ராமாயணத்தில், அசோக வனத்தில் இராவணன் சீதா பிராட்டியாரை பலவிதமாக பயமுறுத்தி, அவளைப் பணியவைக்க முயற்சிக்கும்போது, அங்கிருந்த பெண்களில் ஒருத்தி தனது முகபாவனை மூலம், "இவன் உன்னை என்ன செய்துவிடமுடியும்? பயப்படாதே' என செய்திக்குறிப்பு கொடுத்தாள்.

Advertisment

இதேபோல நாம் முகத்துக்கு நேரே ஒருவரிடம் நேரிடையாக உரையாடிக்கொண்டிருக்கும்போது, அவரின் கண்கள், பேச்சுத் தோரணை, குரல் தடுமாற்றம், பிசிறான பேச்சு ஆகியவற்றைக்கொண்டு, அவர் பேசுவது உண்மையா- பொய்யா என ஓரளவு கண்டு பிடித்து விடமுடியும்.

தற்போது, நாம் கைபேசி, அலைபேசி, மடிக்கணினி, கணினி என நிறைய சாதனங்கள்மூலம் தகவல் பரிமாற்றம், பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.

yy

Advertisment

இதில் பணவிஷயம், ஒப்பந்தம், வீடு, நில விஷயம், கல்வி, கடன், திருமணம், விபத்து, அதிர்ஷ்டம், தொழில், வேலை, அரசியல், பயணம் என நிறைய விஷயங்களைப் பேசிப் பகிர்ந்துகொள்கிறோம். இப்போதைய காலகட்டத்தில், இந்த சாதனப் பேச்சுகள் மூலமே பல விஷயங்களை முடிவுசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆயினும் மனம் சஞ்சலமடைகிறது. எதிராளி கூறியது சரியா, தவறா- இதனை நம்பி ஒரு முடிவெடுக்கலாமா, வேண்டாமா என பரிதவிக்கும்போது, இப்பிரச்சினைக்கு கைகொடுக்க ஒரு சிறந்த வழி உள்ளது. அது ஹோரை நேரமாகும்.

ஆம்; ஹோரை என்பது, அந்த நாளின் கிழமை எதுவோ, அந்த கிரகத்தின் ஹோரை முதலில் ஆரம்பிக்கும். இது சூரிய உதய நேரத்திலிருந்து, ஒவ்வொரு மணி நேரமாக நகரும். வெள்ளிக்கிழமையென்றால், முதலில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும். அடுத்து புதன் ஹோரை என கடந்துகொண்டே இருக்கும். இதனை மிக எளிதாக தினக் காலண்டர் அட்டையில்கூட நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். இதற்கு ஜோதிடம் தெரியவேண்டுமென்ற அவசியமில்லை.

சரி; இதனைக்கொண்டு எவ்வாறு நமது சஞ்சலமான நேரத்திற்குத் தீர்வு கண்டுபிடிப்பது?

ஹோரை நேரத்தை சுப ஹோரை, அசுப ஹோரை என்று பிரித்திருப்பர். குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவை சுப ஹோரைகள். சூரியன், செவ்வாய், சனி ஆகியவை பாவ ஹோரைகள். இதில் சூரியனை சில அரசு விஷயங்களுக்கு சுப ஹோரையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் யாரிடமாவது முக்கியமான விஷயத்தை அலை- தொலைபேசியில் பேசி விட்டு வைத்தவுடன், அது பற்றிய மன நெருடல் ஏற்பட்டால். அது உண்மை விஷயமா அல்லது நம்மை ஏமாற்றுகிறார்களா எனும்போது, உடனே சரியான நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். பின் தினசரி காலண்டர் அல்லது பஞ்சாங்கத்தில் ஹோரை விவரம் என்று கணக்கிட்டிருப்பார்கள்.

அன்றைய கிழமைக்கு நேரே நீங்கள் பேசிய நேரத்தில் என்ன ஹோரை குறிப்பிடப் பட்டுள்ளது என கவனியுங்கள்.

சனி ஹோரை எனில் கேள்விப் பட்ட விஷயம் நம்பிக்கைக் குறைவுடை யது என அறியலாம். செவ்வாய் ஹோரை எனில் உங்களை வீணாக சண்டைமூட்டி விடுகிறார்கள் என அறிந்துகொள்ளலாம். குரு ஹோரை எனில் விஷயத்தில் உண்மை உள்ளது என உணரலாம். சுக்கிர ஹோரை எனில் விஷயம் சற்று அலங்காரத்துக்காக உண்மையும், கூடவே சற்று கற்பனையும் சேர்ந்தது என சுதாரிக்கலாம். புதன் ஹோரை என்றால் சற்று வேடிக்கை கலந்த உண்மை என அனுமானிக்கலாம். சந்திர ஹோரை எனில் வேகமான விஷயமென கூறலாம்.

சூரிய ஹோரை எனில் சற்று மிரட்டல் தொனி யிலுள்ள கட்டளையான செய்தி என தெளியலாம்.

இதுதவிர, ஜோதிட அறிமுகம் உள்ளவர் கள் ஹோரைநாதரைக் கொண்டு இன்னும் பல விஷயங்கள் கூறலாம். ஆனால் இந்தக் கட்டுரை ஜோதிட அறிமுகம் இல்லாதவர்களுக்கான எளிமையான தீர்வாகும். இந்த ஹோரைநாதரைக் கொண்டு முடிவுக்கு வருவது ஒரு அதிரடி அவசரத் தீர்வுதான். மற்றபடி, இதனை அடிப்படையாகக்கொண்டு, விஷயங்களைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். இன்ஸ்டன்ட் காபி, ரெடிமேட் இட்லி, திடீர் தோசைபோல இதுவொரு "இன்ஸ்டன்ட்' தீர்வாகும்.

இப்போதைய காலகட்டத்தில், சிலர் மனசாட்சியின்றி பிறர் விஷயத்தைக் கீழ்த்தரமாகப் பேசிக் கெடுக்கிறார்கள். அந்த சமயங்களில் அவர்கள் பேசிய நேர ஹோரைநாதர் அது உண்மையா- பொய்யா என எடுத்து ரைப்பார்.

அவசர கால ஓட்டத்தின் அதிரடி அனு கூலம் இதுவாகும்.