இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒவ்வொரு தாவரமும் உணவை இலை, தண்டு, பூ, காய், கிழங்கு என வெவ்வேறு இடங்களில் சேமித்து வைப்பதுபோல, ஒரு ஜாதகரின் பூர்வஜென்ம கர்மாவின் பலனானது ஜாதகத்தில் ஒருசில பாவங்களை மட்டுமே சேர்த்து, அதிக விளைவை ஏற்படுத்தும். ஒரு ஜாதகரின் கல்வி, தொழில், புகழ், பெற்றோர், வாழ்க்கைத்துணை, புத்திரர் போன்றவற்றைக் குறிக்கும் எல்லா பாவங்களுமே நன்மையோ தீமையோ தருவதில்லை. லக்ன பாவம், ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாவம் மூன்றும் முறையே சஞ்சித பிராரப்த ஆகாமிய கர்மாக்களை விளக்கும். இந்த பிறவியில் ஜாதகர் அனுபவிக்க வேண்டிய கர்மாவின் பங்காகிய பிராரப்த கர்மாவை ஐந்தாம் பாவத்தால் மட்டுமே அறியமுடியும். ஐந்தாம் பாவத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பாவங்களே, ஜாதகர் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்மாவின் பலனைக் காட்டும் என்பதே கந்தர்வ நாடியின் கருத்து.
""தேனினும் இனிய தேவிட்டாத தெள்ளமுதே! இப்பிறவியில் நன்மையே செய்பவர்கள் துன்பத்தையும், தீமையே செய்பவர்கள் இன்பத்தையும் அனுபவிக்கிறார்கள்.
விடாமுயற்சி செய்பவர்களுக்கும் சிலசமயம் வெற்றி கிடைக்காமல் போகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைக் காணும் மனிதர்கள் தர்மத்தைக் காப்பாற்றாமல் போனால் தர்மத்தின் நிலை என்னவாகும் என்பதை தேவரீர் விளக்கவேண்டும்'' என அன்னை உமையாம்பிகை, அச்சிறுபாக்கத்தில் ஆட்சி செய்யும் ஆட்சீஸ்வரரைப் பணிவுடன் கேட்டாள்.
அதற்கு திரிபுரத்து அசுரர்களை அழித்த ஈசன் உரைத்தது- ""தர்மத்தை மனிதர்களால் காப்பாற்ற முடியாது. தர்மமே எல்லாரையும் காப்பாற்றுகிறது. முற்பிறவியின் வினைப்பயனே இந்தப் பிறவியின் இன்ப- துன்பங்களுக்குக் காரணமாகிறது. கோடைக்காலத்து மழையை நம்பி விதைத்தவனின் விதைநெல் வீணாவதுபோல, கனியும்வரை காத்திராமல் துவர்க்கும் காயை உண்டவன் வருந்துவதுபோல, காலம் கனியும்வரை காத்திருக்காதவன் செய்யும் முயற்சி விழலுக்கு இறைத்த நீர்போல் வீணாகும்.
பொறுமையே சிறந்த பிரார்த்தனை என்றுணர்ந்து, காலமறிந்து செய்யும் முயற்சியே வெற்றி தரும்.''
""பிறைமுடி சூடிய பிரானே, "லீனம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பரணி இரண்டாம் பாதத்தில் லக்னமும், கிருத்திகை இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், சித்திரை முதல் பாதத்தில் சந்திரனும், திருவோணம் நான்காம் பாதத்தில் குருவும், பூரட்டாதி நான்காம் பாதத்தில் சூரியனும், உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் புதனும், உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் சுக்கிரனும், ரேவதி முதல் பாதத்தில் சனியும் இருக்கப் பிறந்த இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் அருள்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று இராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் இராமநாத ஸ்வாமியை அன்னை பர்வதவர்த்தினி வினவினாள்.
சந்திரசேகரர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியப் பலன்களை அனுபவித்துவிட்டு, பத்ராசலம் என்ற ஊரில் பிறந்து, மணவாளன் என்ற பெயரில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறான்.
அவனுடைய இளம்வயதிலேயே தந்தை மரணமடைந்தார். ஜாதகனுக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் புத்திர பாக்கியம் இன்றி கவலையில் வாடுகிறான். ஜாதகன், தன் தந்தை இறந்த பதினோராம் நாள் செய்ய வேண்டிய "விருஷோற்சர்க்கம்' என்ற சடங்கினைச் செய்யத் தவறினான்.
அதனால், அவன் தந்தையின் உயிர் பிரேத ஜென்மம் எடுத்து கடைத்தேற முடியாமல் அவதியுறுகிறது. அந்த "பித்ரு சாபமே' அவனுக்கு பிள்ளைப் பேறு இல்லாமல் போனதற்குக் காரணமானது. இதற்குப் பரிகாரமாக திருப்புல்லாணி என்ற க்ஷேத்திரத்தில், தன் தந்தையின் பிரேத ஜென்மம் நீங்க சேது ஸ்னானம் செய்த பின், முறையாக கிருத்தியங்களைச் செய்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.
(வளரும்)
செல்: 63819 58636