பொதுவாக, காலபுருஷனின் மேஷ லக்னத்திற்கு நான்கு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகளாக அமையும் கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை ஊமை ராசிகள் எனப்படும். ஜாதகத்தில் 2-ஆம் பாவம் பேச்சு, வாக்கு வண்மை யைக் குறிக்கிறது.
2-ஆம் பாவம் ஊமை ராசியாக வந்து, அதில் புதன் இருந்து சனியால் பார்க்கப்பட்டால் அவர் பேச்சுத்திறனில் பாதிப்பு உண்டாகும். செவ்வாய் பார்த்தால் மிகவேகமாகவும் உரத்தகுரலிலும் பேசுவார். மீனத்தில் செவ்வாய் தனித்திருக்க வாக்கில் கடுமையுண்டாம். முரட்டு ராசியாகிய விருச்சிகம் இரண்டாம் பாவமாகி, அதில் செவ்வாய் அமர்ந்து, சுபர் பார்வை பெறாவிட்டால், பேச்சில் முரட்டுத்தனமும் ஆணவமும் கலந்திருக்கும் என்பதே ‘"கந்தர்வ நாடி'யின் கூற்று.
""சப்தரிஷீசுவரரே! மனிதர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் எது சுகம் என்பதையறியாமலே சுகத்தைத்தேடி தொலைந்து போகிறார்கள். அறிவில் எளியோரும் அறியுமாறு, எது சுகம் என்பதைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை உமாதேவி, யாகந்தி எனும் காக்கை கரையாத திருத்தலத்தில் உறையும் மகேஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
பொற்பனையீஸ்வரர் உரைத்தது -""தலைப்பாகை அணிந்த மனிதன், தன் தலையைச் சுற்றிலும் மூன்றுவகைத் துணிகளால் சுற்றியிருக்கிறான்.
எனினும், அவன் அணிந்திருக்கும் தலைப்பாகை யானது அந்த மனிதனல்ல. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களையும் அணிந்திருக்கும் மனதைக் கடந்து, நிர் குணமான ஆன்மாவை தரிசிப்பவனே மேன்மை பெறுவான். சஞ்சலம் உள்ள வருக்கு சாந்தி இல்லை. சாந்தி இல்லாத வருக்கு சுகமில்லை.''
""பூமீஸ்வரரே! சிம்ஹ விக்ரீடிதம் எனும் தாண்டவத்தின் லயமாகிய திருவோண நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், உத்தி ரட்டாதி நான்காம் பாதத்தில் சந்திரனும், அஸ்வினி நான்காம் பாதத்தில் செவ்வாயும், திருவா திரை இரண்டாம் பாதத்தில் குருவும், மகம் மூன்றாம் பாதத்தில் புதனும் சனியும் சேர்ந்திருக்க, மகம் நான்காம் பாதத்தில் சூரியனும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் சுக் கிரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் விளக்க வேண்டும்'' என வாழப்பள்ளி எனும் திருத்தலத்தில் அருள்புரியும் மகேஸ்வரரை அன்னை பார்வதி தேவி வேண்டிப் பணிந்தாள்.
சம்பகேஸ்வரர் உரைத்தது-""பரிபூரணியே! இந்த ஜாதகன் வரகூர் எனும் ஊரில் ஒரு சத்ரியக் குடும்பத்தில் பிறந்து, வேலன் என்ற பெயர் பெற்றான். இளம்வயதில் கூடாநட்பினால் கல்வியில் பின்தங்கி, கலவியில் சுகம் கண்டான்.
ஒரு சத்திரத்தில் காவலாளியாகப் பணிபுரிந்தான்.
ஒரு நாள், அந்த சத்திரத்தில் தங்கிய கன்னிப் பெண்ணின் கற்பைக் களவாடினான். அந்த மங்கை செய்வதறியாது கலங்கினாள். மாசுற்ற தன்னுடலைத் தீயால் தூய்மையாக்கிவிட்டு மாண்டாள். புணர்ச்சியை விழைந்த ஆண் யானை, பெண் யானையைத் தொடர்ந்து சென்று வேடுவரின் பயம்பில் வீழ்வதுபோல காமத்தைத் தொடர்ந்து பாவத்தில் வீழ்ந்தான். தகாத காம நோயினால் பெரும் பிணிக்கு ஆட்பட்ட வேலன் மரணத்தால் நோய் தீர்த்தான். ஊருடன், உறவுடன் இருந்த பகையால் அவனுக்கு அந்திமக் கிரியைகள் செய்ய ஆளில்லாமல் போனது. அவன் யாக்கையை காக்கைகள் தின்று தீர்த்தன. காலதேவனின் கட்டளையால் ஷவஜ்ர கண்டகம் எனும் நரகத்தில் அடைபட்டு துன்புற் றான். தன் கர்ம பலனைத் தீர்க்கவேண்டி பூவுலகம் புகுந்தான். ஆதனூர் எனும் ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தான். பருவ வயதை எட்டியபோதே, தான் ஆணும் பெண்ணும் அல்லாத மூன்றாம் இனம் என்பதை உணர்ந்தான். *வேதவதியின் சாபம் பெற்ற இராவணன்போல் அல்லலுறுகிறான். தீயிடைக் குளித்த அத்தெய்வக் கற்பினாள் வாயிடை மொழிந்த சாபத்தால் இந்த கதி நேர்ந்தது. இதற்கு, இந்தப் பிறவியில் பரிகாரம் கிடையாது.''
* வேதவதி என்னும் கற்பினாளை இராவணன் வலிதில் தீண்ட அவள் தீயில் வீழ்ந்தாள். இராவணனை சபித்தாள்-இராமாயணம்
(வளரும்)
செல்: 63819 58636
___________
நாடி ரகசியம்
1. திருவோண நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் செவ்வாயும், ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் குருவும் அமையும் ஜாதகர், அரசு அதிகாரம் பெறுவார்.
2. திருவோண நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் குருவும், புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற ஜாதகர் 32 வயதிற்குப் பின் வாழ்வில் முன்னேற்றம் பெறுவார்.
3. திருவோண நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சூரியனும், கேட்டை இரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமைந்தால், ஜாதகருக்கு தகாத உறவுகளால் துன்பம் உண்டாகும்.
கேள்வி: சத்குருவை உரிய காலத்தில் கண்டறியும் ஜாதகரின் ஜனன ஜாதக அமைப்பினை கந்தர்வ நாடியின் மூலம் விளக்கமுடியுமா?
பதில்: குருவைக் கண்டவர் கோடியில் ஒருவர் என்பதே உண்மை. பூர்வஜென்மத்தின் புண்ணியப் பலன் சஞ்சித கர்மாவில் இருந்தால் மட்டுமே இந்தப் பிறவியில் ஒருவர் சத்குருவையடைய முடியும்.பொதுவாக, ஞான ஸ்தானமாகிய ஒன்பதாம் பாவமும், ஐந்தாம் பாவமாகிய தெய்வத்தின் அருளும், பத்தாம் பாவமாகிய கர்மஸ்தானமும் குருபகவானின் வலுவான தொடர்பில் இருந்தால்தான் ஞானகுருவினையடைய முடியும். குரு நீசம், அஸ்தம் அடைந்திருந்தால் குருவின் அருளுரையைப் பெறமுடியாது. குருவின் ஆட்சி வீட்டிற்கு பாதகாதிபதியாகிய புதனின் தொடர்பும், செவ்வாய், சுக்கிரன் சம்பந்தமும் ஏற்பட்டால் குருவை அடைவதில் தடையுண்டாக்கும். மீன ராசி லக்ன கேந்திரத்தில் அமைவது குருவருள்பெற துணைபுரியும். ஒன்பது, ஐந்து, எட்டாம் பாவம் தொடர்பிலிருந்து, குரு அனுஷம் நான்காம் பாதத்திலோ, சதயம் மூன்றாம் பாதத்தில் அமைந்தாலோ, சமாதியடைந்த மகான்கள் குருவாக அமையும் வாய்ப்பு கிடைக்கும். லக்னமும் சூரியனும் கும்பத்திலிருந்து, குருவும்சந்திரனும் மகம் நான்காம் பாதத்தில் அமைந்தால் தெய்வமே குருவாக அமைந்து ஜாதகரை வழிநடத்தும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.