இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
கந்தர்வ நாடியில், யுக தர்மம், கலியுகத்தில் வாழும் மனிதர்களின் குணம், சமூகத்தின் நிலை, முக்கியமான நிகழ்வுகள் போன்றவையும் விளக்கப்படுகிறது.
""உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தாய், தந்தை, குரு, தெய்வமாக விளங்கும் ஈசனே! கலியுகத்தில் உயிர்கள் பிறவிச் சக்கரத்தில், பிறப்பு, இறப்பு என்ற நிகழ்வுகளில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. பாவ புண்ணியங்களைச் செய்வதும், நரகம் அல்லது சொர்க்கம் சென்று மறுபடி இப்பூவுலகில் பிறப்பதுமாக இரவு- பகல்போல் இடைவிடாமல் தொடர்கின்றன. இதன் காரணம் மற்றும் முடிவினை விளக்க வேண்டும்'' என்று பார்வதி தேவி, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகராகிய சிவபெருமானிடம் வினவினாள்.
சிவபெருமான் உரைத்தது- ""தேவி! புல், பூண்டு போன்ற ஓருயிர், ஓரறிவாகிய தொடு உணர்ச்சியில் தொடங்கி, பரிணாம வளர்ச்சியில் ஆறாவது அறிவாகிய மனம் என்ற அறிவைப் பெற்று மனிதனாகிறது.
தன்னையும், தன் பிறவிப் பயனையும் உணர்ந்து உயர்ந்திடவே மனம் என்ற ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே தரப்படுகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தையும் மனதால் அடக்கத் தெரிந்தவனே ஸ்திதப்ரக்ஞன். (ஞானி).
அவனே முடிவில் மோட்சத்தை அடைந்து பிறவிப்பிணியை அறுக்கிறான்.
வில்வித்தை கற்றுத்தரும் குரு, பயிற்சியின் முடிவில் சீடர்களை சோதித்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதுபோல, கர்ம பூமியாகிய இப்பூவுலகில் மனிதப் பிறவிகள் கலிபுருஷனால் சோதிக்கப்படுகிறார்கள்.
மனிதன் ஒவ்வொரு பிறவியிலும் தன் தவறுகளை உணர்ந்து, திருந்தி, முடிவில் தடுத்தாட்கொள்ளப்படுகிறான்.''
""பிரம்மனும் விஷ்ணுவும் காணமுடியாத சிரசும் பாதமும் கொண்ட பரம்பொருளே!
"உத்கட்டிதம்' என்ற தாண்டவத்தின் லயமாக அமைந்த, உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் லக்னமாகி, அதில் அங்காரகன் (செவ்வாய்) இருக்க, பரணி நான்காம் பாதத்தில் குருவும், மிருகசீரிடம் நான்காம் பாதத்தில் மதியும், ஹஸ்தம் இரண்டாம் பாதத்தில் சனியும், சித்திரை நான்காம் பாதத்தில் சுக்கிரனும், சுவாதி முதல் பாதத்தில் வைசியனாகிய புதனும், சுவாதி இரண்டாம் பாதத்தில் ஆதவனும் (சூரியன்) இருக்கப் பிறந்த ஜாதகனின், முன்ஜென்ம வினை, பாவம், அதற்கான பரிகாரத்தையும் விளக்கவேண்டும்'' என்று தேவி கேட்டாள்.
சிவபெருமான் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முந்தைய பிறவியில் அளவில்லாமல் மிருகங்களை வேட்டையாடி, வழிப்பறிக் கொள்ளையும் செய்துவந்தான். ஆனாலும், தன் பெற்றோரையும் குலதெய்வத்தையும் போற்றி மதித்தான்.
முடிவில் கருநாகம் கடித்து இறந்துபோனான். "பிராணரோதம்' என்ற நரகத்தில் பலகாலம் துன்புற்றபின், சித்ரசபை அருகே அமைந்துள்ள சிம்மபுரி என்ற ஊரில், சந்திரமேட்டில் சக்கர ரேகையும், நடுமுதுகில் மச்சத்துடனும், வைசிய குடும்பத்தில் பிறந்து வணிகம் செய்த காலத்தில், திருடர்களிடம் பெரும் பொருளைக் களவுகொடுத்து வாழ்விற்குப் பொருள் தேடி ஊரெல்லாம் அலைகிறான்.
இதற்குப் பரிகாரமாக பத்து கறவைப் பசுமாடுகளை வளர்த்து, அதை அந்தணர்களுக்கு தானமாகத் தரவேண்டும். தினமும் பஞ்சாட்சர ஜெபம் ஆயிரம் செய்ய பாவம் நீங்கி நலம் பெறுவான். இறுதிக்காலத்தில் தவறான தேவதா உபாசனையால் வரும் அபிசாரத்தால் மரணமடைவான்.''
(வளரும்)
செல்: 63819 58636