இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ரு ஜாதகத்தில் தொழில், அதிகாரம், வருவாயைக் குறிக்கும் அர்த்தத்திரிகோணமோ, மகிழ்ச்சியைக் குறிக்கும் காமத்திரிகோணமோ, அது அமையும் ராசியின் அமிர்த பாகையைத் தொடர்புகொண்டால் அளவில்லா செல்வமும், மகிழ்ச்சியும் தரும். மேஷம், சிம்மம், தனுசின் இருபத் தோறாம் பாகையும், ரிஷபம், கன்னி, மகரத்தின் பதினாறாம் பாகையும், துலாம், கும்பம், மீனம் ஆகியவற்றின் மூன்றாம் பாகையும், கடகத்தின் இருபத்து நான்காம் பாகையும் அமிர்த பாகைகள் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""பசுபதியே! இலங்கு இரு புருவ மாக, வருணையும் அசியும் பாய்ந் தோடும் காசி ஷேத் திரத்தில் கடைநிலை உயிரும் கடைத்தேறவேண்டி, தாங்கள் உபதேசிக்கும், கர்ண மந்திரத்தை உலகோர் அறிந்திட உரைத்திட வேண்டுகிறேன்'' என அன்னை விசாலாட்சி ஜோதிர்லிங்கமாக அருள் பாலிக்கும் விஸ்வநாதரை அவிமுக்தம் (வாரணாசி) எனும் திருத்தலத்தில் பணிந்துகேட்டாள்.

ss

Advertisment

ரிஷபானந்தர் உரைத்தது- ""உலக மெனும் மேய்ச்சல் நிலத்தில், முளைக் கொம்பில் பிணைத்த கயிரில் கட்டுண்ட பசுவாக உயிர்கள் உழல்கின்றன. மனம் எனும் பாசக்கயிரே உயிரெனும் பசுவை பிரும்மத்தோடு இணைக்கிறது. பசு, பதி, பாசம் ஆகிய மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவையாக சுழன்றுவரும். காம தாதுவும் (ஆசைகளின் உலகம்) ரூப தாதுவும் (வடிவங்களின் உலகம்) மாயை என்றுணர்ந்து, அரூப தாதுவே (அருவங் களின் உலகம்) சத்தியம் என்று அறிவோரே அமரராவார். நீரும் நீர்க்குமிழியும் கலந்து ஒன்றானாற்போல, பதியினைச் சேர்ந்து ஐக்கியப் பதம் பெற்றபின், பசுவுடன் பாசம் நட்டமாகும். காற்றிலாடும் கொடி கொழுக்கொம்பை நாடுதலாக சித்தம் தெளிவுற்று,பற்று அறுத்தவன் இருவினைப் பாசக்கயிற்றின்வழி ஆட்டுவிப்பானைப் பற்றுவான்.''

""திரியம்பகேஸ்வரரே! எனும் தாண்டவத்தின் லயமாகிய அவிட்ட நட்சத் திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் சந்திரனும், புனர் பூசம் முதல் பாதத்தில் சனியும், பூசம் மூன்றாம் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்க, மகம் முதல் பாதத்தில் சுக்கிரனும், சுவாதி இரண்டாம் பாதத்தில் குருவும், மூலம் நான்காம் பாதத்தில் செவ்வாயும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என போர்கிரி (பூனா) எனும் திருத்தலத்தில் அருள்புரியும் பீமசங்கரரை அன்னை கமலஜா தேவி வேண்டிப்பணிந்தாள்.

திருவேட்டீஸ்வரர் உரைத்தது- ""செண்பகாம் பிகையே! இந்த ஜாதகி வில்வமங்களம் எனும் ஊரில் பிறந்து தாரிணி என்ற பெயர் பெற்றாள்.

அவள் இளம்வயதில் கொண்ட கூடாநட்பால் குணம் திரிந்தாள். பொய் ஒன்றையே உயிர்மூச் சாகக்கொண்டு சதி ஆயிரம் செய்தாள். மண வாழ்க்கை மறுக்கப்பட்டது. ஆயினும், அவள் கெடுகுணம் மாறவில்லை. மித்ர பேதம் செய்து பல குடும்பங்களில் புத்திரருக்கும், தந்தைக்கும் இருந்த அன்பைக் கெடுத்து பகை உண்டாக்கி குலத்தை அழித்தாள். வீணாகக் கழித்த வாழ்க் கையின் முடிவைத் தானே தேடிக்கொண்டாள்.

அவள் உடலை ஒட்டிய உயிர் வெட்டிப் பிரிந்தது.

மானுட வேடம் கலைந்தது. உயிர், காலவேடன் கையகப்பட்டது. மாய உடலை மண்ணே உண்டது. மரணத்திற்குப்பின் ரௌரவம் என்ற நரகத்தை அடைந்து நவகண்டம், அரிகண்டம் ஆகிய தண்டனைகளால் தலை அரியப்பட்டு துன்புற்றாள். நெடுங்காலம் கழித்து, வினைப் போகத்தைத் தேகமாகக்கொண்டு பூவுலகம் சென்றாள். விளாங்குடி என்ற ஊரில் பிறந்து தாட்சாயிணி என்ற பெயர் பெற்றாள்.

உரிய பருவத்தில் மணமாலை ஏற்றாள்.

பூதேவி (பூமித்தாய்) பூத்தாள், காய்த்தாள், கனிந்து உலகை உயிர்ப்பித்தாள். வசந்த காலங்கள் வந்துபோயின. காலம் கடந்தும் தாட்சாயிணி மழலையை சுமக்கவில்லை.

மலடி என்ற பெயர் சுமந்தாள். காய்க்காத மரமானாள், வாழ்க்கை வறண்ட குளமானது.

கூடிவாழ்ந்த குடும்பங்களை குருவிக் கூட்டைக் கலைப்பதுபோல உருத் தெரியாமல் அழித்ததால் துன்புறுகிறாள்.

தட்சன் தந்த சாபத்தால் * நாரதர் மனக்கலக்க முற்றதுபோல் கலங்குகிறாள். சோமவாரத்தில் வரும் அமாவாசையில் அரச மரத்தைப் பூஜித்தால் கர்மவினையின் கெடுபலன்கள் குறையும்.

* நாரதர் பெற்ற சாபம்: தன் புத்திரர் களைத் தன்னிடமிருந்து பிரித்ததால் தட்சன் என்ற மன்னன், நாரதரை சபித்தான். அதனால், ஓரிடத்தும் நிலையாமல், மனசஞ்சலத்தால் நாரதர் துன்புற்றார். (மச்ச புராணம்).

(வளரும்)

செல்: 63819 58636

______________

நாடி ரகசியம்

Advertisment

1. அவிட்ட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், ஆயில்யம் நான்காம் பாதத்தில் சூரியன், சந்திரன், குருவும் கூடியிருக்க, ஜாதகர் உலகப்புகழ் பெறுவார்.

2. அவிட்ட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் குருவும் சேர்ந்து அமையப்பெற்றால், வாழ்க்கையில் வசதிகள் கிடைத்தாலும் மணவாழ்க்கை சிறக்காது.

3. அவிட்ட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சந்திரனும் சூரியனும், செவ்வாயும் சனியும் கூடியமைந்தால், ஜாதகருக்கு கடுமையான பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும்.

கேள்வி: ஜாதகத்திலுள்ள தோஷங்களுக்காக செய்யப்படும் பரிகாரங்கள் சில நேரங்களில் பலன்தராமல் போவதன் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: எல்லா நாடி நூல்களிலும் பரிகாரக் காண்டம் என்ற பகுதி உண்டு. கர்ம விபாகம் என்ற தொகுதியில் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி செய்யப்படாத பரிகாரங்கள் பரிகாசமாகவே அமையும். பரிகாரம் என்ற சொல்லுக்கு மேல்முறையீடு ( ஆடடஊஆக ) என்பதே உண்மையான பொருள். பிரச்சினைக்குரிய பாவத்தின் அதிபதி சாதகமாக இல்லாவிடில் பாவ காரகரையும், பாவ காரகரும் ஒத்திசைவாக அமையாவிடில் பாவமுனையின் நட்சத்திர, உபநட்சத்திர அதிபதிகளைக்கொண்டும் பரிகாரங்களைத் தீர்மானிக்கலாம். கீழமை நீதிமன்றங்களில் தண்டனை பெற்றவர், உயர்நீதி மன்றத்திலோ, உச்சநீதி மன்றத்திலோ நிவாரணம் பெறுவது போன்றதே பரிகாரங்கள். இவை எதிலும் வெற்றிபெற இயலாதவர்கள் தோஷ நிவர்த்திபெற விண்ணப்பிக்கும் கருணை மனுவாக அமைவதே கேள்விக்குறிய பாவத்தின் ஒன்பதாம் பாவம். சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதமும், கொடிய குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறைதண்டனையும் கிடைப்பதுபோல அவரவர் பூர்வஜென்ம கர்மாவைப் பொருத்தே தோஷங்கள் அமையும். நவாம்சத்தில் உபய ராசிகளில் அமையும் கிரகமே பரிகாரத்தில் பலன்தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.