ஒரு காலத்தில் நாட்டில் குழந்தைப் பிறப்பு அதிகமாகிவிட்டதென்று, அதனைக் கட்டுப்படுத்த சிவப்பு முக்கோணம் என்று குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தை ஆரம்பித்து ஜனத்தொகையைக் கட்டுப்படுத்தினார்கள். இப்போது, குழந்தை பிறப்பதற்கு அரும்பாடுபட வேண்டியுள்ளது. தெருவுக்குத் தெரு குழந்தைப் பிறப்பு சிகிச்சை மையம் ஆரம்பித்துவிட்டார்கள். இது சம்பந்தமாக மருத்துவரிடம் சென்றால் ஆணுக்கும் மருந்து கொடுத்து பெண்ணுக்கும் கர்ப்பப்பை சம்பந்தமாக பரிசோதனை செய்கிறார்கள்.
ஜோதிடம் 5-ஆமிடத்தை பெண்களின் கர்ப்ப ஸ்தானம் என்கிறது. 5-ஆமிடமே பூர்வபுண்ணிய ஸ்தானமுமாகும். இதிலிருந்து குழந்தைப் பிறப்பென்பது, போனஜென்ம பாவ புண்ணியத்தின் தொடர்ச்சி அல்லது அதன் சம்பந்தம் கொண்டது என அறியமுடியும்.
மகப்பேறு எனும்போது, தம்பதிகளில் ஆண் எத்தனை மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அதைப்பற்றி யாரும் பெரிதாக யோசிப்பதில்லை. பெண்ணை மட்டுமே முக்கிய காரணியாகப் பார்க்கும் சமூகம் இது. இதை யாரும் மாற்றமுடியாது. எனவே பெண் பிள்ளைகள் ஓரளவு வயது வந்தவுடன், அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து, திருமணத்துக்குரிய 7-ஆமிடம், குழந்தைக்குரிய 5-ஆமிடம் என சற்று அக்கறையாக கவனித்தால் அதற்குரிய பரிகாரங்களை- அது கிரகப் பரிகாரம் அல்லது உணவுப் பரிகாரம் என சீரமைத்துக்கொள்ளலாம்.
5-ஆமிடத்திலுள்ள கிரகங்களைக் கொண்டு அதன் விளைவுகளைக் காணலாம்.
5-ஆமிடத்தில் சூரியன்
சூரியன் ஒரு வெப்பகிரகம். கர்ப்பத்துக்குரிய வீட்டில் சூரியன் இருக்கும்போது, குழந்தைப் பிறப்பில் சிறிது சிக்கல் ஏற்படும். சூரியனின் அதிக வெப்பத்தால், கர்ப்பப்பை நீர்த்தன்மை குறைந்து சுருங்கிவிடும் நிலை ஏற்படும். எனவே 5-ல் சூரியன் இருக்கும் பெண்கள் வாரத்துக்கு ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் நன்று. சூரியனுக்குரிய தாமிரப்பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்துக்குடிக்கவும். சூரியனுக்குரிய கோதுமைப் பண்டங்கள் தானம் நல்லது. சூரியனுக்குரிய சிவப்பு, மஞ்சள் நிறம் பயன்படுத்தலாம். மயில், தேர் வடிவ நகைகள் பயன்படுத்தலாம். சிவன் கோவிலுக்கு சந்தனம் வாங்கிக்கொடுக்கவும். நவகிரகங்களில் சூரியனுக்கு ஞாயிறுதோறும் விளக்கேற்றுவது சிறப்பு. சூரியனின் தசாக்காலமான 6-ன் எண்ணிக்கையிலும் ஏற்றலாம். ஆதித்ய ஹ்ருதயப் பாராயணமும் சிவ வழிபாடும் நல்லது. சூரியனை வணங்கும்போது, அவரின் மனைவிகளான சாயா மற்றும் உஷா தேவியை வணங்குவதும் நல்லது.
தனுசு லக்னம் அல்லது தனுசு ராசியாகி, 5-ல் சூரியன் உச்சமாகியிருந்தால் மிக விசேஷம். தகப்பனைவிட சிறந்த அறிவு, கம்பீரமுடைய மகன் பிறப்பான். ஆயினும் அதிக "ஈகோ' உடையவனாகவும் இருப்பான்.
5-ல் சூரியனை உடைய மற்ற ராசிக்காரர்களுக்கு குறைவான குழந்தைகளே பிறப்பர்.
5-ல் சூரியனோடு ராகு அல்லது கேது சேர, சர்ப்ப தோஷத்தினால் குழந்தைப்பிறப்பு பாதிக்கும். சிவன் கோவில் உண்டியலில் தாமிரத்தினாலான சிறு நாகம் வாங்கி காணிக்கை செலுத்தவும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாக வழிபாடும் நன்மை தரும். எப்போதும் சூரியன் பாம்பு கிரகங்களோடு சேர்ந்து 5-ஆமிடத்தில் அமரும்போது, அங்கு வயதான பெரியவரின் சாபம் மற்றும் தோஷம் இருப்பதாகப் பொருள். எனவே யாருக்கெல்லாம் 5-ல் சூரியன், பாம்பு கிரக சம்பந்தம் பெறுகிறாரோ, அவர்கள் ராமேஸ்வரம் போன்ற திருத்தலங்களில் தோஷப் பரிகாரம் செய்வது மிக நல்லது. மேலும் ஏதேனும் வயதான பெரியவர் மற்றும் வீட்டிலுள்ள தாத்தாக்களுக்கு கோதுமை இனிப்பும், புத்தாடையும் வாங்கிக்கொடுக்கவும்.
திருமணம் முடிந்தவுடன் கோவிலுக்குச் சென்று தோஷப் பரிகாரம் செய்யலாம். மற்ற பரிகாரங்களை அவ்வப்போது கடைப்பிடித்தால் சிறந்த பலன்கள் சீக்கிரமாகவே கிடைக்கும்.5-ல் செவ்வாய், சூரியன் சேர்க்கை இருப்பின், குழந்தைகள் எதிரிகள் கையில் அகப்பட்டுக்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. இவ்வகை அமைப்புள்ளவர்கள், மலைமீதுள்ள முருகரை வணங்குதல் நன்மை தரும். (காலபுருஷ தத்துவத்தில் சூரியன் 5-ஆம் அதிபதி. செவ்வாய் 8-ஆம் அதிபதி. எனவே குழந்தை காணாமல்போக வாய்ப்புள்ளது. சூரியன், செவ்வாய் தசாபுக்திக்காலங்களில் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும்.)
5-ல் சந்திரன்
சந்திரன் ஒரு நீர் கிரகம். 5-ல் சந்திரன் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வமைப்புடைய பெண்கள் உணவில் இஞ்சி, தேன் சேர்த்துவர நீர்க்கட்டிகள் குறையும். சந்திரன் ரத்தத்தையும் குறிப்பார். எனவே சில பெண்களுக்கு மாதவிடாய்க் கட்டிகள் தோன்றும். ஒன்று, அதிக ரத்தப்போக்கினால் மாதவிடாய்க் காலங்களில் சிரமப்படுவர். அல்லது சரியாக இராமல் ரத்தக்கட்டிகள் தோன்றிவிடும். மேலும் இவர்களுக்கு சிறுநீர் தொந்தரவும் தோன்றி, வயிற்றுவலி அதிகரிக்கும். இதில் ஒன்று அல்லது எல்லாமே இருப்பதால் குழந்தைப்பேறு தாமதம் என மருத்துவர் கூறுவார்.
சந்திரன் ஒரு வேக கிரகம். 5-ல் சந்திரன் உள்ள பெண்கள் வேகநடை எனும் உடற்பயிற்சி செய்யும்போது உடல்நிலை சீராகும். கருப்பை நன்றாகும்.
5-ல் சந்திரன் உள்ள பெண்களுக்கு நிறைய பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. முத்து நகைகள் பயன்படுத்தலாம். அம்பாளுக்கு வெள்ளைப்பட்டு சாற்றி வெள்ளை மலர்களால் வணங்கலாம். அம்மன் கோவிலுக்கு சாம்பிராணி வாங்கிக்கொடுக்கலாம். திங்கட்கிழமைதோறும் அம்பாள் அபிஷேகத்துக்கு பால் மற்றும் திரவப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கவும். திருப்பதி சென்று வருதல் நல்லது. தானங்களில் இனிப்பும் திரவமும் சேர்ந்திருக்கவேண்டும். ஈயப்பாத்திர தானம் நல்லது. பச்சரிசி, நெல் போன்ற தானமும் நல்லது.
5-ல் சந்திரன் உள்ளவர்களின் குழந்தைகள் தாய்மீது அதிக பாசமாக இருப்பார்களாம்.
5-ல் சந்திரன் உள்ள பெண்கள் முருங்கை மரம் வளர்ப்பதும், முருங்கைக்கீரை சாப்பிடுவதும் மிக நல்லது. லலிதா சகஸ்ரநாமம் கூற, அம்பாள் அருளால் அருமையான குழந்தை பிறக்கும்.
சந்திரன் மார்பு, வயிற்றுக்கோளாறு, சிறுநீரக சம்பந்தம், தைராய்டு சம்பந்தம் போன்றவற்றைக் குறிப்பார். எனவே 5-ல் சந்திரன் இருக்கும் பெண்கள் இந்த நோய் சம்பந்தமாகவும் சோதனை செய்துகொள்ள வேண்டும்.
சந்திரன் மனம் சம்பந்தம் உடையவர். எனவே 5-ல் சந்திரன் உள்ள பெண்கள், குழந்தைப் பிறப்பு, கர்ப்பப்பை சம்பந்தமாக அதிகம் குழப்பிக்கொள்வார்கள்.
சந்திரன், ராகுவுடன் சேர்க்கையில் இருந்து, அது 5-ஆம் வீடாகவும் இருந்தால் சற்று சிரமம் தான். சந்திரன் ரத்த, நீர்க்காரகன். ராகு பெரும் போக்குக்காரகன். இந்த இரு கிரகங்களும் சேரும்போது ஒன்று கர்ப்பப்பையில் பெரிய நீர்க்கட்டி தோன்றும் அல்லது மாதவிடாய் பெரும்போக்காக அமைந்து மிகச்சிரமம் கொடுக்கும்.
இவ்வித அமைப்புள்ள பெண்களுக்கு வயதுக்கு வந்ததிலிருந்தே திங்கட்கிழமைதோறும் அம்மனை வணங்குவது, நாகத்திற்கு பன்னீர், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்வது என தொடர்ந்தால் கருப்பைக் கோளாறுகள் மட்டுப்படும்.
5-ல் சந்திரன், ராகு இருந்து, 5-ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து, 5-ஆம் வீட்டை சுபர் பார்த்தால் நல்ல குழந்தைகளே பிறக்கும்.
அவ்வாறு சுபத்தன்மை இல்லாவிடில் குழந்தை பிறக்க நல்ல மருத்துவ உதவி பெறுவதுடன், குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நிலை குறித்து நன்கு சோதித்துக்கொள்ளுதல் அவசியம்.
5-ல் சந்திரன், ராகு இருந்து இவர்களை குரு பார்த்தால் குழந்தைப்பிறப்பு பற்றிய பயமே வேண்டாம். புதுவித சிந்தனைகள் கொண்ட குழந்தை பிறக்கும்.
5-ல் செவ்வாய்
செவ்வாய் ஒரு நெருப்பு கிரகமாகும்; பித்த கிரகமாகும். செவ்வாய் ரத்த சிவப்பணுக்களையும், ஆயுதங்களையும் குறிப்பிடும் கிரகம்.
இவ்வித செவ்வாய் 5-ல் இருக்கும்போது, அதிக பித்தம் அல்லது அதிக உஷ்ணம்மூலம் கர்ப்பப்பைக் கோளாறு ஏற்பட ஏதுவாகும். இதனால் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படக்கூடும். மேலும் இவர்களின் பிரசவம் அநேகமாக சிசேரியனாக அமையும். இயற்கையான முறையில் பிரசவித்தாலும், பிரசவ வலி மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
5-ல் செவ்வாய் உள்ளவர்களுக்கு, மாதவிலக்கு சமயம் அதீத வயிற்றுவலி வரக்கூடும்.
இவர்கள் உணவில் துவர்ப்புச்சுவையுடைய பொருட்களை சேர்த்துக்கொள்தல் நல்லது.
செவ்வாய் பூமிகாரகர். எனவே 5-ல் செவ்வாய் உள்ள பெண்கள் உணவுகளை மண்பாண்டத்தில் சமைப்பது விசேஷமாக அமையும். மேலும் பித்தம் தணிக்கும், உஷ்ணம் குறைக்கும் உணவுகளாக கவனித்து சாப்பிடுவது நலம்.
5-ல் செவ்வாய் இருப்பின், கண்டிப்பாக செவ்வாய்க்கிழமை முருகன், துர்க்கையை வணங்குதல் நல்லது. துர்க்கையை குங்குமம் கொண்டு அர்ச்சிப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை விரதமிருப்பது மிக மேன்மை தரும்.
பெண்களுக்கு மட்டுமல்ல; 5-ல் அல்லது 9-ல் செவ்வாயுள்ள ஆண்களுக்கு குழந்தைப்பேறு தாமதமானால், நீங்களும் செவ்வாய்க்கிழமை விரதமிருந்து, முருகனை வணங்குங்கள். செவ்வாய் வீரிய சக்திக்குக் காரகர். அதனால் ஆண்களின் விந்து எண்ணிக்கை அதிகரித்து, குழந்தைப்பேறு சீக்கிரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
5-ல் செவ்வாயுள்ள பெண்கள் கந்தசஷ்டிக் கவசம் கூறுவது, நரசிம்ம வழிபாடு, துர்க்கை வழிபாடு போன்றவை கர்ப்பப்பையைக் காத்து, குழந்தைப்பேற்றை எளிதாக, விரைவாகக் கிடைக்கச் செய்யும்.
5-ல் செவ்வாய் இருந்து, அவர் ராகு சம்பந்தம் அல்லது சனி சம்பந்தம் பெறுவது சற்று சிக்கல்தான். இவ்விதம் இருப்பின், கர்ப்பப்பையில் ரத்தக்கட்டிகள் இறுகி, பெருகிவிடும்.
சிலருக்கு வருடத்துக்கு இருமுறைதான் மாதவிலக்கு என்றாகிவிடும். இந்த இரு நிலையுமே மிகத் தவறு. இது கர்ப்பப்பையின் சிக்கலை உணர்த்துகிறது.
இவ்வாறு இருக்கும் பெண்கள் நாக சுப்பிரமணியரை வணங்கவேண்டும். மேலும் சிறிய செம்பிலான நாக விக்ரகத்தை முருகன் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தவும்.
செவ்வாய், சனி 5-ல் இருப்பின் சனிக்கிழமை தோறும் துர்க்கையை குங்குமம், எலுமிச்சை கொண்டு வணங்கவும்.
5-ல் செவ்வாய் சுபத்தன்மை பெற்றிருந்தால், அதீத தன்னம்பிக்கை, நேர்மையான தைரியம், தவறுகளைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் என நல்ல வீரமான குழந்தைகள் பிறப்பர்.
5-ல் செவ்வாய், அசுபத்தன்மையுடன் இருந்தால், வீண் வம்பு வழக்கு, சண்டை, அடிதடி என இன்னபிற வேண்டாத தைரியமுடைய குழந்தைகள் பிறக்கக்கூடும்.
5-ல் புதன்
ஜோதிடம் புதனை ஒரு அலிகிரகம் என்றே குறிப்பிடுகிறது. மேலும் புதன் சுபரோடு சேர்ந்தால் சுபராகவும், அசுபரோடு சேர்ந்தால் அசுபராகவும் மாறிவிடுவார். எனவே பெண்களுக்கு, கர்ப்ப ஸ்தானம் எனும் 5-ஆமிடத்தில் தனித்த புதன் இருப்பது அவ்வளவு சிலாக்கியமில்லை. புதன் ஏதேனும் ஒரு சுபரோடு இருப்பதே நன்று.
புதன், ஹைப்போதாலமஸ் எனும் சுரப்பியின் காரகர். இந்த சுரப்பி, மத்திய நரம்பு மண்டலத்தை இயக்கும். பெண்களுக்கு 5-ல் புதன் இருந்தால், மாதவிடாயின்போது அடிவயிற்றில் நரம்பு பிடித்திழுப்பதுபோல் வலியை உணர்வார்கள். வெள்ளைப்படுதலாலும் கஷ்டம் இருக்கும்.
இவர்கள் பச்சைப்பயறு போன்ற தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பச்சைநிற உணவுகளை அதிகமாக சாப்பிடுதல் நன்று. குதிரை வடிவ அணிகலன்களை அணிந்துகொள்ளலாம்.
5-ல் புதன் இருந்து, குழந்தை பிறக்க தாமதமானால், மதுரை மீனாட்சி அம்மனுக்கு பச்சைப்பட்டு சாற்றவும்.
5-ல் புதன் இருக்கும் பெண்கள் அடிக்கடி வாயுக்கோளாறு, நரம்பு வாதம் போன்ற நோய்களுக்கு ஆளாவார்கள். மேலும் ரத்த சோகையும் ஏற்படக்கூடும்.
எனவே 5-ல் புதன் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் ஆரம்பத்திலிருந்தே ரத்த விருத்திக்கான உணவுகளைச் சேர்த்துக்கொள்ளவும். இல்லாவிடில் மிகுந்த இடுப்பு வலியும் திடீர் தளர்ச்சியும் உண்டாகும்.
விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது சாலச்சிறந்தது. நாலாயிர திவ்யப் பிரபந்தமும் கூறலாம். முடிந்தால் ஏகாதசி விரதமிருக்கவும்.
உங்கள் வீட்டருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு புதன்கிழமைதோறும் சென்று, துளசிமாலை அணிவித்து வணங்கவும்.
திருமணமாகி பல ஆண்டுகள் சென்றபின் குழந்தைக்காகப் பரிகாரம் செய்வதைவிட, பெண்கள் வயதுக்கு வந்தவுடனேயே அவர்களின் 5-ஆமிடத்தில் புதன் இருப்பின் அப்போதிருந்தே பெருமாளை வணங்குதல் நல்லது.
புதனுடன் வேறு பாவரும் சேர்ந்து சுபர் பார்வை இருப்பின், பிறக்கும் குழந்தைகளின் சிந்தனைத் திறனே வேறு ரேஞ்ச்தான். இவர்களின் யோசிக்கும் திறன், பிறரை மிரளவைக்கும்.
5-ல் குரு
ஜோதிடம், குருவை குழந்தைகளைக் குறிப்பவராகக் கூறுகிறது. 5-ஆமிடம் குழந்தைகளை உருவாக்கும் ஸ்தானம். எனவே ஜோதிட விதிப்படி, ஒரு காரக கிரகம், அதனது காரக வீட்டில் இருப்பது காரகோ பாவநாஸ்தி எனும் கூற்றுப்படி, குழந்தைகள் பிறப்பு குறைவாக இருக்கும். ஆயினும் மற்ற கிரகங்களைப்போல் முற்றிலும் அந்த ஸ்தானப்பலனை அழிக்காமல், குறைவாகக் கொடுப்பார். ஏனெனில் அவர் குருவல்லவா!
குரு கொழுப்பைக் குறிப்பார். அதனால் 5-ல் குரு இருக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பையில் மிகுதியாக சதை ஏற்படும் வாய்ப்புண்டு. சிலருக்கு குழந்தை உண்டாகும் இடத்தில் சதைத் திறட்சி ஏற்பட்டு, அதனால் கரு உருவாவது தடைப்படலாம்.
எனவே 5-ல் குரு இருக்கும் பெண்கள் யோகாமூலம் தங்களது உடல் எடையை சமமாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். இங்கு யோகாமூலம் எடை குறையுங்கள் என்று குறிப்பிடக்காரணம், அதில்தான் குழந்தைப் பிறப்பிற்கென்றே சிறப்பான ஆசனங்கள் உள்ளன. எனவே ஆரம்பத்திலிருந்தே யோகா கற்பது அவசியம்.
குரு மஞ்சள் வண்ணம் கொண்டவர். எனவே மஞ்சள் வண்ண ஆடைகள் அணிவது நல்லது. மஞ்சள் வண்ண காய்கறி, பழங்கள் நல்லது. யானை வடிவ அணிகலன் நன்று. அல்லது அன்னப்பறவை நகைகள் பயன்படுத்தவும்.
முடிந்தபோதெல்லாம் இந்தப் பெண்குழந்தைகளை அரச மரம் சுற்றுவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளச் செய்யவும். புஷ்பராக கம்மல் அணிவிக்கவும்.
அடிக்கடி கொண்டைக்கடலை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
5-ல் குரு உள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிமேதாவிகளாக, சமயத்தில் உங்களுக்கே புத்தி சொல்லும் தகப்பன்சாமிகளாக இருப்பர்.இவர்கள் ஒருமுறையாவது திருச்செந்தூர் சென்று வரவேண்டும். அது குருத் தலம். மேலும் வியாழக்கிழமைதோறும் சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கவும். கண்டிப்பாக ஏதேனும் ஒரு சித்தரை- சீரடி சாய்பாபா, ராகவேந்திரர், காஞ்சி மகாபெரியவர் என யாராவது ஒருவரின் பாதத்தைப் பற்றிக்கொள்ளவும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 94449 61845