சித்தர்தாசன் சுந்தர்ஜி

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ஜீவநாடி பலன்காண வந்திருந்தவரை அமரவைத்து, அவர் எதற்காக வந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ள பிரசன்ன நாடியைப் பார்த்தேன். பிறகு அவரிடம், "உங்கள் பிள்ளைகளின் திருமணம் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வந்துள்ளீர்களா?'' என்றேன்.

"ஆமாம் ஐயா! எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக மகளை எனது அக்காள் மகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தேன். சுமார் ஆறுமாத கால வாழ்க்கையிலேயே கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டார்கள். என் மகள் என் வீட்டுக்கே வந்துவிட்டாள்.

Advertisment

எனது மகன் ஒரு பெண்ணைக் காதலித்து அவளைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தான். நானும் அவன் விருப்பப்படியே திருமணம் செய்துவைத்தேன். ஆனால் அவனது வாழ்வும் மகிழ்ச்சியாக அமையவில்லை. திருமணம் முடிந்த ஒருவருட காலத்திற்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,

அந்தப் பெண் என் மகனை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டுச் சென்றுவிட்டாள்.

நான் என் பிள்ளைகளுக்கு நல்ல நாள், நல்ல முகூர்த்த நேரத்தில், சாஸ்திர சம்பிரதாயப்படிதான் திருமணம் செய்துவைத்தேன். ஆனால் அவர்களது வாழ்க்கை நிலைக்கவில்லை. இப்போது என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தும், எனது மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்தும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துவருகிறேன். இந்த திருமணத்திலாவது அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு அமையுமா என்னும் கவலையில், நல்வழி கேட்டு அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்று கூறினார்.

Advertisment

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி, இவரது முன்னோர் கள் வம்சத்தில் சில பாவ காரியங்களால் ஏற்பட்ட சாபங்களைக் கூறினார். மேலும் இவரது பிள்ளைகளின் முகூர்த்த நாளில் ஏற்பட்ட தோஷங்களையும் கூறி, வம்ச சாபம்தீர நிவர்த்தி முறைகளையும், தற்போது அவரது பிள்ளைகள் திருமணம் நடக்கவேண்டிய அதிர்ஷ்டமான முகூர்த்த நாளையும் குறிப்பிட்டுவிட்டு அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார். வந்தவர் மகிழ்வுடன் விடைபெற்றார்.

இன்றைய நாட்களில் திருமணம், குழந்தைப்பேறு, வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் போன்ற இன்னும் பல செயல்களைத் தொடங்குவதற்கு நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து செயல்படும் வழக்கம் மக்களிடையே அதிகமாகிவிட்டது. ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாரம், திதி, நட்சத்திரம், லக்ன நேரம், ராகுகாலம், எமகண்டம் போன்றவற்றைக் கணக்கிட்டு முகூர்த்த நாள், நேரம் குறித்துக் கொடுக்கின்றனர்.

அந்தநாளில் சாஸ்திர சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து, திருமணம் புரிந்துகொண்டவர்கள் அனைவரும் வாழ்நாள் இறுதிவரை எந்தக் குறையுமின்றி நிம்மதியாக வாழ்கிறார்களா என்றால், இல்லையென்பதே பெரும்பாலானோ ரின் பதில். இன்னும் சிலர் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருமணம் செய்தால் எந்த தோஷமும் பாதிக்காது என்று கூறுகின்றனர். அதைக்கேட்டு இப்போது பலரும், உறவுகள் சூழ்ந்திராமல் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே இருந்து திருமணத்தை செய்துகொள்கின்றனர்.

murugan

பிரம்ம முகூர்த்த நேரத்தை பலரும் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படுகின்றனர். "பிரம்மம்' என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு "பூமியிலுள்ள உயிரினங்கள்' என்று பொருளா கும். மனிதன் முதல் அனைத்து உயிரினங்களும் இரவு உறங்கி மீண்டும் கண் விழித்தெழும் அதிகாலை 4 30 மணிமுதல் சூரிய உதயம் வரையுள்ள நேரமே பிரம்ம முகூர்த்த நேரமாகும். "முகூர்த்தம்' என்றால் ஒரு குறிப்பிட்ட கால அளவு. இந்த பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்துகொண்டவர்கள் பலர் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கின்றனர். அனுபவரீதியாக ஆய்வு செய்தபோது இதை அறிந்துகொள்ள முடிந்தது.

தமிழ்முறை ஜோதிடத்தில் நட்சத்திரம், லக்னம் என்பதையெல்லாம் பார்க்கத் தேவையில்லை. செயல்படத் தொடங்கும் நாளில் கோட்சாரத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலையை நன்கு கவனித்து, நன்மைதரும் நாளில் முகூர்த்தம் அமைத்து செய்தால் இறுதிவரை நன்மைகளையும் உயர்வையும் தருமென்பதை அறிந்தேன்.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்திலுள்ள கிரகங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதைப்போன்றுதான் ஒருவரின் திருமண முகூர்த்த நாள் ஜாதகமும் முக்கியமானது. இந்த பூமியில் ஒரு உயிர் தன் வாழ்க்கையைத் தொடங்குவது பிறப்பு நிலை. இரண்டு உயிர்கள் இணைந்து ஒரே வாழ்க்கையைத் தொடங்குவது திருமண நிலை. எனவேதான் திருமண நாளிலுள்ள கிரக அமைப்புக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். ஒருவரின் திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை- தீமை, உயர்வு- தாழ்வு, பிள்ளைப்பேறு, பொருளாதாரம், தொழில் என அனைத் தையும் அவரது திருமண நாள் ஜாதகமே தீர்மானித்து செயல்படுத்துகிறது என்பதே ஆய்வில் அறிந்த உண்மை.

இனி, வாழ்வில் நன்மை- தீமைகளை உண்டாக்கும் திருமண முகூர்த்த நாளிலுள்ள கிரக நிலைகளைப் பற்றி காண்போம்.

ஒருவர் திருமணம் செய்துகொள்ளும் முகூர்த்த நாளன்று, மனைவியைக் குறிக்கும் உதாரண கிரகமான சுக்கிரன் இருக்கும் ராசியிலிருந்து எண்ணும்போது 1- 5, 9- 3, 7- 11, 2- 12-ஆவது ராசிகளில் குரு இருந்தால், திருமணத்திற்குப்பின் அமையும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். கணவன்- மனைவி இருவரும் ஒருவர்மீது ஒருவர் பாசமாக இருப்பார்கள்.

திருமண முகூர்த்த நாளன்று, கணவனைக் குறிப்பிடும் உதாரண கிரகமான செவ்வாய் இருக்கும் ராசியிலிருந்து எண்ணும்போது, 1- 5, 9- 3, 7- 11, 2- 12-ஆவது ராசிகளில் குரு இருந்தால், திருமணத்திற்குப்பின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதேபோன்று, சுக்கிரனுக்கு 1- 5, 9- 3, 7- 11, 2- 12-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால் கணவனும் மனைவியும் இணைபிரியாமல் இருப்பார்கள்.

திருமண நாளன்று சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1- 5, 9- 2-ஆவது ராசிகளில் கேது இருந்தால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரிவு, பொருளாதாரக் குறைவு, மனைவிக்கு மனதில் விரக்தி ஏற்படும். குடும்ப நிம்மதி குறையும்.

செவ்வாய் இருக்கும் ராசியிலிருந்து 1- 5, 9- 2-ஆவது ராசிகளில் கேது இருந்தால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தாம்பத்தியம் குறையும். கணவன் பொறுப்பற்றவனாக நடந்துகொள்வான்.

சுக்கிரனுக்கு 1- 5, 9- 2-ஆவது ராசிகளில் ராகு இருந்தால், திருமணத்திற்குப்பின் மனைவி அடிக்கடி நோய்வாய்ப்படுவாள். அல்லது நிரந்தர நோயாளியாகிவிடுவாள். சிலருக்கு அற்பாயுள்.

முகூர்த்த நாளன்று ராகு- கேது கிரகங்களுக்கு ஒருபுறம் குருவும், மறுபுறம் சுக்கிரனும் இருந் தால் கணவன்- மனைவி பிரிவு உண்டாகும். ராகு- கேதுவுக்கு ஒருபுறம் செவ்வாயும், மறுபுறம் சுக்கிரனும் இருந்தால் கணவன்- மனைவி பாசம் குறையும். கருத்து வேறுபாடு உண்டாகும்.

சுக்கிரனுக்கு 1- 5, 9- 3, 7- 11, 2- 12-ஆவது ராசிகளில் சனி இருந்தால், திருமணத்திற்குப்பின்பு மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

திருமண நாளன்று செவ்வாய் இருக்கும் ராசிக்கு 1- 5, 9- 3, 7- 11, 2- 12-ஆவது ராசிகளில் சனி இருந்தால், திருமணத்திற்குப்பின் அமையும் வாழ்க்கையில் கணவனுக்குத் தொழில் தடை, கடன் தொல்லை, உறவுகளால் ஒதுக்கப்படுதல், நோய் என குடும்ப வாழ்க்கை போராட்டமாக இருக்கும்.

திருமணம் சம்பந்த செயல்களான பெண் பார்த்தல், நிச்சயம் செய்தல், முகூர்த்த நாள் அமைத்தல், தாம்பத்திய உறவு கொள்ளல், முதல் சந்திப்பு போன்ற எந்த செயலையும் புதன்கிழமையன்று தொடங்கி செய்யக்கூடாது. புதன்கிழமை வியாபாரம் சம்பந்தமான செயல் களுக்கு நன்மை தரும். ஆனால் கணவன்- மனைவி, ஆண்- பெண் மன ஒற்றுமைக்கு உகந்த நாளல்ல. இந்த நாள் மனதில் அடிக்கடி மாற்றங்களை உருவாக்கும் தன்மைகொண்டது என்பதால், எதிர்பார்ப்புடன்கூடிய வியாபாரம்போல் இல்லறம் ஆகிவிடும்.

பிறப்பு என்பது நாமறியாமல் நிர்ணயிக்கப்பட்டு நிகழ்வது.

ஆனால் திருமணம் நமக்கு நாமே நிர்ணயித்து செய்துகொள்வது. எனவே திருமண முகூர்த்த நாள் நிர்ணயிக்கும்போது, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் முன்னேற் றமும் தரும் நாள் பார்த்து அமைத்துக் கொள்ள வேண்டும்.

செல்: 99441 13267