விலங்காக இருந்த மனிதன் அவற்றிலிருந்து பிரிந்து தனித்து வாழத்துவங்கியபின், இயற்கை, விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக, தங்களுக்குள் இருந்த திறமையானவர்களைக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு வேட்டையாடும் முறையைக் கற்றுக் கொடுப்பதற்காகத் தொடங்கியதே கல்வி.
இயற்கைப் பேரழிவுகளால் இன்னல் பல பெற்றாலும், கல்வி கற்பிக்கும் முறை பலவிதப் பரிணாமம் பெற்றது. பண்டைய காலத்தில் குருகுலக் கல்வி, அதாவது குருவின் வீட்டில் தங்கி அவருக்குப் பணிவிடை செய்து, வாழ்க்கையை எதிர் கொள்ளும் முறையானது செயல்முறை விளக்கத்துடன் குருவால் போதிக்கப் பட்டது. அதில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவில்லை. ஆனால், இன்று அனைவருக்குமான கல்வி எனும் நிலையை எட்டிவிட்டது.
சிறுவர்களுக்கு கல்வி கொடுக்கப் படுவதன் நோக்கம் ஒழுக்கம், நற்பண்பு, நற்செயல், சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கவேண்டிய திறனை வளர்த்தல், வாழ்க்கையை ஆரோக்கியமாக- சந்தோˆமாக வாழக் கற்றுத் தருவதுதான். எனினும், பள்ளிக் கூடத்தை பணமீட்டக் கற்றுக் கொடுக்கும் கூடாரமாக எண்ணியே பல பெற்றோர்கள், பிள்ளைகளை அனுப்புகின்றனர்.
உண்மையில் கல்வியறிவு, வளர்ச்சி, தேர்ச்சி என்பதையெல்லாம் அவரவர் குடும்பப் பொருளாதாரம் தீர்மானிக்காது. கல்வி பெறும் மாணவரின் திறமையைப் பொருத்தே அமையும்.
கல்வி என்பது புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம்செய்து தேர்வுத் தாளில் எழுதுவதோடு முடிந்துபோவ தில்லை. வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்வதாக இருக்கவேண்டும். விதிதான் மாணவர்களுக்கு எத்தகைய கல்வியைத் தரவேண்டுமென்பதைத் தீர்மானிக்கும்.
கல்வி ஸ்தானம்
ஜாதகத்தில் இரண்டாம் வீட்டைக்கொண்டு ஆரம்பக் கல்வியையும், நான்காம் வீட்டைக்கொண்டு உயர்கல்வி நிலையையும் தெரிந்துகொள்ளலாம். 2, 4-ஆம் அதிபதிகள் 3, 6, 8, 12-ல் மறைந்தால் கல்வியில் மந்தம், தடை, பெற்றோரைப் பிரிந்து வெளியூரில் படித்தல், அடிக்கடி பள்ளி மாறுதல், வறுமை போன்ற காரணங்களால் கல்வி பயில போராட்டம் நடத்த வேண்டியதாகிவிடும்.
2-ஆமிடத்திற்கு 3, 6-க்குரியவர் பார்வை, ராகு- கேதுக்கள் தொடர்பு இருப்பின் வெளிநாடுகளில் கல்வி பயிலும் யோகம் தரும். குரு பார்வை 2, 4-ஆமிடங்களுக்குக் கிடைத்தாலும், வித்தைகாரகன் புதன் பலம்பெற்று சுபகிரகப் பார்வை, தொடர்புப் பெற்றாலும் மாணவர் கல்வியைத் தங்குதடையின்றி முடிப்பார். புதன் பலமிழந்து, கெட்டு தீயகிரகச் சேர்க்கை, பார்வை பெற்றால் கல்வியைக் கெடுக்கும்.
கல்வித்துறை
உயர்கல்விக்கு நான்காமிடம், நான்காம் அதிபதி, நான்காமிடத்திற்குப் பார்வை, இணைவு சுபத்தன்மை பெறவேண்டும். மருத்துவராக சூரியன், செவ்வாய், கேது பலம்பெற்று, 10-ஆம் அதிபதி தொடர்புவேண்டும். சூரியன், செவ்வாய் சாரம் பெறவேண்டும். செவ்வாயைவிட சூரியன் வலுப்பெற வேண்டும். 2-ஆம் வீடு தொடர்பு கண் மருத்துவர், ராகு பல் மருத்துவம், 5-ஆம் அதிபதி குழந்தை நலம், 9, 10, 11-ல் கேது பலம் அறுவை சிகிச்சை நிபுணராக உயர்த்தும்.
மேற்கண்ட கிரக அமைப்பிருந்து பலம் குறைந்தால் மருத்துவத்துறை சார்ந்த படிப்பு, தொழில் அமையும்.
செவ்வாய், புதன் 4-ஆம் அதிபதியுடன் இணைவு பொறியியல் கல்வி தரும். சனி, புதன் இணைவு, பார்வையின் கிரக இடத்தைப் பொருத்து பொறியியல் துறையில் பல்வேறு கல்வி பெறுவர். சட்டக்கல்வி பயில குரு, தர்க்கம் செய்யவைக்கும் செவ்வாய், பேச்சாற்றல் பெற புதன் பலம்பெற்றால் சிறந்த வழக்கறிஞராகலாம். சந்திரன் பலம்பெற்றால் எதிரியின் மனமறிந்து வாதாடவும், 4-ஆம் அதிபதி, குரு, செவ்வாய் இணைவு, பார்வை உரிமையியல் வழக்கறிஞராகவும், கிரக வலிமை பெற்றால் நீதிபதியாகவும் பதவி உயர்வைத் தரும்.
4-ஆமிடத்தில் சூரியன் இருந்தால்
அரசியல்; சந்திரன்- மனம், மொழி; செவ்வாய்- இரும்பு, நெருப்பு, மருந்து; புதன்- இலக்கியம்; குரு- வேத, உபதேசம்; சுக்கிரன்- கலை, கணினி; ராகு, கேது- கமிஷன்; சனி- உடலுழைப்பு, தீத்துறை என கிரகநிலை வலுத்தன்மையைப் பொருத்து கல்வி பெறுவர். எந்தத் துறை கல்வி பயின் றாலும், 4-ஆம் அதிபதி 10-ஆம் அதிபதியுடன் தொடர்பு கொண்டால்தான் கற்ற கல்விக்கேற்ற தொழில் அமையும்.
கல்வி முதலீட்டாளர்கள்
மக்களுக்கு ஏதாவது ஒருவகையில் சேவை செய்தாக வேண்டுமென்ற குறிக் கோளுடன் பணத்தைப் புரட்டி, அரசாங்கத் திடம் அனுமதி பெற்றுப் பள்ளி, கல்லூரிகளை ஆரம்பித்து, அதனுடன் மாணவர்களின் பாதுகாப்பிற்காக வாகனப் போக்குவரத்தையும் சேர்த்து நடத்தி, கடன்பட்டு, கஷ்டப்பட்டு கல்விப்பணி செய்துகொண்டிருக்கும் தியாகிகள்தான் இன்றைய கல்வி முதலீட்டாளர்கள்.
பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றிப் பணம் சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்களின் ஜாதக நிலைகள்...
வாகன யோகம் தரும் 4-ஆம் அதிபதி, வாகனகாரகன் சுக்கிரன் பலம்பெற்று, 2-ஆமிடமும் பலம்பெற்றால் கல்வி நிறுவனத்தில் வாகனம் வைத்து பெரும் பொருளீட்டுவர். 4-ஆம் அதிபர் பத்தில் இருந்து குரு பார்வை பெற்றால் கல்லூரி நடத்துவர். சுபப் பலம்பெற்றால் கல்வித் தந்தையாக- வள்ளலாக வலம்வருவர். பத்தாம் அதிபர் ஒன்பதில் இருந்தாலும் கல்வி நிறுவனம் நடத்துவர். 5-ஆம் அதிபர் 10-ல் இருக்க, 10-ஆம் அதிபர் 2-ல் இருந்தால் கல்வி நிறுவனம் நடத்தி வருமானம் ஈட்டுவர்.
கல்வி ஆர்வலர்
சமூக அந்தஸ்துகொண்ட பணக்காரர் அரசியல்வாதிகளிடம் கெஞ்சி அல்லது மிரட்டி தன் பிள்ளைகளை மட்டும் தரமான பள்ளி, கல்லூரியில் படிக்கவைத்து, உள்நாட்டில் அரசு வேலை அல்லது வெளிநாடுகளில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் பணி வாங்கிக்கொடுத்து நல்ல முறையில் வாழவைத்துவிடுவர். வறுமையில் போராடிப் படிக்கவைத்துக் கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகள் படிப்பைக் கெடுக்கும் சமூக ஆர்வலர்கள்தான் இன்று நாம் காணும் கல்வியாளர்கள்.
கல்விமூலம் லாபம்பெறும் யோகக்காரர்கள்: 2-ஆம் அதிபதி 10-ஆம் வீட்டுடன் தொடர்பு, பார்வை பெற்றால் வார்த்தையால், கல்வி நிறுவனங்களால் லாபம் கிடைக்கும். ராகு, சனி, செவ்வாய் தொடர்புகளின் நிலையைப் பொருத்து மிரட்டிப் பணம் சம்பாதிப்பர். பலம் குறைந்திருந்தால் மிரட்டிப் பணம் பறிக்கமுடியாமல் அரசாங்க தண்டனை பெறுவர்.
மாணவர்களுக்கு நல்ல முறையில் கல்வி கிடைக்கவேண்டுமென நினைப்பவர்களுக்கு சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன் வலுத்து 2, 4-ஆமிடங்களில் இருக்கும். இவர்களது அறிவுரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கு குருவும் சூரியனும் பலம்பெற்றிருக்க வேண்டும்.
ஆசிரியர்கள்
மாணவர்களின் மனமறிந்து, தண்டிக்காமல் கண்டித்து, குறைந்த ஊதியமாக இருந்தாலும், மனதார ஏற்று, வாழ்க்கையில் தான் கற்றதையும், பெற்றதையும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து உத்தமமான, உயர்ந்த மாணவர்களை நாட்டுக்குத் தருவதில் இன்றைய ஆசிரியர்களுக்கு நிகர் யாருமில்லை!
6, 8, 12-ஆமிடங்களில் குரு மறையாமலும், குரு கெடாமலும் இருந்தால், மாணவர் களுக்கு, தான் கற்ற கல்வியை முறையாகப் போதிப்பார். குரு, செவ்வாய் பார்வை, இணைவு, சுபத்தன்மை பெற்று பத்தாம் அதிபதி சிறப்பாக இருந்தால், அரசுப்பணி செய்யும் நல்லாசிரியராக இருப்பார். நல்லாசிரியரின் கரங்கள் கட்டப்பட்டால் நாட்டில் சிறைச்சாலைகள் பெருகும்.
லக்னத்தில், 2, 4-ஆமிடங்களில் சுபகிரகம் வலுத்தவர்களுக்கும், 2, 4-ஆமிடங்கள் நன்றாக இருப்பவர்களுக்கும் நல்லாசிரியர்கள் கிடைப்பார்கள். 2, 4-ஆம் அதிபதிகள் தசை நடப்பவர்களுக்கு நல்லாசிரியர்கள் அமைவர். 2-ஆம் அதிபதி 4, 10-ல் அமைதல், தொடர்பு பெறுதல் கல்லூரிப் பேராசிரியராக மாற்றும். 10-ஆம் அதிபதி 9-ல் வலுப்பெற்றால் சிறந்த பேராசிரியர் மற்றும் பதவி உயர்வு பெறுவர். பலமிழந்தவர்கள் தனியார் பள்ளி, கல்லூரியில் பணிசெய்வர்.
2, 4-ஆம் அதிபதிகளுடன் பாவகிரகச் சேர்க்கை, பார்வை பெற்றால் கடுமையான தண்டனை வழங்கும் ஆசிரியராகவும், திட்டிக்கொண்டே இருக்கும் ஆசிரியராகவும் இருப்பர்.
பெற்றோர்
இன்று ஒவ்வொரு பெற்றோரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான் வைத்துள்ளனர். ஆதலால், பிள்ளைகள்மீது அளவு கடந்த பாசம் செலுத்துகின்றனர்.
சிறுவயதுமுதல்கேட்பதையெல்லாம் தகுதிக்கு மீறினாலும் உடனே வாங்கிக்கொடுக்கின்றனர். புதிய பணக்காரர்கள் சிலர், ""நான் படிக்கும்போது வசதிகள் குறைவாக இருந்ததால், எனக்கு அறிவு நிறைய இருந்தும், என் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாததால், விஞ்ஞானியாக வேண்டிய கனவு கலைந்துவிட்டது. ஆதலால், என் கனவை என் பிள்ளைகள்மூலம் நிறைவேற்றுகிறேன்'' என்று பொய்யான தற்பெருமை பேசுவார்கள். இப்படிப்பட்ட பலருக்கு தன் கல்வி ஆசையை நிறைவேற்றும் பிள்ளைகள் குறைவு.
5-ஆமிடம், 5-ஆம் அதிபதி என்பது புத்திரஸ்தானம். ஐந்தாமிடம் சுபத்தன்மை பெற்று வலுத்திருந்தால் பிள்ளைகளால் பெற்றவர்களுக்குப் பெருமை, பிள்ளைகளின் வளர்ச்சி பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும். 5-ஆம் அதிபதி 6, 8, 12-ஆமிடங்களில் மறைந்தோ, 5-ஆம் அதிபதி பாவிகளால் பாதிக்கப்பட்டாலோ பிள்ளைகள் நம் ஆசைப்படி வளர்ச்சியடையாமல் நோகடிப்பர். பிள்ளைகளின் கல்வி நிலையை அறிய பெற்றோரின் 6, 8-ஆமிடங்களின் நிலையைக் காணவேண்டும். 6, 8-ஆம் அதிபதி தசைகள் நடக்காமல் இருத்தல் வேண்டும். அஷ்டமச்சனிக் காலத்தில் பிள்ளைகளால் பெற்றோருக்கு அவப்பெயர் ஏற்படும். 5-ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்தால் பெற்றோர் பேச்சைக் கேட்கும், பெற்றோரை மதிக்கும் பிள்ளைகள் அமைவர்.
மாணவர்கள்
இளைய தலைமுறையினர் இன்றைக்குக் கிடைத்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்திப் பெற்றோரின் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்ற அயராது பாடுபடுகிறார்கள்; குடும்பக் கஷ்டம் உணர்ந்து வேலைக்குச் சென்றுவிடுகின்றனர் என்றெல் லாம் நமக்கு நாமே பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். உண்மையில் சில மாணவர்கள் தவிர, மற்றவர்கள் பெற்றோரின் ஆசைப்படிப் படிக்கமுடியாமல் தவிக்கிறார்கள்.
2, 4, 9-ஆம் அதிபதிகள் பாதித்தவர்கள் நன்றாகப் படிக்காமல் தாய், தந்தையருக்கு வேதனை தருவர். லக்ன செவ்வாய், இரண்டா மிடச் செவ்வாய் கெட்டிருந்தால் தாய், தந்தையைத் திட்டுவர். கல்வியில் நாட்ட மில்லாமல் பிடிவாதம் பிடித்தவர்களாக இருப்பர். கண்டச்சனி, அஷ்டமச்சனி, ஏழரைச் சனிக் காலங்களில் படிப்பில் கவனம் குறைந்து அவப்பெயர் ஏற்படுத்துவர். நான்காமிடம் பாதித்தவர்கள் ஆரம்பக் கல்வியில் நன்கு படித்த மாணவர்களாக இருந்து, உயர்கல்வியில் கோட்டைவிடுவர். நீச, பாவ கிரக தசையும் கல்வியைக் கெடுக்கும்.
2, 4-ஆம் அதிபதிகள் சிறப்பாக இருந்து நல்ல தசை நடந்தால் ஊர்மெச்சும் கல்வி பெறுவர். சந்திரன், 12-ஆம் அதிபதிகள் சிறப்புப் பெற்றால் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பெறுவர். 10-ஆம் அதிபதி 2, 4-ஆமிடத்துடன் தொடர்புப் பெற்றால் படித்ததற்கேற்ப வேலை செய்வர். ஆனால், பத்தாமிடத்தைப் பொருத்தே தொழிலில் வெற்றிபெற முடியும்.
2, 4-ஆமிட அதிபதிகள் கெட்டிருந்தால், புத்தகத்தை எடுத்தால் வேறு சிந்தனைகள் வந்து படிக்கவிடாமல்செய்யும்.
2, 4-ஆம் அதிபதிகள் சுபத்தன்மை பெற்றால் நல்ல மாணவனாகவும், 2, 4-க்குரியவர்கள் கேந்திர- திரிகோணம் பெற்று பத்தாமிடத் தொடர்பு பெறுதல் நல்ல தொழிலையும் தரும். "குருசந்திர யோகம்', "குரு மங்களயோகம்' இருப்பவர்கள் அரசாங்கத்தால் புகழப்பட்டு பெரிய பதவி வகிப்பர்.
பரிகாரம்
படிப்பில் தேர்ச்சிபெற்றவர்களால்தான் வாழமுடியும் என்கிற எண்ணத் திலிருந்து பெற்றோர் விடுபடவேண்டும். தன் வாழ்நாள் உழைப்பைப் பிள்ளைகளின் கல்விக்காக செலவழித்து, வாழவேண்டிய வயதில் தானும் வாழாமல், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் தன் பிள்ளைகளையும் வாழவிடாமல் ஜென்மத்தை வீணாக்கியவர்கள் ஏராளம். பிறர் மதிக்கவேண்டும் என்பதற்காகப் பட்டம்பெறுவதால் எந்தப் பயனும் இல்லை. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
""படிக்கமாட்டோம்- பாஸ்போடுங்க; வேலை செய்யமாட்டோம் - சம்பளம் கொடுங்க; சேமிக்கமாட்டோம்- பென்ஷன்தாங்க'' என்பதையெல்லாம்விட்டு, இளைய தலைமுறையினர் தனக்கு எதில் திறமை இருக்கிறதென்பதைக் கண்டறிந்து, அதை மேம்படுத்தி, நன்கு உழைத்து ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் இந்த ஜென்மம் சிறப்பாக, மகிழ்ச்சியாக இருக்கும்.
செல்: 96003 53748