நாம் காலையில் எழுந்து சாஸ்திரப்படி நீராடினாலே எண்ணங்களில் வித்தியாசமான செயல் வடிவங்கள் தோன்றி வெற்றியை உண்டாக்கும்; நமக்கு முழுமையாக செயல்படுத் தக்கூடிய சிந்தனைகளை உருவாக்கும் என்கிறது சாஸ்திரம்.

"சம்க்ஷேப தர்ம சாஸ்திரம்' என்ற விதியில் இக்கருத்துகள் உள்ளன. தலைக்குளியல் செய்வதே ஒரு சிறந்த பூஜைதான். திரைப்படப் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆடியபடியும் குளிப்பவர்கள் தன் அங்க சுகத்தை மட்டுமே அனுபவிக்கின்றனர். ஆனால் தெய்வீகக் குளியல் என்னும் ருத்ராட்சக் குளியலை முறைப்படி செய்பவர்களுக்கு உடலும் சுத்தமாவதோடு, இறைவன் வாழும் ஆலயமுமாகும்.

இறைவன் ஆட்சிபுரியும் இடமாக நம் அங்கம் இருந்துவிட்டால் குபேர சம்பத்து நம்மை விட்டுப்போகாது. அதற்கு ஸ்நானம் செய்யும் விதியை குரு உபதேசமும் பெற்று ருத்ராட்ச ஸ்நானத்தைச் செய்யவேண்டும்.

ஸ்நானங்கள் ஆறுவகை

Advertisment

நித்தியம்: தினமும் நம் உடலைச் சுத்தம் செய்துகொண்டு பணிகளை மேற்கொள்வது.

நைமித்திகம்: சண்டாளர்கள், மாதவிலக்கான பெண்டிர், சவம் எரியும்போது நம் உடலின்மீது படும் புகை, விலங்குகள், குப்பைக் கழிவுகளிலிருந்து வெளிவந்து நமது உடலைச் சூழும் புகை ஆகியவற்றால் ஏற்படும் தோஷங்கள் அகலச் செய்யப்படுவது.

காம்யம்: தெய்வ ரூபங்களின் திருநாட்கள், விரத நாட்களில் பூஜை செய்யும் பொருட்டு (கார்த்திகை, பிரதோஷகாலம், ஏகாதசி தினங் களுக்கு) விருப்பங்களை பிரார்த்தனையாக வைத்துச் செய்யப்படும் ஸ்நான வகை.

Advertisment

கிரியாங்கம்: விண்ணுலகம் சென்ற பித்ருக்கள் ஆன்மா திருப்தியடையவதற்காக, அவர்களு டைய சிரார்த்தக் கிரியைகளைத் தொடங்கும் முன்பு ஆசமனம் செய்துவிட்டு புனித நீராடுவது. கிரியை என்றால் செயல்படுதல் என்று பொருள் வருவதால், சுபகாரியங்களுக்கும் நதிகளை நினைத் துச் செய்கிற மந்திரப் பூர்வ ஸ்நான முறையும் இதில் அடங்கும். பித்ரு காரியங்கள் செய்தபிறகு அதேநாளில் ஸ்நானம் செய்துவிட்டு இல்ல பூஜை செய்யும்விதமாகக் குளியலிடுதல் இம்முறை.

மலாபகர்ஷணம்: உடல்நலத்தைக் காப்பதற்கு மருத்துவ குணமுடைய பொருட்கள் கலந்த எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு ஸ்நானம் செய்வது. இந்த முறை இன்றைய காலகட்டத்தில் வியாபார நோக்கத்துடன் எல்லைமீறிப் போய்க்கொண்டுள்ளது.

கிரியா ஸ்நானம்: புண்ணிய நதிகள், தீர்த்தக் குளங்கள், ஆலய புட்கரணிகளுக்குத் தீர்த்த யாத்திரை யாகச் சென்று, படித்துறைகளில் அமர்ந்து மகா சங்கல்பம் செய்தபடி, குடும்பத்துடன் அமர்ந்து, பித்ரு பூஜை, கன்யா பூஜைகளை நடத்துவதற்காகச் செய்வது. கிரியா ஸ்நானம் செய்தவுடன் தானதர்மங்களைச் செய்தல்வேண்டும். சமீபத்தில் நடந்த காவிரி புஷ்கரம், தாமிர பரணி புஷ்கர விழா, காவிரி துலாஸ்நானம், கார்த்திகை நீராடல் போன்ற காலகட்டங்களில் செய்வது இந்த வகைக் குளியல்.

குளியல் சாஸ்திரங்களில் பொதுவாக ஸ்நானம் என்றாலே தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு நீரில் மூழ்கியெழுவது என்று பொருள். ஸ்நானம் செய்வதை ஐந்து காலங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளது அதன் சாஸ்திர விதி. இப்படி வீட்டிலேயே செய்வதால் கங்கை, யமுனை முதலிய தீர்த்தக் கட்டங்களுக்குச் சென்று நீராட வேண்டியதில்லை என்று அறிவுறுத்துகிறது.

ஒரு நாளைக்கு ஐந்து காலம். ஒரு காலத்திற்கு ஆறு நாழிகை. ஒரு நாழிகைக்கு 24 நிமிடம். எனவே ஒரு காலம் என்றால் 2 மணிநேரம் 24 நிமிடங்கள் அடங்கிய கால அளவு.

உதய காலம்: சூரிய உதயத்திலிருந்து 8.24 மணிவரையிலுள்ள காலகட்டம்.

சங்கவ காலம்: காலை 8.24 மணிமுதல் 10.48 மணிவரை.

மத்யான்ன காலம்: 10.49 மணிமுதல் 1.12 மணிவரை.

அபரான்ன காலம்: 1.13 மணிமுதல் 3.36 மணிவரை.

சாயங்காலம்: 3.37 மணிமுதல் மாலை 6.00 மணிவரை.

இவற்றில் அபரான்ன காலம், சாயங்காலத்தில் ஸ்நானம் செய்வதைத் தவிர்த்து மற்ற காலங்களில் தெய்வீகக் குளியல்களைச் செய்யலாம் என்று அறியவேண்டும்.

ருத்ராட்சம் தேர்ந்தெடுக்கும் முறை

சிவபெருமானுக்கு உகந்த நாளான திங்கட்கிழமை, கார்த்திகை மாத சோமவாரம், பஞ்சாங்க சுத்தமுள்ள பிரதோஷ காலங்களில் ருத்ராட்சக் குளியலை வீட்டில் விதிப்படி செய்யவேண்டும். ஐந்துமுக ருத்ராட் சங்களை மணிதோஷம் இல்லாதவையாகத் தேர்ந் தெடுத்தல் அவசியம். நவரத்தின மணிகளைப்போல ருத்ராட்சமணிக்கும் புரை, புள்ளி, தோற்றத்தில் வளைவு, பின்னம் ஆகிய குணதோஷங்கள் இருக்கின்றன.

அவற்றை விலக்கவேண்டும். சுத்தமான ருத்ராட்சமென்று கண்டுபிடிக்க பஞ்சாட்சர மந்திரங்களைக் கூறியபடி, இரண்டு செப்புக்காசுகளுக்கு நடுவில் வைத்து அசைத்தால் அது உலக உருண்டைபோலச் சுற்றும். ரத்தினக் கற்கள், செம்பு. ருத்ராட்சம் ஆகியவற்றிற்கு மந்திர சக்தியைச் சேமித்து வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு.

ருத்ராட்சத்தில் பட்ட நீர் உடலில்பட்டால் நோய் அகன்றுவிடும். தீராத ஜுரம் உள்ளவர்களுக்கு மிகப்பழைய ருத்ராட்ச மணியை இழைத்துத் தேன்கலந்து கொடுப்பது முற்காலத்தில் ஒரு வழக்க மாகவே இருந்தது.

sss

ருத்ராட்சங்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன.

கோசரம்: இந்த வகை மணியை அணிபவரும், இதனால் ஜெபம் செய்பவரும் நினைத்த காரியங்களில் வெற்றியடைவர். வழக்கு இலக்கை அடைவதில் தடை உள்ளவர்களுக்கு கோசர ருத்ராட்சம் ஒரு சமய சஞ்சீவினி யாக உள்ளது.

சிவம்: கிரந்திகம், கவோதம், மகிபாலம், பிரஜாபத்யம் ஆகிய நாமங்களை உடைய ருத்ராட்சங்கள் இவ்வகை. சிவலிங்கத் திருமேனியில் இட்டு அணிய மகா ஐஸ்வர்ய நிலையடையலாம்.

சிகம்: பத்ம ஹம்சம், வேதாளம், குடிலம் ஆகியவை இப்பிரிவில் காணப்படும். உடல் நலக்குறைவு காரணமாக நீண்டநாட்கள் ஓய்வில் இருப்பவர்கள் இந்த ருத்ராட் சங்களைக் குளியல் வழிபாட்டுக்குப் பயன் படுத்தலாம்.

ஜோதி: திருதராஷ்டிரம், காகம், வாகம், கோபாலம் ஆகிய வகை ருத்ராட்சங்கள் இப்பிரிவில் வரும். இறைநாம ஜெபத்தால் புகழ்பெற இவ்வகையைப் பயன்படுத்துவர்.

சவித்ரம்: தண்டினம், குடிகம், சரதம், குட்டிகம் ஆகிய வகை ருத்ராட்சங்கள் இந்தப் பிரிவில் வரும். இறைத்திருமேனிகளுக்கு அணிவிக்க இவ்வகை ருத்ராட்சங்கள் பயன்படுகின்றன.

குளியல் செய்யும் விதி

சுத்தமான தண்ணீரில் "கங்கா, யமுனா, சரஸ்வதி, சிந்து, காவிரி, கோதாவரி சங்கமம் சங்கமம் சங்கமம்' என்று மும்முறை சொல்லி, வில்வதளம் ஊறிய நீரை விடவேண்டும்.

அதனுள் 108 சுத்தமான மேற்கண்ட ஒருவகை ருத்ராட்சங்களை ஈசனை நினைத்து ஒவ்வொன்றாகப் போடவேண்டும்.

அடுத்ததாக, அன்றைய தினம் பஞ்சாங்கக் குறிப்புகளைச் சொல்லிக் கொண்டு-

"அதிக்ரூர மகா காயா

கல்பாந்த தஹநோ பம

பைரவாய நமஸ்துப்யம்

அனுக்ஞாம் தாது மர்ஹஸி'

"மிகக் குரூரமானவரும், பெரிய உடலையுடையவரும், பிரளயாக்னி போன்ற வருமான பைரவ மூர்த்தியே, உமக்கு வந்தனங்கள். ஸ்நானம் செய்ய உத்தரவு கொடுக்கவேண்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும்.

ஒரு மணிநேரம் கழிந்தவுடன் மழைக்கு அதிபதியான வருண பகவானை நினைத்து-

"ஓம் நாகபாச தரம் ஹ்ருஷ்டம்

ரக்தௌக த்யுதி விக்ரஹம்

சசாங்க தவளம் த்யாயேத்

வருணம் மகராசனம்!

"மகாவாகனத்தில் அமர்ந்து வரும் ஸ்ரீவருண மூர்த்தியே, இந்த ருத்ராட்சக் குவியலுள்ள நீரில் தோஷங்கள் இருந்தால் அகற்றி விரும்பியதைக் கிடைக்கச் செய்யும் சக்தியை இதில் தருவீராக' என்று பிரார்த் தனை செய்தல் வேண்டும். ஒரு சல்லடை யில் பதினாறு, 32 எண்ணிக்கையில் ருத்ராட்சங்களை எடுத்துத் தலையில் வைத்துக்கொண்டு, புனித நீரை விடும் மந்திரத்தை நதிகளை நினைக்கும் மந்தி ரத்துடன் சேர்த்துச் சொல்லவேண்டும்.

"ஓம் லதா விருட்கேஷசு குல்மேஷு

வர்தந்தே பிதரோ மம/

தேஷாம் ஆப்யாய நார்த்தந்து

இதமஸ்து சிகோ தகம்://

கங்கா கங்கேதி யோப்ரூயாத்

யோஜனானாம் ஸதைரபி

ஸயாதி ப்ரம்மண: ஸ்தானம்

ப்ரம்ஹணா ஸஹ பூஜிதே//

த்ரிராத்ரம் ஜான்ஹவீ தோயே

ஸப்த ராத்ரந்து யாமுனே/

ஸத்ய புநாதி காவேரி

பாபம் ஆமரணாந்திகம்.'

இதன் தமிழ் வடிவத்தை அறிந்து கொள்ளவேண்டும்.

மரங்கள், செடிகொடிகளில், புதர்களுக் குள் மறைந்திருக்கின்ற எனது பித்ருக்கள், தெய்வங்கள் சந்தோஷமடைந்து எனக்கு சௌபாக்கியங்கள் கிடைக்க ஆசிர்வாதம் செய்யட்டும்!

கங்கை நதிக்குச் சமமான இந்த ருத்ராட்சப் புனிதநீர் குளியல் எனது சரீரத்தில் பிரம்ம தேஜசை கொடுக்கட்டும்!

கங்கையும் யமுனையும் பாவங்களை விரைவில் நீக்குவதைப்போல காவிரி நதியும் இதில் புகுந்து இப்பிறவியில் நான் இந்த உலகில் ஜீவித்திருக்கும்வரை பாவங்களை அகற்றிப் புண்ணியத்தைத் தரட்டும்!

ருத்ராட்ச நீரை தலையில் விடும்போது கிழக்கு முகமாக மனையில் அமர்ந்து சொல்லிய பிறகு புதுவஸ்திரம் அணியவேண்டும்.

மூன்றுமுறை இந்த நீரை உட்கொண்டு இந்த இரு வரிகளைக் கூறவும்.

"அகால மிருத்யு கரணம்

சர்வ ரோக நிவாரணம்

சமஸ்த பாப க்ஷயகரம்

ஈஸ்வர பாதோதகம் சுபம்!'

ஐஸ்வர்ய நிலை அருளும் மகா ருத்ராட்சம்

ஒருவர் கோசரம், சிவம் ஆகிய ருத்ராட் சங்களை 108 எண்ணிக்கையில் எடுத்து ஸ்நான சாஸ்திர விதிப்படி திங்கட் கிழமைதோறும் ருத்ராட்சக் குளியலைச் செய்துவந்தால் அங்கம் சுத்தமாகி முதலில் நாள்பட்ட நோய்கள் குணமாகும். பிறகு அவரது உடலில் தெய்வீக நிலையும், முகத்தில் பிரம்ம தேஜஸ் என்று சொல்லக்கூடிய முக வசீகரணமும் உண்டாகிவிடும்.

முகவசீகரம் உண்டானபிறகு, சுத்தமான அவரின் மனதிற்கும் இல்லத்திற்கும் சிவபெருமானின் குருவருள் வந்துசேரும். சிவபெருமான் எந்த இடத்தில் இருக்கிறா ரோ அங்கே லஷ்மி தேவியும் குபேரனும் வந்து சேருவார்கள். ஒரு வருடகாலத்திற்குள் மகதைஸ்வர்யம் என்று சொல்லக்கூடிய குபேர நிதிகள் கிடைக்கப்பெறும்.

சக்திவாய்ந்த ருத்ராட்சக் குளியலைச் செய்து விரைவில் சுப யோகங்களைப் பெற விரும்புபவர்கள் ஈஸ்வரப் பூஜை விதிகளின் மூலநூல்களில் ஒன்றான "சூட்சுமம்' என்னும் ஆகம விதியில் கொடுக்கப்பட்ட ஞானதீட்சா விதியை எளிமையான முறையில் பின்பற்றலாம். இது ஒருவகை செல்வயோகம் பெறும் சூட்சும விதி.

யாருக்குப் பலன் அதிகம்?

சனி மேஷத்தில் தனியாக இருக்கப் பெற்ற ஜாதகர் இப்படிப்பட்ட புனித நீர் வழிபாட்டால் வளம் பெறுவார்.

பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாம் இடம்தான் கடவுள் பக்தி, தர்மசீலம், குருபக்தி, உபதேசம் பெறுதல் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது. இதில் நவநாயகர்களில் யார் அமர்ந்துள்ளார் என்பதை ஆராய்ந்தால் ஒருவரது போக பாக்கியங்கள் இப்படி ஒரு ஸ்நான முறையால் கிடைத்துவிடுமா என்று தீர்வு கண்டுவிடலாம்.

ஜாதகருக்கு புதன் 9-ஆம் வீட்டில் இருந்தால் இளம்வயதிலேயே இந்த முறையில் மகதைஸ்வர்யங்கள் கிடைத்துவிடும். 12-ஆம் வீட்டுக்கு உடையவன் 9-ஆம் வீட்டில் இருந்தால் யோகமுண்டு.

பதினோராம் வீட்டுக்கு உடையவன் வலுவடைந்து, அங்கே சுபர்கள் கூடியோ பார்க்கப்பட்டோ இருப்பின் பக்தி, தல தரிசனம், புனித நீராடலால் யோகநிலை அடைவார்.

கன்னியில் குரு அமைவது. 9-ஆம் வீட்டோன் தசை நடக்கும் காலங்கள் இந்த யோகங்கள் கிடைக்க பொற்காலம் என்று சொல்லலாம்.

புனித நீராடல் தீர்த்தக் குளியலால் இறைவனின் பலம் நமக்கு வந்துசேரும் என்பதை மாணிக்கவாசக சுவாமிகள் திருவெம் பாவையின் 12-ஆம் பாடலில் சொல்லி வைத்தார். "ஆர்த்த பிறவித் துயர்கெட.... ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!' என்று. இன்றுவரை கஷ்டப்பட்டது போதும், இனிவரும் காலங்களில் செல்வ சுகத்துடன் வாழ்வோம் என்று நினைப்போர் தெய்வ அருள் நிறைந்த ருத்ராட்சக் குளியலைச் செய்து நலம்பெறு வீராக!

செல் : 91765 39026