இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

15

கிரகங்கள் நீச கதியிலிருந்து உச்சகதி நோக்கிப் பயணிக்கும் ஆரோகண சஞ்சாரமும், உச்ச கதியிலிருந்து நீசகதி நோக்கிய நகர்வாகிய அவரோகண சஞ்சாரமுமே கிரக பலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதே கந்தர்வ நாடியின் கருத்து.

Advertisment

""மௌனத்தால் மொழியையும், தியானத்தால் காலத்தையும் காட்டியருளிய குருவே! ஜீவர்கள், தங்கள் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் அறியாது தெளிவில்லாத நிலையில் இருந்தால், எந்த தேவரூபத்தை வழிபட்டு நற்பலனைப் பெறலாம் என்று விளக்கிஅருளுவீராக'' என அன்னை சௌந்தரநாயகி, ஆலந்துறையில் உறையும் பசுபதிநாதரைப் பணிந்து கேட்டாள்.

sivan

அதற்கு ஆலந்துறை நாதர் உரைத்தது- ""ஜீவன், அங்குஷ்ட (கட்டை விரல்) வடிவிலான ஜோதியாகவே இருக்கிறது. தேவர்களும் ஒளியாலான உடம்பையே பெற்றிருக்கிறார்கள். ஓஜஸ், தேஜஸ் என்ற இரண்டும் ஒளியாற்றலாகவே இருப்பதால், தீப வழிபாடே அனைத்து தேவர்களுக்கும் பொதுவானது. ஒளியே கடவுள் என்பதையுணர்ந்து, தீபத்தை ஆராதிப்பதே சிறந்தது. சத்யோஜாதம், வாமதேவகம், தத்புருஷம், அகோரம், ஈசானம் என்ற ஐந்து முகங்களை விளக்கின் ஐந்து ஜோதிகளாக பாவித்து வழிபட்டால் எல்லா நலன்களையும் பெறலாம்.''

""சதுர்வேதமும் சாமரம் வீசும் சச்சிதானந் தரே, "ஸமானதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பரணி முதல் பாதத்தில் லக்னமும் செவ்வாயுமிருக்க, மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், திருவாதிரை மூன்றாம் பாதத்தில் குருவும், பூராடம் இரண்டாம் பாதத்தில் சனியும், உத்திரட்டாதி முதல் பாதத்தில் சூரியனும், ரேவதி மூன்றாம் பாதத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்திருக்கப் பிறந்த இந்த ஜாதகரின் கர்மப்பலனை, தாங்கள் அருள்கூர்ந்து விளக்கவேண்டும்'' என்று திருவேற்காட்டில் வாசம் செய்யும் வேதபுரீஸ்வரரை அன்னை வேற்கன்னி வினவினாள்.

சதாசிவன் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் தக்ஷசீலம் என்ற நகரில் பிறந்து, யோகேசன் என்ற பெயரில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தான். தன் குரூர எண்ணத்தால் பாம்பு வாழும் புற்றுகளை அழித்து வந்தான். அதனால் பல நாகங்களும் இறந்துபோயின. இந்த பாதகச் செயலைச் செய்தவன் முதுமையில் இறந்து நரகம் சென்றான். சில காலம் கழித்து, தேவிபட்டணம் என்ற தலத்தில், ஒரு வைசிய குடும்பத்தில் பிறந்தான். அவனுடைய இளம்வயதிலேயே தந்தை மரணமடைந்தார். முன்வினைப்பயனால் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் புத்திர பாக்கியம் இல்லாமல் அவதியுறுகிறான். அது நீங்குவதற்கு வெள்ளியால் செய்த நாகத்தைப் பிரதிஷ்டை செய்து, பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அந்தணர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். பின் அதை தானம் செய்து, ஏழு அந்தணர்களுக்கு அன்னதானமும் செய்தால் பாவம் நீங்கி புத்திர விருத்தி உண்டாகும்.''

(வளரும்)

செல்: 63819 58636