புதன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த மிதுன லக்னத்தினர் புத்திக்கூர்மை, சகிப்பு தன்மையும், பொறுமை உடையவர்கள். எல்லா காரியங்களையும் திறமையாக செய்துமுடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். பல விஷயங்கள் தெரிந்தாலும் எதுவும் தெரியாதவர் போல் இருப்பார்கள். சிறிய விஷயத்திற்குக்கூட அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பார்கள். சகோதர- சகோதரிகளுக்காக பாடுபட்டு உழைப்பவர். ராசிக்குரிய இரட்டை உருவத்தைபோல இருவேறு மனநிலை உடையவர்கள். திடீர் திடிரென்று முடிவினை மாற்றிக்கொள்ளக் கூடியவர்கள். சில நேரங்களில் அவை நண்மையாகவும், பல நேரங்களில் தீமையாகவும் முடிந்துவிடும்.
முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து முடிவெடுத்தால் அவை உங்களுக்கு சாதகமாக அமையும்.
சுகபோகமான வசதி வாய்ப்புகள், வீடு, வாகனம், பயணங்கள் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். மனிதர்களை சுலபமாக இனம் பிரிப்பதில் மிதுன லக்னத்தினர் வல்லவர்கள். அதாவது யார் நல்லவர்- யார் கெட்டவர் என்பதை ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் எடைபோட்டு விடுவர். அதனால் இவர்களை ஏமாற்றுவது சற்று கடினம்.
மிதுன லகனத்திற்கு ஜாதகத் திலுள்ள மற்ற கிரகங்கள் வலுவாக இருக்கும்பட்சத்தில் மிகச்சிறந்த படிப்பாளியாகவும், அறிவாளியாகவும், கணக்கில் புலியாகவும் இருப்பார்கள். இனி தசா புக்திக்கான பரிகாரங்களைக் காணலாம்.
புதன் தசை
மிதுன லக்னத்திற்கு புதன் லக்னாதிபதி மற்றும் நான்காம் அதிபதி. மிதுனத்தில் ஆட்சிபலம் பெற்ற புதனும் கன்னியில் உச்சமடைந்த புதனும் கேந்திராதிபத்திய தோஷத்தை ஏற்படுத்துவார்கள். புதன் மீனத்தில் நீசம் பெற்று தசை நடத்தினாலும், தன் சுய வீடான கன்னியைப் பார்ப்பதால் நல்ல பலன்கள் நடக்கும். பெரும்பாலும் புதன் சூரியன், சுக்கிரனுடன் இணைந்து அல்லது அடுத்தடுத்த ராசியில் பயணிப்பதால், புதன் தசை மிதுன லக்னத்திற்கு திருப்புமுனையாக வரப்பிரசாதமாக அமையும்.
புதனுக்கு சூரியன், சுக்கிரன் சம்பந்தம் எந்த இடத்தில் இருந்தாலும் புதன் தசை காலத்தில் ஆதிபத்திய ரீதியான சுபப்பலனை வழங்கத் தவறுவதில்லை. இளம் பருவத்து புதன் தசை கல்வியில் தனித் திறமையுடன் மிளிர வைக்கும். பெரும்பான்மையான மிதுன லக்னத் தினர் ஜோதிட ஆர்வளராக, ஜோதிடராக இருப்பார்கள். மத்திம வயது புதன் தசை தொழிலில் உன்னத நிலையை வழங்கும். புத்திக்கூர்மையால் வெற்றிமேல் வெற்றி தொடரும். கலைத்துறை, ஜோதிடம், அரசியல், அரசுப் பணி, ரியல் எஸ்டேட், தூதுரகம் போன்ற அனைத்து துறையிலும் வெற்றியைக் குவிக்கும். புதன் தசைக்கு முந்தைய தசையான சனி தசையில் ஏற்பட்ட இழப்பு, அவமானம், நோய் பாதிப்பு, கடன் தொல்லை போன்ற அனைத் திலிருந்தும் முழு நிவாரணம் வழங்குகிறது.
புதன் அசுப பலம்பெற்று தசை நடத்தினால் சொத்துகள் மற்றும் தொழிலால் மன உளைச்சல் மிகும். ஆரோக்கிய குறைபாடு மிகும்.
பரிகாரம்: புதன்கிழமை புதன் ஓரையில் மதுரை மீனாட்சியை வணங்கவேண்டும்.
சந்திர தசை
மிதுன லக்னத்திற்கு சந்திரன் தனம், வாக்கு குடும்ப ஸ்தானாபதி. வாக்கு ஸ்தானாதிபதியாக சந்திரன் இருப்பதால் கடகத்தில் ஆட்சி பலம்பெற்ற சந்திரனும், மீன ராசியில் நின்ற சந்திரனும் பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழில்மூலம் அதிகப்படியான பொருளாதாரத்தை வழங்குகிறது. சந்திரன் எந்த இடத்தில் நின்று தசை நடத்தினாலும் ஏதாவதொரு விதத்தில் தேவைக்கு வருமானம் கிடைக்கும். சந்திரன் என்றால் நீர். தான் இருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப நீர் தன்னை வடிவமைத்துக்கொள்ளும்.
அதேபோல் மிதுன லக்னத்தினர் தனது பேச்சுத் திறமை யால் தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ்வார்கள்.
இவர்கள் உணவுப் பிரியர்கள். நன்றாக சமைப்பார்கள். நன்றாக சாப்பிடுவார்கள். தன் பேச்சுத் திறமையால் குடும்ப உறவுகளை கட்டுக் கோப்பாக வழிநடத்துவதில் வல்லவர்கள்.
பொதுவாக சந்திரன் 6, 8, 12-ல் மறைவது சிறப் பில்லை. சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நின்று தசை நடத்தினால் வட்டி கட்டியும், நோய்க்கு வைத்தியம் செய்தும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தும், சரியான குடும்ப வாழ்க்கை அமையால், குடும்ப உறவுகளை அனுசரிக்க முடியாமல் நிம்மதியின்றி தவிக்கிறார்கள். வெளிநாட்டில் வாழ்பவர்கள் சில சிறப்பான பலன்களை அனுப்பவித்தாலும் மறைந்த சந்திரன் மிதுன லக்னத் திற்கு பாதகமே.
சந்திரனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் தவறான நடத்தையால், பேச்சுக்களால் குடும்ப உறவு களை இழக்கிறார்கள். சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திரன் பாதிப்படைந்து தசை நடத்தினால் மன பாதிப்பும் ஏற்படுகிறது.
பரிகாரம்: புதன்கிழமை பாலாபிஷேகம் செய்து அம்பிகையை வழிபடுவது சிறப்பு.
சூரிய தசை
சூரியன் மிதுனத்திற்கு முயற்சி, சகாய ஸ்தானாதி பதி. லக்ன பாவத்தின் பாவத் பாவம் என்பதால் சூரியன் பலம்பெற்று தசை நடந்தினால் தொட்டது துலங்கும். எண்ணியதை ஈடேற்றும் திறமைசாலிகள். சுய முயற்சியில் வெற்றியடைவார்கள். திட்டமிட்டு தைரியமாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபமான வாழ்வியல் மாற்றம் தரும் இடமாற்றம் ஏற்படும். சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பொருட்கள் சேர்க்கை, போக சுகம் உண்டு.
தகவல் தொடர்பு ஸ்தானங்கள்மூலம் பிரபல மடைவார்கள். அதன்மூலம் ஆதாயம் கிடைக்கும். தகவல் தொடர்பு சாதனங்களான யூடியூப், டிவிட்ட், ர், ஃபேஸ் புக், செய்தித் தாள் போன்றவற்றின்மூலம் ஒருவர் பிரபலமடைய மூன்றாமிடம் பலம்பெற வேண்டும். சுப கிரக சம்பந்தம் பெற்றால் நல்ல பெயர் கிடைக்கும். மூன்றாமிடம் அசுபத் தன்மையுடன் செயல்பட்டால் கெட்ட பெயரால் புகழ் பெறுவார்கள்.
சூரியன் அசுப பலத்துடன் தசை நடத்தினால் அண்டை, அயலாருடன் இணக்கம் இருக்காது. ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை இருக்கும். பொருந்தாத இடமாற்றம், அவதி இருக்கும். சகோதரர்கள் உதட்டளவில் மட்டும் உறவாடு வார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்கள். செவித்திறன் குறைவுண்டு. எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்வார்கள்.
பரிகாரம்: புதன்கிழமை சூரிய நாராயணரை வழிபடவும்.
சுக்கிர தசை
மிதுனத்திற்கு கக்கிரன் 5, 12-ஆம் அதிபதி. சுக்கிரன் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி என்பதால் இந்தப் பிறவியில் அனுபவிக்கவேண்டிய அனைத்து நன்மைகளும் நடக்கும்.
சுக்கிரன் பலம்பெற்று தசை நடத்தினால் மனத் தடுமாற்றம் நீங்கும். விவேகத்துடன் செயல்படுவார்கள். நிதானம், தைரியம், தெம்பு குடிபுகும். வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பல பிரச்சினைகள் குறையத் துவங்கும். சிறிய உழைப்பில் பெரிய லாபம் கிடைக்கும். உழைப்பிற்கான சன்மானம் உடனே கிடைக்கும்.
கேது தசை காலங்களில் நடந்த கடந்தகால கசப்பான அனுபவங்கள், நிகழ்வுகளிலிருந்து விடுபடுவார்கள். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நடத்துபவர்களுக்கு தொழில் வளர்ச்சி இரட்டிப்பாகும்.
இதில் பணிபுரிபவர்களுக்கு தனித்திறமை வெளிப்பட்டு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அதிர்ஷ்ட சொத்து போன்ற பல வழிகளில் தனவரவு ஏற்படும். புதிய தொழில் துவங்கும் முயற்சிகள் வெற்றிபெறும். தந்தைவழி ஆதாயமும் அனுகூலமும், பூர்வீக சொத்தும், முன்னோர்களின் நல்லாசியும் நிரம்பப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் விருப்பம் அதிகரிக்கும். திருமணத்தடை அகலும். காதல் திருமண வாய்ப்பு அதிகமாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு சுப விரயமும் சிலருக்கு வீண் விரயமும் ஏற்படலாம்.
மிதுனத்திற்கு துலாத்தில் ஆட்சி பலம்பெற்ற சுக்கிரன் வழங்கும் பலனும், மீனத்தில் உச்சம்பெற்ற சுக்கிரனும் வழங்கும் பலன்கள் அளப்பரியது. ரிஷபம் விரய ஸ்தானம் என்பதால் ஆதிபத்தியரீதியாக சில விரயங்களையும், இழப்புகளையும் வழங்குகிறது என்பது அனுபவ உண்மை.
பரிகாரம்: புதன்கிழமை நெய்தீபமேற்றி மகாலட்சுமியை வழிபடவும்.
செவ்வாய் தசை
மிதுனத்திற்கு செவ்வாய் 6, 11-ஆம் அதிபதி. ஃபேஸ்புக், யூடியுப் போன்ற வற்றில், மிதுன லக்னத்திற்கு செவ்வாய் தசையைப் பற்றி சிறப்பான பலன் பலரும் சொல்லவில்லை. புதன் மிதுனத்திற்கு 6-ஆமதிபதி மற்றும் புதனும் செவ்வாயும் பகை கிரகங்கள் என்பதால் சரியாக பலன் தராத தசை என்று கூறுகிறார்கள்.
அவரே லாபாதிபதி என்பதை மறந்து விடுகிறார்கள். எந்த லக்னமாக இருந்தாலும் எந்த தசையாக இருந்தாலும் ஏற்கெனவே நடந்து முடிந்த தசைக்கும் இனி அடுத்து வரப்போகும் தசைக்கும் சம்பந்தம் உள்ள பலன்கள் கண்டிப்பாக நடக்கும். பிறரு டைய கருத்தைப் விமர்சிப்பது தவறு. என் அனுபவத்தில் 6, 11-ஆமிடம் உபஜெய ஸ்தானம். 6-ஆம் பாவகத்தின் மேலான ஆதிபத்திய காரகத்துவங்கள் கடன், நோய், வம்பு, வழக்கு, எதிரி, விபத்து, வேலை, மாமன், விவாகரத்து, அசிங்கம், அவமானம் போன்ற காரகத்துவங்கள் எல்லாமே ஒரு ஜாதகருக்கு வரும் என்ற அவசியமில்லை. ஆனால் ஜாதகத்திற்கு ஏற்ப நிச்சயம் ஏதேனும் ஒன்றிலிருந்து இரண்டு வரும். அது எது என்பதைக் கண்டறிவது ஜோதிடரின் திறமை.
நமது "பாலஜோதிட'த்தில் அக்டோபர் 2018-ல் வானளாவிய தொழில் ஏன் சரிகிறது என்று உதாரண ஜாதகத்துடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். பல "பாலஜோதிட' வாசகர்களால் விரும்பப்பட்ட கட்டுரை.
அந்தக் கட்டுரை உண்மை சம்பவம்.
அந்த ஜாதகர் மிதுன லக்னம். சந்திர தசையில் வாழ்க்கையின் விளிம்பிற்குச் சென்றவர் செவ்வாய் தசையில் இழந்ததை மீட்டுவிட்டார். இதுபோல் செவ்வாய் தசையில் கடனில் மீண்ட பல ஜாதகங்களை உதாரணத்திற்குத் தரமுடியும். 6-ஆம் அதிபதியின் தசை வரும்பொழுது, லக்னத்திற்கு 6-ஆம் அதிபதி எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார், 6-ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் அமர்ந்திருக்கிறது, அந்த கிரகங்கள் எந்த ஆதிபத்தியத்திற்கு சொந்தக்காரர்கள், 6-ஆம் வீட்டின் மற்றும் 6-ஆமதிபதி நின்ற வீட்டின் சுபத்தன்மை, பாவத்தன்மையை பொருத்து 6-ஆம் வீட்டின் பலன் 6-ஆமதிபதியின் தசையில் அமையும். இங்கு சாரம் மிக மிக அவசியம்.
அதாவது 6-ஆமதிபதி மற்றும் 6-ஆமதிபதி நின்ற இடம் சுபத்துவமாக இருக்கும்பொழுது சாரம் பெரிதும் பாதிப்பதில்லை என்றாலும், சாரம் கொடுத்தவன் 6-ஆம் வீட்டிலோ அல்லது 8-ஆம் வீட்டிலோ இருக்கும்பொழுது பலன் சிறப்பாக இருக்காது. மாறாக கெடுபலனைக் கொடுக்கும்.
இரு ஆதிபத்தியம்கொண்ட கிரகத்திற்கு ஒரு ஆதிபத்தியம் பலன் கொடுத்தால் மற்றொரு ஆதிபத்தியப் பலனைச் செய்வது யார்? ஜாதகம் பார்க்க வரும் பலரும் மிதுன லக்னம் செவ்வாய் தசை வாழ்க்கையே முடிந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். இது அவசியமில்லாத பயம். என் அனுபவத்தில் பல மிதுன லக்னத்தினர் செவ்வாய் தசையில் புதியதாக கடன்பெற்று சுயதொழில் நடத்தி பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
பரிகாரம்: புதன்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.
குரு தசை
குருபகவான் மிதுனத்திற்கு 7, 10-ஆமதிபதி. களத்திர ஸ்தானாதிபதி. தொழில் ஸ்தானாதிபதி. உபய லக்னம் என்பதால் ஏழாமதிபதியான குருவே பாதகாதிபதி, மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதியாக இருப்பதால் குரு சுப வலுப் பெறக்கூடாது. வயோதிகத்தில் ஓய்வுக் காலத்தில் குரு தசை வருவது நல்லது.
குரு தசை நடக்காதவரை இவரே ராஜா. ஆட்சிபலம் பெற்ற குரு திருமணத்தில், திருமண வாழ்க்கையில், தொழிலில், கூட்டாளிகளால் மற்றும் நண்பர்களால் சுபத்தைவிட அசுபத்தையே மிகுதிப் படுத்துவார். குருவுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு பாதகமும், மாரகமும் கண்டமாக பின்தொடர்ந்து துயரம் தரும். மிதுனம் உபய லக்னம் என்பதால் பிரச்சினை தீவிரமடையுமா? வலுவிழக்குமா என்பதை கோட்சார குரு, சனி, ராகு, கேதுக்களே முடிவு செய்யும்.
பாதகாதிபதி குருவே மாரகாதிபதியாக இருப்பதால் கொடிகட்டிப் பறந்த பல மிதுன லக்னத்தினர் குரு தசை காலங்களில் கடுமையான பாதகம் கலந்த மாரகத்தை சந்தித்திருக்கிறார்கள். லக்னம் மற்றும் ஏழாமிடத்தில் ஆட்சிபலம் பெற்ற குரு பல மிதுன ராசியினருக்கு திருமணம் என்ற அத்தியாயத்தைத் தரவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
பல மிதுன லக்னத்தினர் திருமண வாழ்க்கையில் தோல்வியைத் தான் சந்தித்திருக்கிறார்கள். குரு, சனி சம்பந்தம் பல மிதுன லக்னத்தினருக்கு பொருளாதாரத்தில் தன்நிறைவை தந்தாலும் திருமணம் வாழ்க்கையில் தோல்வியையும் விரக்தியையும்தான் சந்திக்கிறார்கள். சிலருக்கு நண்பர்களால் ஏற்பட்ட சாதகத்தைவிட பாதகம் கலந்த மாரகமே அதிகம். எனவே குரு தசை புக்திக் காலங்களில் மிதுனத்தினர் கவனத்துடன் செயல்படவேண்டும்.
பரிகாரம்: புதன்கிழமை திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.
சனி தசை
மிதுன லக்னத்திற்கு சனி அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. புதனும் சனியும் நட்பு கிரகங்கள். அதனால் சனி தசை புக்திக் காலங்களில் பாதிப்பிருக்காது என்பது சிலரின் கருத்து. சனி சுப வலுப்பெற்று தசை நடத்தினால் பூர்வீகத்தைவிட்டு வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் வாழ்வார்கள். விபரீத ராஜயோகமாக திடீர் அதிர்ஷ்டம், பண வரவுகள் ஏற்படும்.
சனி அசுப வலுப்பெற்று தசை நடத்தினால் வேலை, தொழில் இழப்பு, கஷ்ட ஜீவனம் விரும்பத்தகாத இடப்பெயர்ச்சி, கடன் தொல்லை, ஜாமின் பிரச்சினை ஏற்படும். உடல்நலம் குறையும். வைத்தியச் செலவு, அதிகரித்துக்கொண்டே இருக்கும். சொல்லாலும் செயலாலும் ஒன்றமுடியாது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத சூழல் ஏற்படும். புதிய வம்பு, வழக்குகள் அவமானம் கதவைத் தட்டும். அஷ்டமச் சனி, ஏழரைச்சனி நடந்தால் பாதிப்பு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.
அதேபோல் ஆயுள் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. உண்மையில் இழுத்துக்கோ பரிச்சுக்கோ என மரணப் படுக்கையில் இருப்பவர்கள்க்கூட நன்கு தேறிவிடுவார்கள்.
பரிகாரம்: தினமும் காலபைரவரை வழிபடவேண்டும்.
ராகு தசை நடப்பவர்கள் சரபேஸ்வரரை வழிபடவேண்டும். கேது தசை நடப்பவர்கள் ஆஞ்சனேயரை வழிபடவேண்டும்.
தொடரும்....
செல்: 98652 20406