இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
பொதுவாக, கணப்பொருத்தம் என்பது திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு மட்டுமே உபயோகப்படும் கணிதமாக பிற்காலத்தில் மாற்றப்பட்டுவிட்டது. குணங்களின் அடிப்படையே கணம்.
ஒரு ஜாதகரின் முன்ஜென்ம வினை எதனால் உண்டானது என்பதை அறிந்துகொள்ள அவருடைய ஜாதகத்தில் லக்னம், சூரியன், சந்திரன் அமைந்துள்ள நட்சத்திர கணங்களைக்கொண்டு மட்டுமே ஆராயமுடியும் என்ற உண்மை மறைக்கப்பட்டுவிட்டது. நம் உடலால் செய்த பாவம், மனதால் செய்த பாவம், நம் முன்னோர்களால் வந்த பாவம் என்பதைப் பிரித்துப் பரிகாரம் செய்ய நட்சத்திர கணங்களின் தன்மையைக் கொண்டு மட்டுமே அறிய முடியும். இது தவிர, கிரகங்களும் பாவங்களும் அமைந்திருக்கும் நட்சத்திர கணங்களின் அடிப்படையில் தசாநாதனை ஆணாகவும், புக்திநாதனைப் பெண்ணாகவும் பாவித்து, தசா பலன் காண்பது துல்லியமான பலன்களைத் தரும். கிரக, பாவ சம்பந்தங்கள், பல கோணங்களில் "கந்தர்வ நாடி'யில் ஆராயப்படுகின்றன.
"முக்கண்ணால் மூவுலகத்தையும், மூன்று காலங்களையும் இயக்கும் யோகீஸ்வரரே! இக்கலியுகத்தில், மிருகங்களைப்போல் இரை (உணவு) தேடுவதிலேயே மனிதர்கள் வாழ்வின் பெரும்பகுதியை வீணாக்குகிறார்கள்.
அவர்களுக்கு இறையருளைத் தேட வழியில்லாமல் போகிறது. அங்ஙனம் உள்ளவர்கள் சஞ்சித கர்மாவைக் குறைக்கவும், ஆகாமிய கர்மாவைக் கூட்டாமலும் வாழ வழியுண்டா?'' என அன்னை நல்லநாயகி, திருவேட்களத்தில் அருள்புரியும் பாசுபதநாதரை பணிவுடன் கேட்டாள்.
அதற்கு மூங்கில் வனநாதர் உரைத்தது- ""அவரவர் முன்னோர் உபதேசித்த நெறிவழி நின்று, பெற்றோரைப் பேணி, பிற உயிர்களுக்குத் தீங்கிழைக்காமல் அறவழியில் பொருளீட்டினால், அவனைக்கண்டு தர்மமே தலைவணங்கி நிற்கும். தாமரை இலையில் தண்ணீர்போல, கர்மவினைகள் அவனை ஒட்டுவதில்லை. பெற்றோரை மதியாதவன், தீர்த்த யாத்திரை சென்று கங்கையில் நீராடினாலும் பாவங்கள் கரைவதில்லை.''
""நானிலம் வாழவே நஞ்சினை உண்ட நச்சினார்க்கினியனே! "மண்டல ஸ்வஸ்திகம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய கார்த்திகை முதல் பாதத்தில் லக்னமும், ரோகிணி முதல் பாதத்தில் சுக்கிரனும், ரோகிணி மூன்றாம் பாதத்தில் புதனும், புனர்பூசம் முதல் பாதத்தில் சூரியனும், பூரம் இரண்டாம் பாதத்தில் குருவும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் சனியும், அஸ்தம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், ரேவதி நான்காம் பாதத்தில் செவ்வாயும் இருக்கப் பிறந்த இந்த ஜாதகியின் கர்மப்பலனை தாங்கள் அருள்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருநல்லூர் பெருமணத்தில் அமர்ந்திருக்கும் சிவலோக தியாகேசரை அன்னை உமையம்மை வினவினாள்.
அதற்கு சிவபேதமும் ருத்ர பேதமும் இணைந்த ஆகமத்தின் தலைவனாகிய ஈசன் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகி முற்பிறவியில் நம்பியூர் என்ற ஊரில் பிறந்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்தாள்.
இளமைக்காலத்தில் அவள் தன் அதீத காமத்தால் திருமணமான பல ஆண்களைத் தவறாக வழிநடத்தினாள். அதனால் பல குடும்பங்கள் சீரழிந்துபோயின. தவறான நடத்தையால் நோயுற்று இறந்து, "சான்மலி' என்ற நரகம் சென்றாள். பின்பு சிலகாலம் கழித்து திருநின்றவூர் என்ற க்ஷேத்திரத்தில் சிறப்பான முனி தத்துவத்தில் பிறந்து, திருமணமாகி பதிவிரதையாக கற்புடன் வாழ்ந்து வருகிறாள்.
அவளுடைய முன்ஜென்ம வினைப்பயனால், இளமையிலேயே நோயுற்ற கணவனால் அவதியுறுகிறாள். இதற்குப் பரிகாரமாக திருக்குடமூக்கு என்ற புண்ணிய க்ஷேத்திரத்தில் கிருஷ்ம ருதுவின் ஆஷாட மாதத்தில் "கோபத்ம விரதம்' இருந்து, அதன்பின் வெள்ளிக்கிழமையில் சுமங்கலி பூஜை செய்தால், சாபம் நீங்கி அந்த ஜாதகியின் கணவன் நலம் பெறுவாள்.''
(வளரும்)
செல்: 63819 58636