இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
48
லால்குடி கோபாலகிருஷ்ணன்
பொதுவாக ஜாதகத் திலுள்ள உச்ச கிரகம் நல்ல பலனையும், நீச கிரகம் தீய பலனையும் தருமென்ற கருத்து உள்ளது. ஆராய்ந்து பார்த்தால் இந்த கருத்து ஜோதிட சாஸ்திர விதிமுறைக்கு எதிரானது என்பது விளங்கும். சூரியன் தன் ஆட்சி வீடாகிய சிம்மத்திற்கு பாதக ஸ்தானமாகிய மேஷத்தில் உச்சமாகிறார். சந்திரன் தன் ஆட்சி வீடாகிய கடகத்திற்கு பாதக ஸ்தானமாகிய ரிஷபத்தில் உச்சமாகிறார்.
சனி தன் ஆட்சி வீடாகிய கும்பத்திற்கு பாதக ஸ்தானமாகிய துலாத்தில் உச்சமாகிறார். செவ்வாயும் புதனும் பாதக ஸ்தானத் தில் நீசமடைகிறார்கள். குருவும் சுக்கிரனுமே இதற்கு விதிவிலக்காகிறார்கள். உச்சமும் நீசமும் கிரகத்தின் வலிமை யைக் குறிக்குமேயல்லாது, நன்மை- தீமைகளை உணர்த்தாது. உதாரணத்திற்கு, கடக லக்னத்திற்கு இரண்டாம் வீட்டு அதிபதியாகிய சூரியன் பத்தாம் வீடாகிய மேஷத்தில் உச்சமடையும்போது வாக்கு வல்லமை தருவார் என்றாலும், ஜாதகர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் பாதகத்தை ஏற்படுத்துவார். இதுபோன்று கிரகங்களின் பாவாதிபத் தியத்தையும், கிரகங்கள் அமரும் இடத்தையும் ஒப்பிட்டு நோக்கியே சாதக, பாதகப் பலன்களைக் காணவேண்டு மென்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""அஷ்டமூர்த்தியே! மனிதன் தன்னைச் சார்ந்திருக்கும் உற்றாருக்காக செல்வத்தை ஈட்டும்போது, சில பாவச் செயல்களைச் செய்கிறான். அந்த பாவங்களின் பலன் அவனைமட்டும் சேருமா அல்லது அவனுடைய உற்றாரரை யும் சாருமா?'' என அன்னை அகிலாண்ட நாயகி, கீழை திருக்காட்டுப்பள்ளி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு ஆரண்ய சுந்தரேஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
திகம்பரர் உரைத்தது- ""பகல்- இரவாய் மாறிவரும் மனிதர் வாழ்வில், மரணம் மட்டுமே மாறாத உண்மை. மனிதனின் செல்வத்தைப் பகிர்ந்துகொள்ளும் உற்றார் எவரும் அவனுடைய நோய், மனவேதனை, மரணம், பாவத்தின் ஊதியம் போன்றவற்றை விரும்பி ஏற்பதில்லை. சுற்றமெல்லாம், உயிரை இழந்தவருக்கு நீர்மாலை எடுத்து, உடலை அகற்றி, நீரில் மூழ்கி நீத்தாரின் நினைவை அறுப்பர். முதுகாட்டில் ஊளையிட்டு பிணம் உண்ணும் நரியாய், உற்றார் ஒப்பாரி பாடி, உயிர்நீத்தார் உடமைகளைப் பகிர்ந்திடுவர். தேனீக்கள் பூக்களி லிருந்து கவர்ந்து சேர்த்த தேன் பிறரால் களவாடப்படுவது போல, பாவங்களைச் செய்து சேர்த்த செல்வம் உற்றாரையும், அதானல் வரும் பாவம் மட்டும் கர்த்தாவையும் சேரும். கரும்புக்கு ஆசைப்பட்டு பயம்பில் (யானைப்படுகுழி) விழுந்த யானைபோல, முறையற்ற வழியில் வரும் செல்வம் மனிதனை நரகத்தில் வீழ்த்தும்.''
""சாமகானப்பிரியரே! "வைசாக ரேசிதம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய ஆயில்ய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், திருவோணம் முதல் பாதத்தில் சந்திரனும், சதயம் இரண்டாம் பாதத்தில் சனியும், ரேவதி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், அஸ்வினி முதல் பாதத்தில் குருவும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் சூரியனும், ரோகிணி மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், திருவா திரை நான்காம் பாதத்தில் புதனும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விரிவாக விளக்க வேண்டும்'' என்று திருவா ளொளிப்புத்தூர் எனும் திருத்தலத்தில் அருள் புரியும் அன்னை வண்டமர்பூங்குழலி வினவினாள்.
சாருவிக்ரமன் உரைத்தது- ""தேவி! இந்த ஜாத கன் முற்பிறவியில் விவேகன் எனும் பெயருடன் ஜோதிபுரியில் வாழ்ந்தான். இளம்வயதில் சாத் திரங்களில் தேர்ச்சியுற்று, அவன் வாழ்ந்த ஊரில் சகலகலைகளிலும் வல்லமை பெற்ற பண்டி தனாகத் திகழ்ந்தான். தானே ஒரு கலாசாலையை நிறுவி கல்விப் பணியாற்றினான்.
அந்த ஊரில் வாழ்ந்த செல்வச் செழிப்புமிக்க, உயர்குடியைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு மட்டுமே கலைகளைப் பயிற்று வித்தான். வறியோரைப் புறந் தள்ளினான். மாசற்ற ஸ்படிகம் போல மனமுடையவரே "சத்குரு' என்பதை அறிய மறுத்தான். செல்வம், செல் வாக்கு எனும் மாயையில் சிக்குண்டு, வித்யா தத்துவத்தைத் துறந்து "அசத்' குருவானான்.
முதுமையில் நோயுற்றான். மூச்சுவிட மறுத்து, மாண்டான். ஊர்கூடிச் சுமந்து, அவனுடலை மயானத்தில் சேர்த்தது. எமகிங்கரர்கள், அவன் உயிரை நரகத்தில் சேர்த்தனர். "சஷாரகர்த்தமம்' எனும் நரகத்தில் நெடுங்காலம் தலைகீழாய்த் தொங்கி அவதியுற்றான். அவன் கற்கவேண்டிய அனுபவப்பாடம் அதிகமுள்ளதால், பூவுலகம் எனும் கல்விக்கூடத்திற்கு மீண்டும் வந்துசேர்ந் தான். தேசிகன் என்று பெயரிடப்பட்டு, தேர ழுந்தூர் எனும் ஊரில் வாழ்ந்தான். பள்ளிப் பருவத்தில்ஏற்பட்ட விபத்தில், கேட்கும் திறனை இழந்தான். கல்வியில் பின்தங்கினான். முற்பிற வியில் செவிச்செல்வமாகிய கல்வியைத் தருவதில் ஏற்றத்தாழ்வினைக் கருத்தில் கொண்டதால், இப்பிறவியில் செவிச்செல்வத்தை இழந்து அவதியுறுகிறான். இதற்குப் பரிகாரமாக, வேத விற்பன்னர்களைக் கொண்டு மாசி மாத வளர் பிறை திங்கட்கிழமையில் சதருத்ரீயத்தினால் (நமகம்) ஸ்படிக லிங்கத்தைப் பூஜித்து, தானங்கள் செய்தால் கேட்கும் திறனைப் பெறுவான்.''
(வளரும்)
செல்: 63819 58636