இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
25
வாழ்வில் வெற்றிபெற குறிக்கோளும் முயற்சியும் அவசியம். திரிகோணத்தில் தொடர்புகொள்ளும் கோள்கள் காட்டும் குறியே குறிக்கோளாகும். அதுவே ஜாதகரின் ஆசை, ஆர்வம் போன்றவற்றை விளக்கும். ஜாதகரின் எண்ணம் நிறைவேறுவதற்கான முயற்சியை கேந்திரங்களுடன் தொடர்புடைய கிரகங்கள்மூலம் அறியலாம். திரிகோணத்தில் உள்ள ஒன்பதாம் பாவத்துடன்- கேந்திரத்துடன் தொடர்புடைய கிரகங்கள் சம்பந்தப்பட்டால், எண்ணம் நிறைவேறுவதற்கான சூழ்நிலை அமையும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் நான்கையும் விளக்கும் சதுர்வேதத்தின் நாயகனே! ஞான வேட்கையுள்ளவர்கள் குருவின் மூலமாகவே அறிவினைப் பெற வேண்டியுள்ளது.
அவ்வாறின்றி, இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்துள்ள அறிவாற்றலை குருவின் வழிகாட்டுதலின்றி தானாகவே பெறமுடியாதா?'' என அன்னை கனகாம்பிகை, திருநெல்வாயிலில் அருள்புரியும் உச்சிநாதேசுவரரைப் பணிந்துகேட்டாள்.
அதற்கு சிவபுரிநாதர் உரைத்தது- ""பூவில் தேன் நிறைந்துள்ளது என்றாலும், தேனீக்கள் மூலமாகவே தேனைப் பெறவேண்டியுள்ளது. கடலில் கரிப்புச் சுவையுள்ள நீர் பொங்கி வழிந்தாலும், அதைப் பருகும் நீராக மாற்ற மேகங்கள் தேவைப்படுகின்றன. அதுபோல, பிரபஞ்ச ரகசியங்களை உள்வாங்கி, தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும் பறவைகள்போல, குருவே தன் சீடர்களுக்கு ஞானத்தைப் புகட்டுகிறார்.''
""சந்திரனின் சாபம் நீக்கிய கம்சபுரத்து கற்பகத்தருவே! "உன்மத்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ரோகிணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், மிருகசிரீடம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், திருவாதிரை மூன்றாம் பாதத்தில் செவ்வாயும், மூலம் முதல் பாதத்தில் சனியும், பூராடம் முதல் பாதத்தில் குருவும், உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் சூரியனும், உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் புதனும், அஸ்வினி இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் தயைக்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று கஞ்சனூர் திருத்தலத்தில் அருள்புரியும் அக்னீஸ்வரரிடம் அன்னை கற்பகாம்பிகை வினவினாள்.
சாபம் போக்கும் சப்த ஸ்தானத்திலும் வீற்றிருக்கும் கஞ்சனூரார் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் பெரிய நிலச்சுவான்தாராக இருந்தான். ஊருக்குப் பொதுவான ஆற்று நீரை மடைமாற்றி, தன் நிலம் மட்டுமே பயன்பெறுமாறு அமைத்துக்கொண்டான். அதனால் ஊரிலுள்ள மற்ற நிலங்கள் நீரின்றி வாடிக் கருகிப்போயின. சிறு விவசாயிகள் வாழ்வாதாரமின்றி மாண்டனர். செல்வமும் செல்வாக்கும் மிகுந்த நிலச்சுவான்தார் செய்த தவறை யாராலும் தட்டிக்கேட்க இயலாமல் போனது. முதுமையில் ஒரு நாள் கிணற்றில் விழுந்து அகால மரணமடைந்து, "மகாரௌரவம்' எனும் நரகத்தில் புகுந்து துன்புற்றான். பூவுலகில் செய்த பஞ்சமா பாதகத்திற்கான பரிகாரத்தை பூவுலகில் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதால், முன்ஜென்ம கர்மவாசத்துடன் கோலாபுரி எனும் ஊரில் ஜனனமானான்.
அருணன் என்று பெயரிடப்பட்டு, ஒரு வேளாளர் குடும்பத்தில் வளர்ந்து வந்தான். இளம்வயதிலேயே சூளைநோய்க்கு ஆட்பட்டு வருந்துகிறான். நீரும் காற்றும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை என்பதை உணராது செய்த முன்ஜென்ம வினையால், இப்பிறவியில் வாடுகிறான். இதற்குப் பரிகாரமாக, மேலைத் திருக்காட்டுப்பள்ளி சென்று மாசி மகத்தில் அக்னித் தீர்த்தத்தில் நீராடியபின் நான்காம் ஜாமத்தில் கருப்பஞ்சாறு நிவேதனம் செய்து, வேதியரைக் கொண்டு சாமவேத பாராயணம் செய்ய வேண்டும். ஊர்மக்களின் தேவைக்கு நீர்நிலைகளை அமைத்துத் தந்தால், சூளைநோய் நீங்கி சுகம் பெறுவான்.''
(வளரும்)
செல்: 63819 58636