தசாபுக்தியின் பலன்களைக் கணிக்கும்போது தசாநாதன் மற்றும் புக்திநாதனின், நைசார்க்க (இயற்கையான) நட்பு, பகை அடிப்படையில் மட்டும் பார்க்காமல் கோட்சாரத்தினால் ஏற்படும் தற்கால நட்பு, பகை அடிப்படையிலும் பரிசோதித்தால் மட்டுமே பலன்களைத் துல்லியமாகக் கூறமுடியும். இதுதவிர தசாநாதனும், புக்திநாதனும் நின்ற நட்சத்திர அதிபதிகளின் நட்பும், பகையும் ஆராயப்பட வேண்டுமென்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.
"முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் குருவே! சித்து, அசித்து, மாயை போன்றவற்றைப் பற்றி சாத்திரங்களைப் படித்து அறியமுடியாமல் அவதிப்படும் ஜீவர்களுக்கு, "கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற உங்கள் கருத்தின்படி, எல்லா ஜீவர்களும் அறியுமாறு எளிதாய் உபதேசிக்க வேண்டுகிறேன்'' என அஞ்சனாட்சியம்மை, திருக்கச்சூரில் அருள்புரியும் கச்சபேஸ்வரரை அடிபணிந்து கேட்டாள்.
அதற்கு விருந்திட்ட வரதர் உரைத்தது- ""பிரக்ஞை (உணர்வு) உள்ளது சித்து என்றும், அதுவல்லாதது அசித்து எனவும் உணர்க. சித்தாகிய சிலந்தி தன்னுள்ளிருந்தே அசித்தாகிய வலையை உருவாக்குவதுபோல, சித்தே அசித்தை உருவாக்குகிறது. இருள் என்று ஒன்றில்லை. ஒளியில்லாததையே இருள் என்று சொல்வதுபோல, மெய்யறிவு இல்லாத நிலையே மாயை. இருளில் பாம்புக்கும் கயிறுக்கும் வேறுபாடு தெரியாததுபோல, மாயையில் நன்மையும், தீமையும் அறியப்படுவதில்லை. இதைக் கற்றுணர "இருள் நீக்கியாகிய' குருவை அடைவது ஒன்றே வழி.''
""மதியில் உறைந்து, விதியினை விளைவிக்கும் வித்தகரே! "அர்த்த நிகுட்டம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய கிருத்திகை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், பூசம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், ஹஸ்தம் முதல் பாதத்தில் சனியும், சுவாதி முதல் பாதத்தில் சூரியனும், அனுஷம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்க, உத்திராடம் இரண்டாம் பாதத்தில் குருவும், அஸ்வினி மூன்றாம் பாதத்தில் சந்திரனும் இருக்கப் பிறந்த இந்த ஜாதகரின் கர்மப்பலனை, தாங்கள் அருள்கூர்ந்து விளக்கவேண்டும்'' என்று திருபனங்காட்டில் அமர்ந்திருக்கும் தாளபுரீஸ்வரரை அன்னை கிருபாநாயகி வினவினாள்.
பனைசூழ் திருத்தலத்தின் கிருபாபுரீஸ்வரர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் இப்பிறவியில், காசிப்பேட்டை என்ற ஊரில் விஸ்வகர்மா குலத்தில் பிறந்து, பத்தராக (பொற்கொல்லர்) வாழ்ந்துவருகிறான். தீய எண்ணங்கொண்டு ஆபரணங்களிலுள்ள தங்கத்துடன் அளவுக்கதிகமான செம்பினைக் கலந்து, தன்னை நம்பிவந்தவர்களை ஏமாற்றி, பெரும் பொருளீட்டினான். அந்த பாவத்தால் வந்த வாத நோயால் கைகள் உணர்ச்சியற்று செயலிழந்து போயின. தன் தவறினை எண்ணிக் கலக்கத்துடன் வாழ்கிறான். பரிகாரங்களைச் செய்து பாவத்திலிருந்து விடுபட பாடாய்ப்படுகிறான். ஆனாலும் அவன் எண்ணம் ஈடேறாது. நம்பியவர்களை ஏமாற்றியவர்களுக்கு பரிகாரமே கிடையாது என்பதை எல்லாரும் உணர்வார்களாக.''
(வளரும்)
செல்: 63819 58636
---------------------
நாடி ரகசியம்
1. நான்காம் பாவத்தில் குரு உச்சம்பெற்றால், பெரும் செல்வத்தையும், அதிகாரத்தையும் அனுபவிப்பார்.
2. பிரபல லக்னத்தின் அதிபதி செவ்வாயாயிருந்து, ஆட்சி அல்லது உச்ச வீடுகளிலிருந்து, அந்த வீட்டை குருவும் பார்த்தால் உலகப்புகழ் பெறுவார்.
3. பத்தாம் பாவத்தில் குருவும், புதனும் வலிமைபெற்றால், சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும், தன் திறமையால் கோடீஸ்வரராக வாழ்வார்.
கேள்வி: இரு கிரகங்கள் ஒரே பாகையிலிருந்தால், அதில் எந்த கிரகம் கிரக யுத்தத்தில் வெற்றிபெறும் என்பதைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் "கந்தர்வநாடி'யில் உள்ளனவா?
பதில்: செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கு மட்டுமே கிரக யுத்த விதிகள் பொருந்தும். "இரண்டு கிரகங்கள் ஒரு இடத்தில், ஒரு பாகைக்கும் குறைவான அமைப்பில் ஒன்று சேரும்போது அதிக பாகையில் நிற்கும் கிரகம் தோற்றுவிடும். அதைவிடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றிபெறும் என்பதே ஜோதிட நுல்களின் கருத்து.
வடக்கு கிராந்தியிலுள்ள கிரகம் மற்றும் தெற்கு கிராந்தியிலுள்ள கிரகம் என்று வகைப்படுத்தியும் வெற்றியைத் தீர்மானிப்பதுண்டு. இரண்டு கிரகங்கள் ஒரே பாகை, கலை, விகலையில் ஒன்றுசேர்ந்து, ஒரே புள்ளியில் எந்த வேறுபாடும் இன்றியிருந்தால், எந்த கிரகம் வெற்றிபெறும் என்பது தெளிவாக்கப்படவில்லை. ஆனால், "கந்தர்வநாடி'யில் இதுபோன்ற நூதனமான, நுட்பமான சந்தேகங்களுக்கு விளக்கம் உள்ளது. "எந்த கிரகம் அதன் உச்ச வீட்டை நோக்கிய சஞ்சாரத்தில் உச்ச வீட்டின் அருகிலுள்ளதோ, அதுவே கிரக யுத்தத்தில் வெற்றிபெற்ற கிரகம்' என்பதே "கந்தர்வநாடி'யின் கோட்பாடு.