மனித வாழ்வின் மகத்தான அத்தியாயமான திருமணம் ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு வாழ்ந்த பெற்றோர்களுக்கு மிக எளிமையான- சாதாரண நிகழ்வாக இருந்தது. அந்தக் காலத்தில் ஒரே ஒரு வரன்தான் பார்ப்பார்கள். அந்த வரனுடனேயே திருமணம் முடிந்துவிடும். வெகுசிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரன் பார்த்தபிறகு திருமணம் நடக்கும். ஒரு குடும்பத்தில் சாதாரணமாக ஐந்து பிள்ளைகளுக்குக் குறையாமல் இருப்பார்கள்.
திருமணத்தடை என்றால் என்னவென்றே தெரியாமல் பலரும் வாழ்ந்த காலம். தற்போதைய காலகட்டத்தில் வீட்டுக்கு அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளே உள்ளனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிப்பதற்குள் பெரும் சங்கடத்தை அனுபவிக்கிறார்கள். குறைந்தது நூறு ஜாதகம் பார்கிறார்கள். பல "மேட்ரிமோனி' கள்மூலம் உலகம் முழுவதும் வரன் தேடுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க ஏழரைச்சனி, அஷ்டமச் சனிக் காலத்தில் திருமணம் செய்யலாமா? திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கை யில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனியின் காலத்தில் திருமணம் நடப்பதையும் பார்த்திருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் திருமணம் செய்து சீரும்சிறப்புமாக வாழ்பவர்களையும் பார்கிறோம்; சிக்கி சின்னா பின்னமானவர்களையும் காண்கிறோம். இதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வுசெய்வோம்.
ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம் பிறருடைய கோபமும் சாபமுமே. தோஷங் களே மனிதப் பிறப்பிற்குக் காரணமாக அமைகின்றன. தோஷங்கள் இல்லையென்றால் பிறப்பில்லை. பல ஜென்மங்களில் ஒருவர் செய்த பாவம்- புண்ணியம் ஆகியவற்றின் "ஆடிட்டிங்' தீர்ப்புதான் இந்தப் பிறப்பு.
அந்தத் தீர்ப்பை உலகிற்கு வழங்கும் நீதிபதியே சனிபகவான். மனிதன் இப்பிறவியில் அனுபவிப்ப தெல்லாம் கர்மப் பலன்களே. இந்த கர்மப் பலன் களைக் கொடுக்கும் கிரகம் கர்ம காரகன் சனி.
மகா சக்திபடைத்த கர்மகாரகன் சனி மிகப்பெரிய கிரகம். தன் நிலையிலிருந்து வழுவாமல், பாரபட்சமின்றித் தீர்ப்பை வழங்கு கிறது என்பதால்தான் துலாபாரத்தை ராசிச் சின்னமாகக் கொண்ட துலா ராசியில், சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் உச்சம்பெறுகிறார்.
மனிதர்களைப் பிடிக்கும் சனி நவகிரகங்களின் பெயர்ச்சிகள் மாதம் ஒருமுறை, ஆண்டுக்கொருமுறை என அவ்வப்போது நிகழ்ந்துகொண்டே இருந்தாலும், சனிப்பெயர்ச்சிக்கு அனைவரும் அதிகம் பயப்படுகிறார்கள்.
சனி கிரகம் ஒரு ராசியைக் கடக்க ஏறத் தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ராசிச் சக்கரத்தை ஒருசுற்று சுற்றிவர தோராயமாக 30 ஆண்டுகள் ஆகின்றன. அதனால் பெரியவர்கள் பேச்சுவழக்கில் "30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை; 30 வருடம் தாழ்ந்தவரும் இல்லை' என்பார்கள். அதாவது 30 வருடங்கள் எந்தத் துன்பமும் இல்லாது வாழ்ந்த மனிதரும் இல்லை; 30 வருடங்களும் இன்பமாக வாழ்ந்தவரும் இல்லையென்பதே இதன் பொருள். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குறைந்தபட்சம் 60 வருட மென நிர்ணயம் செய்தால், 30 வருடகாலம் சனிபகவானின் பிடியில் மட்டுமே மனிதர் களின் வாழ்க்கை இருக்கும்.
ஏழரைச்சனி
ஒருவரின் சந்திரன் நிற்கும் ராசிக்கு முன் ராசியிலும், சந்திரன் நிற்கும் ராசியிலும், அதற் கடுத்த ராசியிலும் கோட்சார சனிபகவான் சஞ்சாரம் செய்யும் காலம்தான் ஏழரைச் சனியாகும். அந்த மூன்று ராசியினருக்கும் தலா இரண்டரை வருடங்கள்வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் தங்கிவிட்டுப் போகும் காலகட்டமே ஏழரைச்சனியாகும்.
ராசிக்கு பன்னிரன்டாம் இடத்தில் சனிபகவான் நிற்கும் காலம் ஏழரைச்சனியின் முதல் பகுதியாகும். இதை விரயச்சனி எனலாம். பண இழப்பு, வேலை, தொழிலில் சிரமம், காரியத்தில் தடை, தாமதம், உடல் உபாதைகள் போன்ற அசௌகரியங்கள் இருக்கும்.
அடுத்த பகுதியை ஜென்மச்சனி எனலாம். அதாவது ராசியைக் கடந்துசெல்லும் காலம். அந்தக் காலகட்டங்களில் மனப் போராட்ட மாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.
அடுத்த பகுதியைக் கழிவுச்சனி, பாதச் சனி எனலாம். அந்தக் கால கட்டம், கடந்துபோன ஐந்தாண்டுகளைவிட சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்.
பொதுவாக ஒருவரது வாழ்நாளில் மூன்றுமுறை ஏழரைச்சனி வரும். ஏழரைச்சனி என்பது ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும். இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என மூன்று சுற்றுகள் இருக்கும்.
மங்குசனி
இளம்பருவத்தில் எதையும் தாங்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலையில் சனிபகவான் தரும் அடி சற்று மெதுவாகவே விழும். மிக முக்கியமாக இந்தக் காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச்சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் கிடைக்கவே செய்கிறது.
பொங்குசனி
வாலிபத்தின் நடுவில் வரும் இரண்டாவது சுற்று பொங்குசனியாகும். ஜாதகரின் மற்ற கிரக அமைப்புகளைப் பொருத்து இதன் பலன் இருக்கும். ஒருசிலருக்கு பொங்கு சனி விடைபெறும்போது மங்காத செல்வத் தையும், மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுத்து விட்டுச் செல்லும். திருமணம், குழந்தை, தொழில், வீடு, வாகன யோகம் என அனைத்தும் இந்தக் காலகட்டத்தில்தான் நடைபெறும்.
ஜனனகால ஜாதகப்படி சாதகமான தசாபுக்தி இருந்தால் பல நன்மைகள் பெருகும். சாதமற்ற தசாபுக்தி நடந்தால் பரிகாரங் கள் செய்யாவிட்டால் படுத்தி எடுத்துவிடும்.
மரணச்சனி
இந்த சுற்றில் ஒரு ஜாதகருக்கு நிச்சயம் உடல்நலிவு ஏற்படுத்தும். மற்றும் மரணத் திற்கு இணையான துயரங்களை அனுபவிக்க வேண்டி வரும். தசை மற்றும் புக்தி ஆகியவை ஜாதகருக்கு சாதகமற்று இருக்கும் சூழலில் நிச்சயம் மரணம்கூட சம்பவிக்க நேரிடும்.
அஷ்டமச்சனி
அஷ்டமச்சனி என்றால் ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோட்சார சனி சஞ்சாரம் செய்வதாகும். அஷ்டமச்சனிக் காலத்தில், "நட்டதெல்லாம் பாழ்; விழலுக்கு இரைத்த நீர்; அந்நிய தேசத்திற்கு ஓடிப்போ' என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது இதன் பொருள்- அஷ்டமத்துச்சனியின் காலத்தில் அறிவு வேலைசெய்யாது. அஷ்டமச்சனி காலகட்டங்களில் மனரீதியாக மிகக்கடுமையான அழுத்தம் ஏற்படும். சிலருக்கு பில்லி, சூனியம் வைக்கப்பட்டதைப் போன்ற எதிர்மறையான உணர்விருக்கும். இதனால் நல்லவர் கெட்டவராவார். அறிவு தலைகீழாக மாறும். மூளை மங்கி மது, மாது, சூது, கொலை, கொள்ளை என ஒருவர் வாழ்க்கையே தலைகீழாக மாறும். உணர்ச்சிமட்டும் வேலைசெய்யும். சொந்த ஊரில் இருந்தால் வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். வேலைசெய்யாமல் ஊர் சுற்றுவார்கள். காரணமே இல்லாமல் தண்டனை அனுபவிப் பார்கள். சிலர் எந்தத் தவறும் செய்திருக்க மாட்டார்கள். தேவையே இல்லாமல் சிறைக் குப் போவார்கள். இரண்டு வருடம் கழித்து அவர்மீது தவறில்லை என்று தெரியவரும். இதனால்தான் "அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி' என்ற பழமொழி உள்ளது.
இரண்டரை வருடம் அஷ்டமத்துச்சனி வந்துபோனவர்கள், நிதானமாக, எதார்த்த மாக- ஞானிபோல பேசுவார்கள். அந்த அளவுக்கு சனி அவர்களைக் கசக்கிப் பிழிந்து காயவைத்துவிட்டுப் போய்விடும். சொந்த ஊரை, சொந்த பந்தங்களைவிட்டு வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு செல்வது சிறைத் தண்டனைக்கு இணையாகும் என்பதால், லக்னம், லக்னாதிபதி சுப வலிமை பெறாதவர்கள் இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.
அர்த்தாஷ்டமச்சனி
ராசிக்கு நான்கில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலமாகும். அஷ்டமச்சனியின் சிரமங்களில் சரிபாதியை அனுபவிக்கநேரும். திடீர் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். அதனால் சேமிப்புப் பணம் விரயமாகக்கூடிய நிலை ஏற்படும்.
கண்டகச்சனி
ராசிக்கு ஏழாமிடத்தில் சனிபகவான் சஞ்சாரம் செய்யும் நிலையே கண்டகச் சனியாகும். எந்தவொரு செயலைச் செய்ய சிறப் பான சூழல் இருந்தாலும் பல சிரமங்களைச் சந்திக்கவேண்டி வரும். இந்தக் காலத்தில் நாம் எண்ணியதை அதற்கான நேரத்தில் முடிப்பது சிரமம். சுபகாரியங்கள் திட்டமிடப்பட்டு நடக்கா மல் போகலாம். கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சரிவர இருக்காது. வரவுக்குமீறிய செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படும். பொதுத் தொண்டில் இருப்பவர்களுக்கும், மக்களுக்கு மிடையே பகை ஏற்படும்.
ஏழரைச்சனியும் திருமணமும்
ஏழரைச்சனிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. சனிபகவான் கொடுப்பதைத் தடைசெய்யும் அதிகாரம் வேறெந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்குத் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுபவிஷயங்கள் நடைபெறு வது ஏழரைச்சனியின் காலத்தில்தான் என்பது மறுக்கமுடியாத உண்மை. பல வருடங்களாகத் தடைப்படும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு சுபநிகழ்வுகள் இந்தக் காலகட்டத்தில் எளிமையாக நடந்துவிடும். சராசரியாக பெண்களுக்கு 21 வயதிலும், ஆண்களுக்கு 23 வயதிலும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுக போகங்களை அனுபவிக்கும் பாக்கியம் ஆரம்பமாகும். திருமணமென்ற பந்தத்தில் ஆண்- பெண் இருவரின் கர்மவினைகளும் கலந்து பூர்வ புண்ணிய- பாக்கிய ஸ்தானங்கள் முழுமை யாக இயங்கும்.
ஏழரைச்சனியின் காலத்தில்தான் ஆணுக்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி, குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம், உழைப்பால் உயரும் நெறிமுறை என்ன என்பதுபோன்ற பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்களைப் புரியவைப்பார்.
பெண்களுக்கு கணவர், புகுந்தவீட்டாரு டன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படிப் பராமரிக்கவேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகளைப் புரியûவப்பார்.
இந்திய அரசியல் சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18; ஆணின் திருமண வயது 23 என இருந்தபோதிலும் படிப்பு, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணிகளால் குறைந்தபட்சம் 25 வயதிற்கு மேல்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கிறார்கள்.
அல்லது தங்களது எதிர் பார்ப்பிற்கேற்ற வரன் அமையாத காரணத்தால் ஏழரைச்சனியின்மேல் பழிபோடுகிறார்கள்.
சுயவிருப்பு- வெறுப்பு காரணமாக ஏழரைச்சனி வந்தால் திருமணம் செய்யக் கூடாது என, 30 வயதிற்கு மேலாகியும் திருமணத் தைத் தள்ளிப்போடுகிறார் கள். பலவருடங்களாகத் திருமணமே வேண்டாமென்று கூறுபவர்களுக்குக்கூட ஏழரைச்சனியின் காலத்தில் திருமணம் நடந்துவிடும்.
ஜனனகால ஜாதகரீதியான பல்வேறு தோஷங்களால் சரியான திருமண வாழ்வு கிடைக்காமல் மன நிம்மதியிழந்து தவிப்பவர் கள் ஏழரைச்சனியின் காலத்தில் முயற்சித்தால் திருமணத்தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும். ஏழரைச்சனியால் திருமணம் தடைப்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
அஷ்டமச்சனியும் திருமணமும்
ராசிக்கு எட்டாமிடத்தில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு இருப்பதால், வாய் கொடுத்து மாட்டிக் கொள்பவரைப்போல தேவையற்ற வம்புக்குச் சென்று தானே அதில் சிக்கிக்கொள்வர்.
அதாவது வம்பு, வழக்கு, தகராறில் ஈடுபடுதல், பிறர் விஷயங்களில் கலகம் செய்ய நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தனக்கு ஏற்படவேண்டிய இன்பமான நிலையைத் தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக்கொள்வார்கள். மேலும் ஜனனகால ஜாதகரீதியாக சாதகமற்ற தசாபுக்தி நடப்பவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத இடர்களை சந்திக்க நேரும்.
அல்லது இடப்பெயர்ச்சி செய்யநேரும்.
எட்டாமிடமென்பது ஆணுக்கு ஆயுள் ஸ்தானம்;
பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால், கோட்சார சனியின் பயணப்பாதையில் ராகு- கேது, செவ்வாய் போன்ற அசுப கிரகங்கள் நின்றால் விபரீத விளைவுகள் ஏற்பட்டு வாழ்க்கையே கேள்விக்குறியாகலாம். இதனால் இரண்டரை ஆண்டுகாலம் திருமணத்தை ஒத்திப் போடுவது நல்லது.
கோட்சாரமும் மிதுன ராசியும்
மிதுன ராசிக்கு அஷ்டமத்துச்சனி ஆரம்பம். அனைத்து மிதுனராசிக்காரர் களுக்கும் இந்த அஷ்டமத்துச்சனி பாதிக்குமா அல்லது நன்மை தருமா என்பதை அவரவர் பிறப்பு ஜாதகத்தை வைத்தே சரியான பதிலைக் கூறமுடியும்.
விதிவிலக்காக மிதுன ராசியில் குரு இருந்தால் ஜாதகரை அஷ்டமத்துச்சனி பாதிக்காது. மிதுன ராசியில் சந்திரனுடன் ராகு அல்லது கேது இருந்தால் அவர்களுக்கு பிரச்சினைகளைக் கொடுக்கும். உதாரணமாக குடும்பம், தொழில், மனது, உடல்ரீதியாக சற்று பாதிப்பு ஏற்படும். மற்றும் இந்த மிதுன ராசியில் சந்திரனுடன் ராகுவோ கேதுவோ இருந்தால் அவர்கள் இந்த அஷ்டமத்துச்சனி முடியும்வரை திருமணம் செய்யக்கூடாது.
மிதுன ராசிக்கு எட்டா மிடமான மகரத்தில் ராகு- கேது, செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவருக்கு அஷ்டமத்துச்சனி சற்று கூடுதலாகவே பாதிக்கும்.
மிதுன ராசிக்காரர் களுக்கு ராசிக்கு எட்டா மிடமான மகரத்தில் குரு, சுக்கிரன் இருந்தால் இந்த அஷ்டமச்சனி அவர் களை பாதிக்காது. சனி அவர்களுக்கு 200 மடங்கு யோகமான அஷ்டமத்துச்சனியாக நடக்கும். இக்காலகட்டத்தில் அவர்களின் பணம், பொருளாதாரம் அதிகரிக்கும். வீடு, வாகனம், தொழில் என அபிவிருத்தியடையும். மகரத்தில் செவ்வாய், சனி, ராகு- கேது இருந்தால் அவர்களுக்கு சற்று பாதிக்கும். நல்ல தசையாக இருந்தால் பாதிப்பின் அளவு குறையும்.
ஒருவரின் ஜனனகால ஜாதகத்தை வைத்துக்கொண்டுதான் ஏழரைச்சனி, அஷ்ட மத்துச்சனி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது- கெட்டது செய்யுமென்பதை முடிவு செய்யவேண்டும்.
ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி, பூர்வபுண்ணிய பலத்திற்கேற்ப நன்மை- தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவியென்று அமரவைத்துவிடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரி யைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார்.ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனிபகவானுக்குக் கிடையாது. பல காரியங்களைக் கண்ணிமைக் கும் நேரத்தில் நடத்திக்காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்திருக்கும்.
அதேநேரத்தில் சனியால் யோகப் பலன்கள் அனுபவிக்கவேண்டு மென்று ஜாதகத்தில் இருந் தால், அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனிபகவானுக்கு உண்டு.
ஆகையால்தான் "சனியை போல் கொடுப்பவனும் இல்லை; கெடுப்பவனும் இல்லை' என்றும்; "சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்' என்றும் கூறுவார்கள்.
ஜாதகத்தில் எல்லா கிரகங்களுக்கும் தசாபுக்தி, அந்தரங்களுக்கேற்ப பலன் தரும்.
ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் தசாபுக்தி களுடன், கோசட்சார பலமும் அதிகமாகும். எத்தனைப் பெரிய யோகஜாதகமாக இருந் தாலும் அந்த ஜாதகத்திற்கேற்ப சனி தனது தீர்ப்பைக் கொடுத்துதான் தீருவார். ஒருவர் செய்த பாவங்கள் அவருக்கு எப்படி திரும்பக் கிடைக்கிறதென்றால், அவருக்கு ஜாதகப்படி மோசமான தசாபுக்தி நடக்கும் காலங்களில் அல்லது அஷ்டமச்சனி, ஜென்மச்சனி நடக்கும் காலங்களில் சனிபகவான் தயவு தாட்சண்யமின்றி கடுமையாக தண்டிக்கிறார்.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எல்லாருக்கும் பாதிப்பு எல்லா காலத்திலும் தொடர்வது கிடையாது.
சுருக்கமாக சந்திரன், ராகு, கேது, சனி, செவ்வாய் தசை, புக்தி, அந்தர காலங்களிலும், லக்னரீதியான 6, 8, 12-ஆம் இடத்துடன் சம்பந்தம்பெறும் கிரகங்களின் தசை, புக்தி, அந்தர காலங்களிலும் பாதிப்பு மிகுதியாக இருக்கும். சாதகமான தசை, புக்தி நடப்பவர்களும் நல்ல பலன்களே நடைபெறும்.
சனிபகவானின் பாதிப்பிலிருந்து விடுபட செய்யவேண்டிய பரிகாரங்கள்
கோட்சாரத்தில் ஜென்மச்சனியால் புனர் பூ தோஷமேற்பட்டுத் திருமணத் தடைய சந்திக்கும் மகர ராசியினர், பௌர்ணமி தோறும் சத்தியநாராயணர் பூஜையில் கலந்துகொண்டு பச்சரிசி உணவை தானம் செய்யவேண்டும். அல்லது பிரதோஷ நாளில் மாவிளக்கில் நெய்தீபமேற்றி நந்தியெம்பெருமானை வழிபட்டு வர தடைகள் தகரும்.
பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றவர்களுக்குச் செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானவையாகும்.
சனிக்கிழமைதோறும் விரதமிருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம்; எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
மேலும், சனிக்கிழமை களில் வரும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனைசெய்து வழிபடுவது சிறப்பு.
சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.
சங்கடஹர சதுர்த்தி தினத்தில், விநாயகப் பெருமானுக்கு எட்டு சிதறு தேங்காய் களை உடைத்து வழிபட்டால், சனியின் பாதிப்புகளால் ஏற்படும் சிரமங்கள் சிதறி ஓடும்.
திருநள்ளாறு சென்று தர்பாரண்யேஸ் வரரை வழிபட தோஷங்கள் நீங்கும். நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டி ஆகியவற்றை ஏழை, எளியோருக்கு தானம் செய்யலாம்.
சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாட்களில் அன்னதானம் செய்வது சிறப்பு. நரசிம்மரையும், சக்கரத்தாழ்வாரையும், சரபேஸ்வரரையும் வழிபட்டுவர, பய உணர்வு, செய்வினை பயம் அகலும். மிக எளிமையாக ஸ்ரீராமஜெயம் எழுதலாம்.
சனிக்கிழமைகளில் பச்சரிசியை ஒரு கையில் அள்ளி, அதை நன்கு பொடிசெய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, வன்னி மரத்தடி விநாயகரை மூன்றுமுறை சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றித் தூவினால் அதை எறும்புகள் தூக்கிச் செல்லும். அப்படி தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும் பாலானவை நம்மை விட்டுப் போய்விடும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்கு சமம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளை யிலும், தேய்பிறை அஷ்டமி நாளிலும் காலபைரவரை வணங்கி வரலாம்.
செல்: 98652 20406