இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
86
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஜனன ராசிக்கு எட்டாவது வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம். எல்லாருக்கும், ஒவ்வொரு சந்திரமான மாதத்திலும் ஒருமுறை சந்திராஷ்டமம் நிகழும் என்றாலும், எல்லா சந்திராஷ்டம தினங் களும் கெடுதல் செய்வதில்லை. எட்டாவது வீட்டின் அதிபதி அஷ்டமச் சந்திரனுக்கு திரிகோண வீடுகளில் அமைந்தால் மட்டுமே சந்திராஷ்டம தினம் தொல்லை தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""காசியானந்தரே! பிரும்மத் தைத் தவிர்த்து வேறெதுவும் எங்கும், எப்போதும் இல்லை என்பதையறியாது, மாயை வேறு, பிரும்மம் வேறென்று எண்ணுவோருக்கான விளக் கத்தை அறிவில் எளியோரும் உணருமாறு தாங்கள் விளக்கி யருள வேண்டுகிறேன்'' என அன்னை ஏலவார்க்குழலி கச்சியம்பதி திருத்தலத்தில் உறையும் அருள்மிகு தழுவக் குழைந்தநாதரைப் பணிந்துகேட்டாள்.
அம்மையப்பர் உரைத்தது- ""தன்னைத்தானே படைத்துக்கொண்டு, மற்ற எல்லாவற்றையும் படைத்த பிரும்மமே ஹிரண்யகர்ப்பம் எனும் தங்க வித்து. விதை யிலிருந்து வெளிக்கிளம்பும் வேர், அசையாததும், காண முடியாததுமாக விளங்கும்.
மரத்தின் கிளைகள் அசை வதைக் காணமுடியும். பிரும்ம விருட்சத்தின் கிளைகளே மாயை. பிரும்ம மும் மாயையும் வெவ் வேறாகத் தெரிந்தாலும், பிரும்மத்திலிருந்தே மாயை உருவானது என்பதை உணர்வதே பூரண ஞானம்.''
""பிரும்மாநந்தரே! "பரிவ்ருத்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய கேட்டை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், மூலம் முதல் பாதத் தில் சந்திரனும், மிருக சீரிடம் மூன்றாம் பாதத்தில் சனியும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், உத்திரம் முதல் பாதத்தில் குருவும், ஹஸ்தம் நான்காம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந் திருக்க, ஸ்வாதி நான்காம் பாதத்தில் புதன் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று இறகுசேரி எனும் திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீமும்முடிநாதரை அன்னை சௌந்தர நாயகி வேண்டிப்பணிந்தாள்.
சச்சிதாநந்தர் உரைத்தது- ""சௌந்தரியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் யதுகிரி எனும் பெயருடன் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்து, பனுவல் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்து அறம் பிறழாது வாழத் தலைப்பட்டான். உத்தம புருஷரையும் காமுகராக்கும் கணிகையர் போன்ற பொல்லா மாந்தரின் கையகம் புகுந்தான். தீயோர் சொல்லே அவனுக்குத் தீஞ்சுவை தந்தது. தீயோடு நட்பு கொண்ட மரம்போல் அவன் உத்தம குணங்கள் உருக்குலைந்துபோயின. பஞ்சமா பாதகம் செய்து, அவன் வாழ்ந்த ஊரின் நச்சு மரமானான். கால ஓட்டத்தில், தீயோர் நட்பு பகையாய் மாறியது. முன்பு அவனுடன் கூடிக்களித்தோர் அவன் உயிருக்கு இறுதி நாளைக் குறித்தனர். முடிவில் அவன் கால தேவன் கைகளில் அடைக்கலமானான். பூவுலகம் விடைகொடுத்தது. நரகம் அவனை வரவேற்றது. "கிருமி போஜனம்' எனும் நரகத்தில் பலகாலம் வாடினான். நரகதண்டனை முடிந்ததும் பூவுலகின் புதுவரவானான். சித்தாப்பூர் என்ற ஊரில் வாழ்ந்தான். இளம்வயதில் ஏற்பட்ட நோயால் சொல்லிழந்தான். இடி பாய்ந்த பசுமரம் போல, அவன் வாழ்வு கருகிப்போனது. முற்பிறவி யில் தீயோர் கூட்டத்தில் சேர்ந்து அவர்கள் செய்த கொடுமைகளைத் தட்டிக்கேட்காமல் நெடுமரமாய் அடாத செயலுக்குத் துணைநின்றதால் அவதியுறுகிறான். * கர்ணன்போல் இவனையும் தீயோர் நட்பே சீர்குலைத்தது.
பஞ்சமா பாதகங்களுக்குப் பரிகாரமே கிடையாது.
* கர்ணன்- தீயோருடன் நட்புகொண்டதால், "கூடா நட்பு, கேடாய் விளைந்தது.'
-மகாபாரதம்.
(வளரும்)
செல்: 63819 58636
___________
நாடி ரகசியம்
1. கேட்டை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் புதனும் லக்னமும் அமையும் ஜாதகர் கலைகளில் விற்பன்னர், இசையால் இசைபட வாழ்வார். (புகழ் பெறுவார்).
2. கேட்டை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்து அமையப்பெற்ற ஜாதகர் கணித, ஜோதிட வல்லுநர்.
3. கேட்டை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சூரியன், சனி, சந்திரன் கூடியமைந்தால் ஜாதகர் அற்பாயுள் உடையவர்.
கேள்வி: கிரக தோஷப் பரிகாரங்களுக்காக ஆலயங்களுக்குச் செல்லும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகளை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: பொதுவாக ஆலய தரிசனம் செய்பவர்கள் கிழக்கு வாசல்வழியாகச் சென்று வழிபடுவதே சிறந்தது. பரிகாரங்களுக்காக ஆலயங்களுக்குச் செல்பவர்கள், அதற்குத் தகுந்த நுழைவாயிலில் செல்வதே வெற்றிதரும். வாழ்க்கையில் இன்ப- துன்பங்கள், முன்னேற்றம், தடை போன்றவற்றை நிர்ணயிப்பது ஒரு ஜாதகத்தின் லக்ன கேந்திரத்தில் அமையும் பாவங்களேயாகும். லக்னம் கிழக்கு திசையையும், நான்காம் பாவம் தெற்கு திசையையும், ஏழாம் பாவம் மேற்கு திசையையும், பத்தாம் பாவம் வடக்கு திசையையும் குறிப்பவை. மறதி, ஆரோக்கியக் குறைவு, வறுமை போன்ற குறைகளைத் தீர்க்க விரும்புபவர்கள் கிழக்கு வாயிலின் வழியாகவும்; வீடு, வாகனம், மன அமைதி வேண்டுவோர் தெற்கு வாயிலின் வழியாகவும்; குடும்பப் பிரச்சினை உள்ளவர்கள் மேற்கு வாயிலின் வழியாகவும்; அதிகாரம், செலவாக்கு கிடைக்கவேண்டிப் பரிகாரம் செய்வோர் வடக்கு வாயிலின் வழியாகவும் ஆலயப் பிரவேசம் செய்யவேண்டும். நான்கு வாயில்களில்லாத கோவில்களில் பரிகாரம் செய்பவர்கள் வெளிப்பிராகாரத்தில், பரிகாரத்திற்கு உகந்த திசையில் அமர்ந்து தியானம் செய்தாலும் பலனுண்டு. சில பரிகாரத்தலங்களில், பிரதான வாயில் ஒரு திசையிலும், மூலவர் சந்நிதியின் நுழைவு வேறு திசையிலும் அமைக்கப்பட்டிருப்பதிலும் பல சூட்சுமமான ரகசியங்கள் உள்ளன. தெற்கு திசை நோக்கிய மூலவரும் (ஸ்ரீரங்கம்), வடதிசை நோக்கிய மூலவரும் (மேல்வெண்பாக்கம்) உள்ள திருத்தலங்கள் சிறப்பான பரிகாரத் தலங்களாக அமைகின்றன. பரிகாரங்களின் சூட்சுமத்தையறிந்து, அதன்படி நிறைவேற்றினால் மட்டுமே வெற்றிபெற முடியுமென்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.