இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
53
பாவத்தொடர்பு என்பது பாவமுனையின் நட்சத்திர அதிபதி, பாவத்தின் அதிபதி, பாவத்தில் நிற்கும் கிரகம் மற்றும் அந்த கிரகம் அமையும் நட்சத்திரத்தின் அதிபதி ஆகியவர்களின் தொடர்பே யாகும். ஒரு பாவத்தின் பதினோறாம் பாவமே அந்த பாவத்தை இயக்கும். அதன் மூன்றாம் பாவம் அதனால் இயங்கும். உதாரணத்திற்கு, பன்னிரண்டு, இரண்டு, நான்காம் பாவங்கள் ஒன்றையொன்று வரிசைக்கிரகமமாகத் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியும். இரண்டாம் பாவத்தின் தொடர்பைப் பெறாமல், பன்னிரண்டாம் பாவமும் நான்காம் பாவமும் நேரடித் தொடர்பிலிருந்தால், ஜாதகருக்கு சொத்து இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலையை உண்டாக்கும். அரிசி பானையோடு தொடர்புகொண்டு, பானை நெருப்புடன் தொடர்பு கொண்டால் மட்டுமே உணவு தயாராகும். அரிசி நேரடியாக நெருப் புடன் தொடர்புகொண்டால் பாழாகும். இடைத்தளம் (interface) மிகவும் முக்கியமானது. அவ்வாறு ஏற்படும் தொடர்பு நட்சத்திர அதிபதியால் ஏற்படுகிறதா அல்லது பாவத்தின் அதிபதியால் ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்தால் மட்டுமே பலன் களைத் துல்லியமாகக் கூறமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""பசுபதியே! சஞ்சித, பிராரப்த, ஆகாமிய கர்மாக்களால் மனிதர்கள் ஓயாமல் பிறவி யெடுத்து துன்புறுகிறார்கள். தீய கர்மாக் களையும், நற்கர்மாக்களையும் எவ்வாறு இனம் காண்பது என்பதை எளியோரும் உணருமாறு விளக்கியருள வேண்டு கிறேன்'' என அன்னை கருணாம்பிகை அவிநாசி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு அவிநாசியப்பரைப் பணிந்து கேட்டாள்.
அக்னீஸ்வரர் உரைத்தது- ""எவனும் எப்பொழுதும் ஒரு கணம்கூட கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. ஒருவரின் நிழல் அவரைப் பின்தொடர்வதுபோல, கன்றானது தன் தாய்ப்பசுவைத் தவறாமல் சென்றடைவதுபோல, ஒருவன் செய்த நல்வினையும் தீவினையும் உரிய காலத்தில் தவறாமல் அவனைச் சென்றடைகிறது. குழந்தை, தன் தாய்ப்பாலோடு தோன்று வதுபோல, எல்லா உயிர்களோடும் அதற்கான உணவும் படைக்கப்படுகிறது. ஆற்றில் வாழும் மீன் சேற்றில் தன் இரையைத் தேடாமல், தீவினை எனும் தூண்டிலில் மாட்டி உயிரிழக்கும். முயற்சியில்லாமல் பலனைப் பெறும் கர்மாக்களே தீவினையைத் தரும். இப்பிறவியில் செய்யும் ஆகாமிய நற்கர் மாவால், மறு பிறவியில் ஏழ்மையில்லாத ஜீவனம், சஞ்சலமில்லாத மனம், ஆயாச மில்லாத மரணம் போன்ற நற்பலன்களைப் பெறுவான்.''
""ஆதி குருவே! "விருச்சிக குட்டிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய மக நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், அனுஷம் மூன்றாம் பாதத்தில் குருவும், மூலம் இரண்டாம் பாதத்தில் புதனும், மூலம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், திருவோணம் முதல் பாதத்தில் சூரியனும், சதயம் மூன்றாம் பாதத்தில் செவ்வாயும், ரேவதி முதல் பாதத்தில் சனியும், திருவாதிரை முதல் பாதத்தில் சந்திரனும், அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருவாளொளிப்புத்தூர் எனும் திருத் தலத்தில் அருள்புரியும் மாணிக்கவண்ணரை அன்னை வண்டமர் பூங்குழலி வினவினாள்.
ஞானகுரு உரைத்தது- ""உமையவளே! இந்த ஜாதகன் முற்பிறவியில் மணவழகன் எனும் பெயருடன், வரிச்சூர் என்ற ஊரில் வாழ்ந்தான். இளம்வயதில் உழைக்க மறுத்ததால், அவன் மூதாதையரின் சொத்துகள் நீரிலிட்ட உப்பாகக் கரைந்து போயின. வறுமையின் கோரப் பிடியில் சிக்கினான். வேறு வழியறியாது தன் தலைமகனை குழந்தையில்லாத தம்பதியருக்கு விலைக்கு விற்றான். தடைசெய்த தன் மனைவி யின் சொல்லையும் தவிர்த்தான். மகா பாதகத்தால் பெருந்தனம் பெற்றான். கண்ணை விற்று சித்திரம் வாங்கியதுபோல, அற்ப காசுக்காகத் தன் மழலைச் செல்வத்தை இழந் தான். அந்திமக் காலத்து இருளில் பார்வை யிழந்து. கிடந்தொழிந்தான். ஈமச்சடங்கு செய்யத் தலைமகனின்றி, பிரேத சரீரத்துடன் பலகாலம் துன்புற்று, முப்பாழுக்கு அப்பால் நரகம் கண்டான். பலகாலம் கழித்து, பாவமூட்டை யைச் சுமந்து மண்ணுலகம் வந்து சேர்ந்தான்.
குமரன் என்று பெயரிடப்பட்டு, செல்வச் செழிப்புடன் வளர்ந்தான். வாலிபப் பருவத்தில் தன் நெஞ்சுக்கினியவளின் கரம் பற்றினான். குமாரனைப் பெறாமலே குமரன் முதுமகனாக மாறினான். முன்ஜென்ம வினைப்பயனால் வாரி சில்லாமல் வாடுகிறான். இதற்குப் பரிகாரமாக "சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம்' செய்தபின், ஒரு ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவர, சிறிது காலத்தில் இவனுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.''
(வளரும்)
செல்: 63819 58636