குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துவது கணவனா, மனைவியா- சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவது ஆணா, பெண்ணா என்கிற போட்டியை எல்லாம் பட்டிமன்றத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். குடும்பத்திற்குள் கொண்டு வரக்கூடாது. இன்று பல இல்லங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதற்குக் காரணம், விவாதமின்றி இருப்பதே. குடும்ப முன்னேற்றம், குழந்தைகள் வளர்ச்சிமீதான அன்பு, பாசத்தால் போட்டி ஏற்படாமல் விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை போன்றவற்றால் நிம்மதியாக வாழ்கிறார்கள். விவரமற்றவர்கள்தான் பெண் குழந்தைகளுக்கு சரியான ஆலோசனை வழங்கத் தவறி நிம்மதியைத் தொலைக்கிறார்கள். தன் வீட்டில் தங்க மகளாக வளரும் குழந்தைகளுக்கு ஜாதக மறிந்து, தக்க பரிகாரம் செய்து மணம்செய்து கொடுத்தால் தான் சந்தோஷமாக வாழ்வார்கள்.

amman

குணம்

பணம் இருந்தால் போதும்; குணம் தேவையில்லை என்கிற மனநிலை அபாயகரமானது. குணம் என்பதில் முதன்மை வகிப்பது ஒழுக்கம். இன்று திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை; திருமணத்திற் குப்பின்பு இருப்பதைதான் பார்க்கவேண்டுமென ஆகிவிட்டது. தவறு செய்யும் ஓரிருவரின் குரல் அதிக சத்தத்துடன் வெளியே கேட்பதால், தவறுகளை நியாயப்படுத்திப் பேசுவது சகஜமாகிவிட்டது. முன்பு நல்ல செய்திகளைப் பெரிதுபடுத்திய ஊடகங்கள் இன்று கெட்ட விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பதன் மாயத்தோற்றம்தான் இந்த பிம்பத்திற்கான காரணம். லக்னமும், ராசியும்தான் குணத்தைத் தீர்மானிக்கும். கேந்திர, திரிகோண ஸ்தானத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் சமூகத்திற்கு, சட்டத் திற்கு, குடும்பத்திற்கு எதிரான எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டார்கள். லக்னாதிபதி அல்லது ராசியாதிபதி குருவுடன் இணைந்திருந்தாலும் பார்த்தா லும், உடலையும் மனதையும் நல்வழியில் செயல்படுத்துவர். சனி சம்பந்தமற்ற சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன், சுப கிரகப் பார்வைகள் தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ளும். சுப கிரகங்கள் லக்னம், ராசிக்கு 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருப்பதும், பார்ப்பதும்; செவ்வாய், சனி, சூரியன் சம்பந்தமும் இருந்தால் குணக்கேட்டைத் தரும். நல்ல தசாபுக்திக் காலங்களில் இப்படிப் பட்ட குணங்களால் அவமானம், தண்டனை கிடைக்காது. நெருக்கமானவர்களின் மனஸ்தாபத்தையும் பிரிவுகளையும்தான் தரும். ஏழரைச்சனி, கெட்ட தசாபுக்திக் காலங்களில், தன்நிலை மறந்து தவறான காரியங்களில் துணிந்து ஈடுபட்டு அவமானம், தண்டனை பெறுவர். ஆலயப் பரிகாரங்களைவிட அவசியமான பரிகாரம் சுய ஒழுக்கக் கட்டுப்பாடு. அதனைத் தரும் தெய்வம் தட்சிணாமூர்த்தி என்கிற குரு. வாழ்நாளில் முடிந்தவரை வியாழக் கிழமைதோறும் விரதமிருந்து, சுண்டல் மாலையிட்டு தட்சிணாமூர்த்தியை வழிபடுதல் நல்ல எண்ணங்களைத் தரும். ஒழுக்கத் தால் நிறைய பயனுண்டு என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஒழுக்கமென்பது அடுத்தவரிடம் காண்பிக்க, நிரூபிக்கவேண்டிய பொருளல்ல. ஒருவர் ஒழுக்கமாக இருந்தால் முதலில் கிடைப்பது நிம்மதியான மனநிலை.

எந்தத் தவறு செய்தாலும் முதலில் யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்கிற அச்ச உணர்வு ஏற்படும். ஆசை கொண்ட மனம் அலைபாய்ந்து, தன் காரியத்தை சாதிக்க குடும்ப உறவுகளைப் பகைத்து, ஒரு பொய்யை மறைக்க பல பொய் சொல்லி, யோசித்து யோசித்து மனரீதியாக பாதித்து, அதனால் தூக்கமின்றி உடலைக் கெடுத்து, வாழ்க்கையையும் இழக்க நேரும்.

ஆதலால் ஒழுக்கமென்பது தனக் காக- தன் மனநிலை, உடல் நிலையைப் பாதுகாப்பதற்காக இருத்தல் வேண்டும். இதைத் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் கள் சொல்லிப் புரியவைக்கவேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லி வளர்க்கவேண்டும்.

அன்பு வேறு, அக்கறை வேறு. அன்போ கண்டிப்போ- எதைக் கொடுத்தால் திருந்துவார்களோ அதைத் தரவேண்டும். கொஞ்சி, கெஞ்சிக்கொண்டிருந்தால் அதுவே நாம் பிள்ளைகளுக்குச் செய்யும் துரோகம். அது புரியாமல் சில பெற்றோர்கள், "என் மேலுள்ள கோபத்தை ஏன் பிள்ளைகள்மீது காட்டுகிறீர்கள். என் பிள்ளைமேல் கை வைக்கிற வேலை வைத்தால்...' என ஒருவருக் கொருவர் எச்சரிக்கை விடுகிறார்கள். பெற் றோர்களின் சண்டை பிள்ளைகளுக்கு சாதகமாகி, தவறைத் திருத்திக் கொள்ளாமல் தைரியமாக தவறு செய்கிறார்கள்.

காதல்

தன் பெண்பிள்ளைகளைப் பார்த்து, "காதல் என்பது பருவ வயதில் வரும் இயற்கையான உணர்வு. காதலை அனுபவித்து கடந்துதான் வரவேண்டும். களவும் கற்று மற என்பதுபோல் காதலும் கற்று மற' என சொல்லமுடியுமா? காதலால் பல குடும்பங்கள் பல பாதிப்புகளை சந்தித்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இளம் வயதில் பெண்பிள்ளைகளுக்குக் காதல் வருவதற்குக் காரணம் ஜாதகத்தில் குரு பார்வையற்ற செவ்வாய், சுக்கிரன் இணைவு, பார்வைகள், சனி பார்வை கொண்ட செவ்வாய், சுக்கிரன் சம்பந்தம், பெண்ணின் களத்திரகாரகனான செவ்வாய் கெட்டுப்போதல், சுக்கிரன், சனியின் வலிமையைப் பொருத்து வேற்று இன, மத ஆண்கள்மீது ஈர்ப்பை உண்டாக்குகிறது. ஐந்தாமிடம் வலுத்தவர்களுக்கு காதல் உண்டாகும். ஒன்பதாமிட வலுவால் சமூக, குடும்பக் கட்டுபாடுகளைக் கடந்து விருப்பப்படி திருணம் செய்து நஷ்டமடைகிறார்கள். கிரகங்கள் கெட்டுப்போனவர்கள்தான் காதல் வந்து கஷ்டப்படுவார்கள். ஏதாவது சிலரே கெட்டவன் கெடுவதால் கிட்டும்‌ விபரீத ராஜயோகத்தால் காதல் வாழ்க்கை சிறப்புற்று வாழ்வார்கள். புலியைப் பார்த்து பூனை சூடுபோட்ட கதையாக, சினிமா காதலைப் பார்த்து காதல் வந்து திருமணம் செய்பவர்கள் வாழ்க்கை திண்டாட்டம்தான். காதல் உருவாவது ஏழரைச் சனிக் காலத்தில்தான். ஆரம்பக் கல்வியில் காதல் இரண்டாமிடம் கெட்ட வர்களுக்கும், உயர் கல்வியில் காதல் நான்கா மிடம் கெட்டவர்களுக்கும் ஏற்பட்டு குடும்பம், உறவினர்களைப் பகைத்து சுகத்தை இழந்துவிடுகிறார்கள். "பெரியப்பன் பாத்தா அடி பிச்சுறுவான். சித்தப்பன் பாத்தா கதற விடுவான். மாமா பார்த்தால் பார்த்த இடத்துல மாத்து விழு'மென்று பயந்திருந்தால்தான் இன்றைக் குப் பிள்ளைகளைக் காப்பாற்றமுடியும். தன் பிள்ளைகளையே கண்டித்து வளர்க்க முடியாமல் இருக்கும்போது, அடுத்தவன் பிள்ளையை எப்படி கண்டிப்பதென உறவினர் கள் நொந்து விலகிக்கொள்கிறார்கள். சொந்தங்கள் விலகி நிற்பதற்குக் காரணம், தங்களை சுயம்புபோல் எண்ணிக்கொள்ளும் பெற்றோர்கள்தான். "சொந்தங்கள் எவ்வளவோ இருந்தும் எனக்கு யாரும் உதவல' என உறவுகளை, சொந்தங்களை குறைசொல்லிக் கெடுப்பதே பிள்ளைகளின் மனமாற்றத்திற்குக் காரணம். "நீங்கள் எத்தனைப் பேருக்கு உதவினீர்கள்? பணம் கொடுத்தீர்கள்' என கேட்டால் பதில் சொல்பவர்கள் குறைவு.

புகுந்த வீடு

பிறந்த வீட்டில் பெண் பிள்ளைகளை செல்லமாக வளர்ப்பவர்கள், அதற்குச் சொல்லும் முதல் காரணம், "எப்படியும் புகுந்த வீட்டிற்குச் சென்று காலம் முழுவதும் கஷ்டப்படப் போகிறாள். ஆதலால் நம் வீட்டில் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும்' என்பதே. ஆதலால் எந்த வேலையும் கொடுக்காமலும், கேட்டதை வாங்கித் தருவதுமாகவும் சிலர் இருக்கிறார் கள். "இப்படி செல்லம் கொடுத்தால் திருமணத்திற்குப்பிறகு கஷ்டப்படுவார்கள்' என பெரியவர்கள் சொன்னால், "என் பிள்ளைக்கு சாபம் தருகிறாயா' என்கிறார்கள். புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணின் ஜாதகத்தில் குணம், வாரிசு தரும் புத்திர பலம், களத்திர தோஷமற்ற மாங்கல்ய பலம், குடும்பம் முன்னேற்றம் பெறுமா என பார்ப்பார்கள். பெண் வந்த நேரம், குணத்தைப் பொருத்து, அவள் வாழப்போகும் குடும்பத்தின் தலையெழுத்தே மாறிவிடும். பெண்ணின் ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் பாவகிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது நின்றால் வாய்ப்பேச்சால் வம்பு வளர்க்கும் பெண்ணாக இருப்பாள். தனம், குடும்ப ஸ்தானமான இரண்டாமிடம் கெடாமல் இருப்பது வாழும் குடும்பத்திற்கு யோகம் தரும். நான்காமிடம் சுபகிரகப் பார்வை, சுபத் தன்மை பெற்றால், உறவினர் களை அனுசரித்துப்போகும் பக்குவத்தால் சுகம் கொடுக்கும். சனியால் நான்காமிடம் கெடாமல் இருந்தால்தான் பத்தாமிடமான மாமியாருடன் ஒத்துப்போவார்கள். ஏழாமிடம் நன்றாக இருந்தாதால்தான் கணவருடனான இல்வாழ்க்கை சிறக்கும். புத்திர தோஷமற்ற ஐந்தாமிட பலத்தால் வாரிசைத் தருவர். அதைவிட முக்கியம், எட்டாமிடம் கணவரின் ஆயுளை நிர்ணயிப்பது. ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாவிட்டாலும், எட்டாமிடம் பாதித்தாலும் இழப்பு ஏற்பட்டுவிடும். நல்ல தசாபுக்தி இருந்தால்தான் இல்லற வாழ்க்கை சிறக்கும். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், பெண்ணுக்கு நல்ல கல்வி கொடுத்து, வேலை வாங்கிக் கொடுத்துவிட்டால் கடமை முடிந்துவிட்டது என எண்ணுகிறார் கள். அடுத்தவர் வீட்டில் வாழத் தயார்படுத்துவதில்லை. சம்பாதிக்க வைத்துவிட்டால் பெண்ணுடன் மருமகனைத் தனிக் குடித்தனம் வைத்துவிடலாம் என்கிற போக்குதான் பரவலாக நிலவுகிறது. கணவன் வீட்டில் வாழப்போகும் பெண்ணிற்கு வரதட்சணைக் கொடுப்பதை நினைக்குமளவு, வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுப்பதில்லை. காலத்தின் நடைமுறைக்கேற்ப வாழ்வதாய் எண்ணி, வாழும் கலையைப் பெண்பிள்ளைகளுக்குக் கற்றுத் தராததால், பல பெண்கள் திருமணத்திற்குப்பின் வாழ்க்கை நடத்தத் தெரியாமல் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். திருமணம் செய்தபின்புதான் வாழ்க்கையே தொடங்குகிறது என்பதைப் பல பெற்றோர் கள் நினைக்கத் தவறுகின்றனர்.

குடும்ப வாழ்க்கை

திருமணம் நடந்தபின் அடுத்தநாளே அவர்கள் வீட்டுப் பிள்ளையாக மாறி மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார்மீது பாசம்கொண்டு, பிறந்த குடும்பத்தை மறந்து வாழவேண்டுமென புகுந்த வீட்டினர் நினைத்தால் நடந்து விடாது. கணவனைப் பிடித்து, அவன் குணமறிந்து, பின் அவன் குடும்பத்தின் ஒவ்வொரு நபரின் குணமறிந்து செயல்பட வேண்டுமானால் ஒரே நாளில் அல்ல; ஒரு வருடத்தில்கூட முடியாது. அதனை இரு வீட்டாரும் புரிந்துகொள்ள வேண்டும். பிறந்த வீட்டில் நல்ல அறிவுரைகளைச் சொல்லவேண்டும். புகுந்த வீட்டில் வந்த பெண்ணை வரவேற்று சந்தோஷப்படுத்தி, நம் வீடு, நம் குடும்பம் என்னும் எண்ணம் உருவாக சூழலைத் தரவேண்டும். "நாங்க எல்லாம் இப்படியா இருந்தோம்' என்கிற இழுவையிலேயே மாமியார் பிடிக்காதவராகி விடுவார். நம்முடைய பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும்போது என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோமோ, அதை நம் வீட்டுக்கு வரும் பெண்ணுக்கும் செய்தால் தான் குடும்பம் நடத்தமுடியும். அதேபோல் சமாதானம், விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, கணவருடன் எதிர்வாதம் செய்யாமல் அனுசரித்து வாழும் கலையைப் பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் தாய்க்கும் தாரத்திற்கும் பதில் சொல்லமுடியாமல் தவிக்கும் ஆண்களால் நிம்மதியாக வாழ முடியும். அதனைக் கையாளும் பெண்ணால் தான் வாழ்க்கை அழகாகும். பெண்ணிற்கு செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், பிதுர் தோஷம் இருந்தால் திருமணத்தை தாமதமாக- அதாவது குறைந்தது இருபத்துமூன்று வயதிற்குமேல் செய்துவைக்கவேண்டும். ஏனென்றால் தோஷமுள்ளவர்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்தால் சரியான மனப் பக்குவமில்லாமல் குடும்ப வாழ்க்கையைக் கெடுக்கும். நடக்கும் தசை அறிந்து, ஏழரைச்சனிக் காலத்தில் நிதானத்துடன் முடிவுகள் எடுத்தால்தான் பிரச்சினையின்றி வாழமுடியும். தாமதத் திருமணம் செய்வதன் நோக்கம்- சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் வந்துவிடும். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெற்றி தராது. பொதுவாக பெண்கள் கோவில்களுக்கு அதிகம் செல்வது நல்லது. ஏனென்றால் கோவிலுக்கு வரும் பெண்களிடம் கலந்துரையாடுவது நல்ல முடிவுகள் எடுக்க பல நேரங்களில் உதவும்.

பரிகாரம்

இன்றைய தலைமுறையினர் வெட்ட வெளியைக்கூட சென்று பார்க்காமல், அலை பேசியில் பார்த்து ரசிக்கிறார்கள். ஆன்லைன் வகுப்புகள் வந்தபிறகு அலைபேசிகள் தரக்கூடாது என இனி விவாதிக்க முடியாது. எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் அதில் நல்லதைப் பயன்படுத்தவும், கெட்டதை விலக்கி வைக்கவும் சொல்லி வழிகாட்டவேண்டியது பெற்றோர் கடமை. சமூகத்தைக் குறைசொல்வதால் பாதிக்கப் பட்ட நம் குழந்தைகளின் வாழ்க்கையை யாராலும் மாற்றமுடியாது. பரந்த உலகையும், பலதரப்பட்ட மனிதர்களின் வகைகளையும் எடுத்துக் கூறி, எப்படி நடக்கவேண்டும் என்பதையும் கற்றுத்தர வேண்டியது பெற்றோர்களின் கடமை. இதுதான் சிறந்த பரிகாரம்.

செல்: 96003 53748