ருவர் கல்வியில் சிறந்து விளங்கவேண்டுமானால், அவருடைய ஜாதகத்தில் புதன் வலுத்திருக்கவேண்டும். சுய சிந்தனையைக் குறிக்கும் பாவமாகிய ஐந்தாம் பாவாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றாலும், ஐந்தாம் பாவத்தில் ஓர் உச்ச கிரகம் அமையப்பெற்றாலும், கல்விகாரகனாகிய புதன் ஆட்சி, உச்சம் பெற்று ஐந்தாம் பாவாதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில் சாதனை புரியும் யோகம் உண்டாகும். ஆதவன் (சூரியன்) அறிவனின் (புதன்) ஆட்சி வீடேறும் புரட்டாசி மாதத்தில் கல்வியின் துவக்கமும், சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. 2, 4, 5, 9-ஆம் பாவங்களும், ஒழுக்கத்தைத் தரும் குருவும், கல்வியைத் தரும் புதனும் கெடாமலிருந்தால் மட்டுமே ஒருவர் மேதையாகமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

f

""கைலாசபதியே! நிலையில்லாத உலகில் மானுடர்கள் எது முடிவான பரம்பொருள் என்பதையறியாமல், செப்பிடு வித்தைசெய்யும் கபட சந்நியாசிகளின் சொல்கேட்டு திசைமாறிப் போகிறார்கள். அறிவில் எளியோரும் அறியுமாறு, ஆதியும் அந்தமுமில்லாத மெய்ப்பொருளைத் தாங்களே விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை பெரிய நாயகி சப்தரிஷீஸ்வரரை லால்குடி (திருச்சி) எனும் திருத்தலத்தில் பணிந்துகேட்டாள்.

ஞானப்பிரகாசர் உரைத்தது- ""சொற்களால் ஞானத்தை அளக்க முடியாது என்பதையறிந்து, தர்மத்தின் ரூபமே தெய்வம் என்பதையுணர்ந்து, மௌனத்தால் உணர்த்துபவனே சத்குரு. முப்பத்து முக்கோடி தேவரும், மூவரும் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்களே தவளையை பாம்பு உண்ணும் போது, தவளையின் ஆயுள் குறைந்து பாம்பின் ஆயுள் கூடுகிறது. காலம், காலத்தையே உண்டுவாழ்வதால் காலம் அழிவதில்லை. பிரபஞ்சம்போல் நிலையான காலத்தை நிகழ்வுகள் கடந்து செல்கின்றன. துவக்க மும் முடிவும் அறியவியலாத காலமே பிரும்மம் என்பதை உணர்ந்தவரே உய்வுபெறுவார்.''

Advertisment

""முக்கண் முதல்வனே! "விஷ் கம்பம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், கார்த்திகை இரண்டாம் பாதத்தில் குருவும், திருவாதிரை முதல் பாதத்தில் செவ்வாயும், பூசம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், பூசம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், மகம் முதல் பாதத்தில் புதனும், விசாகம் முதல் பாதத்தில் சனியும், அவிட்டம் நான்காம் பாதத்தில் சந்திரனும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என திருவாலம்பொழில் (தஞ்சாவூர்) எனும் திருத்தலத் தில் அருள்புரியும் ஆத்மநாதேஸ் வரரை அன்னை ஞானாம்பிகை வேண்டிப் பணிந்தாள்.

ஜாதகக்குறிப்பு: மீன லக்னத்துக்கு ஐந்தாமிடமான கடகத்தில் சூரியன் சஞ்சரித்தாலும், சுக்கிரன் சஞ்சரித்தாலும், ஐந்தாம் வீட்டதிபதி விரயம் புகுந்தாலும் புத்திர தோஷம் உண்டாகும்.

சந்திரசேகரர் உரைத்தது- ""நாகநந்தினியே! இந்த ஜாதகன் பரவூர் என்ற ஊரில், ஒரு பெருநிலக்கிழாரின் குடும்பத்தில் பிறந்து நேமிநாதன் என்று பெயரிடப்பட்டான். முரட்டு குணமும், ஈவிரக்கமில்லாதவனுமாக வளர்ந்தான். தந்தையின் காலத்திற்குப்பின் தன் குடும்பத்து விவசாய நிலங்களைப் பராமரிக்கும் பொறுப்பேற்றான். ஒருசமயம், அவனுக்குச் சொந்தமான வயலில் ஒரு பசுமாடு பயிர்களை மேய்ந்து நாசமாக்கியது. கோபமுற்ற நேமிநாதன் அந்த பசுவை நையப்புடைத்துக் கொன்றான். இதனால், கோ சாபம் பெற்றான்.

Advertisment

காலத்தின் தண்டனையால் நாகம் தீண்டி உயிரிழந்தான்.எமதூதர்களால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு வைதரணி எனும் நரகத்தில் தள்ளப்பட்டான். நரகத்தில் பலகாலம் துயருற்ற பின் மண்ணுலகம் புகுந்தான். இந்தப் பிறவி யில் திருமணமாகி நெடுங்காலம் கழிந்த பின்னும், தன் மழலைச் சொல்லைக் கேட்கும் சுகத்தைப் பெற்றானில்லை. தனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் போகுமோ என்ற கவலை யில் மனம் பேதலித்து அலைகிறான்.

* சத்தியவிரதன்போல் பசுவைக் கொன்றதால் ஏற்பட்ட கோ சாபத்தால், வம்சவிருத்தியில்லாமல் அவதியுறுகிறான்.

* ஆஷாட மாதத்து சுக்கில பட்ச ஏகாதசியன்று கோ பத்ம விரதமிருந்தால் சாபம் நீங்கும்.''

* சத்தியவிரதன் (திரிசங்கு): பசுவைக்கொன்ற பாவத்தால் புண்ணியப் பலன்களை இழந்து அவதியுற்றான்

-இராமாயணம், பாலகாண்டம்.

(முற்றும்)

செல்: 63819 58636

______________

நாடி ரகசியம்

1. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சந்திரனும், ஹஸ்தம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் அமைந்தால், தீர்க்காயுளும், நிறைவான செல்வமும் பெறுவான்.

2. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் குருவும் லக்னமும் கூடியிருக்க, உத்திரம் மூன்றாம் பாதத்தில் சூரியனும் அமைந்தால், அரசாங்கத்தில் பெரிய பதவிபெறும் வாய்ப்புண்டாகும். 3. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்திருந்து சுபர் பார்வை பெறாதிருந்தால், வஞ்சகரின் நட்பால் வாழ்க்கையில் தடம் மாறிப்போவான்.

கேள்வி: சில பெண் ஜாதங்களில் களத்திர காரகனும், களத்திர ஸ்தானாதிபதியும், களத்திர ஸ்தானமும் வலுப் பெற்றிருந்தும் திருமணம் கைகூடாமல் போவதன் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்க முடியுமா?

பதில்: பல ஜாதகங்களில் கிரகங்களின் வக்ரம், அஸ்தமனம், அதிசாரம் பற்றிக் குறிப்படப்படுவதில்லை. ஒரு கிரகம் ஷட் பலங்களையும் பெற்று வலிமையுடையதாக இருந்தாலும், அஸ்தங்க தோஷத்தை அடைந்தால் பயனற்றதாகிவிடும். சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையில் கிரகங்கள் சூரியனுக்கு வெகு அருகில் பயணிக்கும்போது அஸ்தங்க தோஷத்தை அடையும். சூரியனுக்கு அருகில் கிரகங்கள் அஸ்தங்கதமடையும் பாகை- செவ்வாய் (17ளி), புதன் (நேர்கதியில்-14ளி) (வக்ரகதியில்-12ளி), குரு (11ளி), சுக்கிரன் (08ளி), சனி (15ளி). புதாத்திய யோகத்தைத் தரும் புதனைத் தவிர, மற்ற கிரகங்களின் அஸ்தங்கம் கெடுபலனையே தரும்.

அஸ்தங்கமடையும் கிரகம் பருந்திடம் அகப்பட்ட பாம்பினைப்போல் தன் செயல்திறனைஇழக்கும்.

களத்திர காரகனோ, களத்திர ஸ்தானாதிபதியோ அஸ்தங்கம் அடைந்தால் திருமணத்தில் தடையுண்டாகும். அதேபோல ஜீவனாதிபதி அஸ்தங்கம் அடையும்போது ஜீவனத்தில் தடைகள் ஏற்படும். பொதுவாக, கிரகங்களின் செயல்திறனை சூரியனை மையப்படுத்தியே கணக்கிடவேண்டும். அஸ்தங்க கதி, உதயகதி, சீக்கிர கதி, சமகதி, மந்தகதி, வக்ர கதி, அதிவக்ர கதி, வக்ர நிவர்த்தி போன்ற ஒவ்வொரு நிலையிலும் பலன்கள் வேறுபடும். ஜாதகங்களைப் பரிசீலிக்கும்போது அஸ்தமனங்களையும் வக்ரங்களையும் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.

___________

நிறைவுரை

காளகண்டனாகிய சிவனால் உமா மகேஸ்வரிக்கு உபதேசிக்கப்பட்ட "கந்தர்வ நாடி' எனும் நாடி கிரந்தத்தில், இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்களின் வாழ்க்கை மற்றும் விதிநிர்ணயமும் விளக்கப்பட்டுள்ளது. காலத்தின் அருமை கருதி ஒவ்வொரு நவாம்சத்திற்கும் ஒரு உதாரண ஜாதகம் மட்டுமே தொகுத்து வழங்கப்பட்டது. இதுவரை இந்தத் தொகுப்பினைத் தொடர்ந்து வாசித்து பயனடைந்தோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.