ஒரு ஜாதகருக்கு பெற்றோர், புத்திரர், சகோதர- சகோதரிகள், மனைவி, நண்பர்கள் என்று பலரும் அன்புடன் இருந்தாலும், எவரால் உரிய நேரத்தில் உதவி கிடைக்குமென்று அறியவேண்டியது அவசியமாகிறது. லக்னத்திற்கு பாதகஸ்தானம் அமையும் ராசிகளைச் சேர்ந்தவர்களால் பயன்பெறும் வாய்ப்பில்லை. லக்னத் திற்கு மூன்று மற்றும் ஐந்தாம் பாவம் அமையும் ராசிகளைச் சேர்ந்தவர்கள் ஆபத்துக்காலங்களில் உறுதுணையாக இருப்பார்கள். மூன்றாம் பாவமும் ஐந்தாம் பாவமும் கெட்டிருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை, சம்பந்தம் பெற்றாலும், பலமிழந் தாலும், உதவிசெய்ய விரும்புவோரால் உதவிசெய்ய முடியாமல் போகும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""பரஞ்சோதியே! யோகிகள் சமாதி நிலையடையும் முறையை எளியோரும் உணரும்வண்ணம் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை வேதநாயகி பவானி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு சங்கமேஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
திரிபுவனேஸ்வரர் உரைத்தது- ""கர்மாவின் காரணத்தை கரணத் தால் (மனம், புத்தி, சித்தம், அகங் காரம்) அறியமுடியாது என்பதை அறிவதே சமாதியின் முதல் நிலை.
சமாதியில் சவிகல்பம், நிர்விகல் பம் எனும் இரு நிலைகளுண்டு. களிமண்ணால் செய்யப்பட்ட யானையின் பதுமை யானையல்ல என்றறிந்து, அதை மண்ணாகப் பார்ப்பதுபோல் அறிபவன், அறிவு என்னும் வேறுபாடுகள் நீங்காமலே, இரண்டற்ற பிரம் மத்தின் தன்மையை அடைந்த மனதின் ஒருமைப்பாடே சவிகல்ப சமாதி. மனம் பிராணனில் ஒடுங்க, பிராணன் பிரும்மத்தில் அடங்குதலே நிர்விகல்ப சமாதி யெனும் பூரணக் குகைநெறி சமாதி. நீரில் உப்பு கரைவது போல, காற்றில் வாசம் கலப் பதுபோல அறிபவன், அறிவது, கருவி, அறியப்படும் பொருள் எனும் விகல்பங்கள் மாறி, அனைத் தும் ஒன்றாய் நிலைப்பதே நிர்விகல்பம். இது உறக்கம்போல் தோன்றினாலும், அது உறக்க மில்லை; உணர்வுமில்லை; ஓர் உயர்வு நிலை.''
""வாகீஸ்வரரே! "கஜக்ரீடிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய அனுஷ நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், அஸ்வினி முதல் பாதத்தில் சனியும், அஸ்வினி இரண்டாம் பாதத்தில் குருவும், மிருகசீரிடம் முதல் பாதத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், திருவாதிரை நான்காம் பாதத்தில் சந்திரனும், சித்திரை முதல் பாதத்தில் செவ்வாயும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று விருத்தாசலம் திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை அன்னை இளையநாயகி வேண்டிப் பணிந்தாள்.
பழமலைநாதர் உரைத்தது- ""ஓங்காரியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் சம்பந்தன் எனும் பெயருடன், ஆதனூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் தர்க்க சாஸ் திரத்தில் தேர்ச்சிபெற்று, அந்த ஊரின் நியாய சபையில் நீதிமானாய்ப் பொறுப் பேற்றான். செல்வந்தர்களிடம் கையூட்டுப் பெற்று நீதியை வளைத் தான். குற்றம் கடிதலே நீதியின் கடமை என்ற நிலைமாறி, அவன் சொன்ன நீதியே குற்றமுற்றது. எளியோருக்குத் தீங்கிழைத்தான். நீதி பிழைத் தான். அதனால் பெற்ற செல்வத்தால் பிழைத்தான். நீதிதேவதை நித்திரை கலைந்தாள். அவன் செய்த பாவப் பதிவுகள் வலுப்பெற்றன. இளமையின் ஒளி மங்கியது. முதுமையின் இருளில் வீட்டின் முற்றத்தில் கிடந்து உயிர்துறந்தான். உடல், காலில்லா கட்டிலில் மயானம் சென்றது.
உயிர் எமலோகத்தின் வெஞ்சிறையில் வீழ்ந்தது. "அந்தகூபம்' எனும் நரகத்தில் துன்புற்றபின், பூவுலகம் எனும் நியாய சபையில் தண்டனை பெறவந்தான். வழுவூர் என்ற ஊரில் பிறந்து, இளமையில் கண் நோயால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்து அவதிப்படுகிறான். முற்பிறவியில், நீதிதேவதையின் கண்களை மறைத்து, *உபரிசரன்போல நீதி சொல்வதில் தவறி ழைத்ததால் பார்வையற்று வருந்துகிறான். அவன் செய்த பாவத்திற்கு இப்பிறவியில் பரிகாரமில்லை.
*உபரிசரன்- மன்னர்களில் முதன்மையான வனாக இருந்தவன், நீதி சொல்வதில் தவறிழைத்ததால் தன் பெருமையையும் வலிமையையும் இழந்தான்- மகாபாரதம்.
(வளரும்)
செல்: 63819 58636
_____________
நாடி ரகசியம்
1. அனுஷ நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சூரியனும், உத்திராடம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் அமையும் ஜாதகர் மக்களின் தலைவராகப் புகழ்பெறுவார்.
2. அனுஷ நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சந்திரனும் செவ்வாயும் லக்னமும்கூடிய அமைப்பைப்பெற்ற ஜாதகர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்.
3. அனுஷ நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சூரியனும் லக்னமும் குருவும் சேர்ந்தால், ஜாதகருக்கு இருபத்தி ரண்டாவது வயதில், மரணத்திற்கு ஒப்பான கண்டம் உண்டாகும்.
கேள்வி: சாதகமான கிரக அமைப்புகளால் புகழேணியின் உச்சியைத் தொடுபவர்கள் பெரும்பாலும், வலியும் வேதனையும் நிறைந்த துர்மரணத்தையடையும் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: ஆற்றங்கரையில் வளரும் மரம் ஆற்று நீரால் செழுமையாக வளரும். அதே ஆற்றின் மண் அரிப்பால் வேரறுந்து வீழும். எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கும் சனியும் செவ்வாயும் நவாம் சத்தில் வர்க்கோத்தமம், ஆட்சி, உச்சம்பெற்றால் அபரிமிதமான செல்வாக்கு ஏற்படும். விளக்கிற்கு ஒளிதரும் நெருப்பு வீட்டையும் எரிக்கும் என்பதுபோல, சனியும் செவ்வாயும் மாரகஸ்தானங்களைத் தொடர்புகொண்டால் துர்மரணத்தையும் விளைவிக்கும். இரு வீட்டின் ஆதிபத்தியம் உள்ள கிரகங்கள் எந்த ஆதிபத்தியத்தைத் தொடர்புகொள்கிறார்களோ, அந்த வீட்டின் பலனை முதலிலும், இன்னொரு வீட்டின் பலனை அடுத்தும் செய்வார்கள். சனியும் செவ்வாயும் ஒரு ஜாதகத்தின் எட்டாம் பாவத்தில் தொடர்புகொள்ளும் நிலையைக் கொண்டே எதிர்பாராத புகழ் மற்றும் எதிர்பாராத மரணம் ஆகியவற்றைக் கணிக்கலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.