவதுமாக நீங்காது என தெளிவாகிறது. இந்த வருடம் இந்த கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டாலும், அது பொதுமக்கள் பயன் பாட்டுக்கு வரும்போது சிற்சில தடைகள் ஏற்படும் என கிரகநிலை தெரிவிக்கிறது.

ஆலய வழிபாடு ஓரளவுக்கு சரியாக வந்துவிடும். அரசியல்வாதிகள்தான் இந்த முறை நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும். இரண்டிலுள்ள ராகு மக்களின் பணத் தாசையை அதிகரிக்கச் செய்ய, மக்களின் எதிர் பார்ப்பு வானளவு உயரும். இந்த அதீத ஆசை யைப் பூர்த்திசெய்து ஓட்டுகள் வாங்க அரசியல் வாதிகள் திணறிப் போய்விடுவர். கால புருஷனின் விரயாதிபதியும், அரசியல் பாவாதிபதியும் இணைந்தி ருப்பது இதனை உறுதி செய்கிறது.

கல்வி விஷயங்களைப் பொருத்தவரை, இந்த ஆண்டில் மாதத்துக்கு ஒரு முடிவு, தீர்மானம், மாறுத லான முடிவுகள் என்று மாற்றி மாற்றி யோசிப்பதில் 2021-ஆம் ஆண்டு ஓடியே போய்விடும். இந்த வருடம் என்ன படித்தோமென மாணவர்கள் மண்டை காய்ந்துவிடுவர். கல்வி ஸ்தானமெனும் 4-ஆமிடத்தை செவ்வாய், சனி, குரு, புதன் ஆகிய சுப- அசுபர்கள் ஒரே நேரத்தில் நோக்குவதால், "இருக்கு; ஆனா இல்லை' என்னும் அளவுக்குதான் கல்விநிலை அமையும்.

இவ்வருடம் மருத்துவ உலகின் அளப் பரிய ஆற்றல்மூலம் குழந்தை பிறக்கும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். சிறு குழந்தைகளின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கவனமாகக் கையாளவேண்டும். கண்கள் விஷயத்திலும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். வல்லமையான பேசும் திறம்- வளமான வேலை தரும். தொழில் விஷயமாக கடன் தாராளமாக- அதுவும் அரசு வகையில் கிடைக்கும். இந்த வருடம் குலதெய்வ வழிபாடும் கூடிவரும். பெண்கள் கவனமாக இருத்தல் அவசியம். அரசியல்வாதிகளுக்கு உச்சபதவி கிடைக்கும்போது பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சொந்தத் தொழில் தொடங்குபவர்கள் இந்த வருடத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதுபோல் தொழில் தொடங்கி சற்று சறுக்கலில் உள்ளவர்கள் அரசுக் கடன்மூலம் தொழிலைத் துளிர்க்கச்செய்ய முயலுங்கள். வேலையாட்களின் அனுசரணை கிடைக்கும்.

இந்த வருடம் இளம்பெண்களுக்கும், திருமண வாழ்க்கைக்கும்தான் கொஞ்சம் இடர்ப்பாடு தெரிகிறது. மற்றபடி ஓரளவு பரவாயில்லை; ஒப்பேற்றிவிடலாம். குலதெய்வ வழிபாடும் சிவ வழிபாடும் சாலச்சிறந்தது. மலை, குன்றுகள், மேடான இடங்கள் சார்ந்த தெய்வங்களை வணங்க வாழ்வு வளம்பெறும்.

செல்: 94449 61845