பொதுவாக மனிதர்களில் 90 சதவிகிதம் பேர் வலது கையை அதிகம் உபயோகிப்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். மிகவும் அரிதாகவே இடதுகைப் பழக்கத்தை உடையவர்கள் இருக்கிறார்கள். உடலிலுள்ள உறுப்புகளின் இத்தகைய பழக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு, ஜாதகத்திலும் அந்தந்த உறுப்புகளில் அமைந்திருக்கும் கிரகங்களுக்கேற்ப குணங்கள் அமைகின்றன.

உதாரணத்திற்கு திம்ப சக்கர ஜாதகத்தில் 2-ஆம் இடம் முகம், 6-ஆம் இடம் வலது புஜம், 10-ஆம் இடம் வலது தொடை என்று பிரிக்கப்படுகின்றது. அதாவது கண்கள் பார்க்க, வலது புஜம் தன்னுடைய செயலை ஆரம்பிக்க, வலது தொடையும் காலை எடுத்து நடக்கவோ அசைக்கவோ செய்கின்றன. ஆக 2, 6, 10-ஆம் பாவங்கள் திரிகோண சம்பந்தம் பெற்றதால், அந்த பாவங்கள் ஒரு செயலைச் செய்வதற்கு அடிப்படையாக இருக்கின்றன. ஆறாம் பாவம் வெற்றி ஸ்தானம் என்று கூறப்படுவதுண்டு. வெற்றி எப்படி பெறப்படுகின்றது என்று ஆராய்ந்தோமானால் அதற்குரிய செயல்களை வலதுகை செய்வதால் உண்டாகின்றது. அந்த செயலை உடலில் எந்த உறுப்பு ஆரம்பித்து வைக்கிறதென்றால் வலது புஜமே என்கிறது திம்ப சக்கர ஜாதகம்.

திம்ப சக்கர ஜாதகத்தில் உடலுறுப்புகளுக்கும், அவற்றின் செயல்திறனுக்கும், அங்கு அமைந்த கிரகங்களினால் உண்டாகும் பலன்களுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதை சமீபகாலங்களில் நான் எழுதிவரும் திம்ப சக்கர கட்டுரைகளிலிருந்து அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் வலது புஜம் என்ற ஸ்தானத்தைப் பற்றியும் அதில் அமர்ந்த கிரகங்களின் பலன்களைப் பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.

தோளிலிருந்து முழங்கை வரையிலுள்ள பாகத்தையே புஜம் என்று கூறுகின்றோம். புஜம் என்பது கைகளுக்கு அடிப்படையாக இருக்கும் உறுப்பாகும். கைகள் தங்களுடைய வேலைகளைச் செய்வதற்கு புஜத்தின் ஆதரவு (நன்ல்ல்ர்ழ்ற்) தேவை. புஜம் சரியாக அமையாவிடில் அதனுடன் சேர்ந்திருக்கும் கைகளால் எந்தவொரு பயனும் இல்லை. புஜத்தின் விரிவுதான் கைகளாகும். எனவே புஜம் என்பது முக்கியமான உறுப்பாக உடலில் விளங்குகின்றது. அத்தகைய முக்கியம் வாய்ந்த ஸ்தானமானது வலதுபுஜம் என்று சொல்லக்கூடிய திம்ப சக்கர ஜாதகத்திலுள்ள 6-ஆம் இடமாகும். வலது புஜத்தில் அமைந்து செயலாற்றுவதில் சிறந்த கிரகமாக இருப்பவை செவ்வாய் மற்றும் ராகுவாகும்.

Advertisment

hanumanசெவ்வாய் கிரகம் தளபதி என்று போற்றக்கூடியது. வீரதீரச் செயல்களை சிறப்பாக ஆற்றுவது. ஒருவருக்கு பொதுவாகவே செவ்வாய் நேர்த்தியாகவும் தோஷமில்லாமலும் இருக்கப்பெற்றிருப்பின், அவர் ஆரம்பிக்கும் எந்தச் செயலும் வெற்றியோடு முடியும். செயல் ஒருவித உத்வேகத்துடனும், பராக்கிரம பலத்தோடும் நடைபெறும். நெருப்பு கிரகமாதலால், மற்றவர்களை வியக்கவைக்கும்படியாக உடனுக்குடன் வினைகளை மேற்கொண்டு சிறப்பாக செய்து முடிப்பார். இதேநிலையில் ராகுவும் செயல்களைச் செய்யும் ஆற்றலையும், தைரியத்தையும் கொடுக்கும். இவ்விரண்டு கிரகங்களும் வலதுபுஜத்தில் இருக்கப்பெற்றவர்கள் உலகம் மெச்சும்படியாக தங்களது வாழ்க்கையில் முன்னேறிக் காட்டுவர். தங்களது செயல்களில் ஒருவித வேகத்தைக் காட்டுவர். பொதுவாக 6-ஆம் இடம் எதிரி, நோய் போன்ற காரகத்தையுடையதாகும். தன்னை எதிர்க்கும் நபர்களை திறம்பட முறியடிக்கும் தகுதியுடையவர்களாக விளங்குவர்.

இங்கு எதிரி என்று குறிப்பது ஒருவருக்கு மனதிற்கு உள்ளே இருக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு பகைகளாகும். வெளியே உலவும் எதிரிகளையும் குறிக்கும். வலதுபுஜத்தில் அமைந்த கிரகங்களைப் பொருத்து மனதிற்குள் இருக்கும் எதிரிகளையும், வெளியில் இருக்கும் எதிரிகளையும் வெல்லும் தன்மை ஏற்படும். வலது புஜத்தில் குரு இருக்குமானால் உட்புற ஆறுவகை எதிரிகளை இலகுவாக எதிர்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பர்.

குரு எந்த உறுப்பில் உள்ளதோ அந்த உறுப்பு தெய்வீக சக்தியைப் பெற்றதாகிவிடுகின்றது. தங்களுடைய மனதை இறைவனோடு நீக்கமற கலந்து, ஞானமார்க்கங்களை மற்றவர்களுக்கு போதித்து சித்தர்களின் வாழ்க்கை நிலையை அடைகிறார்கள். மேலும் பதஞ்சலி முனிவர் கூறும் ராஜயோகங்களான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி போன்ற அஷ்டாங்க யோகம் என்று கூறப்படுகின்ற கடின யோகங்களைச் செய்து ராஜயோகிகளாக வலம் வருவர்.

Advertisment

கடினமான மனதையும் அடக்கி ஒருநிலைப்படுத்தும் திறமை உண்டகும். எந்தத் துறையிலும் தலைமைப்பதவி கிடைக்கப்பெறுவர். ஏனெனில் 6-ஆம் இடம் உத்தியோகம் என்ற காரகத்தையும் உள்ளடக்கியதாகும்.

நாம் சரித்திரத்தில் படித்திருக்கின்றோம். ராஜேந்திர சோழன் கடல்கடந்து சென்று வெற்றி வாகை சூடினான். கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்து, அங்கு சிவன் கோவிலை நிர்மாணித்தான். அவனுடைய நாட்டுக்கு துங்கபத்திரா நதியே எல்லையாக இருந்தது. தன்னுடைய சிவன் கோவிலை கங்கை நீரைக்கொண்டு புனிதமாக்கினான் என்று கூறப்படுகின்றது. இத்தகைய வீரதீரச் செயல்களுக்கு அவனது வலதுபுஜத்தில் செவ்வாய், ராகு, குரு போன்ற கிரகங்கள் இருந்திருக்க வேண்டும். ஒருவரது பராக்கிரம செயல்கள் பரவுவதற்கு 6-ஆம் இடத்தில் செவ்வாய், ராகு இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கப்பெறின் அவனுடைய எதிரிகள் காணாமல் போய்விடுவர். எதிரிகள் தங்களது காலடியில் இருக்கும் நிலை உண்டாகும். விளையாட்டுத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் நிலை உருவாகும். ராணுவத்திலும் காவல்துறையிலும் இவர்கள் உயர்ந்த நிலையில் இருந்து, நாட்டுக்கு தங்களது வீரதீரச் செயல்களால் புகழ் உண்டாக்கிக் கொடுக்கும் நிலை உருவாகும்.

வலது கை என்றாலே ஒருவித மரியாதை வழக்கில் இருக்கின்றது. எந்த ஒரு பொருளையும் பெறும்பொழுது அல்லது கொடுக்கும்பொழுது மிகவும் மரியாதையாக வலது கையைப் பயன்படுத்தும் முறை உள்ளது. வலது புஜத்தில் சனி, கேது போன்ற அசுப கிரகங்களும் அல்லது அவயோகிகளாக இருக்கும் அசுப கிரகங்களும் அமைந்துவிடில், அவர்கள் ஒரு செயலைத் துணிகரமாகச் செய்வதற்கு அஞ்சுவார்கள். எதற்கெடுத்தாலும் ஒருவித பயத்திலேயே காலத்தைக் கடத்துவார்கள். மருத்துவரிடம் ஊசி போடுவது, ஆற்றிலோ குளத்திலோ இறங்கி நீச்சல் அடிப்பது, அலுவலகத்தில் ஒரு அதிகாரியை சந்தித்து தங்களுடைய குறைகளைச் சொல்லுவது போன்றவற்றுக்குக்கூட இவர்கள் பயந்து நடுங்குவார்கள். ஏன், வீட்டிலேயே குடும்பத்து உறவினர்களிடம்கூட எந்த விஷயத்தையும் தெளிவாக எடுத்துரைப்பதற்கு மிகவும் தயங்குவார்கள். இத்தகைய நபர்களுக்கு வலது புஜத்தில் உள்ள கிரகங்களின் தீய தாக்கங்கள் இருக்கும். வலது புஜத்தில் இருக்கும் பாவ கிரகங்களுக்கு தகுந்த பரிகாரம் உள்ளது.

ஆதலால் அவர்கள் கவலைப்படவேண்டாம்.

வலது புஜத்தில் குரு இருக்கப் பிறந்தவர்களிடம் அடி வாங்கினால் யோகம் என்று கூறுவர். திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர் என்பவர் இருக்கிறார். அவரது கையால் அடிவாங்குவது மிகுந்த யோகம் என்று மக்கள் கூறுவர்.

வலது புஜத்தில் சுக்கிரன் இருக்கப் பெற்றவர்கள் ஒருவித காந்த சக்தியால் ஈர்க்கப்படுவார்கள். காம விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். 6-ஆம் இடத்தை சுபயோகியாக இருந்து புதனால் பார்க்கப்படுபவர்கள் சிறந்த கல்வி வலிமை, தான் கற்ற வித்தையில் வலிமை கொண்டவர்களாக விளங்குவார்கள்.

செல்: 91767 71533