இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
18
"தீதும், நன்றும் பிறர் தர வாரா' என்ற பழமொழியின் கருத்துப்படி அவரவர் செய்யும் நல்வினை மற்றும் தீவினையுமே அவரை சுற்றிச் சூழும். அதுவே அவருடைய சுற்றமும் சூழலுமாகும். பரிகாரங்களால் நல்வினையைக்கூட்டி, தீவினையைக் குறைக்கும் வழிமுறைகளை விளக்குவதே கந்தர்வ நாடியின் மையக்கருத்து.
""சகல உயிர்களையும் ஆட்டுவித்து தானும் நடனம் புரியும் சபாபதியே! தியானத்தால் மனம் தூய்மையாகும் என்பதும், அதனால் பாவங்களிலிருந்து விடுபட முடியும் என்பதும் உண்மையே. முறையாக குருவிடம் தியானத்தைக் கற்றுக்கொள்ள இயலாதவர்கள், சூழும் ஊழ்வினையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இயலுமா?'' என அன்னை சிவலோக நாயகி, திருக்கானூரில் அருள்புரியும் செம்மேனிநாதரைப் பணிவுடன் கேட்டாள்.
அதற்கு கரும்பேஸ்வரர் உரைத்தது- "தியானம், மூச்சுக்காற்று போன்றவை இயற்கையான நிகழ்வு. மனதின் மௌனமே தியானம்.
அதை பிறரால் கற்பிக்க முடியாது. தியானத்தின் முதல் நிலை, தன்னையறிதல் எனும் சுயபரிசோதனையே. எல்லா உயிர்களுக்கும் ஆழ்ந்த உறக்கமே இயற்கையான தியானம். மனிதர்கள் உறக்கத்திற்குமுன் அன்றைய பொழுது செய்த நன்மை- தீமைகளை எண்ணிப்பார்த்து, பாவங்களுக்காக வருந்தி திருந்துவார்களேயானால் அதுவே பாவங்களைப் போக்கும் சிறந்த தியானம்.
பாவம் செய்தவர்களுக்கு கனவும் நினைவும் இல்லாத ஆழ்ந்த உறக்கம் வாய்ப்பதில்லை. அதுவே நரகத்தின் நுழைவாயில் என்பதை உணர்வாயாக.''
""துவக்கமும் முடிவுமில்லாத ஆதிசித்தரே! "ஸ்வஸ்திக ரேசிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பரணி நான்காம் பாதத்தில் லக்னமும், கிருத்திகை மூன்றாம் பாதத்தில் சந்திரனும், மிருகசீரிடம் இரண்டாம் பாதத்தில் புதனும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் சூரியனும், ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், சித்திரை முதல் பாதத்தில் குருவும் சனியும் கூடியிருக்க, அஸ்வினி மூன்றாம் பாதத்தில் செவ்வாயும் இருக்கப் பிறந்த இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் அருள்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருவையாறில் அமர்ந்திருக்கும் ஐயாறப்பரை அன்னை திரிபுரசுந்தரி வினவினாள்.
ஓங்காரத்தின் விழுப்பொருளாகிய நாத பிரம்மம் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் திருவைகாவூர் என்ற க்ஷேத்திரத்தில் பிறந்து, வாகீஸ்வரர் என்ற வேத விற்பன்னரிடம் குருகுலக்கல்வி பயின்று வந்தான். தீய நட்பினால் குருவுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளை சரிவரச் செய்யவில்லை. இதனால் குருவின் கோபத்திற்கு ஆளானான். குரு கடிந்து கொண்டதால் அவரைப் பழிவாங்க எண்ணி, தன் குருநாதர் வைத்திருந்த ஓலைச்சுவடிகளைத் தீயிலிட்டான். அதனால் ஏற்பட்ட குரு துரோகத்தால் குருவின் சாபம் பெற்றான். பின் வயதின் முதிர்ச்சியால் இறந்து நரகம் சென்றான். சில காலம் கழித்து வண்டியூர் எனும் ஊரில் ஒரு அந்தண குடும்பத்தில் பிறந்தான். முற்பிறவியில் பெற்ற குருவின் சாபத்தால், கல்வி கற்றும் மறதி நோயால் பீடிக்கப்பட்டு எந்தத் தொழிலும் அமையப்பெறாமல் அவதியுறுகிறான். இதற்குப் பரிகாரமாக அந்த ஜாதகன், இப்பிறவியில் கல்வி கற்பித்த குருவுக்குப் பாதபூஜை செய்தபின், ஏழை மாணவருக்கு கல்விகற்க உதவி செய்தால் குரு சாபம் நீங்கி வாழ்க்கையில் வளம் பெறுவான்.''
(வளரும்)
செல்: 63819 58636