இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

27

ஜாதக ஆய்வில் "சந்தி' என்று சொல்லப்படும் ராசி சந்தி, லக்ன சந்தி, நட்சத்திர சந்தி, தசா சந்தி எனும் சந்திக்கும் இடங்கள் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஜாதகத்தில் சந்திரன் மேஷ ராசியின் கடைசிப் பாகை- கலை- விகலையில், கிருத்திகை முதல் பாதத்தில் அமர்ந்தால், அந்த ஜாதகர் மேஷ ராசியின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பாரா அல்லது ரிஷப ராசியின் தன்மைகளைப் பிரதிபலிப்பாரா என்று அறியவேண்டியது அவசியமாகிறது. ராசி சந்தி அல்லது பாவ சந்தியில் இருக்கும் எந்த ஒரு கிரகமும், தான் சஞ்சரிக்கப்போகும் அடுத்த ராசி அல்லது பாவத்தின் பலனையே தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

sivan

""சகல உயிர்களுக்கும் உணவளிக்கும் தயாநிதியே! பூவுலகில் பிறக்கும் ஜீவர்களில் சிலர் மட்டும் ஞானிகளாக இருக்க, பலரும் "இறப்பதற்காகவே பிறந்தோம்' என்று வாழ்க்கையை வீணாக்குகிறார்கள். வீணர்களும் மனந்திருந்தி ஞானமார்க்கத்தை உணரும் வகையில் நல்லுபதேசத்தைச் செய்தருள வேண்டும்'' என அன்னை பெரியநாயகி, திருப்பனந்தாளில் அருள்புரியும் அருணசடேஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.

அதற்கு ஜடாதரர் உரைத்தது- ""மனம் தொடுக்கும் எல்லா கேள்விகளுக்கும் மறுமொழி அளிப்பவன் முடிவில் குழப்பமடைகிறான். அவன் வாழ்க்கை குடைசாய்ந்த வண்டியாகிறது. ஞானியோ தன் மனதையே கேள்வி கேட்கிறான். தன்னைத்தானே வெல்கிறான்.

மனதின் சிறப்பினை அறியாதவன், பொன்னாலான ஓட்டினை ஏந்தி யாசகம் பெறுபவனைப் போலாகிறான். உடல் உறங்கும்போது ஆழ்மனம் விழித்திருக்கும்; உடலின் விழிப்பில் ஆழ்மனம் உறங்கிப்போகும் என்பதையறிந்து, எப்போதும் ஆழ்மனதை "விழித்திரு' என்று கட்டளையிடுபவனே ஞானமார்க்கத்தின் முதல் படியில் நிற்கிறான்.''

""ஒப்புயர்வற்ற ஒளிப்பிழம்பே! "பிருஷ்டஸ்வஸ்திகம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், கேட்டை இரண்டாம் பாதத்தில் குருவும், மூலம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், சதயம் மூன்றாம் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்க, உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் சுக்கிரனும், அஸ்வினி நான்காம் பாதத்தில் சந்திரனும், பரணி இரண்டாம் பாதத்தில் சனியும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் தயைக்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருமணஞ்சேரி திருத்தலத்தில் அருள்புரியும் ஐராவதேஸ்வரரிடம் அன்னை மலர்குழல்நாயகி வினவினாள்.

திருஎதிர்கொள்பாடி உடையார் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முன்ஜென்மத்தில் செய்த நல்வினைப்பயனால், விதங்கபூர் எனும் நகரில் ஒரு செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தான். கல்வியில் சிறப்புற்று, அரசின் தலைமை அதிகாரியானான். கூடையிலிருக்கும் செல்வத்தை குன்றுபோலாக்க எண்ணி, பேராசையால் பொதுமக்களிடம் கையூட்டுப் பெற்றான். ஊருக்குப் பொதுவாயுள்ள நிலங்களைத் தன் சுகபோக வாழ்விற்காக கையகப்படுத்தினான். திருமண பாக்கியமும் இல்லாமல் போனது. தன் தவறுக்குப் பரிகாரமாக தான, தருமங்களைச் செய்தான்.

ஆனாலும், பரிகாரங்கள் பயனளிக்கவில்லை. களவாடிய செல்வத்தில் பரிகாரம் செய்வது, கடலில் உப்பைக் கலப்பதுபோல பயனளிக்காது போகும் என்பதை அவன் உணரவில்லை. தீய பழக்கங்களால் நோயுற்று அங்கஹீனம் ஏற்பட்டது. உற்றார்- உறவினரும் அருகில் இல்லாமல் அனாதையாய் இறந்தான். பிணம் உண்ணும் கழுகுபோல், பலரும் அவன் செல்வத்தைக் கவர்ந்து சென்றனர். ஜாதகன் செய்த தீவினையால் மரணத்திற்குப் பின்னும் "பாதகன்' என்ற பழிசுமந்தான். பிறரின் செல்வத்தை அதிகாரத்தால் அபகரிப்பவனுக்கு எந்தப் பரிகாரமும் பயனளிக்காது என்பதே உண்மை.''

(வளரும்)

செல்: 63819 58636

நாடி ரகசியம்

1. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் ஒரு பாவத்தில் கூடியிருக்கும் ஜாதகருக்கு செல்வமும் செல்வாக்கும் வாழ்க்கையில் கூடியிருக்கும்.

Advertisment

2. துலா லக்னக்காரர்களுக்கு ஏழாம் பாவத்தில் சூரியனும், நான்காம் பாவத்தில் சந்திரனும் இருக்க, திடீர் தனவரவால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

3. புதன், சுக்கிரன், குரு கூடி மூன்றாம் பாவத்திலிருக்க, தைரியம் குறையும்.

கேள்வி: "அந்தணன் (குரு) தனித்திருக்க அவதியுண்டாகும்' என்று சொல்லப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் குரு பகவான் தனித்து ஒரு பாவத்திலிருக்க, அந்த பாவ காரகம் கெடுமா?

Advertisment

பதில்: கூட்டத்திலிருந்து பிரிந்துவந்த ஒற்றை யானை எவ்வளவு ஆபத்தானதோ, அதுபோல் யானையையே வாகனமாகக்கொண்ட குரு பகவானும் தனித்திருக்க தீய பலன்களையே கொடுக்கும் குரூரன் என்பதே ஜோதிடம் சொல்லும் உண்மை. ஒரு பயணத்தைத் தொடங்கும்போது ஒற்றை அந்தணன் எதிர்ப்படுவது கெட்ட சகுனமாகவே கருதப்படுகிறது. தனித்த தங்கத்தில் ஆபரணங்களைச் செய்ய முடியாததுபோல், பொன்னவன் தனித்திருக்கப் பயனில்லை. செம்புக்கு உரியவரான செவ்வாயுடன் சேரும்போது, குருமங்களயோகம் உண்டாகிறது. இதுபோல குரு, வெவ்வேறு கிரகங்களுடன் இணையும்போது மட்டுமே நல்ல பலனைத் தருவார். குரு மட்டுமல்லாது பிற கிரகங்களும் ஒன்றோடு ஒன்றிணையும் கூட்டு கிரகப் பலனையும் "கந்தர்வ நாடி' விரிவாக விளக்குகிறது.