சுமார் 55 வயதுடைய ஒருவர் ஜீவநாடியில் பலன்கேட்க வந்தார். அவரை அமரவைத்துவிட்டு, என்ன விஷயமாக பலன்கேட்க வந்துள்ளீர்கள் என்றேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramar_19.jpg)
"ஐயா, மூன்று கோவில்களை முன்னின்று கட்டிமுடித்து, கும்பாபிஷேகமும் செய்துள்ளேன். பலரின் சிக்கல், சிரமங்களுக்கு உதவிசெய்து, அவர்களுக்கு சிரமம் தீர செய்தேன். ஆனால் என் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள முடியவில்லை. என் மனைவி, குழந்தைகளுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியவில்லை. கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையிலும், நாலு பேருக்கு நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்குமென்று பிறர் சொல்வதைக் கேட்டு செயல்பட்டு வாழ்ந்தேன். என்னால் நன்மை அடைந்தவர்களும் நன்றி கெட்டவர்களாக உள்ளார்கள். கடவுளும் காப்பாற்றவில்லை. என் வாழ்க்கை நிலைக்கு காரணமும் தெரியவில்லை. இனிவரும் வாழ்விலாவது என் வாழ்க்கையில் நன்மை, உயர்வு அடைய அகத்தியரிடம் வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடியை படிக்கத் தொடங்கினேன்.
ஓலையில் எழுத்துவடிவில் தோன்றிய அகத்தியர், இவனின் இந்நிலைக்கு காரண, காரிய பதிலைக் கூறுகின்றேன். கவனமாக கேட்டு புரிந்துகொள்ளட்டும்.
மூன்று கோவிலை கட்டினேன் என்று கூறுகின்றான். இந்தக் கோவிலை இவனைக கட்டச் செய்தது, இவனின் முன்னோர்களில் ஒருவனின் ஆத்மா. இவனின் முன்னோர் கள் நிலம், புலம், சொத்துகளுடன், செல்வந்தர்களாக வாழ்ந்தவர்கள். இவன் பாட்டன்களில் ஒருவன், கடவுளுக்கு தொண்டுசெய்து கடவுளை வணங்கினால், இன்னும் மிகப்பெரிய செல்வந்தனாகலாம் என்று ஆன்மிகவாதிகள், சிலர் சொன்னதைக்கேட்டு, கோவில்களைக் கட்டி வணங்க ஆசைப்பட்டான். இவனின் இந்த ஆசையை குடும்பத்தாரும் சகோதரர்களும், உழைத்தால்தான் வாழ்வில் உயர்வு உண்டாகும். கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, கடவுளை வணங்கிக்கொண்டு இருந்தால் வாழ்வில் செல்வமும், உயர்வும் கிட்டாது என்று மறுத்து விட்டார்கள்.
இந்தப் பாட்டனின் கோவில்கட்டும் ஆசை நிறைவேறாமலேயே அவன் இறந்தான். ஆனால் அவனின் ஆன்மா இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென்று சாந்தி இல்லாமல், அவன் பிறந்து, வாழ்ந்து, மறைந்த வீட்டை சுற்றியே அலைந்தது. தனது குடும்பத்தில் பிறக்கும் வம்ச வாரிசுகள்மூலம் கோவில்கட்டும் ஆசையை, நிறைவேற்றிக்கொள்ள தகுந்த வாரிசை எதிர்பார்த்து காத்திருந்தது. இவன் பிறந்தவுடன் அந்தப் பாட்டனின் ஆத்மா, இவனே தன் ஆசையை நிறைவேற்றி வைக்கத் தகுந்தவன் என்று தேர்ந்தெடுத்து, அந்த ஆத்மா இவன் உடலில் கலந்தது.
பாட்டனின் ஆத்மா, இவனுக்கு கோவில் கட்டும் எண்ணத்தை உருவாக்கி அதற்குத் தகுந்த சூழ்நிலையை குடும்பத்திலும், இவன் வசிக்கும் கிராமத்திலும் உருவாக்கியது. இவன் ரத்த சம்பந்தமான உறவு பங்காளிகள் எல்லாரும் சேர்ந்து, தங்கள் குடும்பத்திற்குரிய குலதெய்வ கோவிலைக் கட்ட எண்ணி ஒரு குழு அமைத்து, இவனை தலைவனாக்கி, பொறுப்பைத் தந்தார்கள். ஆனால் கோவில்கட்ட ஆரம்பித்து சிறிது காலத்தில், பங்காளிகள் யாரும் முன்பு கூறியதுபோல் வரி பணம் தரவில்லை. பங்காளிகள் பேச்சைக்கேட்டு ஏமாந்து போனான்.
இரத்த சம்பந்தமான உறவு பங்காளிகள் பணம் தராததால், இவனே தன் விவசாய நிலத்தில் ஒரு பகுதியை விற்று, கொஞ்சம், கொஞ்சமாக ஐந்து வருடங்களில் அந்த குலதெய்வக் கோவிலை கட்டிமுடித்து, கும்பாபிஷேகம் செய்துமுடித்தான். கோவில் பணிகள் எல்லாம் முடிந்தபின்பு, பங்காளி கள் இவன் நிறைய பணத்தை பொய் கணக்கு எழுதி ஏமாற்றி அபகரித்துவிட்டான் என்று அவப்பெயர் சூட்டி கேவலப்படுத்தினார்கள். அதனால் அவன் இன்று வரை தான் கட்டிய குலதெய்வக் கோவிலுக்குள் போகவில்லை.
இவன் பாட்டனின் ஆத்மா, தன் ஒரு ஆசையை குலதெய்வக் கோவிலைக் கட்டவைத்து நிறைவேற்றிக்கொண்டது. அதன்பின்பும் அந்த ஆத்மா இவனை விடவில்லை. இவன் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் கிராம பொதுக் கோவிலை கட்டித்தர இவனை அணுகினார்கள். அவர்கள் பலவாறு இவனைப் புகழ்ந்து பேசி, இவன் குடும்பப் பெருமையை கூறினார் கள். இவன் அந்த புகழ்ச்சிக்கு மயங்கினான். திருப்பணி குழு தலைவராக தேர்ந்தெடுத்து சம்மதிக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் ஊர் பொதுப் பணத்தைக் கொடுத்தார்கள். அதன்பிறகு அவர்களால் கொடுக்க முடியவில்லை. அப்போதும் இவன் தன் விவசாய நிலத்தில் வருமானமாக வந்த பணத்தைக் கொண்டு, ஏழு வருடங்களில் அந்த கோவிலைக் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் செய்து முடித்தான்.
12 வருடங்களாக விவசாய நிலத்தையும் இழந்து, மீதி இருந்த பூமியில் இருந்துவந்த வருமானம் அனைத்தையும், கோவில் தெய்வ திருப்பணிக்கே செலவு செய்துவிட்டான். கடவுள் காப்பாற்றும் என்ற தவறான நம்பிக்கையில், கைப்பணத்தை இழந்து இப்போது கஷ்டப்படுகின்றான். இரண்டு கோவிலை கட்டிய இவன், தனக்கென்று ஒரு நல்ல வீட்டை இதுவரை கட்டிக்கொள்ள முடியவில்லை. கடவுள் நம்பிக்கையில், பக்தியால் இவன் வாழ்வில், வறுமையும், பணபஞ்சமும் வந்ததே தவிர, வாழ்வில் உயர்வை அடையமுடியவில்லை. இவன் பாட்டனின் ஆத்மா தான் எண்ணியது நிறைவேறியபின் இவனை விட்டு விலகியது. இவனை கடவுளும் காப்பாற்றவில்லை. வம்ச முன்னோரும் காப்பாற்றவில்லை. மாயை விலகி, இப்போதுதான் தன் வாழ்க்கையைப் பற்றி எண்ணுகிறான் இவள்.
இவன் வருங்கால வாழ்க்கை இனியாவது உயர்வாக அமைய நான் கூறும் வழிமுறைகளை, நடைமுறை வாழ்க்கையில் கடைபிடித்து வாழச்சொல் என்று கூறி, சில வாழ்வியல் வழிமுறைகளைக் கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியதைக்கேட்ட அவர், இனி எதையும் கடவுள் நம்பிக்கையில் செய்து வாழமாட்டேன். என் வாழ்விற்கு எது நன்மை தருமென்பதை அறிந்து நடைமுறையில் செயல்பட்டு வாழ்வேன். நம்பிக்கையில் வாழ்பவன், வாழ்வில் சிரமப்படுவான், நடைமுறையில் வாழ்பவன் உயர்வு அடைவான் என்பதற்கு நானே உதாரணம் என்று கூறி விடைபெற்று சென்றார்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/ramar-t.jpg)