இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

70

லால்குடி கோபாலகிருஷ்ணன்

வானவில்லில் நாம் காணும் வண்ணங்களைப்போல் (VIBGYOR) ஏழுவிதமான மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டவர்களாகவே மனிதர்கள் பிறக்கிறார்கள். வண்ணங் களே எண்ணங்கள். ஏழு வண்ணங்களும் ஏழு கிரகங்களைக் குறிக்கும். இதில் சூரியன் சிவப்பையும், செவ்வாய் செம்மஞ் சளையும், குரு மஞ்சளையும் சுட்டிக்காட்டுவன. இந்த வண்ணங்கள் உஷ்ணம், சுறுசுறுப்பு போன்ற தன்மைகளை வெளிப்படுத்துவன. அதனாலேயே பஞ்சபூதங்களில் நெருப்பைக் குறிக்கும் மேஷம், சிம்மம், தனுசு ராசிகளின் மூலத்திரிகோணாதிபதிகளாக முறையே செவ்வாய், சூரியன், குரு அமைகிறார்கள். காலையில் தாமரையும், இரவில் அல்லியும் மலரும் சூட்சுமம் இதிலடங்கும். ஒரு ஜாதகரின் சுவை, ஒளி, உணர்வு, ஓசை, மணம் என்னும் ஐந்து புலன்களின் ஈடுபாடும் கிரகங்களின் அமைப்பினாலேயே மாறுபடுகிறது என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

""அஷ்டபுரீசுவரரே! கலியுகத்தில் தீயகுணமுள்ளவர்களே எல்லாரையும் அடக்கியாளும் வலிமை பெற்றவர்களாகத் தோற்றமளிப்பதன் காரணத்தை விளக்குமாறு வேண்டு கிறேன்'' என அன்னை பாலாம்பிகை காட்டூர் எனும் திருத் தலத்தில் உறையும் அருள்மிகு உத்ரவைத்தியநாதரைப் பணிந்து கேட்டாள்.

saa

யோகநாதர் உரைத்தது- ""மரங்கள் உதிர்க்கும் கனிகளை உண்பவர்கள் சத்துவ குணவாதிகள். மரத்திலேறி கனிகளைப் பறித்துண் பவர்கள் ரஜோ குணத்தைச் சார்ந்தவர்கள். கனியிருக்கும்போது காய்களைக் கவர்ந்து உண்போர் தமோ குணத்தின் காவலர்கள். சப்த ரிஷிகள் வகுத்த யுகதர்மத்தின்படி, கலியுகத்தில் பேயின் ஆட்சியும், பிணம் தின்னும் சாத்திரங்களுமே மின்னுவது போன்ற தோற்ற மாயையை உருவாக்கும். அணைவ தற்குமுன் விளக்கு பிரகாசிப்பது போல, தீயோர் ஆடி அடங்குவர்.

Advertisment

கலியுகத்தின் முடிவில் சத்குருவும் உத்தம சீடர்களும் உருவாகி உலகை மாற்றுவர். இறுதியில் எல்லா உயிர்களும் கர்ம யோகத்தால் முக்தி பெறும்.''

""சரபேஸ்வரரே! "அர்கலம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய சித்திரை நட்சத்திரத்தின் இரண் டாம் பாதத்தில் லக்னமும், ஸ்வாதி நான்காம் பாதத்தில் சூரியனும், அனுஷம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்க, பரணி நான்காம் பாதத்தில் சந்தி ரனும், உத்திரம் முதல் பாதத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்க, உத்திரம் இரண்டாம் பாதத்தில் குருவும் அமர்ந்திருக்கும் அமைப் பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருநெல்வாயல் எனும் திருத்தலத்தில் அருள்புரி யும் ஸ்ரீஉச்சிநாதேஸ்வரரை அன்னை கனகாம்பிகை வேண்டிப் பணிந்தாள்.

ஐயாறப்பர் உரைத்தது- ""திரிலோசனியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் கௌதமன் எனும் பெயருடன், உத்ரகாசி என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் முரட்டு குணத்தினனாய், பெரியோர் சொல் கேளாமல், "முடத்தெங்கு' போல் வளர்ந்தான். மேலோர் யாவரும் அவனைக் கண்டு அஞ்சி நடுங்கினர். திட்டிவிடம் போன்ற சொல்லால் பனங்கருக்காய் பாதித் தான். தன் தந்தை சொல்லை உதாசீனம் செய்து, தீயோர் நட்பில் அகமகிழ்ந்தான். தந்தையின் செல்வத்தை அபகரித்து, அவரை இல்லத் தினின்று புறந்தள்ளினான். தீராத நோயில் சிக்கினான். அவன் மூச்சுக்காற்று முற்றுப் பெற்றது. அவன் பூதவுடலைத் தன் பிரேத ரூபத்தால் கண்டு வருந்தினான். கனலும், காயும் சினமும் மிக்க எமதூதர்களிடம் சிறைப் பட்டு, எண்பத்தாறாயிரம் காத தூரம் கடந்து எமபுரியை அடைந்தான். பெரியோ ரையும் பெற்றோரையும் துன்புறுத்தியவர்களை வதைக்கும் "காலசூத்திரம்' எனும் நரகத்தில் இறங்கினான்.

பல்லாண்டுகள் துன்பத்தை அனுபவித் தபின் நரகவாசத்தை முடித்துக்கொண்டு, பூவுலகம் நோக்கிப் புறப்பட்டான். ஜனகபுரி எனும் ஊரில் ஒரு வேதியர் குடும்பத்தில் பிறந்தான். அவன் தந்தை அவனுக்கு வேதம் பயிற்றுவிக்க எண்ணினார். ஒரு ஸ்ரவண பௌர்ணமியில் அவன் குருகுலம் ஏகினான்.

முற்பிறவியில் பெரியோரிடம் சுடுசொல்லை உதிர்த்த வாயில் வேதம் புகுந்து மாசுபடுவதை ஏற்காத தர்மதேவதை அவன் முயற்சியைத் தடுத்தாள். வேதமே தர்மத்தை ரக்ஷிப்பதால், தர்மம் வேதத்தைக் காத்தது. அவன் நாவில் கழலை நோய் கண்டது. அதனால் வேதனை யுற்று வாடுகின்றான்.* நசிகேதன் போல, தந்தையின் சொல்லே மந்திரம் என்ற தர்மத்தின் விதியைக் கடைப்பிடித்திருந்தால் இந்த கதி நேர்ந்திருக்காது. தனக்கு உயிர் தந்த ஆதிகுரு வாகிய தந்தைக்கு பாதகம் செய்தவனுக்கு பாவ விமோசனமே கிடையாது.

* நசிகேதன்- தன் தந்தையின் சொல் கேட்டு யாகத்தீயில் நுழைந்து தியாகம் செய்ததால், அவனை எமதர்மனே வணங்கும் பேறு பெற்றான். (கடோ உபநிடதம்).

(வளரும்)

செல்: 63819 58636

____________

நாடி ரகசியம்

1. சித்திரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சூரியனும், ரேவதி நான்காம் பாதத்தில் குருவும் அமைந்தால் பொறியியல் துறையில் சிறப்பு உண்டாகும்.

2. சித்திரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமைந்தால் ஜாதகர் சுயசம்பாத்தியத்தில் தன் ஆசைகளை முழுமையாகப் பூர்த்திசெய்து கொள்வார்.

3. சித்திரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், ரேவதி நான்காம் பாதத்தில் சூரியனும் அமையும் ஜாதகர் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்.

கேள்வி: தகுதியுள்ளவர்கள் தங்கள் முயற்சியால் முன்னேறுவது இயல்பே. சில நேரங்களில் தகுதியில்லாதவர்களும் உயர்வடைவதன் காரணமென்ன? பரிகாரங்களால் பயன் உண்டாகுமா என்பதை "கந்தர்வ நாடி'யின் மூலம் விளக்கமுடியுமா?

பதில்: பட்டம், காற்றினால் பறக்கிறது. பறவை காற்றில் பறக்கிறது. இதன் வேற்றுமை உருபுகளை அறிந்தால் விதியை அறியலாம். காற்றின் வேகத்தால் கோபுரத்தின் உச்சியை அடையும் காகிதம், நெடுநேரம் அங்கு நிலைத்திருப்பதில்லை. காற்றே விதி. அதையே நாம் அதிர்ஷ்டக்காற்று என்று சொல்கிறோம். சந்திரனும், லக்னமும் உபஜெய ராசிகளைத் தொடர்புகொண்டால் (3, 6, 10, 11) தகுதி இல்லாதவர்களும் தற்காலிக உயர்வை அடைவார்கள். சூரியனும், லக்னமும் உபஜெய ராசிகளைத் தொடர்புகொண்டால், தங்கள் திறமையால் நிரந்தர உயர்வைப் பெறுவார்கள். சூரியன் சர ராசியிலும், சந்திரன் ஸ்திர ராசியிலும் அமையப்பெற்றவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஏற்ற- இறக்கங்களைச் சந்திப்பார்கள். பாய்மரக் கப்பலில், காற்றின் திசைக்கேற்ப பாய்மரத்தை மாற்றிக்கட்டி, பயணத்தைத் தடுக்கும் காற்றைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வதுபோல், சரியான நாள், யோகம், ஹோரைகளில் செய்யும் பரிகாரங்களால் நல்ல பலன்களை அடையமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.