ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
1-10-2018- மிதுனம்.
3-10-2018- கடகம்.
5-10-2018- சிம்மம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: அஸ்தம்- 1, 2, 3.
செவ்வாய்: திருவோணம்- 3, 4.
புதன்: சித்திரை- 1, 2, 3, 4, சுவாதி- 1.
குரு: விசாகம்- 3, 4.
சுக்கிரன்: விசாகம்- 1.
சனி: மூலம்- 1.
ராகு: பூசம்- 2.
கேது: உத்திராடம்- 4.
கிரக மாற்றம்:
2-10-2018- துலா புதன்.
4-10-2018- விருச்சிக குரு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிக்கு இதுவரை 7-ல் இருந்த குரு இப்போது 8-ல் மாறுகிறார். 8-ல் குரு வந்தபோதுதான் வாலி பட்டமிழந்தான் என்பது பாடல். 8-ல் வரும் குரு 2-ஆம் இடம், 4-ஆம் இடம், 12-ஆம் இடங்களைப் பார்க்கிறார். குரு நிற்கும் இடம் பாதகமான இடமாக இருந்தாலும், பார்க்கும் இடங்கள் அற்புதமான இடங்கள். வாக்கு, தனம், குடும்பம் என்ற 2-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடும். குடும்பத்திலிருந்து பிரிந்து, வருந்தியவர்களுக்கு திருந்தி ஒன்றுசேரும் யோகம் உண்டாகும். 12-ஆம் இடம் விரய ஸ்தானம் என்றாலும் அந்த வீட்டுக்குடையவரே அந்த வீட்டைப் பார்ப்பதால் அது சுபவிரயமாக மாறும். திருமணம், புத்திர பாக்கியம், உயர்கல்வி யோகம், பட்டப்படிப்பு, உத்தியோகம், உத்தியோக உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி, ஊதிய உயர்வு, பூமி, மனை, வீடு, வாகன யோகம் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு, "எங்க வீட்டில் விசேஷம்' என்று கூறுமளவு சுபச்செலவு ஆகிய பலன்கள் நடக்கும். பொதுவாக குரு நிற்கும் இடத்தைவிட, பார்க்கும் இடத்துக்கே சிறப்பு அதிகம். அதனால் குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். கோடி தோஷம் விலகும் என்றும் கூறலாம். 4-ல் உள்ள ராகு சிலருக்கு ஆரோக்கியக்குறைவு, பூமி, வீடு, வாகனம் சம்பந்த முயற்சிகளில் பிரச்சினை, தடை போன்ற பலன்களைத் தரலாம். ஏற்கெனவே இருந்த இடம் (7-ஆம் இடம்) அற்புதமான இடம்- ஆனந்தமான இடம். இப்போது மாறியுள்ள இடம் சற்று மோசமான இடம்தான். ஏ.சி. பெட்ரூமில் பஞ்சு மெத்தையில் சொகுசு நித்திரை செய்தவர்கள் இப்போது கரன்டு கட்டான நிலையில், யு.பி.எஸ்ஸும் இல்லாத இடத்தில் கொசுக்கடிக்கு மத்தியில் படுத்திருப்பதுபோல! என்றாலும் முதலில் குறிப்பிட்டமாதிரி இருந்த இடத்தைவிட குரு பார்க்கும் இடங்களின் தன்மையால் குருப்பெயர்ச்சி உங்களைக் கெடுக்காது. "ஓடோமாஸ்' உடல் முழுவதும் தடவிக்கொண்டு கொசுக்கடியிலிருந்து தப்பி தன்னை மறந்து தூங்குவதுபோல ஆறுதல் கிடைக்கும்; மாறுதல் ஏற்படும்.
பரிகாரம்
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள்: அஸ்வினி கேதுவின் நட்சத்திரம். கேது, ராசிநாதன் செவ்வாயோடு இணைந்து 10-ல் இருப்பதாலும், அவர்களுக்கு 11-ல் குரு வருவதாலும் தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு, வாழ்க்கை நிம்மதி உண்டாகும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபடலாம்.பரணி நட்சத்திரக்காரர்கள்: பரணி சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரன் ராசிக்கு ஏழில் குருவோடு சம்பந்தப்பட்டு இருப்பதால் திருமணம் கூடும். பிரிந்த தம்பதிகள் இணைந்து வாழலாம். பிள்ளையார்பட்டி அருகில் குபேரலட்சுமி கோவில் உள்ளது. தேய்பிறை அஷ்டமியன்று ஹோமம் நடக்கும். கலந்துகொள்வது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்கள்: கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் மேஷ ராசிக்கு 5-க்குடையவர். உங்கள் கனவுகளையும் திட்டங்களையும் குருப்பெயர்ச்சி நிறைவேற்றித் தரும். மன்னார்குடி அருகில் சித்தமல்லி என்ற கிராமத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாச காலத்தில் தங்கியிருந்தபோது, அபிராமியம்மன் சமேத குலசேகரப் பெருமான் அவர்கள் கலக்கத்தைப் போக்கினாராம். மாசி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியன் சுவாமியின்மேல் தன் கதிரொளியை பாய்ச்சி வழிபடுவார். அங்கு சென்று ஞாயிறு வழிபடவேண்டும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு இதுவரை 6-ல் இருந்த குரு இப்போது 7-க்கு வருகிறார். உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 11-ஆம் இடம், 3-ஆம் இடங்களையும் பார்க்கிறார். இந்த குருப்பெயர்ச்சியால் 100-க்கு 100 யோகத்தையும் நன்மைகளையும் அடையப்போகும் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவர். 6-ல் குரு இருந்தபோது நீங்கள் அனுபவித்த வேதனைகளையும், சோதனைகளையும் விரட்டியடித்து பரிகாரம் தேடுவதுபோல 7-க்கு வரும் குரு சாதனைகளைச் சாதிக்க வைத்து, சந்தோஷத்தை உருவாக்குவார். கடந்த காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், அவசரத்தேவைகளுக்காகவும் தவிர்க்கமுடியாத நிலையில் கடன் வாங்கியவர்கள் இப்போது எல்லா கடன்களையும் வட்டியும் முதலுமாக திருப்பியடைத்து நல்லபேர் எடுக்கலாம். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றிவிடலாம். அப்படிக் கடனை திருப்பி அடைப்பதால் சில நல்லவர்கள் வட்டியை ஓரளவு தள்ளுபடிசெய்து உங்களுக்கு சலுகை காட்டலாம். அதற்கு உங்கள் மனைவியும் பிள்ளைகளும், ஆதரவும் உதவியும் புரிவார்கள். சிலருடைய அனுபவத்தில் மனைவிக்கு வரவேண்டிய பங்கு பாகங்கள் கிடைப்பதன் மூலமாகவும் அல்லது வேலை பார்க்கும் மனைவி "லோன்' போட்டு உதவியும் கடன் அடைபடலாம். அதேபோல பிள்ளைகளும் நல்ல வேலைக்குப் போவதாலும், வெளிநாட்டு வேலைக்குப் போவதாலும் நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். அதை வைத்தும் உங்கள் கடன் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். ஒருசில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்- பி.எப். தொகை கிடைப்பதன் வாயிலாகவும் பழைய கடன் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ளலாம். ஒரு அன்பர், வெளிநாட்டு அன்பர் மூலமாக வெளிநாட்டில் லாட்டரி டிக்கெட்டில் முதலீடு செய்திருந்தார். அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டமும் பரிசு யோகமும் கிடைக்க வாய்ப்புண்டு.
பரிகாரம்
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள்: கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் ரிஷப ராசிக்கு 4-க்குடையவர். பூமி, வீடு, வாகன வகையில் நல்ல யோகமுண்டாகும். ஆரோக்கியம் விருத்தியடையும். மன்னார்குடி அருகில் சித்தமல்லி என்ற கிராமத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாச காலத்தில் தங்கியிருந்தபோது, அபிராமியம்மன் சமேத குலசேகரப்பெருமான் அவர்கள் கலக்கத்தைப் போக்கினாராம். மாசி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியன் தன் கதிரொளியை மூலவர்மேல் செலுத்தி வழிபடுவார். அங்கு சென்று வழிபடவும். ரோகிணி நட்சத்திரக்காரர்கள்: திண்டிவனம்- புதுச்சேரி பாதையில் (மயிலம் வழி) திருவக்கரை சென்று சந்திரமௌலீஸ்வரரையும் குண்டலினி முனிவர் ஜீவசமாதியையும் வழிபட்டால் உங்கள் மனமும் சரீரமும் தெளிவாகும். மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள்: மிருகசீரிடம் செவ்வாயின் சாரம். செவ்வாய் 7, 12-க்குடையவர். பயணம், வெளிநாட்டு வேலை, மனைவி வகை சுபச்செலவு ஏற்படலாம். புதுக்கோட்டை அருகில் குமரமலை என்ற தலத்தில் பாலதண்டபாணி கோவில் உள்ளது. ராமையா குருக்கள், செல்: 98424 83217-ல் தொடர்புகொண்டு போய் வழிபடலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிக்கு இதுவரை நல்ல இடமான 5-ல் இந்த குரு இப்போது 6-ஆம் இடத்துக்கு மாறுகிறார்; மிதுன ராசிக்கு 7, 10-க்குடையவர் 7-ஆம் இடத்துக்கு பன்னிரண்டிலும், 10-ஆம் இடத்துக்கு ஒன்பதிலும் குரு வருகிறார். 10-க்குடையவரே 10-ஆம் இடத்தையே பார்க்கப்போகிறார். எனவே கடந்த காலத்தில் தொழில்துறையில் நஷ்டம் அடைந்தவர்களும், உத்தியோகத்தில் பிரச்சினைகளைச் சந்தித்தவர்களும், வேலை, வருமானம் எதுவும் இல்லாமல் வீண்பொழுது போக்கியவர்களும் இந்த குருப்பெயர்ச்சியால் மிகமிக நல்ல பலன்களை அடையலாம். நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல தொழில், நல்ல மனைவி, நல்ல குடும்பம், நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். 6-ஆம் இடத்து குரு தொழில், வாழ்க்கை- இதற்கு யோக ஸ்தானத்தில் (பாக்கிய ஸ்தானத்தில்) அமர்வதால் சொந்தத் தொழில் சிறப்படைய சிலர் கடன் வாங்கலாம். சிலர் அரசு வேலைக்காக அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுக்கலாம். வேலையும் வாங்கலாம். சிலர் மனைவிவழி உறவினர்களுக்காகவும் அல்லது உடன்பிறப்புகள் வகையிலும் விருந்து விழா விசேஷங்களுக்காக கடன் வாங்கலாம்; கடன் வாங்கிக்கொடுக்கலாம். கடன் வாங்கி செலவு செய்யலாம். 12-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் சுபமங்களச் செலவுகளைச் செய்யலாம். 2-ஆம் இடம் படிப்பு, வித்தை, கல்வியையும் குறிக்கும் என்பதால் கடந்த காலம் படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்தவர்கள் இப்போது எல்லா பாக்கி பாடங்களையும் எழுதி பாஸ் செய்துவிடலாம். மேற்படிப்பையும் தொடரலாம்.
பரிகாரம்
மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள்: மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் மிதுன ராசிக்கு 6, 11-க்குடையவர். குருப்பெயர்ச்சி உங்களுக்கு கடன் நிவாரணம், நோய் நிவர்த்தி, வைத்தியச்செலவுக்கு விடுதலை, வழக்குகளில் வெற்றி, பங்காளிப்பகை நீங்கி ஒற்றுமை ஆகிய பலனை உண்டாக்கும். புதுக்கோட்டை அருகில் குமரமலையில் (சிறுகுன்று) தண்டபாணி சந்நிதி சென்று வழிபடவும். ராமையா குருக்கள், செல்: 98424 83217-ல் தொடர்புகொண்டு போகலாம். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள்: திருவாதிரை ராகு சாரம். ராகு கடகத்தில் நிற்க, அவரை விருச்சிக குரு பார்க்கிறார். ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம் போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும். மருத்துவத்துறை மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தேனி வழி உத்தமபாளையம் சென்று (தென்காளஹஸ்தி) வழிபடவும். ராகு- கேதுவுக்கு தனிச்சந்நிதி உண்டு. ஞாயிறு மாலை ராகுகால விசேஷ பூஜை உண்டு. தொடர்புக்கு: நீலகண்ட சிவாச்சார்யார், செல்: 93629 93967. புனர்பூச நட்சத்திரக்காரர்கள்: புனர்பூசம் குருவின் நட்சத்திரம்; ராசிக்கு 7, 10-க்குடையவர். திருமணம் கூடும். தொழில் மேன்மையடையும். நல்ல வேலை அமையும். ராஜபாளையம்வழி வாசுதேவநல்லூர் அருகில் தாருகாபுரம் எனும் தலத்தில் மத்தியஸ்தநாதர் கோவிலில் நவகிரக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். தொடர்புக்கு: அர்ச்சகர்கள் குப்புசாமி, செல்: 94861 20469, சீனிவாசன், செல்: 77080 35222. பௌர்ணமிதோறும் மாலை கிரிவலம் நடக்கும். காளிராஜ், செல்: 98426 02128.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 4-ல் அர்த்தாஷ்டம குருவாக செயல்பட்டுவந்த குரு பகவான் இந்த வாரம் 5-ஆமிடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். 4-ல் இருந்த குரு 8, 10, 12-ஆமிடங்களைப் பார்த்தார். சிலர் அபகீர்த்தி, கௌரவப்பங்கம், விபத்து, இழப்பீடு போன்ற 8-ஆமிடத்துப் பலன்களை சந்தித்திருக்கலாம். சிலருக்கு புதிய தொழில் அமைப்புகளை உருவாக்கித் தந்தார். அதில் விரயங்களையும் அது சம்பந்தமான அலைச்சல்களையும் தந்தார். இது 10-ஆமிடம், 12-மிடங்களைப் பார்த்த பலன். 5-ல் வரும் குரு 9-ஆமிடம், 11-ஆமிடம், ஜென்ம ராசியைப் பார்க்கிறார். 9-ஆமிடம் தகப்பனார் ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக நிலவி வந்த பிரச்சினைகள், சுமுகமான முடிவுக்கு வருவதோடு, பாகப்பிரிவினையிலும் நல்ல தீர்வு கிடைக்கும். சுயசம்பாத்திய சொத்துகள் இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலை இனி மாறிவிடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். 6, 9-க்குடையவர் குரு 11-ஆமிடம் என்ற ஜெய ஸ்தானத்தைப் பார்ப்பதால் சத்ரு ஜெயம் உண்டாகும். தொட்டதெல்லாம் தோல்விக்கு இடமில்லாமல் ஜெயிக்கலாம். 6-ல் இருக்கும் சனியும் அதற்குத் துணைபுரிவார். ஜென்ம ராசியைப் பார்க்கும் குரு உங்கள் திறமை, புகழ், கீர்த்தி, ஆற்றல் இவையெல்லாவற்றையும் சிறப்பாக நடத்தித்தருவார். ஜென்ம ராகு தேகத்தில் சிறுசிறு ஆரோக்கியக்குறைவை உண்டுபண்ணுவார்.
பரிகாரம்
புனர்பூச நட்சத்திரக்காரர்கள்: புனர்பூசம் குருவின் சொந்த நட்சத்திரம்; ராசிக்கு 6, 9-க்குடையவர். 6-க்கு 12-ல், 9-க்கு 9-ல் என்பதால் 6-ஆம் இடத்து கடன், ரோகம், ருணம், சத்ரு உபாதைகள் மறையும். தெய்வீக அருளும் குருவருளும் உங்களை வழிநடத்தும். ராஜபாளையம் வழி வாசுதேவநல்லூர் அருகில் தாருகாபுரம் மத்தியஸ்தநாதர் கோவிலில் நவகிரக தட்சிணாமூர்த்தியை வழிபடவும். தொடர்புக்கு: குப்புசாமி, செல்: 94861 20469, சீனிவாசன், செல்: 77080 35222. பௌர்ணமிதோறும் மாலை கிரிவலம் நடக்கும். காளிராஜ், செல்: 98426 02128. பூச நட்சத்திரக்காரர்கள்: பூசம் சனியின் நட்சத்திரம். உங்கள் ராசிக்கு 6-ல் இருப்பது சிறப்பு. மேலும் அது குரு வீடு. தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு, சம்பளம், போனஸ் போன்ற சிறப்பு சலுகைகள் கிடைக்கும். திருத்துறைப்பூண்டி அருகில் கொள்ளிக்காடு சிவாலயத்தில் கலப்பை ஏந்திய சனீஸ்வரரை வழிபடவும். ஆயில்ய நட்சத்திரக்காரர்கள்: ஆயில்யம் புதனின் நட்சத்திரம். புதன் கடக ராசிக்கு 3, 12-க்குடையவர். குரு 5-ல் இருப்பதால் சகோதர சகாயம், நண்பர்கள் உதவி, வெளியூர்ப் பயணம், சுபச்செலவு உண்டாகும். கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகில் பாலமலை அரங்கநாதரை வழிபடவும். சித்தர் ஜீவசமாதியும் உண்டு. தொடர்புக்கு: டிரஸ்டி ஜெகதீசன், செல்: 94433 48564, 97865 00166.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
இதுவரை சிம்ம ராசிக்கு 3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடமான விருச்சிகத்துக்கு மாறுகிறார். 3-ல் குரு இருந்தபோது 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடம் ஆகியவற்றைப் பார்த்தார். திருமண முயற்சிகள் சிலருக்குக் கைகொடுத்தன. சிலருக்கு மனைவி பெயரில் தொழில், வருமான வாய்ப்புகள் அமைந்தன. குலதெய்வ வழிபாடு பூர்த்தியானது. ஜாதக தசாபுக்திகள் யோகமாக அமைந்த சிலருக்கு தொழில்துறையில் லாபத்தையும் ஈட்டியது. இப்போது 4-ல் மாறியிருக்கும் குரு 8-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். 4-ல் குரு இருப்பதால் பூமி, வீடு, மனை போன்றவற்றில் சுபப்பலன்கள் உண்டாகும். 8-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மனக்குழப்பத்தையும், வேதனையையும், கற்பனைப் பயத்தையும் உண்டாக்குவார். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டமும் ஏற்படலாம். வேலை செய்யுமிடத்தில் கௌரவப் போராட்டம் நீடிக்கும். 12-ஆமிடத்தை குரு பார்ப்பதால் சுபவிரயச் செலவுகளும் வரும். விபரீத செலவுகளும் வரும். வீடு, மனை சம்பந்தமாக செலவுகள் வரலாம். அதை சுபவிரயமாக மாற்றியமைப்பது நல்லது. சிலருக்கு தேக சுகத்திற்காக செலவு செய்யவும் நேரலாம். 8-ஆமிடம், 12-ஆமிடத்துக் கெடுபலன்களுக்கு ஆறுதல் தரும் வகையில் 10-ஆமிடத்துப் பலன்கள் அமையும். தொழில் ஸ்தானத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை சமாளித்துத் தொழில் நடத்தி வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவீர்கள். கடந்த காலம் தொழிலில் இயக்கம் சரிவர இயங்காமல் தேங்கிக் கிடந்த நிலை மாறி தொழிலில் புதிய அணுகுமுறைகளையும் கையாளலாம்.
பரிகாரம்
மக நட்சத்திரக்காரர்கள்: மகம் கேதுவின் நட்சத்திரம். கேது சிம்ம ராசிக்கு 6-ல் இருப்பது சிறப்பு. போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு, திருஷ்டி தோஷம் எல்லாம் விலகிவிடும். முயற்சிகள், வெற்றியடையும். கோவை அருகில் ஈச்சனாரியில் கணபதியை வழிபடவும்.பூர நட்சத்திரக்காரர்கள்: பூரம் சுக்கிரனின் நட்சத்திரம். சிம்ம ராசிக்கு 3, 10-க்குடையவர். சகோதர சகாயம், நண்பர்களின் உதவி, உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு ஆகிய நன்மைகள் உண்டாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசிக்கலாம். திருவள்ளூர்- திருத்தணி பாதையில் ஆற்காடு குப்பம் சென்று ஜெயராம் சுவாமி ஜீவசமாதியையும், அருகில் அனுமந்த சுவாமி ஜீவசமாதியையும் வழிபடலாம். தொடர்புக்கு: சீதாராமன், செல்: 94441 45046, 92266 48022.உத்திர நட்சத்திரக்காரர்கள்: உத்திரம் சூரியனின் நட்சத்திரம். உங்கள் ராசிநாதனே சூரியன்தான். ஆடுதுறை அருகில் சூரியனார்கோவில் சென்று வழிபட்டு, அருகில் திருமங்கலக்குடி மங்களநாதரையும் வழிபடலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிக்கு இதுவரை நல்ல இடமான 2-ல் இருந்த குரு இப்போது 3-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 2-ல் குரு இருந்த காலம் கையில் பணம் புரண்டது என்றாலும், தொழில் வளர்ச்சிக்காக கடனும் வாங்க நேரிட்டது. 3-ல் வரும் குரு 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடம் ஆகிவற்றைப் பார்க்கிறார். 7-க்குடையவர் 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமணத்தடை விலகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக வெறுத்து விலகியிருந்த தம்பதிகள் அல்லது நித்தமும் சண்டை சச்சரவுகள் செய்துகொண்ட தம்பதிகளுக்கு இப்போது 7-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நடக்கும் சூழல்களை உருவாக்கித் தருவார். 9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தெய்வ அனுகூலமும் தகப்பனார் வர்க்கத்தில் ஆசியும், பண உதவியும் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளை மாற்றியமைத்து புதுமைப்படைப்பு ஆக்கலாம். 11-ஆம் இடம் மூத்த சகோதர ஸ்தானம், ஜெய ஸ்தானம். காரிய வெற்றி உண்டாகும். குரு இருக்கும் இடம் 3-ஆமிடம் மத்திம பலனைத் தரும். இடம் என்றாலும், பார்வை பலத்தால் யோகம் தரும் நற்பலனாக மாறும். நல்லது செய்யும் கிரகங்களே கெடுதலையும் செய்துவரும். கெடுபலன் செய்யும் கிரகங்களே நல்லதையும் செய்துவிடும். இதுதான் காலத்தின் தீர்ப்பு.
பரிகாரம்
உத்திர நட்சத்திரக்காரர்கள்: உத்திரம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் உங்கள் ராசிக்கு விரயாதிபதி, 12-க்குடையவர். குடும்பத்திலும், தொழில்துறையிலும் எதிர்பாராத, தவிர்க்கமுடியாத செலவுகள் உருவானாலும் அவை சுபச்செலவுகள் அல்லது முதலீட்டுச் செலவுகள் என்று எடுத்துக்கொள்ளலாம். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று வழிபட்டு, அருகில் திருமங்கலக்குடி மங்களநாதரையும் வழிபடலாம். அஸ்த நட்சத்திரக்காரர்கள்: அஸ்தம் சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் கன்னி ராசிக்கு 11-க்குடைய லாபாதிபதி. குரு, சந்திரன் வீடான கடகத்தைப் பார்ப்பதால் எல்லா வகையிலும் லாபமும் வெற்றியும் உண்டாகும். ஏற்கெனவே செய்த முதலீட்டுச்செலவுகள் எல்லாம் இப்போது வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கும். திருவையாறு அருகில் திங்களூர் சென்று வழிபடவும். சந்திரனுக்குரிய தலம். தொடர்புக்கு: வி. கண்ணன், செல்: 93445 892445 96559 87800. சித்திரை நட்சத்திரக்காரர்கள்: சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் கன்னி ராசிக்கு 3, 8-க்குடையவர். 3-ஆம் இடத்துக்கு குரு 2-க்குடைவர், 8-ஆம் இடத்துக்கு 9-க்குடையவர். எனவே குருப்பெயர்ச்சி நன்மையும் யோகமும் தருவதாக அமையும். சகோதர சகாயம், நண்பர்கள் உதவி கிடைக்கும். கும்பகோணம்- நாச்சியார்கோவில் அருகில் கூந்தலூர் கிராமத்தில் கூந்தலூர் முருகனை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 96886 77538.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்த குரு இப்போது 2-ஆம் இடத்துக்கு மாறுகிறார். கடந்த டிசம்பரில் ஏழரைச்சனியும் முடிந்தது. 2-ஆம் இடத்து குரு 6-ஆம் இடம், 8-ஆம் இடம், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் சிலருக்கு கடன் அதிகமாகலாம். அது தொழில்ரீதியான கடன், சுபக்கடன். சிலர் குடும்பத்துக்கும் மனைவிக்கும் தெரியாமலேயே லட்சக்கணக்கில் கடன் வைத்திருக்கலாம். அதனால் அதை எப்படி அடைப்பது என்ற கவலை உருவாகலாம். 10-ல் உள்ள ராகு காரணமாக தொழில்துறையில் பெரும் முதலீடுசெய்து பணமெல்லாம் முடங்கிக் கிடக்கும். இப்போது 2-ல் வரும் குரு அந்த தொழிலை விருத்தி செய்யலாம். குறிப்பாக ரியல் எஸ்டேட், புரோமோட்டர்ஸ் போன்ற தொழில்துறையில் உள்ளவர்களுக்கு இனி விற்பனை, வரவு- செலவு, லாபம், பணப்புழக்கம் எல்லாம் மிகமிகச் சிறப்பாக அமையும். லாபம் வருவதால் பழைய கடன்களை எல்லாம் பைசா பாக்கியில்லாமல் வட்டியும் முதலுமாக அடைத்துவிடலாம். 6-ஆம் இடத்தையே 6-க்குடையவர் பார்ப்பதால் கடன் வட்டியில் பேரம் பேசி கொஞ்சம் தள்ளுபடியும் செய்யலாம். புதுக்கடன் வாங்கி பழைய தொழிலை விருத்தி செய்வதோடு புதிய தொழிலையும் தொடங்கலாம். 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் போட்டி, பொறாமை, கடன் கவலைகள் இருக்கத்தான் செய்யும். கவலைப்படவேண்டாம். குருவருளும் திருவருளும் குலதெய்வக்கிருபையும் உங்களை வழிநடத்தும். குடும்ப ஸ்தானத்தில் குரு இருப்பதால் மனைவியிடம் பண வரவு- செலவை ஒப்படைத்து செயல்படுவது நல்லது. அல்லது முதல்நாள் மனைவியிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து வைத்து, மறுநாள் காலையில் மனைவி கையால் வாங்கிப்போவது ராசியாக அமையும். யோகமாக விளங்கும்.
பரிகாரம்
சித்திரை நட்சத்திரக்காரர்கள்: சித்திரை, செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2, 7-க்குடையவர். குரு 2-க்கு 2-க்குடையவர். 7-க்கு 9-க்குடையவர். எனவே திருமணத்தடை விலகும். மனதுக்கேற்ற மனைவி அல்லது கணவர் அமையலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனநிறைவு ஏற்படும். கும்பகோணம்- நாச்சியார்கோவில் அருகில் (பத்து கிலோமீட்டர்) கூந்தலூர் கிராமத்தில் முருகனை வழிபடவும். தொடர்புக்கு, செல்: 96886 77538.சுவாதி நட்சத்திரக்காரர்கள்: சுவாதி ராகுவின் நட்சத்திரம். ராகு துலா ராசியில் 10-ல் இருக்க, குரு அவரைப் பார்ப்பதால் தொழில் மேன்மை, புதிய தொழில் விருத்தி, முன்னேற்றம் உண்டாகும். பூந்தமல்லிலி அருகில் சித்துக்காடு சென்று தாந்தீஸ்வரர்- சுந்தரராஜப் பெருமாளை வழிபடவும். தொடர்புக்கு, செல்: 93643 48700.விசாக நட்சத்திரக்காரர்கள்: விசாகம் குருவின் நட்சத்திரம். குரு 3, 6-க்குடையவர். சகோதர சகாயம், நண்பர்களின் உதவி, உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு, சுபக்கடன் ஆகிய பலன்களைச் சந்திக்கலாம். சென்னை- திருப்பதி சாலையில் பெரியபாளையம்- ஊத்துக்கோட்டை வழி சுருட்டப்பள்ளி சென்று தாம்பத்திய தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு இதுவரை 12-ல் இருந்த குரு இப்போது ஜென்ம ராசிக்கு மாறியிருக்கிறார். 12-ல் குரு மறைந்த காரணத்தால் பொருளாதாரத்தில் சிக்கல், குடும்பத்தில் அமைதியின்மை, சச்சரவு, குழப்பம் உண்டானது. விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி நடந்துகொண்டிருப்பதால் அதில் சந்திரதசையோ சந்திரபுக்தியோ நடந்தவர்களுக்கு உயிர்ச்தேசம், பொருட்சேதம், இழப்பு, நஷ்டம் போன்றவற்றை சந்தித்திருக்கக்கூடும். எதிர்பாராத ஏமாற்றம், விரயச் செலவு, சங்கடம் ஆகியவற்றையும் ஒருபுறம் தந்தது. இப்போது ஜென்ம குரு 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். குரு புத்திரகாரகன். புத்திர ஸ்தானமாகிய 5-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நீண்டகாலமாக வாரிசு கிடைக்காமல் வருத்தப்பட்ட தம்பதிகளுக்கு இனி வாரிசு யோகம் உண்டாகும். எண்ணம், திட்டம், மகிழ்ச்சி போன்றவை சிறப்பாக அமையும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமணத்தடைகளை விலக்கி திருமண பாக்கியத்தைக் கொடுப்பார். திருமணமானவர்களுக்கு மனைவியின் பெயரில் தொழில் அமையும். கூட்டுத்தொழில் அல்லது சைடு பிசினஸ் உருவாகும். 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். அதை குரு பார்க்கிறார். எனவே, தகப்பனார் வகையில் இருந்துவரும் கருத்து வேறுபாடு மாறி ஒற்றுமை உண்டாகும். பூர்வீக சொத்துகளில் உள்ள பிரச்சினைகள் விலகும். குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பரிகாரம்
விசாக நட்சத்திரக்காரர்கள்: விசாகம் குருவின் சொந்த நட்சத்திரம்; உங்கள் ராசிக்கு 2, 5-க்குடையவர். எதிர்பாராத தனவரவு, அதிர்ஷ்டம், குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி முதலிலிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். சென்னை- திருப்பதி சாலையில் பெரியபாளையம் அடுத்து ஊத்துக்கோட்டை வழி சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் தாம்பத்திய தட்சிணாமூர்த்தியை வழிபடவும். அனுஷ நட்சத்திரக்காரர்கள்: அனுஷம் சனியின் நட்சத்திரம்; உங்கள் ராசிக்கு 3, 4-க்குடையவர். சகோதர ஒற்றுமை, தேக சுகம், பூமி, வீடு, வாகன யோகம் அமையும். தேனி வழி குச்சனூர் சென்று சனீஸ்வரரையும், அருகிலுள்ள வட குருபகவானையும் வழிபடவும்.கேட்டை நட்சத்திரக்காரர்கள்: கேட்டை புதனின் நட்சத்திரம். புதன் 8, 11-க்குடையவர். எதிர்பாராத அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். மதுரை அருகில் (சோழவந்தான் மேலக்கால் வழி) குருவித்துறையில் வைகைக் கரையில் சித்ரரத வல்லபப்பெருமாள் கோவில் உள்ளது. குரு வீற்றிருந்த துறை- குருவித்துறை சென்று வழிபடவும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதனான குரு இதுவரை 11-ல் இருந்தார். இப்போது (இந்த வாரம் 4-ஆம் தேதி) 12-ஆம் இடத்துக்கு மாறுகிறார். குரு 11-ல் நின்றாலும் தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடந்துகொண்டிருப்பதால் அவர் யோகத்தைத் தட்டிப்பறித்தார். ஜாதகத்தில் சாதகமான தசாபுக்தி நடந்தவர்களுக்கு மட்டுமே 11-ஆமிடத்து குருவால் யோகமும் முன்னேற்றமும் நடந்தது எனலாம். இப்போது 12-ல் மாறும் குரு 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். 4-ஆமிடம், பூமி, வீடு, மனை, வாகனம், சுகம், கல்வியைக் குறிக்கும். குரு அதற்குத் திரிகோணம் பெறுவதால் மேற்கண்ட பூமி, வீடு, வாகன சம்பந்தமான சுபச்செலவுகள் ஏற்படலாம். படிப்பில் தடை விலகி பூர்த்தியாகும். மேற்படிப்பு முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு அவை கைகூடும். 6-ஆமிடத்தை குரு பார்க்கும் காரணத்தால் ரோகம், ருணம், சத்ரு போன்ற பலனும் அதிகமாகலாம். அதாவது வீடு கட்டும் வகையில் கடன் வாங்கலாம். சிலர் புதிய வாகனம் வாங்குவதற்காக பைனான்ஸ் அமையலாம். உடல்ரீதியாக சில தொந்தரவுகள் நேரும். எதிரிகளின் தொழில் போட்டி, பொறாமை ஏற்படும். என்றாலும் அதை சமாளித்து வெற்றியும் காணலாம். 8-ஆம் இடத்தை குரு பார்க்கிறார். எதிர்பாராத அதிர்ஷ்டத்தை சந்திக்கலாம்.
பரிகாரம்
மூல நட்சத்திரக்காரர்கள்: மூலம் கேதுவின் நட்சத்திரம். கேது உங்கள் ராசிக்கு 2-ல் இருப்பதால் வாக்கு மேன்மை, குடும்ப நன்மை, பொருளாதார வசதி, குடும்ப நிம்மதி போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வு, உத்தியோக உயர்வு உண்டாகும். செல்வாக்கு ஏற்படும். திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டியில் ஜோதி நிர்வாண மௌனகுரு ஜீவசமாதி சென்று வழிபடவும். தொடர்புக்கு, செல்: 97876 18855. (ஆனந்தன்).பூராட நட்சத்திரக்காரர்கள்: பூராடம் சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரன் உங்கள் ராசிநாதன். செல்வாக்கு, ஆரோக்கியம், தேக சுகம், மனை யோகம் அமையும். திருவள்ளூரிலிருந்து திருத்தணிப்பாதையில் ஆற்காடுகுப்பம் (பைபாஸ் ரோடு வலதுபுறம்) அனுமந்தசாமி ஜீவசமாதியும், அவர் சீடர் ஜெயராம் சுவாமி ஜீவசமாதியும் திகழ்கிறது. சென்று வழிபடவும். தொடர்புக்கு, செல்: 94441 45046 (சீதாராமன்).உத்திராட நட்சத்திரக்காரர்கள்: உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் உங்கள் ராசிக்கு 9-க்குடையவர். பூர்வ புண்ணிய பாக்கியம், குலதெய்வ வழிபாடு, பிதுர்ரார்ஜித அனுகூலம் உண்டாகும். மாயவரம்- பேரளம் அருகில் திருமீயச்சூர் சென்று, லலிலிதாம்பிகையை வழிபடவும். சூரியனுக்கு முக்கியமான இடம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு இதுவரை 10-ல் இருந்த குரு இந்த வாரம் 4-ஆம் தேதி 11-ஆமிடத்துக்கு மாறுகிறார். 10-ல் குரு இருந்தபோது தொழிலிலில் சில மாற்றங்களை நிகழ்த்தியது. சிலருக்கு வேலையில் இடப்பெயர்ச்சியும் ஏற்பட்டது. தாய்சுகம், தன்சுகம் தெளிவாக இருந்தாலும், செலவுகளுக்கும் பஞ்சமில்லாமல் காலம் ஓடியது. கடன், நோய், போட்டி, பொறாமைகளையும் சந்தித்த காலம். இப்போது 11-ல் வந்திருக்கும் குரு 3-ஆமிடம், 5-ஆமிடம், 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். 3-ஆமிடத்துக்குரியவரே 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம். எனவே உடன்பிறந்த வகையில் நல்ல பலன்களைச் சந்திக்கலாம். சுப நிகழ்வுகள் உண்டாகலாம். சகோதரர்களின் ஆதரவும் அனுகூலமும் அமையும். 5-ஆமிடத்தை குரு பார்க்கிறார். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். திருமணமான தம்பதிகளுக்கு வாரிசு யோகம் ஏற்படும். புத்திர சோகம் மறையும். உங்கள் மனதில் நீண்டகாலத் திட்டங்கள் செயல்பாடாகும். கனவுகள் நிறைவேறும். பிள்ளைகளின் படிப்பு அல்லது திருமணம் அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். 7-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு திருமணத் தடைகளை விலக்கி திருமண முயற்சிகளை உண்டாக்குவார். மணமானவர்களுக்கு மனைவியால் யோகமும் அமையும்.
பரிகாரம்
உத்திராட நட்சத்திரக்காரர்கள்: உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் உங்கள் ராசிக்கு 8-க்குடையவர். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் விபத்து, பீடை, இழப்பு போன்ற பலன்களும், ஏமாற்றங்களும் ஏற்படலாம். சாதகமாக இருந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் அடையலாம். பேரளம் அருகில் (மாயவரம் வழி) திருமீயச்சூர் சென்று லலிலிதாம்பிகையை வழிபடவும்.திருவோண நட்சத்திரக்காரர்கள்: திருவோணம் சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் உங்கள் ராசிக்கு 7-க்குடையவர். திருமணம், சந்தான பாக்கியம், தொழில் யோகம், உபதொழில் அமைப்பு ஆகிய நன்மைகள் எதிர்பார்க்கலாம். திருவண்ணாமலை அருகில் சங்கராபுரம் வட்டம், ஆதித்திருவரங்கம் சென்று பள்ளிகொண்ட பெருமாளை வழிபடவும். தொடர்புக்கு, ரெங்கநாதப் பட்டர், செல்: 94446 91885.அவிட்ட நட்சத்திரக்காரர்கள்: அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் உங்கள் ராசிக்கு 4, 11-க்குடையவர். தேக ஆரோக்கியம், சௌக்கியம், பூமி, வீடு, மனை பாக்கியம் மேலோங்கும். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபடவும். தொடர்புக்கு, ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
இதுவரை கும்ப ராசிக்கு 9-ஆம் இடத்திலிலிருந்த குரு இந்த வாரம் 10-ஆம் இடத்துக்கு மாறுகிறார். ஏற்கெனவே குரு 9-ல் இருந்த காலம் சிலருக்கு யோகத்தைக் கொடுத்தார் எனலாம். சிலருக்கு தனயோகம், கல்வி யோகத்தைக் கொடுத்தார். சிலருக்கு சங்கடத்தையும், வேலையில் மாற்றத்தையும் தந்தார். 10-ல் வரும் குரு 2-ஆமிடம், 4-ஆமிடம், 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். 2-க்குடையவர் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தனவரவு நன்றாக இருக்கும். சரளமான பணப்புழக்கம் இருக்கும். பொருளாதார நெருக்கடி விலகும். கல்வியில் முன்னேற்றம் அமையும். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு பூமி, வீடு, மனை, வாகனம் ஆகியவற்றில் நற்பலன்களை நிகழ்த்துவார். புதிய வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். கல்விக்கான மேல்நாட்டு முயற்சிகள் கைகூடும். கடந்த காலத்தில் அடிக்கடி வீடு மாறியவர்களுக்கு இனி, அசையாமல் நிலையாகக் குடியிருக்க ஒரு இடம் கிடைத்துவிடும். 6-ஆமிடத்தை குரு பார்க்கிறார். மேற்கண்ட பூமி, வீடு, வாகனம் இவற்றுக்கான வகையில் கடன்களை உண்டாக்குவார். வீட்டுக்காக வங்கிக்கடன் அல்லது தனியார் வங்கிக்கடன் கிடைக்கும். மேற்கல்விக்காகவும் கடன் வாங்கிப் படிக்கலாம். சொந்த பந்தம், பங்காளி வகையில் போட்டி பொறாமைகள் ஏற்படும். உடல்நலத்தில் வைத்தியச்செலவும் உண்டாகும்.
பரிகாரம்
அவிட்ட நட்சத்திரக்காரர்கள்: அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் கும்ப ராசிக்கு 3, 10-க்குடையவர். சகோதர ஒற்றுமை, சகாயம், நண்பர்கள் உதவி, தொழில் மேன்மை, பதவி உயர்வு, வேலை யோகம் ஆகிய சிறப்புகள் உண்டாகும். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபடவும். தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863. சதய நட்சத்திரக்காரர்கள்: சதயம் ராகுவின் நட்சத்திரம். ராகு உங்கள் ராசிக்கு 6-ல் அமர்வு. பாவ கிரகம் பாவ இடத்தில் இருப்பது சிறப்பு. கெடுதல்கள் விட்டு விலகும். நல்லது நாடிவரும்! காளஹஸ்தி சென்று காளத்திநாதரை வழிபடவும். பொன்னம ராவதி அருகில் பனையபட்டி சாதுபுல்லான் சுவாமி- ஜீவசமாதியை வழிபடவும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்: பூரட்டாதி குருவின் சொந்த நட்சத்திரம்; உங்கள் ராசிக்கு 2, 11-க்குடையவர். தனலாபம் பெருகும். வரவு- செலவு சீரடையும். குடும்ப மகிழ்ச்சி, மன நிறைவு ஏற்படும். திருப்பரங்குன்றம் அருகில் இஞ்ஜீனியரிங் கல்லூரிப்பாதையில் சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும் தொடர்புக்கு, சௌந்திரராஜன், செல்: 90424 97262, போன்: 0452-248360.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு இதுவரை 8-ல் இருந்து உங்களை படாதபாடு படுத்திவிட்டார். ராசிநாதன் 8-ல் மறைந்து உங்களது திறமை, புகழ், கீர்த்தி, செல்வாக்கு இவற்றிலெல்லாம் பாதிப்புகளை சந்திக்க வைத்தார். ஆரோக்கியத்திலும் பிணி, பீடைகளைக் கொடுத்தார். இப்போது 9-ஆமிடத்துக்கு வரும் குரு உங்கள் கஷ்டங்களைப் போக்கி கண்ணீரைத் துடைக்கப்போகிறார். 9-ல் குரு இருப்போருக்கு குருவருள் தேடிவந்து அருள்பாலிலிக்கும். 9-ஆமிடத்து குரு ஜென்ம ராசி, 3-ஆமிடம், 5-ஆமிடங்களைப் பார்க்கிறார். உங்கள் செல்வாக்கு உயரும். மதிப்பு, மரியாதை, கௌரவம் உயரும். குடத்துக்குள் தீபமாக இருந்த நீங்கள் குன்றின்மேல் விளக்காக மாறி ஒளிருவீர்கள். 3-ஆமிடம் தைரிய, சகோதர, சகாய ஸ்தானம். உங்களுடைய பொருளாதார பலவீனத்தாலோ, வசதிக்குறைவினாலோ புறக்கணித்த உடன்பிறப்புகள் இனி உங்களை நாடிவருவார்கள். 1, 10-க்குடைய குரு 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார். மனது, திட்டம், மகிழ்ச்சி, தாய்மாமன், பாட்டனார், மந்திர உபதேசம், பிள்ளைகள் ஆகியவற்றைக் குறிக்குமிடம் 5-ஆமிடம். உங்களது நீண்டகாலத் திட்டங்களும் கனவுகளும் நிறைவேறும். பிள்ளைகள் வகையில் நல்லவை அமையும். தொழில்துறையிலும் பாதியிலேயே நின்றுபோன திட்டங்கள் மீண்டும் செயல்வடிவம் பெறும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றலாம்.
பரிகாரம்
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்: பூரட்டாதி குருவின் நட்சத்திரம். குரு உங்கள் ஜென்ம ராசிநாதன்; 1, 10-க்குடையவர். செல்வாக்கு, பெருமை, திறமை, கீர்த்தி, கௌரவம் எல்லாம் உண்டாகும். தொழில் மேன்மையடையும். தஞ்சை- திருக்காட்டுப்பள்ளி அருகில் ரெங்கநாதபுரம் திருஆனேஸ்வரரை வழிபடவும். தொடர்புக்கு, செல்: 94439 70397. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள்: உத்திரட்டாதி சனியின் நட்சத்திரம். சனி உங்கள் ராசிக்கு 11, 12-க்குடையவர். லாபமும் உண்டு, செலவும் உண்டு. செலவு- சுபச்செலவுதான். தொழில் முதலீடு. (இன்வெஸ்ட்மென்ட்). திருப்புனல் வாசல் அருகில் தீயத்தூர் சென்று வழிபடலாம். தொடர்புக்கு, கணேசன் குருக்கள், செல்: 99652 11768. (அறந்தாங்கி அல்லது தேவகோட்டை வழி).ரேவதி நட்சத்திரக்காரர்கள்: ரேவதி புதனின் நட்சத்திரம். புதன் மீன ராசிக்கு 4, 10-க்குடையவர். தேக சௌக்கியம், தாயன்பு, பூமி, மனை விருத்தி, வீடு, வாகன யோகம், புதிய தொழில் அமைப்பு, பதவி உயர்வு, செல்வாக்கு உண்டாகும். திருச்சி- முசிறி வழி காரைகுடி சென்று கைலாசநாதரை வழிபடவும். தொடர்புக்கு, செல்: 94423 58146.