ரிஷப லக்னத்தில் குரு பகவான் தன் எதிரியான சுக்கிரனின் ராசியில் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும்.

அதற்குப்பிறகுதான் அதற்கான பலன் கிடைக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு.

பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளால் சில பிரச்சினைகளும் லாபமும் இருக்கும். உடல்நலத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும்.

2-ஆம் பாவத்தில் குரு பகவான் புதனின் வீட்டில் இருந்தால் பண விஷயத்தில் சில சிக்கல்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். அதன்மூலம் அவருக்குப் புகழ் கிடைக்கும்.

Advertisment

3-ஆம் பாவத்தில் குரு கடக ராசியில் உச்சம் பெறுகிறார். அண்ணன்- தம்பியுடனான உறவு நன்றாக இருக்கும். பணவரவுண்டு. பல தடைகளைக் கடந்து வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவி விஷயத்தில் சில பிரச்சினைகள் உண்டாகும்.

gg

4-ஆம் பாவத்தில் குரு சுக ஸ்தானத்தில் இருந்தால் சிறிய தடைகள் ஏற்படும். அஷ்டம பாவத்திற்கு அதிபதியாக இருப்பதால் தாயின் உடல்நலனில் பாதிப்பிருக்கும். ஆனால், 11-க்கு அதிபதியாக இருப்பதால் பூமி, வாகனம் வந்துசேரும்.

ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கும். தந்தைக்கு சில பாதிப்புகள் ஏற்படும். ஜாதகரின் புகழுக்கு சில களங்கங்கள் உண்டாகும்.

5-ஆம் பாவமான திரிகோணத்தில்- புதனின் வீட்டில் குரு இருந்தால் ஜாதகர் படிப்பு, அறிவு விஷயத்தில் சிறந்த வராக இருப்பார். பிள்ளைகளால் புகழ் கிடைக்கும். குழந்தை பிறப்பதில் சில தடைகள் இருக்கும். வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தர்மச் செயல்களில் ஈடுபாடு குறைவாக இருக்கும். ஜாதகர் சுயநலவாதியாக- மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருப்பார். நல்ல பணவசதி இருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு.

6-ஆம் பாவத்தில் குரு, ரோக ஸ்தானத்தில் தன் எதிரியான சுக்கிரனின் வீட்டில் இருந்தால், ஜாதகர் எதிரிகளை வெல்வார். ஆனால் லாபம் குறைவாகவே வரும். 8-ஆம் அதிபதி 6-ல் இருப்பதால், உடல்நலனில் சில பிரச்சினைகள் இருக்கும். வர்த்தகத்தில் சில தடைகள் தோன்றும். போட்டிக்குப்பிறகு ஜாதகர் வெற்றி காண்பார். கடுமையாக உழைத்தபிறகு பணம் வரும். செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித்தொடர்பால் ஆதாயமுண்டு. மிகவும் சிரமப்பட்டு உழைத்து பணத்தைச் சேமிப்பார்.

7-ஆம் பாவத்தில் குரு தன் நண்பரான செவ்வாயின் வீட்டில் இருந்தால் திருமண விஷயத்தில் சில தடைகள் ஏற்படும். வர்த்தகத்தில் சில பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பண வரவுண்டு. அடிக்கடி உடலில் சோர்வுண்டாகும். ஜாதகர் பார்ப்பதற்கு நல்ல மனிதரைப்போல தோற்றமளிப்பார். ஆனால் சுயநல வாதியாக இருப்பார். பணத்தை சேமித்து வைப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்.

8-ஆம் பாவத்தில் சுயவீட்டில் குரு இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோர்களின் சொத்து கிடைக்கும். சுய சம்பாத்தியத்தில் சிறுசிறு தடைகள் உண்டாகி, பின் லாபம் கிடைக்கும். வெளித்தொடர்பின் மூலம் நல்ல வருமானம் வரும். தாயாரின் உடல்நலனில் பாதிப்புண்டாகும். மனதில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.

9-ஆம் பாவத்தில் குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில்- தர்ம ஸ்தானத்தில் நீசமடைவதால் அதிர்ஷ்டம் உண்டாவதில் தடைகள் ஏற்படும். பணவரவில் இடையூறு ஏற்படும்.

மனதில் சந்தோஷம் குறைவாக இருக்கும்.

ஜாதகர் சராசரியான தோற்றத்தைக் கொண்டி ருப்பார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். அவரால் உடன்பிறப்புகளுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். பெயர், புகழ் விஷயத்தில் தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவார்.

10-ஆம் பாவத்தில் குரு பகவான் இருந்தால், வர்த்தகத்தில் பிரச்சினைகள் இருக்கும். பூமி வாங்குவதில் சிக்கல்கள் உருவாகும். தந்தைக்கு சில பிரச்சினைகள் இருக்கும். வியாபாரத்தில் சிறிய நஷ்டம் உண்டாகும். லாபம் குறைவாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணைந்து வாழ்வதில் மனதில் ஊசலாட்டம் இருக்கும். அதில் சில சிறிய தடைகள் உண்டாகும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. கடுமையாக உழைத்து அனைவரையும் காப்பாற்றுவார்.

11-ஆம் பாவத்தில் குரு பகவான் மீன ராசியில் சுயவீட்டில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பணவரவுண்டு. ஆனால், 8-ஆம் பாவத்திற்கு அதிபதியாக குரு இருப்பதால், கடுமையாக உழைத்தபிறகுதான் லாபம் கிடைக்கும். படிப்பு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றியுண்டு. ஜாதகர் செல்வச் செழிப்புடன் வாழ்வார்.

12-ஆம் பாவத்தில் குரு இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்பால் ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார். தாய்- தந்தை உடல்நலனில் சில பிரச்சினைகள் இருக்கும். பகைவர் களை ஜாதகர் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் கையாள்வார்.

செல்: 98401 11534