இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

52

லால்குடி கோபாலகிருஷ்ணன்

கிரகப் பார்வையென்பது நோக்குதல் என்றே பொருள் படும். நோக்கமே நோக்குதலின் காரணமாவதால், கிரகங்களின் ஒவ்வொரு பார்வைக்கும் பலன் மாறுபடும். உதாரணத் திற்கு, குரு பகவானுக்கு ஐந்து, ஏழு, ஒன்பதாமிடப் பார்வை யுண்டு. தோள் கொடுக்கும் தோழருக்கும், வாழ்க்கைத் துணை அல்லது கூட்டாளிக்கும், வழி நடத்தும் ஆசானுக்கும் ஒரே வேலையில் பங்களிப்பு மாறுபடுவதுபோல, கிரகப் பார்வையின் பலனும் மாறுபடும். பங்காளி யின் பங்களிப்பே பிரதானம் என்பதால், எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை யுண்டு. ஸ்பரிச தீட்சைபோல நயன தீட்சை யும் முக்கியத்துவம் பெறும். படுவர்மம் போல, நோக்கு வர்மமும் தாக்கத்தை உண்டாக்கும். பாவத்தொடர்பைப்போல பார்வைத் தொடர்பும் வலிமையானதே.

Advertisment

கிரகங்கள் அமையும் பாவங்களுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்படுவதுபோல, ஒவ்வொரு கிரகப் பார்வையாலும் ஏற்படும் பலன்களை "கந்தர்வ நாடி' விளக்குகிறது. ""கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே! "சாமானிய மனிதரிடையே வாழ்ந்தாலும், தவயோகியின் வாழ்க்கை மட்டும் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தாங்கள் விளக் கியருள வேண்டுகிறேன்'' என அன்னை சத்யானந்த சௌந்தரி, திருமுல்லைவாயில் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு முல்லைவனநாதரைப் பணிந்து கேட்டாள்.

g

திரிசூலநாதர் உரைத்தது- ""குழுமிய மனி தரிடையே கருத்தில் தனித்தும், எப்போதும் ஞானத்தேடலில் பசித்தும், உறங்கும் மாய உலகில் விழித்தும் இருப்பவனே தவயோகி. தன் பிறப்பின் காரணமறிந்தும், ஜீவனும் பரம்பொருளும் கொள்ளும் ஸ்த்ரீ, புருஷத் தொடர்பை உணர்ந்தும், ஆழ்கடல்போல ஆரவாரமில்லாதவாக, தன்னை இவ்வுலகிற்கு வெளிக்காட்டாமல் வாழ்பவனே தவயோகி.''

Advertisment

""ஆடல் அழகரே!' "தண்டரேசிதம்' எனும் தாண்டவத்தின் லயமா கிய மகம் முதல் பாதத் தில் லக்னமும், ஹஸ்தம் முதல் பாதத்தில் சனியும், சித்திரை முதல் பாதத் தில் செவ்வாயும், ஸ்வாதி நான்காம் பாதத்தில் சூரியனும், அனுஷம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்க, திருவோணம் நான்காம் பாதத்தில் குருவும், ரேவதி இரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருக்கலிகாமூர் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் சுந்தரேஸ்வரரை அன்னை அழகம்மை வினவினாள்.

ருத்திரன் உரைத்தது- ""ஆரணங்கே! இந்த ஜாதகி முற்பிறவியில் வாசுகி எனும் பெயருடன், ரங்கபுரம் என்ற ஊரில் வாழ்ந்தாள். இளம் வயதில் பேரழகியாக இருந்ததால் அவளை மணமுடிக்க காளையர் கூட்டம் அலைமோதி யது. முடிவில், சுயம்வரத்தில் தனபாலன் எனும் பெரும் தனவானை மணந்து இல்லறம் புகுந்தாள். தன் அழகினால் பெற்ற பெருமிதத் தால் செருக்குற்றாள். காவலனாயிருந்த கணவன் கேவலப்பட்டு ஏவலனானான். தன் மணாளனை மதிமயக்கி, அவன் பெற்றோரிட மிருந்து பிரித்தாள். இதனால், தனபாலன் தன் தாய், தந்தைக்கு ஈமச்சடங்கும் நிறைவேற்ற முடியாமல் போனது.

கலைமான், தன் கொம்பின் அழகில் பெருமிதம் கொள்ளும். ஒரு நாள், கொம்பின் கிளை, மரக்கிளையினில் மாட்டி, புலியின் பசிக்கு பெருவிருந்தாகும். பேரழகியின் வாழ்வில் வசந்தம் முடிந்து இலையுதிர்க்காலம் தொடங் கியது. இளமையோடு, அழகும் உதிர்ந்தது. காதோரம் முதுமை முகம் காட்டியது. கொண்டவன் கைவிட்டான். கண்டவரும் தூற்றினர். மனம் நொந்தாள். விஷமருந்தி மாண்டாள். முகில்போல துகிலணிந்தவள் நீல வானமானாள். மரணத்தை துரிதமாக்கிக் கொண்டதால் பிரேத சரீரம் மாறாது பலகாலம் துன்புற்று, ஆயுள்முடிந்ததும் "கால சூத்திரம்' எனும் நரகம் சென்றாள். சிலகாலம் கழித்து நரகத்திலிருந்து பூவுலகிற்குக் குடியேறினாள். கடலாடி எனும் ஊரில் பிறந்து, பூங்கோதை என்று பெயர் பெற்றாள். அரிவையாய் இருக்கை யில் மணம்முடித்து மக்கட்பேறு பெற்றாள்.

Advertisment

வினைப்பயன் விழித்தது. வெண்குட்ட நோயில் சிக்குண்டாள். மணாளனும், மக்களும் விலகிப் போயினர். முன்ஜென்ம வினைப்பயிர் அறுவடையானது. துன்பத்தில் விக்கித்துப் போனாள். இதற்குப் பரிகாரமாக, தன் கண வரின் பெற்றோருக்குப் பாதபூஜை செய்து அதன்பின் பணிவிடை செய்துவர, நோய் மறைந்து சுகம் பெறுவாள்.''

(வளரும்)

செல்: 63819 58636